தனியொரு குடும்பத்தால் இலங்கை தத்தளிக்கிறது!

-பீட்டர் துரைராஜ்

வளமான இலங்கை வறுமையின் பிடியில் தள்ளப்பட்டதற்கு வரைமுறையில்லாமல் நாட்டை கொள்ளையடித்து கொழுத்த ராஜபக்சே குடும்பமே காரணமாகும்! அப்பப்பா..! நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொள்ளையிட்டனர்! ஒரு சுயநல குடும்பம், ஒரு நாட்டையே சூறையாட முடியும் என்பதற்கு இதுவே முன்னுதாரணம்!

ராஜபக்சே பதவி விலகியதும், அம்பந்தோட்டையில் உள்ள மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பூர்வீக இல்லம், அவர்கள் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்கள், சொத்துக்கள் அனைத்தும் மக்களால் தீக்கிறையானது நம் நினைவுக்கு வரலாம்! இந்த அளவுக்கு ராஜபக்சே மீது மக்களுக்கு வெறுப்பு வர என்ன காரணம் என விளக்குகிறார் இலங்கையைச் சேர்ந்த கார்த்திக்.

இவர் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்,  டி.பி.கார்த்திக். ஒரு தமிழர். சுற்றுலா நோக்கில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் உரையாடினோம்.

இலங்கையின் வங்கி ஊழியர் கார்த்திக்.

ஈஸ்டரை முன்னிட்டு வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோவிலுக்கு வந்தோம். இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தில் நான் உதவிச் செயலாளராக இருக்கிறேன். 16 ஆண்டுகளுக்கு முன்பு சுகுமாரன் என்ற தமிழர் செயலாளராக இருந்தார். அதன் பிறகு இப்போது நான் உதவிச் செயலாளராக இருக்கிறேன். இலங்கையில் 29 வங்கிகள் உள்ளன. அதில் 19 வங்கிகள் எங்கள் அமைப்பில் உள்ளன. நான் இலங்கை வங்கியில் (இங்குள்ள ஸ்டேட் வங்கி போல) பணியாற்றுகிறேன்.

நான் கொழும்பு நகரில் குடியிருக்கிறேன். எங்கள் வாழ்க்கை முறை தமிழக  வாழ்க்கை முறையை ஒத்துள்ளது. நாங்கள் சன் தொலைக்காட்சி, புதிய தலைமுறை போன்றவற்றை பார்க்கிறோம். சமையலில் புட்டு, இடியாப்பம் போன்ற கேரள உணவு சற்று சேர்ந்து இருக்கும்.

தக்காளி ஒரு கிலோ இலங்கை ரூபாய் 350,

திராட்சை ஒரு கிலோ 1500,

பால் பவுடர் 400 கிராம் ரூ.1025 விற்கிறது.

நான் பால் இல்லாமல் தேநீர்  குடிக்கிறேன். எங்க பிள்ளைகளுக்கு மட்டும் பாலோடு தேநீர் தருகிறோம். வங்கி ஊழியரான எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களை எண்ணிப் பாருங்கள். இலங்கையில் மதிய உணவுத் திட்டம் இல்லை. எனவே, மாணவர்கள் பள்ளிக் கூடத்தில் பசியால் மயங்கி விழுகிறார்கள். சில பள்ளிகளில் ஒரு சில அமைப்புகள் உணவளிக்கின்றன.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பது இலங்கையில் உள்ள இரண்டு பெரிய அரசு வங்கிகள். கோத்தபய ராஜபக்‌ஷே பதவியேற்றவுடன், அந்த வங்கிகளின் தலைமை செயல் அலுவலர்களை விலகச் செய்துவிட்டு, அந்த இடத்தில் தனக்கு வேண்டிய அலுவலர்களை பொறுப்பில் நியமித்தார். அவர்கள் கோத்தபய ராஜபக்‌ஷேவிற்கு  வேண்டியவர்களுக்கு வட்டியில்லா கடனை கொடுத்தார்கள்.

வரவிருக்கிற இலங்கை பட்ஜெட்டில் சிகரெட் விலை கூடிவிடும். எனவே அதை வாங்கி இருப்பில் வைத்து பிறகு விற்றால் இலாபம் கிடைக்கும் என்று மனுவில் குறிப்பிட்டு வங்கிக் கடனைக் கேட்டார்கள். இதனை இரண்டு இயக்குநர்கள் பார்த்து இப்படி செய்தால் அரசு கருவூலத்திற்கு நட்டம் ஏற்படும் எனக் கூறி மறுத்தார்கள்.

ஜேவிபி என்ற கட்சி இதனை கேள்வி கேட்கவே  இலங்கை அரசு சிகரெட்டிற்கான வரியை பிறகு பட்ஜெட்டில் உயர்த்தவில்லை. இலங்கை மத்திய வங்கியின் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல)  கவர்னர்,  டாலர் மதிப்பை கிட்டத்தட்ட ஒரு டாலருக்கு இருநூறு ரூபாய் அளவிலேயே திட்டமிட்டு வைத்து இருந்தார். இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வேலை செய்பவர்கள்  அதிகம். எனவே  அவர்கள் மத்திய வங்கி மூலமாக பணம் அனுப்பாமல் வெளிச்சந்தை மூலம் அனுப்பி ஒரு டாலருக்கு முன்னூறு ரூபாய் வரை பெற்றனர்.

சீனிக்கு வரி முப்பது சதம் இருந்தது. இதனை ஒரேநாள்  0.25 என குறைத்தனர். அதாவது அன்றைய இறக்குமதிக்கு,  கோத்தபய நண்பர் 0.25 சதம் வரி செலுத்தினால் போதும். மறுநாள் மீண்டும் முப்பது சதம் வரி என்றனர். இதை எல்லாம் யாராலும் கேட்க முடியாது என நம்பினர்!

உள்நாட்டு  தேங்காய் எண்ணெய் கெட்டுவிட்டது என்ற வதந்தியை கிளப்பி விட்டு இறக்குமதி செய்தனர். இப்படியாக சட்டத்தையும், அதிகாரத்தையும் ஆதாயத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்தினர். மக்கள் வாழ்க்கை நிலை நாளுக்கு நாள் மோசமானது. அது பற்றி அவர்கள் துளியும் கவலைப்படவில்லை.

நிலக்கரி இறக்குமதிக்கு இருந்த விதிகளைத் தளர்த்தினர். செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, நிலக்கரியை இறக்குமதி செய்தனர். ஆஸ்திரேலியா நிலக்கரி என்ற தரம் வாய்ந்த நிலக்கரி பெறுவதாக டெண்டர் போட்டு, தரம் குறைந்த ஆப்பிரிக்கா நிலக்கரியைப் பெற்றனர். இதனால் அரசாங்கம் விலையைக் கூடுதலாக கொடுக்க நேரிட்டது;

இதனால் இலங்கையின் வெளிநாட்டுக் கடனும் பயங்கரமாக உயர்ந்தது. அதாவது தன்னிறைவில் இருக்க வேண்டிய ஒரு நாட்டை லஞ்சம், ஊழலால் சீரழித்து விட்டனர். ஈஸ்டர் நாளன்று நடந்த தாக்குதல் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

மசக்கெண்ணெயை  இலங்கையில் சுத்திகரித்து பெட்ரோல், டீசல், மண்ணென்ணெய், கிரீஸ் என  விற்றனர். இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள், விலைகுறைவாக இருந்ததால், இலங்கையில் சூப்பர் பெட்ரோலை நிரப்பிச் செல்லும். ஆனால் இப்போதோ பெட்ரோல், டீசல், கிரீஸ் எனத் தனித் தனியாக இறக்குமதி ஆகிறது. இதனால் இலங்கை அரசுக்கு நட்டம் ஏற்படுகிறது. இப்போது இலங்கையில் இருந்து விமானங்கள் திருவனந்தபுரம், சென்னை என பெட்ரோலை நிரப்பி வருகின்றன.

மின்சார வாரியம் நட்டமாகிறது என்று சொல்லி 70 சதம் விலை உயர்வு செய்யப்போவதாக அரசு சொன்னது. 90 யூனிட் வரை உபயோகிக்கும் பொதுமக்கள் 70 சதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு 260 சதம் மின்சார விலையை உயர்த்தி உள்ளனர். அதே சமயம் பெருநிறுவனங்களுக்கு 5%, 10 %, 20 %  மட்டுமே உயர்த்தி உள்ளனர். இப்போது  லாபம் வரத் தொடங்கியவுடன் இதனை தனியாருக்கு விற்கப் போவதாக அரசு கூறுகிறது.

ஏற்கனவே மூன்று இலட்சம் ரூபாய் வரை வருமானவரி இல்லை. இப்போது அதனை ஒரு இலட்சம் வரை வரி இல்லை என குறைத்து விட்டனர். இந்த கணக்கீட்டில் இஎஸ்ஐ, பிஎப், போக்குவரத்துப்படி என அனைத்தையும் சேர்த்து கணக்கிடுகின்றனர். இதனால் கடந்த இரண்டு, மூன்று மாத காலமாக ஒரு சிலருக்கு அவர்கள் வாங்கிய கடன் போன்றவை பிடித்தம் போக சம்பளமே மைனசில் போகிறது. இதனால் வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் வருவதில்லை.

இது போன்ற  சிரமங்களில்  இருந்து விடுபட, மருத்துவர், பொறியாளர், பேராசிரியர் என 300 க்கும் மேறபட்டோர் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால், பின்னாளில்  நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசிற்கு  மனிதவளம் இல்லாமல் போகலாம். எனவே வருமான வரிக்கு இரண்டு இலட்சம்வரை விலக்கு வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

முதலாளிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள்! அதனால் தொழில் செய்வோரிடமிருந்து அரசுக்கு வரி வருவதில்லை. ஆசியாவில் பெரிய அரிசி ஆலைகள் பொலனருவாவில் உள்ளன. அதில் முதல் இரண்டு ஆலைகள் வருமான வரி கட்டுவதில்லை. மூன்றாவது இடத்தில் இருக்கும் அரிசி ஆலைதான் வரி கட்டுகிறது.

இலங்கையில் வங்கி, அரசு ஊழியர், பொறியாளர், மின்சாரம் என பலதுறைகளில்  இருக்கும் 47 சுயேச்சையான சங்கங்கள் ஒன்று சேர்ந்து இலங்கை பொருளாதாரத்தை செம்மைப் படுத்த ஆலோசனை கொடுத்து இருக்கிறோம்.

இலங்கையில் இலாபம் தந்து கொண்டிருக்கும் தொலைபேசித்துறை மற்றும் காப்பீடு நிறுவனங்களைத் தனியாருக்குத் தர விரும்புகிறார்கள். இதனை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் நக்கலான பதில்களைச் சொல்லுகிறார்கள்.

அத்தியாவசியப் பணிகள் சட்டம் மூலம் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கப் பார்க்கிறார்கள். தொழிற்சங்க நடவடிக்கைகளையும் பயங்கரவாத நடவடிக்கைகளாக மாற்ற சட்டத்திருத்தம் செய்ய முயற்சிக்கிறார்கள். இலங்கையில் ஒரு வட்டச் செயலாளரைக் கூட நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது. வழக்கு விசாரணைக்கே வராது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க 2 மில்லியன், 3 மில்லியன் என செலவாகும். ஆன் லைன் சூதாட்டத்தை அனுமதிக்கப் போகிறார்கள்.

கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 10 மணி நேரம்  இரயிலில் பயணித்து பொருட்களை வாங்குவதை விட, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்து பொருள் வாங்குவது விலை குறைவு. இப்போது தினமும் விமான சேவை இருக்கிறது. காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு கப்பல் போக்குவரத்து வர உள்ளது.  இதைத் தொடர்ந்து சரக்கு போக்குவரத்து வரலாம். முன்பு  இந்தியாவில் வர்த்தகம் டாலர் மூலம் செய்யமுடியும். இப்போது இந்திய ரூபாயில் செய்யலாம். இதனால் செலவு குறையும். இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதி, இந்தியாவின் செல்வாக்கின் கீழ் வர வாய்ப்புள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகிறது. அங்குள்ள கோவில்களில் இராணுவ உதவியோடு புத்தர் சிலைகளை வைக்கிறார்கள். முல்லைத்தீவில் உள்ள  சோழர் காலத்து சைவக் கோவிலில் புத்தர் சிலையை வைக்கிறார்கள்.

இலங்கையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடைபெறுகிறது. எனவே தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் ஒருசில இடங்களைப் பெற முடியும். அனைவரும் தனித்தனியாக போட்டியிட்டால், அரசு ஆதரவு பெற்ற கட்சி வெற்றிபெறக்கூடும்.
இலங்கையில் உள்ள நிலமை வங்கதேசத்திலும் வரக்கூடும். இலங்கை, இந்தியா,வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தொழிற்சங்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குவது பொதுமக்களுக்கு நல்லது’’என்றார்.

‘அரசியல்வாதி குடும்பங்களின், உறவினர்களின், நண்பர்களின் வரைமுறையற்றக் கொள்ளை இலங்கையைப் போல இங்கும் நடப்பதைப் பார்த்தால்…,  நமக்கும் இந்த நிலை வரக் கூடுமோ…’ என ஒரு கணம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

டி.பி கார்த்திக் ஏஐடியுசி தொழிற்சங்க அலுவலகத்திற்கு ஏப்ரல் 13  அன்று வருகை தந்தார். அவரை ஏஐடியுசி தலைவர் எஸ்.காசிவிசுவநாதனும், செயலாளர் இராதாகிருஷ்ணனும் வரவேற்றனர். அப்போது இலங்கையில் நடந்து கொண்டிருப்பது பற்றி  எங்களோடு உரையாடியதே மேற்படி கட்டுரை!

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time