சத்யபால் மாலிக்கின் அதிரடி சரவெடிகள்!

-சாவித்திரி கண்ணன்

பாஜகவின் தேசபக்த நாடகங்கள்! இவர்கள் இஸ்லாமியர்களை அணுகும் விதம், அம்பானி, அதானிகளுக்கு தரகு வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ், மோடியின் போதாமைகள்.. போன்றவை பற்றியெல்லாம் எதிர்கட்சிகள் என்ன வேணா பேசலாம். ஆனா, அந்த கூடாரத்திற்குள்ளேயே இருக்கும் ஒருவர் மனம் திறந்து வெளிப்படுத்துவது தான் அபாரம்!

ஜம்மு காஷ்மீர், பீகார், கோவா போன்ற மானிலங்களின் கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். ஆரம்பத்தில் சரண்சிங்கின் சீடராக செயல்பட்ட இவர் பிறகு காங்கிரசில் இணைகிறார். போபர்ஸ் ஊழல் வெடித்த நேரம் காங்கிரசில் இருந்து விலகி வி.பி.சிங்குடன் ஜனதாதளத்தில் செயல்பட்டவர்.இதன் பிறகு 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். உத்திரபிரதேச மக்களிடம் சற்று செல்வாக்கு உள்ளவர். ஜாட் சமூகத்தை சார்ந்தவர். சற்று சுய சிந்தனையும் ,மனசாட்சியும் கொண்ட அரசியல்வாதியாக தெரிய வருகிறார். இவர் சமீபத்தில் தி வயர் ஊடகத்திற்கு கரண் தாப்பாருக்கு ஒரு நேர்காணல் தந்தார்! அவருடையை பேட்டி அதிர்ச்சி ரகம் என்பதா? அணுகுண்டின் தாக்கம் என்பதா? தெரியவில்லை!

ஆனால், நிச்சலனமில்லா மனநிலையில் மிக நிதானமாக, தெளிவாக அச்சமின்றி சத்யபால் மாலிக் சில உண்மைகளை சொல்லி உள்ளார்!

அதை இப்படி வரிசைப் படுத்தலாம்;

# 40 ராணுவ வீரர்கள் பலியான புல்வாமா தாக்குதலின் பின்னணியில் மறைக்கப்பட்ட ராஜாங்க உண்மைகள்!

# ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரங்களை பாஜகவின் தலைமை அணுகும் விதம்.

# அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஆர்.எஸ்.எஸ் வழியே மத்திய, மாநில அரசு நிர்வாகத்தில் எப்படி தலையிடுகிறார்கள்?

# மோடியின் உண்மையான தகுதி மற்றும் தராதரம்!

இந்த நான்கு அம்சங்களில் மறைக்கப்பட்ட உண்மைகளை, ஏற்படுத்தப்பட்ட மாய பிம்மங்களை மிக இயல்பாக உடைத்து வெளிப்படுத்தி உள்ளார் சத்யபால் மாலிக்!

என்.டி.ராமாராவ், சரண் சிங் இருவருடனும் சத்யபால் மாலிக்.

இந்த அற்புதங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்;

2019 பிப்ரவரி 14- ல் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சாலைகளின் வழியே வாகனங்களில் சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஒரு வெடிமருந்து பொருள்கள் நிரப்பட்ட கார் மோதியதில் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வை அன்றைக்கு பாஜக பாகிஸ்தான் எதிர்ப்புக்கும், இஸ்லாமிய வெறுப்பிற்குமான உரமாக்கி தேசபக்த பிரச்சாரங்களில் ஈடுபட்டது. குறிப்பாக 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு அறுவடை செய்யும் வாய்ப்பாக இந்த சம்பவத்தை பாஜக பயன்படுத்திக் கொண்டது. அன்றைக்கு பாஜக ஆதரவாளர் ரிபப்ளிக் தொலைகாட்சி அருணாகோஸ்வாமி, இந்த தாக்குதல் பற்றி சொல்லும் போது, ”வெறிபிடித்து காத்திருந்தவர்களுக்கான நல்வாய்ப்பாக இது அமைந்தது” என்றார். இதன் பொருள் என்னவென்று சத்யபால் பேட்டி தெளிவாக்கிவிட்டது. ‘தேசபக்தி மற்றும் இஸ்லாமிய வெறுப்பு நாடகத்திற்கான நல்வாய்ப்பு’ என்பதாகும்.

சத்யபால் மாலிக் இது பற்றி கூறுவதாவது;

நான் உங்களுக்கு உண்மைகளை சொல்கிறேன். சிஆர்பிஎப் தமது வீரர்களை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகத்திடம் விமானங்களை கேட்டனர்.  அது நிராகரிக்கப்பட்டது. என்னிடம் கேட்டிருந்தால் நான் ஏற்பாடு செய்திருப்பேன். அவர்களுக்கு 5 விமானங்கள்தான் தேவைப்பட்டன.  அவர்கள் விமானங்களை தந்திருந்தால் நமது வீரர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். நான் இதனை பிரதமரிடமும் சொன்னேன். நமது தவறின் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறினேன். அவர் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் எனவும் என்னை வாய் மூடிக் கொண்டு இருக்குமாறும் கூறிவிட்டார்.  பிரதமர் மட்டுமல்ல; பாதுகாப்பு ஆலோசகர் அஜித்  தோவலும் இது பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்  என கூறினார். நான் மேலும் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இதனை கையாண்ட விதம், நமது வீரர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தில் எங்கே நம்மிடம் தவறு நடந்தது என பார்ப்பதைவிட இதனை பாகிஸ்தானுக்கு எதிராக திசை திருப்பிவிடுவது என அவர்கள் முடிவு செய்ததாகவே இருந்தது.

சி.ஆர்.பி.எப் வீரரகள் பயணப்பட்ட பாதையில் கண்காணிப்பு ஏற்பாடுகளோ, பாதுகாப்போ இல்லை. இது உள்துறை அமைச்சகம் மற்றும் சிஆர்பிஎப் நிர்வாகத்தின் தவறு; உதாசீனம். நமது திறமையின்மை காரணமாக 40 விலை மதிப்பற்ற ராணுவ வீரர்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. அந்த கார் 10 நாட்கள் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது. யாரும் எங்கேயும் அதனை கண்டுபிடிக்க வில்லை. தடுத்து நிறுத்தவில்லை.  இது 100 சதவீதம் உளவுத்துறையின் தவறு. நம்  தவறு! நமது சிஸ்டத்தின் தவறு. நான் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். அரசுக்கு முழு விவரங்களும் தெரியும். ஆனால் அரசாங்கம் மறைப்பது என முடிவு செய்துவிட்டால் எப்படி வெளிவரும்! என கேட்கிறார்.

காஷ்மீர் விவகாரத்தில் கவர்னரையே கைப்பாவையாக்கிய பாஜக!

காஷ்மீர் மாநிலத்திற்கான 370 வது சிறப்பு சட்டப் பிரிவு நீக்கப்படுவது பற்றி தன்னிடம் கலந்தாலோசிக்காமல் அதிரடியாக் கொண்டு வந்தனர். 370ஆவது பிரிவு நீக்குவது  என்பது ஏதோ ஒரு துண்டு காகிதத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்து வீசுவது போல அல்ல! ஆனால், எனக்கு எதுவும் சொல்லப்படாமல் 4ஆம் தேதி இரவுதான் உள்துறை அமைச்சர்  என்னை அழைத்தார். ஒரு தீர்மானம் அனுப்பியுள்ள தாகவும் அதனை அங்கு கமிட்டியில்  வைத்து அங்கீகரித்து அடுத்த நாள் 11 மணிக்குள் அனுப்புமாறும் என்னிடம் சொல்லப்பட்டது. அப்பொழுதுதான் ஆகஸ்ட் 5ஆம் தேதி 370ஆவது பிரிவு நீக்கப்படப்போகிறது என  எனக்கு தெரியும். என்னை கலந்தாலோசிக்க வேண்டிய  சட்ட தேவை உள்ளது என அவர்களுக்கும் தெரியும். எனினும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் செய்தனர். என்னிடம் ஆலோசிக்கவில்லை. அதுதான் உண்மை. காஷ்மீரின் மிகப்பெரிய சோகம் என்னவெனில் மத்திய அரசாங்கம் எதை நினைக்கிறதோ அதனை அங்கு நடத்திவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள். அங்கு யார் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை. காஷ்மீரில் வன்முறை மூலம் எதுவும் சாதிக்க முடியாது. பேச்சு வார்த்தைகள் மூலம் எதுவும் சாதிக்க முடியும். இதனை தான் நான் திரும்பத் திரும்ப கூறினேன்.  370ஆவது பிரிவு நீக்கத்தைவிட மாநில அந்தஸ்து பறித்தது என்பதைதான் அந்த மக்கள்  மிகப்பெரிய அநீதியாகவும் அவமானமாகவும் பார்க்கின்றனர் என்கிறார். இவை எல்லாம் உயர் அதிகாரத்தில் இருந்த கவர்னரையே ஒரு கிள்ளுக் கீரையாகவும், தாங்கள் சொல்வதை செய்ய வேண்டிய ஏவலாளாகவும் மத்திய பாஜக அரசு நடத்தி உள்ளதை அம்பலப்படுத்துகிறது.

அம்பானியின் ஏஜெண்டாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்;

ரிலையன்ஸ் காப்பீடு திட்டம் ஒன்றை காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்த நினைத்தது. அது தொடர்பாக ராம் மாதவ் என்ற ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர் கவர்னரை அதிகாலை 7 மணிக்கு சந்திக்க வருகிறார். தான் குளிக்காத நிலையில் இருந்த போதும் அவரை சந்திக்க நிர்பந்திக்கப்பட்டதாக சத்யபால் மாலிக் கூறுகிறார். ரிலையன்ஸ் சொன்ன காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.8,500 தர வேண்டும் என நிபந்தனை இருந்தது. இதனை அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்த்தனர். இரண்டா வது, பணி ஓய்வு பெற்றவர்கள் 20,000 தர வேண்டும். இதுவும் நியாயமற்றது என நினைத்தேன். மூன்றாவது, அந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்தும் மூன்றாம் தரமானவை! தரமற்றவை! இவ்வளவு குறைகளுடன் ரிலையன்ஸ் திட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதில் யாருக்கோ முன்னூறு கோடி ஆதாயம் கிடைப்பதும் தெரிய வந்தது என்று கூறுகிறார் சத்யபால் மாலிக்.

இவர் திட்டத்தின் சாதக,பாதகங்களை அலசி ஆராய்ந்த வகையில் இது பயனற்றது என தவிர்த்துள்ளார்.ஒருவேளை நிர்பந்ததின் காரணமாக இதை அமல்படுத்தி இருந்தால் அரசு ஊழியர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி இருப்பார்கள்! மொத்ததில் இன்சூரன்ஸ் என்ற பெயரில் அரசு ஊழியர்களின் பர்ஸில் இருந்து பணம் பறிக்கும் அம்பானியின் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் நிர்பந்தித்துள்ளது இதன் மூலம் அம்பலப்பட்டு உள்ளது. ஆக, இப்படியான கார்ப்பரேட்களின் மோசடிகளுக்கு துணை போவதன் மூலம் தான் நாடெங்கும் உள்ள சுமார் 10 லட்சம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சும்மா ஓசியில் சாப்பிட்டு உடல் வளர்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பதவிக்குரிய அறிவோ,விபரமோ மோடியிடம் இல்லை

மோடி குறித்து உலகத்தில் உள்ள பலருக்கும் உள்ள மதிப்பீடு எனக்கு பிரதமர் குறித்து இல்லை. அந்த பதவிக்குரிய விவரங்களும் அறிவும் அவரிடம் போதுமானதாக இல்லை. அவர் முழுமையான விபரங்கள் கிடைக்கப் பெறாதவராக உள்ளார். என்கிறார் சத்யபால் மாலிக். மோடி குறித்து கரந்தாப்பரின் இந்தக் கேள்வியும்,அதற்கு சத்யபால் மாலிக் அளித்துள்ள பதிலும் கவனத்திற்கு உரியவை;

பிரதமர் நாள்தோறும் ஊழலுக்கு எதிராக  பேசுகிறார். காங்கிரசும் பல மாநில கட்சிகளும் ஊழலில் திளைக்கின்றன எனவும் நான் ஊழலை ஒழிக்காமல் ஓயமாட்டேன் எனவும் கூறுகிறார். ஆனால் நீங்கள் அவருக்கு ஊழல் ஒழிப்பு பற்றி அக்கறை இல்லை எனக் கூறுகிறீர்களே?

சத்யபால்: ஹசீப் திரபு ஊழல் பேர்வழி! ஆனால் அவரை சந்தியுங்கள் என என்னிடம் பலமுறை பிரதமர்தான் கூறினார். நான் பிரதமரிடமே ஹசீப் திரபு ஒரு முறைகேடு மனிதர் என கூறினேன். கோவாவுக்கு நான் ஆளுநராக மாற்றப்பட்ட பொழுது அங்கு முதல் அமைச்சரின் வீட்டிலேயே பணம் கை மாறுகிறது;  ஊழல் மலிந்துள்ளது என பிரதமரிடம் தெரிவித்தேன். ஆனால் அதனை பிரதமர் மறுத்தார். நான் ஆதாரங்களை கொடுத்தேன். ஆனால், ஒரே வாரத்தில் மேகாலயாவுக்கு தூக்கி அடிக்கப்பட்டேன். இதற்கு என்ன பொருள் நீங்கள் சொல்லுங்கள்!’’ என மோடியின் நேர்மை முகமுடியை கிழித்தெறிகிறார் சத்யபால்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time