உலகையே திரும்பி பார்க்க வைத்த வீரஞ் செறிந்த டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ரத்தமும், சதையுமாக உயிர்ப்புடன் பதிவு செய்துள்ளது இந்த நூல்! நூலை எழுதியவர் இந்த போராட்டத்தை கட்டமைத்து வழி நடத்திய ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற எஸ்.கே.எம்மின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன்.
அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதியான இவர் விவசாயிகள் போராட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து மிக இணக்கமாகவும், வலுவாகவும், சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு உழவர் போராட்டத்தை வழி நடத்தியவராவார். தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ளாமல், மற்றவர்களிடம் இருக்கும் திறமையை, ஆற்றலை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி விவசாய சங்கங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமையை உருவாக்கி, டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகளின் உரிய பங்களிப்பை வரலாற்றில் உறுதி செய்தவர் கே.பாலகிருஷ்ணன்.
இந்த நூல் டெல்லி போராட்டம் குறித்த தகவல்களை மட்டும் கொண்டதல்ல. ஆதிகாலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் விவசாயிகள் சந்திந்த தொழில் சார்ந்த அரசியல் நெருக்கடிகளை மிக சுருக்கமாக முதல் அத்தியாயத்தில் தந்துள்ளார். கந்து வட்டிக் கொடுமைகள் மற்றும் ஆங்கில அரசின் கடுமையான வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிரான தக்காண கலகம், அவுரி விவசாயிகளின் இண்டிகோ போராட்டம், மலபார் பகுதிகளில் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக கிளர்ந்த விவசாயிகளின் மாப்ளா போராட்டம், தஞ்சையில் சாணிப்பால்,சவுக்கடி என நிலச்சுவான்தார்களால் கொடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி போராடிய தோழர் சீனிவாசராவின் வீரஞ் செறிந்த போராட்டம், கீழ்வெண்மணிப் படுகொலை, மின்கட்டண உய்ர்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த தமிழக விவசாயிகள் போராட்டம், ஐயா நாராயணசாமி நாயுடுவால் நடத்தப்பட்ட மாட்டுவண்டிப் போராட்டம்..என பல போராட்டங்களை பதிவு செய்துள்ளார்.
நிலச் சீர்திருத்த சட்டங்களின் தாக்கம், பசுமை புரட்சியின் விளைவுகள் போன்றவற்றையும் நச்சென்று சுருக்கமாக விளக்கி செல்கிறார். மேலும் 2017 மற்றும் 18 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் தொடர்ச்சியாக நடந்த உழவர்களின் பேரணி போன்றவை மூன்று வேளாண் சட்டங்கள் வருவதற்கு முந்தைய நிகழ்வுகளாகும்!
2020 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தான் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு குடியரசுத் தலைவர் மூலம் கொண்டு வருகிறது. கொரானா காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் ஏதுமின்றி அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்ட இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளை விரக்தியின் விளிம்புக்கே தள்ளின! ”இந்திய விவசாயிகளை ஒன்றுமில்லாதவர்களாக்கி, அவர்களிடம் உள்ள துண்டு, துக்காணி நிலங்களையும் பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்காக பிறப்பிக்கபட்டவையே இந்த சட்டங்கள்’’ என்கிறார் நூலசிரியர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் விதத்தில் செப்டம்பர் 2020 ல் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட விதத்தையும் விளக்கி உள்ளார். வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம் விவசாயிகளை எவ்வாறு பாதிக்க உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘கார்பரேட்டுகளின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ‘சீர்திருத்தம்’ என சிலாகிக்கப்பட்டது. ‘சிலோ’ எனப்படும் உலோகத்தாலான மிக பிரம்மாண்ட கிட்டங்கிகளை பல லட்சம் தானியங்களை சேமித்து வைப்பதற்கு தோதாக முன் கூட்டியே கட்டி வைத்ததன் மூலம், இது அதானிக்காக விவசாயிகளை அழிக்க போடப்பட்ட சட்டங்கள் என அம்பலப்படுத்துகிறார்.
டெல்லியில் நடந்த உழவர் போராட்டம் இது வரை வரலாறு காணாத ஒன்றாகும். இந்தியா முழுமையிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயில்களை முற்றுகையிட்டு வெயில், மழை என்று பாராமல் 381 நாட்கள் போராடியது ஒரு அசாதாரண வரலாற்று நிகழ்வாகும். இந்த போராட்டம் ஒன்று திரட்டப்பட்ட விதம், போராட்ட காலங்களில் ஏற்பட்ட பல சாவால்கள், பின்னடைவுகள், அரசாங்கத்தின் சூழ்ச்சிகள், விவசாயத் தலைவர்களின் மன உறுதி ஆகியவை சிறப்பாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு நாளும் லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு உணவு சமைத்து வழங்க உருவாக்கப்பட்ட லங்கர் எனப்படும் சமூக சமையற்கூடம்! அதற்கு இலவசமாக அரசி தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை தந்து உதவிய விவசாயிகள்! தண்ணீர் கிடைக்காமல் அரசு சூழ்ச்சி செய்த போது ராகேஷ் திகாயித் விடுத்த வேண்டுகோளை அடுத்து தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஓடோடி உதவி செய்ய வந்த மக்கள்..என நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன!
கூடாரங்களை பிய்த்து எறிந்து காவல்துறை நடத்திய அராஜகங்கள், போராட்ட களத்திற்குள் ஊடுருவி பிரித்தாளும் சூழ்ச்சி செய்யப்பட்ட தந்திரங்கள்..என திரில்லான அனுபவங்கள் உள்ளன! ஒரு லட்சம் டிராக்டர்களில் அணிவகுத்து வந்த விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க பாஜக அரசு சாலையை குழிதோண்டி போட்டது, சாலைகளில் பெரும் தடுப்புகளை உருவாக்கியது என கோழைத்தனமான அடக்குமுறைகளை கையாண்டு தோற்றது.
முசாபர் நகர் மகா பஞ்சாயத்து, கார் ஏற்றிக் ஐவர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் படுகொலைகள், வீரச் சாம்பல் பயணம், போராட்ட களத்தில் பெண் விவசாயிகளின் பங்களிப்பு… என பரவலாக போராட்டத்தின் அனைத்து அம்சங்களும் நூலில் விரவிக் கிடக்கின்றன! 714 உழவர்களை போராட்ட களத்தில் தியாகம் செய்து, அமைதி வழியில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் வரலாறு அவசியம் இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
டெல்லி போராட்டம் நடைபெற்ற அதே காலகட்டத்தில் அதற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்ற உழவர் போராட்டங்களும் இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளன! இந்த வரலாற்று போராட்டங்களின் சம்பவங்கள் வண்ணப் புகைப்படங்களாக கடைசி 16 பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளன!
நூல்; உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்
ஆசிரியர்; கே.பாலகிருஷ்ணன்
வெளியீடு; சுய ஆட்சி இயக்கம்
விலை; ரூ120
பழவந்தாங்கல், சென்னை 600114
தொலைபேசி; 9444627827, 9444922148
Leave a Reply