அரவிந்த் கேஜ்ரிவாலை அழிக்க முயற்சி!

-சாவித்திரி கண்ணன்

எவ்வளவு முயன்றும் டெல்லி ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை! இந்தியாவையே ஆண்டாலும் டெல்லியை ஆள முடியவில்லை! மக்கள் மன்றத்தில் வெல்ல முடியாதவரை அதிகாரத்தால் அழிக்க துடிக்கிறார்கள்!  ஜேபிசி விசாரணையை அதானிக்கு மறுத்தவர்கள், சிபிஐயை அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நிர்பந்திப்பதா?

அதிகார அழுத்தங்கள், ஆளுனரின் ஏதேச்சதிகாரம் ஆகியவற்றைக் கடந்தும் நல்லாட்சி தந்து, மக்களின் நம்பிக்கை பெற்று வருகிறது ஆம் ஆத்மியின் டெல்லி அரசு!

பாஜகவின் பரவலான ஊடக பொய் பிரச்சாரங்களைக் கடந்து, மக்களிடம் வலுவான செல்வாக்கு கொண்டுள்ளனர் ஆம் ஆத்மி கட்சியினர்!

பொய் வழக்குகள், கைதுகள் பலவற்றை ஏற்கனவே கண்ட அனுபவங்கள் அந்தக் கட்சியினருக்கு உண்டு! வீரம் விளைந்த பஞ்சாப் பூமியை வென்றெடுத்து, முன்னேறுகின்றனர். குஜராத்துக்குள் கால்பதித்து ஆம் ஆத்மிக்கான அடித்தளத்தை நிறுவிவிட்டனர். கோவாவுக்குள் நுழைந்து பாஜகவின் கோட்டைக்குள் ஓட்டை போட்டனர். இன்று அகில இந்திய கட்சிக்கான அந்தஸ்த்தை கைப்பற்றி உள்ளனர்.

இந்தியாவின் தலைநகரில் மக்கள் நல ஆட்சி என்றால் என்ன? என்பதற்கு அடையாளமாக குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை சகலருக்கும் நியாயமான கட்டணத்தில் சாத்தியப்படுத்தினார்கள்! அரசு மருத்துவனைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடான தரத்துடன் நடத்துகிறார்கள்! அரசு பள்ளிக் கூடங்களை ஆகச் சிறந்த கல்வி மையங்களாக மாற்றினார்கள். இதனால் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஓனர்களும், தனியார் பள்ளிக்கூட அதிபர்களும் ஆம் ஆத்மி ஆட்சியை தகர்க்க காய் நகர்த்தி வருகின்றனர்.

மணிஸ் சிசோடியா, அரவிந்த் கேஜ்ரிவால்

நல்ல மனிதர், சோர்விலா களவீரர் மணீஸ் சிசோடியாவை மண்டியிட வைக்க முயன்றனர் முடியவில்லை. கைது செய்து காராகிரகத்திற்குள் தள்ளினர், கலங்கவில்லை. அடுத்த நகர்வாய் அரவிந்த் கேஜ்ரிவாலை அழிக்கத் துடிக்கின்றனர்! சிறு நரிகள் கூடி சிங்கத்தை சிதைக்க பார்க்கின்றன!

சிபிஐ விசாரணைக்கு முன் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட செய்தியில்,என்னை கைது செய்ய வேண்டும் என பாஜக சிபிஐக்கு உத்தரவு தந்தால், அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள். மக்களுக்கு ஆம் ஆத்மி நம்பிக்கை ஒளி தந்தது. அந்த ஒளியை மறைய வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். எங்களுக்கு டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் சிபிஐ, அமலாக்கத்துறை இது போன்று செயல்படுகின்றனர்.

இந்த அமைப்புகள் நாள்தோறும் யாரையாவது கைது செய்து அவர்களுக்கு டார்ச்சர் தந்து நீதிமன்றத்தில் பொய்களை தெரிவித்து வருகின்றன. இது போன்ற போலி புகார்களை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மீது வழக்கு தொடுக்கவுள்ளேன். நான் எந்த ஒரு ஆதாரமும் இன்றிபிரதமருக்கு 1,000 கோடி ரூபாய் கொடுத்தேன்’ என்று கூறினால், அதை கேட்டு நீங்கள் பிரதமரை கைது செய்வீர்களா..?” என கேட்டுள்ளார். 

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தனி மனிதர் சார்ந்ததல்ல. ‘இந்தியாவில் வலுவான எதிர்கட்சி ஒன்றே இருக்கக் கூடாது’ என்ற ஜனநாயகத்திற்கு எதிரான மனப்போக்காகும்!

பாஜகவுடன் சமரச அரசியல் செய்து கொள்பவர்கள் எவ்வளவு தான் நாட்டை சூறையாடினாலும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன! ஒ.பி.எஸ், இ.பி.எஸ், வேலுமணி, விஜயபாஸ்கர்… எல்லாம் ஊழல் செய்யாத உத்தமர்களா..? ஆந்திராவையே சூறையாடிக் கொள்ளையிடும் ஜெகன்மோகன் ரெட்டியை எல்லாம் வேடிக்கை பார்க்கவில்லையா?

காங்கிரஸில் இருந்த வரை காண சகிக்காத பரம வைரியான குலாம் நபி ஆசாத் இன்று மோடியின் முக்கிய நண்பாராகவில்லையா?

நேற்று சிபிஐ விசாரணை என்ற பெயரில் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் ஒன்பது மணி நேர விசாரணை நடந்துள்ளது. ’56 இன்ஞ்’ மார்புள்ள பிரதமர் ஆட்சியில் 56 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன! எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி உள்ளார் கேஜ்ரிவால். விசாரணைக்கு பிறகு அவர் ஊடகங்களுக்கு தந்த பேட்டி முக்கியமானது;

”மதுபான கொள்கை அமலுக்கு வந்த 2020ஆம் ஆண்டு முதல் இறுதி வரை என்ன நடந்தது என அனைத்தையும் சிபிஐ என்னிடம் கேட்டது.. நாளை டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து மேலும் விவாதிக்க உள்ளோம்… இந்த மதுக் கொள்கை விவகாரமே பொய்யானது.. திட்டமிட்டு எங்கள் மீது பழி சுமத்தியுள்ளனர்.

எப்போதும் நேர்மையாக இருப்பதே எங்களின் சித்தாந்தம்.. நாங்கள் உயிரிழக்கவும் தயாராக உள்ளோம்.. ஆனால் நேர்மையுடன் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அவர்கள் எங்களை எங்கள் வளர்ச்சி திட்டங்களையும் இழிவுபடுத்தவே இதையெல்லாம் செய்கிறார்கள். நாங்கள் இப்போது தேசியக் கட்சியாகிவிட்டோம். இதன் காரணமாகவே எங்களைக் கண்டு அஞ்சி எங்களை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் இப்படியெல்லாம் செய்து வருகிறார்கள்”

இந்தியாவையே சூறையாடி சுருட்டி வரும் அதானியின் சுரண்டலுக்கு துணை போகும் பாஜக அரசு, நேர்மையான அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியை அழிக்க துடிக்கிறது! அதானி மீதான புகார்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கே தயார் இல்லாமல் அழிச்சாட்டியம் செய்யும் மோடி அரசு, நேர்மையான அரவிந்த் கேஜ்ரிவாலை அழிக்க துடிப்பதை எப்படி அனுமதிப்பது?

எனவே, கருத்து வேற்றுமைகளை மறந்து அனைத்து ஜனநாயக விரும்பிகளும் ஒன்றுபட்டு ஆம் ஆத்மி அரசை முடக்க நினைக்கும் சதியை தகர்க்க வேண்டும். இன்று ஒன்றுபட முடியாவிட்டால், வென்று முறியடிக்கும் சாத்தியக் கூறுகள் என்றும் இல்லாமல் போகலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time