அதிகார துஷ்பிரயோகத்தால் குளிர்காயும் பாஜக அரசு!

- ச.அருணாசலம்

சி.பி.ஐ, அமலாக்கதுறை, வருமான வரித்துறைகளின் மூலம் எதிர்கட்சிகளை முடக்கும் நோக்கில் பாஜக அரசு பொய் வழக்கு, விசாரணை, கைது.. என அதிகார துஷ்பிரயோகம் செய்வதை எதிர்த்து 14 முக்கிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து  முறையிட்டதை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இனி செய்ய வேண்டியது என்ன?

காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன் கார்கே, பவார் காங்கிரசை சார்ந்த நவாப் மாலிக், அனில் தேஷ்முக், ஆம்ஆத்மி
கட்சியை சார்ந்த சத்யேந்தர் ஜெயின், மணீஷ் சிசோடியா, அரவிந்த் கேஜ்ரிவால், திரிணாமுல் கட்சியை சார்ந்த மண்டொல் மற்றும் முகர்ஜீ, சிவசேனா(தாக்கரே) வை சார்ந்த சஞ்சய் ராவுத், பீகார் துணை முதல்வர் தேஜேஸ்வி யாதவ், தெலுங்கானா கவிதா சந்திரசேகர் ராவ் என எண்ணிலடங்கா எதிர்கட்சி தலைவர்கள் மேல் பாஜக ஆட்சியினரால் விசாரணை முகமைகள் ஏவப்பட்டு
அவர்கள் விசாரணைக்கு வரச்சொல்லி இழுத்தடிப்பதும் , சிறையில் அடைப்பதும் பிஎம்எல் ஏ சட்ட விதிகளை கூறி பிணை மறுப்பதும் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வருவதை நாடறியும்.

தெலுங்கானா கவிதா சிபிஐ விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போது..

அதே நேரம்  விசாரணைக்கு பயந்து பாரதிய ஜனதாவிற்கு தாவி தஞ்சம் அடைந்த அரசியல்வாதிகளுக்கு சிவப்பு கம்பளமும் , பாவ மன்னிப்பும் ஒருங்கே அமைவதையும் நாடறியும் .

சட்ட விதிகளை பாரபட்சமின்றி, சமமாக பிரயோகிப்பதே ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைக் கடமை. அதைத் தான் சட்டத்தின் ஆட்சி ( rule of law)  என்றழைக்கிறோம் . ஆனால், இந்த அடிப்படை பண்பையே மழுங்கடித்து “சட்டத்தின் பெயராலே ” சட்டங்களின் நோக்கத்தை
குழி தோண்டி புதைப்பதில் இன்று மோடி அரசு கை தேர்ந்துள்ளது . அதை நாடும் நாட்டு மக்களும் அறிவர் . கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

இந்த வழக்குகள்,விசாரணைகள், சிறைவாசங்கள், மூலம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டனவா?
குற்றவாளிகள் என நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்பட்டனரா? எத்தனை பேர் தண்டனை பெற்றனர்? போன்ற கேள்விகள் பத்திரிக்கைகளால் கேட்கப்பட்டனவா? பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர் “நியாயங்களுக்காக” குரல் ஏதும் எழுப்பினரா?

இந்திய பொதுவெளியில் இந்த அநியாயங்களை குறித்து , இந்திய அரசின் “வன்ம அரசியலை” குறித்து பேசுவோர் யாருமில்லை. காரணம் பயம் மட்டும் பயன் இரண்டுமே !
ஆமாம், இந்த அத்துமீறல்களை பேசாமல் , பூசி மெழுகி ஒன்றுமே நடக்காதது போல் கடந்து விட்டால், அதனால் அவர்களுக்கு சிலபல “பயன்கள்” கிடைக்கிறது. இந்த வகையை சார்ந்தவையே புகழ்பெற்ற  இந்திய ஊடகங்களாகும் . இவர்களோடு கைகோர்க்க  “கடமை மறந்த” அதிகார வர்க்கமும், நீதி துறையும் தயங்கவில்லை. ஏனெனில் ‘பயனில் ‘அவர்களுக்கும் பங்குண்டு.

ஆட்சியாளர்களுக்கு அனுசரணையான ஊடகங்கள்!

மறுபுறம் இந்த தவறை தவறென்று உணர்ந்த பலர் தங்களது உடமைக்கும் , உயிர்க்கும் பயந்து கண்மூடி ,கடந்து செல்கிறார்கள். இதில் சாமான்ய மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த கூட்டத்தில் இருக்கின்றனர்.

சட்டம் அறிந்தவர்களோ அல்லது சட்டத்தை அமல் படுத்தும் பொறுப்பில் உள்ளவர்களோ பத்திரிக்கையாளர்களோ, அறிவு ஜீவிகளோ, பிரபலங்களோ ஏன் அரசியல் கட்சிகளே கூட நேற்றுவரை சிதறிய நெல்லிக்காய்களாக இருந்த நிலையில், இந்த கையறு நிலைக்கு முடிவு கட்ட 14 கட்சிகள் ஒன்றிணைந்து உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டனர் .

இந்த ஒருங்கிணைந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இம்மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்தது பல அரசியல் மற்றும் அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசின் அதிகார முறைகேட்டை தடுப்பதற்காக ஒரு பொதுவான வழிமுறைகளை ஏற்படுத்த இந்த நீதி மன்றத்தை அணுகுவது அபாயகரமானது, ஏனெனில், சட்டங்களை இயற்றுவது சட்டசபைகளின் (legislative) பணி , நீதிமன்றங்களின் பணி அல்ல என்று கூறி இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நன்றி ‘தி வயர்’

தனித்தனியாக ஒவ்வொரு வழக்கையும் அதன் தன்மை அதனுடைய உண்மைக் கூறுகள் அடிப்படையில் தான் தீர்மானிக்க முடியுமே அல்லாது இவற்றை எல்லாம் ஒரே மாதிரியான வழக்குகள் என்று கருதி  பொதுவான வரைமுறைகளும், நிவாரணங்களும் வழங்க முடியாது,
அவ்விதம் வழங்குவது இருவேறு நிலை வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு சம்மாகும் என காரணம் கூறி தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் தர்க்கரீதியான அணுகுமுறைகளில் யாதொரு பழுதும் இல்லாவிட்டாலும், தொடரும் முறைகேடுகளும் அதன் ஒருதலை பட்சமும் கண்கூடாக நாடறிந்த ரகசியமாக இருக்கும் பொழுது நீதியின் கண்களும் கரங்களும் உயிரற்று இருக்க இயலுமா என்ற கேள்வி நம்மை துளைக்கிறது.

இன்றிருக்கும் களச் சூழலில் ஆட்சியில் இருக்கும் அரசின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு, அவர்களின் லட்சியம் அல்லது இலக்கு பற்றிய புரிதல் ஒரு சில நீதியரசர்களுக்கு இருந்தாலும், அரசியல் சாசனத்திற்கெதிரான இலக்கையையும் போக்கையும் முறியடிக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உண்டு, அதை தானாகவே முனவந்து அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதல்லவா?

உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட கட்சிகள்! நன்றி; ‘லைவ் லா’

அப்படித்தானே வேறெந்த நாட்டிலும் இல்லாத பொது நல வழக்குகளும் (Public Interest Litigation) அதனடிப்படையில் விளைந்த நீதியின் நீட்சியையும், இந்திய நீதி மன்ற நடைமுறையில் முளைத்தெழுந்தது?

அந்த நீட்சி ஒரு புதிய சூழலின் தேவையால் விளைந்த ஏற்பாடு என்பதை மறுக்க இயலுமா?

வேண்டுமென்றே ஒரு அரசு பாரபட்சம் காட்டி ஒருதலைபட்சமாக சட்டத்தை அமல் படுத்தினால், அதனால் சமநிலை குலைவதால் – அரசியல் கட்சிகளிடையே சம நிலையும் சுமுகமான தன்மையும் குறைவதால் – அனைவருக்கும் பொதுவான ஒரு சமநிலையை ஏற்படுத்தும் கடமை – the duty of creating a level playing field – அரசியல் சாசன பாதுகாவலனான நீதி மன்றத்திற்கு உண்டு என்பதும் சிலரின் வாதமாகும்.

இக்கருத்தியலுக்கு ஆதரவாக இந்திய அரசியல் சாசனம் உருவான விதத்தையும் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

14 எதிர்கட்சிகள் ஒன்று கூடி விவாதித்த போது!

இது காலம் வரை பல்வேறு தேசங்களாக, மத்த்தினராக, சாதிகளாக மொழியினராக, குழுக்களாக பிரிந்து கிடந்த இந்நாட்டினருக்கு ‘ஒரு புதிய ஏற்பாடாக ‘ சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்ற லட்சியங்களை நோக்கிய நீதி நிறைந்த பயணத்திற்கு உதவ , உயிருள்ள சாசனமாக இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதை அவர்கள் நினைவு கூறுகின்றனர். இந்திய அரசியல் சாசனம் ஒரு உயிருள்ள சாசனம் ( living document) என்பது உண்மையானால், இன்று புதிதாக தோன்றியுள்ள பெரும்பான்மைவாத அரசின் சட்டப் பித்தலாட்டங்களை எதிர்கொள்ள இந்திய நீதிதுறை  சில அடிகளையேனும் எடுத்து வைக்க வேண்டும் என்று நம்புவோர் பலர்.

அரசின் அத்துமீறலுக்கும், அதிகாரத்திற்கும் எதிராக சாமான்யனுக்கு உள்ள கேடயமாக இருப்பது நீதிமன்றங்கள் தான் , அதுவே குடியாட்சியின் அடையாளமும், மாண்புமாகும்.
பெரும்பான்மைவாதம் பேசும் ஏதேச்சதிகார அரசின் அடாவடிகளுக்கும் , சுதந்திரம் பன்முகத்தன்மை அனைவருக்கும் பொதுவான முன்னேற்றம் மற்றும் வாய்ப்புக்களில் நம்பிக்கையுள்ள பரந்துபட்ட மக்களின் நலனுக்கும் , ஒரு சமநிலை காண வேண்டிய பொறுப்பு நீதி மன்றங்களுக்கு உள்ளது.

அரசியல் செயல்பாடுகளை நெறிபடுத்த வேண்டியுள்ளது. அரசியலில் மதம் கலப்பது , மத அடிப்படையிலேயே நாட்டை கட்டியெழுப்புவது போன்ற நிலைப்பாடுகள் அரசியல் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டே அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும்.

அது போன்றே,  அரசின் அத்துமீறல்களை எதிர் கொள்ள அரசியல் சாசன கூறுகளின் அடிப்படையில் அரசியல் செயல்பாடுகள் அமைய நீதிமன்றங்கள் வற்புறுத்த வேண்டிய நிலை இன்று வந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால், மறுபுறம் சமூகத்தில் அரசியல் வெளியில் தோன்றும் அல்லது முளைக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு நீதிமன்றங்களிடம் இல்லை. அவை, பொதுவெளியில் மக்களை திரட்டுவதன் மூலமே இதற்கு முடிவு கட்ட வேண்டுமென்று வாதிடுவோர் உள்ளனர்.

இதையேதான் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியும், ‘அரசின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளால் கட்சிகளுக்கிடையே சமநிலை குறைந்தால் அதை நிவர்த்தி செய்ய , தீர்த்து வைக்க அரசியல் வெளிதானே ஒழிய நீதிமன்றங்கள் அல்ல ‘ என்ற வாதத்தை முன்வைத்தார் , மனுவை தள்ளுபடி செய்தார்.


உண்மைதான் , எல்லா அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு நீதிமன்றங்கள் அல்லதான். இந்திய பொதுவெளியில் தான் அரசியல்கட்சிகள் தத்தமது அங்கீகாரத்தை பெறேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. மக்களை திரட்டுவதன் மூலமே அரசியல் கட்சிகள்
தங்களது அங்கீகாரத்தை பெற வேண்டும் .

ஆட்சி கட்டிலில் ஏறிய ஒரு கட்சி , எந்த சட்ட அடிப்படையில் ஆட்சிக்கு வந்ததோ அந்த சட்ட சாசனத்தின் ஏனைய கூறுகளின் வழிமுறையில்தான் ஆட்சிபுரிய வேண்டுமேயன்றி, அவற்றை நீர்த்து போகவிடுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைபடுத்த இயலாது.
அந்த சட்ட மீறலை பொதுவெளியில் மட்டுமின்றி நீதி மன்றங்களிடமும் முறையிட்டு தீர்வுக்கு முயற்சிப்பதில் தவறில்லைதானே.

ஆனால், இன்று ஆட்சியிலுள்ளோர் சுயாதீனமான அமைப்புகளை சிறகொடித்து (சி.ஏ.ஜி., சி.வி.ஏ., தேசிய மனித உரிமைகள ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், செபி, போன்ற அமைப்புகள்) கைப்பாவைகளாக மாற்றி உள்ளனர். தட்டி கேட்கும் நிலையில் உள்ள தேர்தல் ஆணையம், லோக்பால் போன்ற அமைப்புகளை சீர்குலைத்ததுள்ளனர், நாடாளுமன்றம் , ஊடகம் ஆகியவற்றை தலையாட்டி பொம்மைகளாக அலங்கார பதுமைகளாக மாற்றி உள்ளனர்.

நீதி மன்றங்களை கடிவாளமும், காரட்டும் காட்டி வளைத்து போட்டுள்ளனர்.

எதிர்கட்சிகளை முடக்க சட்டங்களை வளைத்து, அன்டர் கிரௌன்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவற்றை எல்லாம் ஆளும் கட்சியினரே பெருமையுடன் ஒத்துக் கொள்ளும் பொழுது, நிராயுதபாணிகளாக நிற்பது நாட்டு மக்கள் தான்.

களச்சூழல் இவ்வாறிருக்க, மாற்றம் விரும்புவோரும், மீட்சியை விரும்புவோரும் ஒருசேர முயன்றால் தான் தப்பிக்க முடியும் . அவரவரும் தனிப் பாதையில் தான் நடக்க வேண்டும் என இலக்கணம் பேசுவது எதிர்காலத்திற்கு உதவுமா?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time