தலித்கள் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறினாலும், சாதி தகுதியை இழக்கமாட்டர் என்கிறது தமிழக அரசு. உண்மையில் மதம் மாறியதற்காக ஒருவருக்கு தரப்படும் தண்டனையாக சாதி இழப்பு இது வரை கருதப்பட்டது…! அதே சமயம் கிறிஸ்த்துவ தலித்களை அங்கீகரிப்பது மதமாற்றத்தை ஊக்கப்படுத்துவதாகுமா?
தற்போது தமிழ்நாடு சட்டசபை ஒரு வரலாற்று முக்கியத்துவமான தீர்மானத்தை 18 ஏப்ரல் 2023 அன்று நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் இனத்தவர்களை, பட்டியல் இனத்தவர்களாக கருத வேண்டும் என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும், சாதியின் அடையாளம் மறைவதில்லை. தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளாகும் பட்டியல் இனத்தவர்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும், அதே கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். கிறித்தவ மதத்தில் தலித் மக்களுக்கான தனி மாதா கோயில்களும், தனி கல்லறைகளும் இருப்பதே தீண்டாமை தொடர்வதை தெளிவாக காட்டுகிறது. கிறிஸ்தவ மக்கள் எண்ணிக்கையில் தலித் மக்கள் மிக கணிசமானவர்களாக இருந்தாலும், அநேகமாக தலித் மக்களில் இருந்து ஆயர்கள் நியமிக்கப்படுவது இல்லை. போதகர்களாக ஆவது கூட மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு சாத்தியமாவதில்லை. சாதியின் ஆதிக்கம் கிறிஸ்தவ மதத்திலும் தொடர்கிறது. இதை உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய தலித் மக்கள் நிலைமையும் இதுதான் என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறுகிறது.
மதம் மாறுவது அடிப்படை உரிமை என்று அரசமைப்புச் சட்டத்தின் கூறு 25 கூறுகிறது. எனவே, ஒருவர் நம்பிக்கையின் அடிப்படையில் அவர் விரும்பும் மதத்திற்கு மாறலாம். ஆனால், சாதியை அவ்விதம் மாற்றிக் கொள்ள முடியாது. இந்து மதத்தில் பிறக்கும் போதே ஒருவர் சாதி அடையாளத்துடன் தான் பிறக்கிறார். அவர் கிறிஸ்தவத்திற்கோ, இஸ்லாமுக்கோ, பெளதத்திற்கோ சென்றாலும் அவருடைய சாதி அடையாளம் மறைவதில்லை. சாதியினால் அவர் எந்த எந்த பிரச்சனைகளை எதிர்கொண்டாரோ அதே பிரச்சினைகளை அவர் மதம் மாறிய பின்னரும் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. எனவே, மதம் மாறிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தவர் என்ற அங்கீகாரம் தொடர வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு தலித்துகள் என்ற அடையாளத்தை வழங்க மறுப்பது அநீதியானது என்று அந்த தீர்மானம் கூறுகிறது.
மதம் மாறிய பின்னரும் தலித் மக்கள் தீண்டாமை உட்பட அனைத்து சமூக அநீதிகளுக்கும் உட்படும்போது அவர்களுக்கு கல்வியிலும், வேலையிலும் அரசியல் தளத்திலும் அளித்து வந்த இட ஒதுக்கீட்டை மறுப்பது நியாயமற்றது என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் கூறுகிறது. வேறு எந்த மாநில சட்டசபையும் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றாத நிலையில் தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றி இருப்பதால், இதை வரலாற்று சிறப்பு மிக்கது என்று குறிப்பிட்டுள்ளேன்.
அரசமைப்புச் சட்டம் கூறு 341-இன் படி குடியரசுத் தலைவர் அளிக்கும் உத்தரவு தான் எந்தந்த சாதியினர் பட்டியல் இனத்தவர் என்பதை வரையறுக்கும். அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசின் அமைச்சரவையின் அதிகாரமாகும்.
அரசமைப்புச் சட்டம் 26, ஜனவரி 1950 முதல் அமலுக்கு வந்தது. 1950இல் அளித்த குடியரசுத் தலைவரின் உத்தரவில் இந்து மதத்தில் உள்ள தலித்துகள் மட்டுமே தலித்துகள் என்று கருதப்படுவர் என கூறப்பட்டுள்ளது. பின்னர் 1956 இல் சீக்கிய மதத்தில் உள்ள தலித்துகளும் தலித்துகள் என்று கருதப்படுவோர் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவு கூறியது.
பட்டியல் இனத்தவர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் சீக்கிய மதத்தில் உள்ளனர். சுமார் மூன்றில் ஒரு பகுதி சீக்கியர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்கள் வீரம் மிக்கவர்கள். அநீதியை கண்டு வெகுண்டு எழுபவர்கள். இந்தியாவில் முதலில் தீண்டாமையை ஒழித்த இடம் சீக்கியர்களின் குருத்துவராவில் தான். எனவே, சீக்கிய மதத்தில் உள்ள தலித் மக்கள் தலித்துகள் என்று உத்தரவு போட்டது ஜவஹர்லால் நேருவின் ஒன்றிய அரசு.
1956 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்று நாக்பூரில் டாக்டர் அம்பேத்கர் பல லட்சம் தலித்துகளுடன் புத்த மதத்தைதழுவினார். புத்த மதத்தை தழுவியதால் அவர்கள் தலித்துகள் என்பதால் கிடைக்கும் சலுகைகளை இழந்தனர். அதாவது 1956 ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி இறக்கும் போது அம்பேத்கர் சட்டப்படி தலித் அல்ல.
தலித் மக்களின் ஏகோபித்த தலைவரான அம்பேத்காரே தலித் இல்லை என்றால், வேறு யார் தலித்?
1991 ஆம் ஆண்டில் அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு வந்தது. அப்போது ஒன்றிய அரசுக்கு அம்பேத்கர் தலித் இல்லை என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. எனவே, 1990 இல் வி. பி . சிங் பிரதமராக இருந்தபோது புத்த மதம் மாறிய தலித்துகள் தலித்துகளாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று உத்தரவு அளிக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டம் கூறு 25-இல், எவர் எவர் இந்துக்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில் சீக்கியர்களும், சமணர்களும், புத்த மதத்தைச் சார்ந்தவர்களும் இந்துக்களே என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மதங்களில் உள்ள தலித்துகள், தலித்துகள் அல்ல என்று கருதப்பட்டனர். மேற்சொன்னபடி 1956- இல் சீக்கிய மதத்தைச் சார்ந்த தலித்துகளும் 1990-இல் புத்த மதத்தைச் சார்ந்த தலித்துகளும், தலித்துகள் என்று அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தது.
அரசமைப்புச் சட்டம் கூறு 341 கீழ் ஒரு சாதியை பட்டியல் இனத்தவர் என்று கண்டறிவதற்கான அடிப்படையான காரணி தீண்டாமை ஆகும். தலித்துகள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் தலித்துகள் என்ற அடையாளம் மறைவதில்லை. அவர்கள் தீண்டாமை கொடுமைக்கும், மற்ற சாதிய கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர். கிறிஸ்தவ மதத்திற்கு அல்லது இஸ்லாமிற்கு மாறிய தலித்துகளும், தலித்துகள் என்று அரசு அமைப்புச் சட்டப்படி குடியரசுத் தலைவரின் மூலம் உத்தரவு அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரங்கநாத மிஸ்ரா தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. ”கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கு மாறிய தலித்துகள் தலித்துகளாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா என்பதை ஆய்வு செய்யவும் , அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதா? இல்லையா? என்ற ஆலோசனையையும் வேண்டியது.
2007 ஆம் ஆண்டில் மேற் சொன்ன கமிஷன் ஒரு அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தது. அதில், ”மதம் மாறிய தலித்துகள், தலித்துகள் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்று கூறியது. ‘தலித்துகள் என்பதை கண்டறிவதற்கு மதத்தை ஒரு அளவுகோலாக கொள்ளக் கூடாது’ என்றும், ‘சாதிய அடையாளத்தை மட்டுமே அளவுகோலாக கொள்ள வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் கூறியது. ‘மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்றும் கூறியது.
ஆனால், அந்த அறிக்கையை அமுல்படுத்த மன்மோகன் சிங் அரசு முன்வரவில்லை. அந்த அறிக்கையை கிடப்பில் போட்டது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் மக்களை, தலித் மக்கள் என்ற உரிமை உரிய குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு இப்போது இப்போது நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இப்போதைய பாஜக ஒன்றிய அரசு மேற்சொன்ன ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நிராகரித்து விட்டதாகவும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் வேறொரு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கமிஷனின் அறிக்கை வரும் வரை வழக்கை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது.Also read
ஒன்றிய அரசின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு நிராகரித்தது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதில் கூறியுள்ள தகவல்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. விரைவில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான இறுதி தீர்ப்பை அளிக்கும்.
மேற்சொன்ன விவரங்களிலிருந்து ஒன்றிய அரசில் எவர் இருந்தாலும், அந்த அரசுகள் இந்துத்துவத்தின் சார்பாக இருப்பதை அறிய முடிகிறது. எனவே, சாதிய கொடுமைகளுக்கு தொடர்ந்து உள்ளாகும் மதம் மாறிய தலித்துகளுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. மதம் மாறிய தலித் மக்களுக்கு ‘தலித்’ என்ற உரிமையை அளிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது. எனவே, தமிழ்நாடு சட்டசபை, ‘ஒன்றிய அரசு இதில் நியாயம் செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதை பல மாநிலங்களும் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றமும் உரிய தீர்ப்பை அளித்து, மதம் மாறிய தலித் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்
முன்னாள் நீதிபதி மற்றும் சமூக செயற்பாட்டாளர்
i am proud of justice for writing on issues like this