திமுக முக்கியஸ்தர்களின் ஊழலை அம்பலப்படுத்துகிறாராம்! பொறுப்பில்லாமல் மேம்போக்கா எதையோ அடிச்சுவிட்டுள்ளார் அண்ணாமலை! ஏதாவது குறைந்தபட்ச புலனாய்வேனும் செய்யப்பட்டதா? சொத்து மதிப்பு தகவல்களில் தான் எத்தனை குளறுபடிகள்..! அதிர வைக்க நினைத்து, அசிங்கப்பட்டு போன அண்ணாமலை!
அட, பரவாயில்லையே! அண்ணாமலை ஆளும் திமுகவின் ஊழல் பட்டியலை அம்பலபடுத்தி, பெரும் அதிர்வை உருவாக்க துணிந்துவிட்டாரே என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், ரொம்பவுமே ஏமாற்றிவிட்டார். குறைந்தபட்ச கள ஆய்வில் கூட அவர் ஈடுபடவில்லை, மெனக்கிடவே இல்லை’ எனத் தெரிகிறது!
இன்றைக்கு அண்ணாமலை வெளியிட்ட திமுக முக்கியஸ்தர்களின் சொத்துப் பட்டியலை பார்ப்போம்;
ஜெகத்ரட்சகன் ரூ.50,219 கோடி,
எ.வ.வேலு ரூ.5,442 கோடி,
கே.என்.நேரு ரூ.2,495 கோடி,
கனிமொழி ரூ.830 கோடி,
கலாநிதி மாறன் ரூ.12,450
உதயநிதி ஸ்டாலின் ரூ.2,039 கோடி,
சபரீசன் 902.46 கோடி,
கதிர் ஆனந்த் ரூ.579 கோடி,
கலாநிதி வீராசாமி ரூ.2,923 கோடி,
பொன்முடி ரூ.581 கோடி,
அன்பில் மகேஸ் ரூ.1,023 கோடி
இதில் என்ன அதிசயம் அல்லது புதிய செய்தி இருக்கிறது! மேற்படியானவர்கள் எல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள், ஊழல்வாதிகள் என்பது யாருக்கு தான் தெரியாது..?
இன்னும் சரியாக சொல்வதென்றால்,
”என்னப்பா..! அண்ணாமலை இவ்வளவு விபரம் தெரியாதவராக இருக்கிறாரே..”என்றும்,
”இந்தாளு சரியான கூறுகெட்ட மனுசனாக அல்லவா இருக்காரு..”
போன்ற விமர்சனங்கள் தான் மக்கள் மத்தியில் வெளிப்படுகிறது!
முதலாவதாக உண்மையான சொத்து மதிப்பு என்ன? ஆனால், இவர்கள் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு என்ன? என வித்தியாசம் கண்டிருக்க வேண்டும். அடுத்ததாக வருமானத்திற்கும் அதிகமாக எவ்வளவு பணம் சேர்த்துள்ளனர்? அது எந்த மாதிரியான முறைகேட்டில் சம்பாத்தியமாகியுள்ளது எனச் சொல்ல வேண்டும். பாவம், துப்பறியும் சாம்புவாக ஆசைப்பட்டு, துப்பில்லாதவராக அம்பலப்பட்டது தான் கண்ட பலன்!
முதலில் ஸ்டாலினுடைய சொத்து மதிப்பை அல்லவா சொல்லி இருக்க வேண்டும்..? ஸ்டாலினுடைய சொத்து மதிப்பு மட்டுமே சுமார் லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்கள் பலரது அனுமானமாகும்.
கருணாநிதி சேர்த்து வைத்த சொத்து மட்டுமின்றி, துணை முதல்வராக இருந்த போதும், தற்போதும் எல்லா வகையிலும் பணம் பார்க்கிறாரே ஸ்டாலின்! டாஸ்மாக்கிலேயே பல்லாயிரம் கோடி கொட்டுகிறதே! இப்படி குவாரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகளிடம் பெறும் லஞ்சப் பணம்.. என பட்டியல் போட்டால் நீளுமே! உண்மையில் இந்த கர்மங்களை எழுதவே சங்கடமாக உள்ளது.
இதே போல இன்றைக்கு சபரீசன் ஒரு நிழல் முதல்வராக செயல்படுகிற நிலையில், அவருடைய சொத்து மதிப்பை இவ்வளவு குறைவாக தந்துள்ளார் ‘ஞான சூனியமான’ அண்ணாமலை!
”கனிமொழி சொத்து மதிப்பை சுமார் பத்து மடங்கு குறைவாக அண்ணாமலை தந்துள்ளார்” என்று திமுகவில் உள்ளவர்களே சிரித்துக் கொண்டு சொல்கிறார்கள்…! சமீபத்தில் ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஆருரான் சர்க்கரை ஆலைகளை யார் வாங்கியது? அப்படி வாங்கியவர் எங்கு சாராய ஆலையை வைத்துள்ளார் என்பதை மத்திய ஆட்சியாளர்களே சொல்வார்களே! தென் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை வாங்கி போட்டிருப்பது யார்? என பத்திர பதிவு துறையைக் கேட்டால் தெரியுமே!
‘ஆசியாவிலேயே பெரும் பணக்காரர்களில் ஒருவரான சன் குழுமங்களின் தலைவரான கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு ஜெகத்ரட்சகன் சொத்தில் கால்வாசி தான்’ எனக் குறிப்பிட்டு உள்ளார் அண்ணாமலை!
இந்த லிஸ்டில் செந்தில் பாலாஜியின் பெயர் ஏன் விடுபட்டது? அவருக்கும் அண்ணாமலைக்கும் உள்ள உறவை பாஜகவின் ஐ.டி.விங்கே தெரிவிக்கிறார்களே…!
ஊழல் என்று வந்துவிட்டால், அ.திமுகவும் அதில் பி.எச்.டி வரை பாஸான கட்சி தானே! பத்து திமுகவினரை சொன்ன அண்ணாமலையால் இரண்டு அதிமுகவினரை சொல்ல முடியுமா? முக்கியமாக பாஜகவின் தொங்கு சதையாக உள்ள ஒ.பன்னீர் செல்வம் சேர்த்து வைத்துள்ள சொத்துக் குவியலை சொல்ல முடியுமா? பாஜவிற்கு நெருக்கமாக உள்ளதால் மத்திய சொலிசிடர் ஜெனரலே வந்து வேலுமணி ஊழல் வழக்கில் அவருக்கு வாதாட வந்தாரே அவரது ஊழலை சொல்ல முடியுமா? எடப்பாடியின் ஊழல் குறித்து சுண்டுவிரலை அசைக்கும் சக்தி இருக்குமா..? முடியாது! ஏனென்றால், அதிமுக ஆட்சியில் அவ்வளவு வாங்கி அனுபவித்துள்ளனர் இவர்கள்!
சரி, மற்றவர்களின் ஊழலை பேசத் துணிந்த அண்ணாமலை, தான் யோக்கியவானாக இருக்க வேண்டாமா..?
குறைந்தபட்சம், ‘தமிழக பாஜகவை நடத்த மத்திய தலைமை மாதாமாதம் எவ்வளவு பணம் அனுப்புகிறது? அதை எந்த வகையில் செலவழிக்கிறேன்’ என வாக்குமூலம் வழங்கத் தயாரா? மக்களிடம் சுமார் ரூபாய் 2,500 கோடியை ‘ஸ்வாகா’ செய்த ஆருத்திரா கோல்டு நிறுவன மோசடி அதிபர் ஹரீசை ஏன் பாஜகவில் சேர்த்தாய்? அவருக்கு ஏன் முக்கிய பொறுப்பு கொடுத்தாய்? பிரதமரிடம் ஏன் அறிமுகப்படுத்தினாய்? இன்று வரை அந்த நபரை ஏன் பாதுகாத்து வருகிறாய்? என்பதற்கு அண்ணாமலையிடம் பதில் இருக்கிறதா..?
தான் வாங்கின வாட்சுக்கு ரசீதை காட்டவே ஐந்து மாதம் தேவைப்படுகிறது அண்ணாமலைக்கு? அந்த ரசீதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்! சுமார் மூன்று லட்சத்தை ரொக்கமாக நண்பரிடம் தந்து பெற்றாராம்! இதுவே சட்டப்படி தவறான பணப் பரிமாற்றம் தானே! பாவம், நண்பர்கள் தான் அவர் வீட்டு வாடகையை கட்டுகிறார்களாம்! அதானி, அம்பானிகளுக்கு நாட்டையே சூரையாடிக் கொடுத்து கொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கட்சியின் தலைவர் கதை அளப்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
அரசியல் கத்துக்குட்டியான அண்ணாமலை அரசியலில் தொடர்ந்து இயங்குவாரா என்பதே தெரியவில்லை! கட்சி வளர்ச்சியை விட, தன்னை வளர்த்துக் கொண்டு, அறிவே இல்லாமல் அடாவடியாயாக அடித்து குரல் உயர்த்தி பேசுவதன் வாயிலாக தன் இருப்பை வெளிப்படுத்துவது ஒன்றே அரசியல் வெற்றியாகிவிடாது!
Also read
மிஸ்டர் அண்ணாமலை, உங்க கட்சித் தலைமைக்கு மிக நன்றாகத் தெரியும், திமுக முக்கியஸ்தர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விபரங்கள்! பாஜகவின் தலைமை நினைத்தால் திமுக தற்போது செய்து கொண்டிருக்கும் ஊழலுக்கு அவர்களை நிலைகுலைய வைக்கலாம்! ஆனால், கூடிக் குலாவுகிறார்களே! ஏன்? ஆம் ஆத்மியின் அமைச்சரான மணீஸ் சிசோடியாவை கைது செய்து அலைக்கழிக்கும் பாஜக அரசு, செந்தில் பாலாஜியையோ, துரைமுருகனையோ விட்டு வைத்திருப்பதன் ரகசியம் என்ன?
சும்மா ஒரு விவஸ்த்தை இல்லாத காமெடி பீஸாக – தமிழக மக்களுக்கு ஒரு அரசியல் எண்டர்டெயினராக – அண்ணாமலை வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
உண்மையில் அண்ணாமலை ஓர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் தான் தெரிகிறது.
காரணம் எந்த ஒரு அமைச்சர் மீதும் எந்த ஒரு ஊழல் புகாரையும் கூறவில்லை.
எந்தெந்த துறையில் எந்தெந்த வேலைகள் மூலம் ஊழல் நடந்துள்ளது என்று ஒரே ஒரு ஆதாரத்தை கூட கூறவில்லை.
ரஃபேல் கைக்கடிகாரம் தான் காமெடி உச்சம்.
ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி கூறுவது போல எல்லாவற்றையும் மேலே இருப்பவன்
( நண்பர்கள்) பார்த்துக் கொள்வான் என்றால் கீழே இருப்பவனுக்கு ( அண்ணாமலை)என்ன வேலை?
உன் வீட்டுக்கு வாடகை உட்பட அனைத்து செலவுகளையும் செய்யும் அந்த உயிர் நண்பர்கள் யார் ?
அந்த தியாகிகளின் பெயர்களை வெளியிட்டு இருக்க வேண்டும் அல்லவா ?
அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளருக்கு பணம் கொடுத்த அண்ணாமலை தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்து விட்டார்.
கதாநாயகனாக வந்து பின்னர் வில்லனாகி இறுதியில் காமெடியனாக தன் இருப்பை
அண்ணாமலை காட்டிவிட்டார்.
பாவம் அண்ணாமலை !.சீமான் கூட இவரை கிண்டல் செய்யும் நிலைக்கு போய் விட்டார்.
நீங்கள் செய்வது அத்தனையும் உண்மை…ஆனால் இது பேசுபொருளாகி இருப்பதை பார்க்கும்போது திமுக-பிஜேபி க்கு இடையான கள்ளஉறவுதான் வெளித்தெரிகிறது.