தனியார் மருத்துவமனைகளை நெறிப்படுத்த முடியுமா அரசால்?

மருத்துவர். முகமது காதர் மீரான்

சமீபத்தில் ராஜஸ்தான் மருத்துவர்களின் போராட்டங்கள் தேசிய அளவில் பேசுபொருளானது. காரணம், மக்கள் நலவாழ்வு உரிமைக்கான சட்ட முன்வரைவு! தனியார் மருத்துவமனைகள் ஏழை, எளிய நடுத்தர பிரிவு மக்களுக்கு சிகிச்சை தர வேண்டும் என்று அரசு எப்படி கேட்கலாம்..? என கொந்தளித்து விட்டனர் மருத்துவர்கள்!

ராஜஸ்தான் அரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த ராஜஸ்தான் நலவாழ்வு உரிமைக்கான சட்ட முன்வரைவு (Rajasthan Right to Health Bill) மக்கள்  நலன் மீது அக்கறையுடன் கொண்டு வரப்பட்ட ஒர் அற்புதமான முன் வரைவாகும். இந்த சட்ட முன் வரைவை, ஆளும் காங்கிரஸ் அரசு நிறைவேற்ற கிட்டத்தட்ட கடந்த ஆறு மாதங்களாக போராடி உள்ளது.

முதன்முதலில் 2022 செப்டம்பரில் சட்டமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட இந்த சட்ட முன்வரைவு, சட்டமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது, அதில் பல ஷரத்துகள் மாற்ற நிர்பந்திக்கப்பட்டு, மீண்டும் 2023 மார்ச்சு மாதம் சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தான் நிறைவேற்றப் பட்டுள்ளது.  உண்மையில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்படும் என்று 2018 ராஜஸ்தான் மாநில தேர்தலின் போதே வாக்குறுதி அளித்து இருந்தது  காங்கிரஸ் கட்சி.

செப்டம்பர் 2022 இல் தாக்கல் செய்யப்பட முன்வரைவில் இருந்த பல நல்ல அம்சங்கள் நிலைக்குழுவின் அறிக்கைக்கு பிறகு பல தரப்பட்ட அழுத்தங்களால் தற்போது நீக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இந்தியாவில் இப்படி ஒரு சட்டத்தை முதன்முறையாக, ஒரு மாநில அரசு இந்த அளவு கார்ப்பரேட் மருத்துவமனைகள் எதிர்ப்புகளையும், லாபிகளையும்  மீறி மக்களுக்காக கொண்டு வந்து இருக்கிறது என்பது பாராட்டுக்கு உரியதே.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

மக்களுக்காக நல்ல சுகாதாரத் திட்டங்களை கொண்டு வருவது ராஜஸ்தான் அரசுக்கு புதிது அல்ல. முதலமைச்சர் அசோக் கெக்லோட் சென்ற ஆட்சியின் பொழுது 2012 ஆம் ஆண்டில் ‘இலவச மருந்து திட்டத்தை’ அறிமுகம் செய்தார். தற்போது அந்த மாநில அரசால் வழங்கப்படும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வரை காப்பீட்டு தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்தது போல, நாட்டிலேயே முதன் முறையாக இப்படி ஒரு நலவாழ்வுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் நலவாழ்வுரிமை சட்டம் என்றால் என்ன?

சாலை விபத்து, ரயில் விபத்து, விமான விபத்து, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள்; பாம்புக்கடி, வெறிநாய்க்கடி உள்ளிட்ட மிருகங்ககளால் ஏற்படும் பாதிப்புகள் ; பிரசவத்தின் போது ஏற்படும் அவசர நிலை ( Obstetric emergencies ) ; கொரோனா போன்ற நுண்ணியிரிகளால் பரப்பப்படும் உயிரி பயங்கரவாத நோய்கள் (Bio-terrorism) ஆகியவற்றுக்கு அவசரகால மருத்துவ சிகிச்சை (Emergency care) ஐ மருத்துவமனைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அரசு, அரசு உதவி பெரும் மருத்துவமனைகள் ; அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இந்த சிகிச்சைகளை  பெற்றுக் கொள்ளலாம். மேலும், இத்தகைய அவசர கால சிகிச்சைக்கு நோயாளியால் பணம்  செலுத்த முடியாத சூழலில், அரசே அந்த மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணத்தை திரும்ப அளிக்கும். இதில் முதலுதவி, அவசரகால ஊர்தி ஆகிய சேவைகளும் அடங்கும்.

இந்த சட்டத்தின் கீழ் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதை அரசு எவ்வாறு உறுதி செய்யும்?

”இந்த சட்டத்தின் கீழ் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதை மாநில சுகாதார ஆணையகமும் அதன் கீழ் செயல்படும் மாவட்ட அலுவலகங்களும்  மேற்பார்வையிடும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனாலும், இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த சட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்தாலோ, அல்லது தரமான சிகிச்சை வழங்காவிட்டாலோ இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட grevence குறை தீர்க்கும் இணையதளம் மற்றும் புகார் எண் (helpline) ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். மேலும் அதற்கான நடவடிக்கை மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்; நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றெல்லாம் பல புரட்சிகரமான திட்டங்களை சொல்லிய இந்த சட்ட முன்வரைவில் இருந்து, இவையெல்லாம் நிலைக் குழுவால் நீக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு பதிலாக, சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகியிடம் நோயாளி புகார் தெரிவிக்க வேண்டும் என்றும்; அதில் மூன்று நாட்களுக்குள்  நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு புகார் அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் அப்புகாரின் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை திருப்தி அளிக்காத பட்சத்தில் மாநில சுகாதார ஆணையகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிராக மருத்துவர்கள் போராடியதற்கு காரணம் என்ன?

செப்டம்பர் 2022 இல் தாக்கல் செய்யப்பட இந்த சட்ட முன்வரைவில், ”தனியார் மருத்துவமனைகளும் அடங்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அங்கிருந்தே தொடங்கியது பிரச்சனை. ‘தங்களது மருத்துவமனைகள் அவசர சிகிச்சையை இலவசமாக எப்படி வழங்க முடியும்?’ என்று தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். அதை தொடர்ந்தே இந்த முன்வரைவு சட்டமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு; தனியார் மருத்துவமனைகள் என்ற சொல்லாடல் நீக்கப்பட்டது. அதற்குபதிலாக  அரசு தேர்ந்தெடுக்கும் (அல்லது) இந்த திட்டத்தில் இருப்பதாக அறிவிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று மாற்றப்பட்டது.

இந்த சட்டம் தனியார் மருத்துவமனை உரிமையாளர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ‘மாநில அரசு தங்களிடம் கலந்தாலோசிக்காமல், தங்களது மருத்துவமனையை இவ்வாறு இலவச சிகிச்சை அளிக்க நிர்பந்திக்க கூடும்’ என்று ஒருவித பயம் பரவியது. இந்த பயமே போராட்டத்தை தீவிரப்படுத்தி, மருத்துவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி, அங்கு போலீசு தடியடி நடக்கவும் காரணமானது.

இவையெல்லாம் நடக்கும்போது இந்தியாவில் உள்ள அதிகபட்ச மருத்துவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) மிகவும் அமைதியாக, தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிஐ ஆல் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட, அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஊழலுக்காக சிறை சென்று வந்த கேதன் தேசாயின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு இருந்தது.

ஊழலுக்கு பேர் போன கேதான் தேசாய்க்கு வாழ்த்துக் கூறும் இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA)டிவிட்டர் பதிவு

அடுத்த நாள் ராஜஸ்தான் சட்ட சபையில் இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டவுடன், அரசின் தீவிரத்தை புரிந்துகொண்டு இந்திய மருத்துவ சங்கம் அவசர கூட்டம் ஒன்றை ஆன்லைனில் ( மார்ச்சு 25 ) ஏற்பாடு செய்து; அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மார்ச்சு 27 ஆம் தேதி நாடு தழுவிய மருத்துவர்களின் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு முன்னதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் (மரு. சரத் அகர்வால்) உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் ராஜஸ்தான் மாநில ஆளுனரை சந்தித்து (மார்ச்சு 26); இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். இதன் பிறகே இந்த விஷயம் மேலும் பெரிதானது.

மார்ச்சு 27 ல் நடந்த ராஜஸ்தான் போராட்டத்தில் துணை மருத்துவ பணியாளர்களை அதிக அளவில் பங்கேற்க செய்தனர். மேலும், மருத்துவ மாணவர்கள் பலரையும் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் என்ற போர்வையில் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க செய்தனர் என்ற குற்றசாட்டும் ஊடகங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி, வரப்போகும் ராஜஸ்தான் மாநில தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர் கட்சிகளும் இந்த போராட்ட களத்தை ஆக்கிரமித்தனர்.

இந்த சட்டத்தை அமுல் படுத்துவதில் இருந்து பின்வாங்காத மாநில அரசு, போராட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் தேதி செய்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 50 படுக்கைகளுக்கு குறைவான படுக்கை கொண்ட மருத்துவமனைகள்; அரசிடம் உதவி பெறாத மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை இந்த சட்டத்தில் தற்போதைக்கு சேர்க்க மாட்டோம் என்றும்; தனியார் மருத்துவ மனைகளை கலந்தாலோசித்த பிறகே, அந்த குறிப்பிட்ட மருத்துவமனையை இந்த சட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. (அரசுக்கும் போராட்டக் குழுவிற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்)

போராட்டம் முடிவுக்கு வந்தவுடன், இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் டெல்லியில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், போராட்டத்திற்கு வழிகாட்டுதல் வழங்கிய ‘தொலைநோக்கு பார்வையுடைய தலைவர் மருத்துவர்.கேதன் தேசாய் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படியானால், இந்த போராட்டத்தின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை வாசகர்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.

இந்திய மருத்துவ சங்கத்தின் செய்தி குறிப்பு!

இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் ஆளுநரின்  நிலைபாடு என்ன..?  என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்த முன்வரைவுக்கு  ஒப்புதல்அளித்துள்ளார் ஆளுநர்.

மேலும், கொரோனாவிற்கு முன்னரே தனியார் பல்கலைக்கழகம் ஒன்று, மத்திய அரசுக்கு மாதிரி மக்கள் நல்வாழ்வுரிமை சட்டமுன்வரைவை வடித்துக் கொடுத்து; அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கை மத்திய அரசால் அன்றைய சூழலில் நிராகரிக்கப்பட்டு அந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகியது.

இப்படி மத்திய அரசே கொண்டுவரத் தயங்கும் ஒரு சட்டத்தை பல தடைகளையும் தாண்டி, ராஜஸ்தான் மாநில அரசு இந்த சட்டத்தை தற்போது கொண்டுவந்துள்ளது. இந்த நலவாழ்வுரிமை  சட்டத்தில் பல குறைகள் இருந்தாலும், நமது நாட்டில் இது ஒரு முதன்மையான முன்னெடுப்பாகும். ராஜஸ்தான் மாநில அரசும், ”தனியார் மருத்துவ மனைகள் தாங்களாகவே இந்த சட்டத்தின் கீழ் தங்களை இணைத்துக்கொள்ள முன்வரும் வகையில் சிறப்பான வழிகாட்டுத்தல் விதிகள் (rules ) ஐ இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவருவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இத்தகைய சட்டம் நடைமுறைக்கு சாத்தியமா?

ராஜஸ்தான் அரசே இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவரும் போது, தமிழகத்தில் இத்தகைய சட்டம் ஒன்றை அமுல்படுத்துவது தமிழக அரசுக்கு நடைமுறையில் சாத்தியமே. இதற்கான முன்னெடுப்புகள் ஓராண்டுக்கு முன்பே தமிழக அரசால் எடுக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் இருந்து, சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு தொடர்புடைய நிபுணர்கள் பலரை அழைத்து வந்து 2022ஆம் ஆண்டு மார்ச்சு 9 ஆம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தமிழகத்திற்கான நலவாழ்வுரிமைக்கான சட்ட முன்வரைவை (Right to health bill) ஐ வரையறுக்கும் கூட்டம் ஒன்றை நடத்தியது தமிழக அரசு. முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலர் திருமதி. சுஜாதா ராவ்,உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் (Jean Dreze), சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு சிறந்த மருத்துவ சேவை அளித்து வரும் மரு. யோகேஷ் ஜெய்ன்,மும்பை டாடா இன்ஸ்டிட்யுட் ஆப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை பேராசிரியருமான  புதுச்சேரியை சேர்ந்த மரு. சுந்தர்ராமன் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இருந்தனர்.

தமிழ் நாட்டில் Right to health act க்காக நடத்தப்பட்ட கூட்டம்.

கூட்டத்திற்கு பிறகு பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்கள், வரும் தமிழக சட்டமன்றத்தின் அடுத்த  மழைக்கால கூட்டத்தொடரிலேயே (2022 June), இந்த சட்ட முன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு Right to health Act தமிழகத்தில் அமுல்படுத்தப்படும் என்று பத்திரிகைகளிடம் முழங்கினார். ஆனால், இன்றுவரை அப்படி ஒரு முன்வரைவு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இதற்கு அதிகாரப் பூர்வமான காரணம் என்ன என்று அரசால் சொல்லப்படவில்லை என்றாலும், நமக்கு தெரிந்த மருத்துவத்துறை அதிகாரிகளின் கருத்துக்களை கேட்ட பொழுது, தமிழக அரசின் சுகாதாரத்துறை யின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள் (Directorate of Medical Education ; Directorate of Medical Services & Rural Health; Directorate of Public Health etc) ஆகியவை, இத்தகைய சட்டத்தை அமுல்படுத்துவது தமிழகத்தில் சாத்தியம் இல்லை என்று கருத்து தெரிவித்ததாகவும்; அதன்படி நலவாழ்வுரிமைக்கான சட்டத்தை(Right to Health Act) நிறைவேற்றும் முயற்சியை கைவிட்டுவிட்டு பெயரளவில் ஒரு கொள்கை விளக்கத்தை (Right to Health Policy) ஏற்படுத்தலாம் என்ற முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதன் பின்னணியில் அப்போதைய மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபுவும், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் சம்பந்தப்பட்டு உள்ளனர் என சொல்லப்படுகிறது. ”இந்த சட்டம் தமிழகத்தில் சாத்தியப்படாது” என்று சொல்வதற்காகவா இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்…?

சுகாதாரத் துறையில் முன்னேறிய மாநிலமாக தன்னை மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசால், ”மக்கள் நலவாழ்வுரிமைக்கான சட்டத்தை நிறைவேற்ற முடியாது” என்ற முடிவு எடுக்கப்பட்டது துர் அதிர்ஷ்டமே!  இந்த சூழலிலும் சுகாதாரத்துறையில் நம்மை விட பின்தங்கிய மாநிலமான ராஜஸ்தான் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு போற்றுதலுக்கு உரியது.

கட்டுரையாளர்; முகமது காதர் மீரான்,

மருத்துவர்

‘இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time