கொள்ளை போகும் தமிழக இயற்கை வளங்கள்!

-சாவித்திரி கண்ணன்

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை இனி தமிழகத்தில் தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கான தடைகள் அனைத்தையும் தகர்க்கும் வண்ணம் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் திமுக அரசால் சட்டமன்றத்தில் கமுக்கமாக குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியுள்ளது. இது பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டதாகும்!

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள் சுற்றுச் சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் என சகல உத்திரவாதத்தையும் அளிக்கிறது.

இது நாள் வரையிலான சட்டங்கள் நீர் நிலைகள், பசுமையான வயல்வெளிகளை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க சில தடைகளை கொண்டிருந்தது. இந்த சட்டமானது, எந்த ஒரு பெறு நிறுவனமும் 100 ஏக்கருக்கு மேலாக பல்லாயிரம் ஏக்கர்களில் தொழிற்சாலை அமைக்க விரும்பினால் போதுமானது. அரசின் அனைத்து துறைகளும் அவர்களுக்காக நீர் நிலைகள், இயற்கை அரண்கள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனுமதி தந்துவிடும் என்கிறது.

தொழிற்சாலைகளுக்காக இயற்கை வளங்களை தகர்கலாம்!

தமிழகத்தின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்களாம்! அதாவது, உற்பத்தி என்றால், இவர்கள் பார்வையில் விவசாய உணவு உற்பத்தி எல்லாம் ஒரு பொருட்டல்ல போலும். ”விவசாயத்தின் மூலமான பொருளாதார மேம்பாடெல்லாம் ஒரு விஷயமா..?” என்கிறார்கள்!

‘நீர் நிலைகளான ஆறுகள், ஓடைகள், குளம், குட்டை, ஏரிகள்..இவை எல்லாம் தொழில் வளர்ச்சிக்கு தடை என்றால், இந்த அரசாங்கம் அதை வேடிக்கை பார்க்காது! சூழலியல் சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் தொழிற்சாலை முன்பு கால்தூசுக்கு சமானம்’ என்பதே இந்த சட்ட சரத்து சொல்லும் சாராம்சமாக உள்ளது! ஆனால், அதை மிகவும் நாகரீகமாக இந்த உண்மையை எளிதில் யாரும் உணராத வண்ணம் அதில் குறிப்பிட்டு உள்ளார்கள். அதனால் தான் பிரபல நாளிதழ்கள் எதுவுமே இந்த ஆபத்தான சட்டம் பற்றி எந்த செய்தியும் சொல்லவில்லை. இன்னும் ஒரு சில நாளிதழ்களோ ‘நீர் நிலைகளை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக’ எழுதியுள்ளன! பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தான் இந்த சட்டத்திற்கு கடும் கண்டணம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டம் இன்னொரு வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை செல்லாக்காசாக்கிவிடுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இனி, ”ஐயோ எங்கள் கிராமத்தின் நீர் நிலைகள் ஓடைகள், குளம், குட்டைகள் அழிகின்றனவே… ஆகையால், நாங்கள் நிலத்தை தர ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என உரிமை பேச முடியாது. அந்த உரிமையை முற்றிலுமாக அவர்களிடம் இருந்து பறித்து அரசு அமைக்கும் ஒரு குழுவிடம் தரப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது கடந்த மூன்றாண்டுகளாக மத்திய பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டு வந்தது தான். ஆனால், இதன் ஆபத்து கருதி பாஜக அல்லாத எந்த ஒரு மாநிலமும் இந்த சட்டத்தை நிறைவேற்றத் துணியாத நிலையில் இந்த மாதிரி தொடர்ந்து ஆபத்தான சட்டங்கள் தமிழக சட்டமன்றத்தில் எந்த கலந்துரையாடலும் இன்றியும், சாதக, பாதகங்களை கணக்கில் கொண்டு விவாதிக்காமலும் கமுக்கமாக நிறைவேற்றப் படுவதை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21 அன்று தமிழக சட்டமன்றத்தில் மிக அதிரடியாக 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன! அதில் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் தொழிற்சாலை திருத்த மசோதாவும் ஒன்று. இப்படி ஒரு மசோதா கொண்டு வரப்படும் தகவல் கூட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லாமல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை அதிரடியாக அறிவித்து குரல் வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றிவிட்டார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். அன்று நிறைவேற்றப்பட்ட மற்ற மசோதாக்கள் குறித்த தெளிவான செய்திகளை நாளிதழ்கள், காட்சி ஊடகங்களுமே கூட வெளியிடவில்லை.

நமக்கு தெரிந்து இந்த இரண்டு சட்டங்களுமே மிக ஆபத்தானவை! இந்த ஆபத்தான சட்டங்களை தமிழகத்தில் திமுக அரசைக் கொண்டு மிக சாமர்த்தியமாக பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. சர்வதேச நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவின் நோக்கங்கள் எந்த தடங்களுமின்றி தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன! இந்த வகையில் இந்தியாவிலேயே மற்ற எந்த மாநிலத்தைவிடவும் கிராமங்களை, ஊரக பகுதிகளை விழுங்கிய வண்ணம் நகரமயமாக்கல் அசுரத்தனமாக நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

ஏற்கனவே பாக்ஸான் தொழிற்சாலை வந்துவிட்டது. இதில் சுமார் 80 சதவிகிதமான வேலைவாய்ப்பை வட நாட்டு இளைஞர்கள் தான் பெற்றனர். இனி ஸ்டெர்லைட்டை விடவும் மோசமான தொழிற்சாலை தமிழகத்திற்கு வருவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. பரந்தூர் விமான நிலையத்திற்காக 4,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை எடுப்பதில் இப்போது இருக்கும் சிக்கல்களை கருத்தில் கொண்டு தான் இது போன்ற படுமோசமான சுற்றுச் சூழலுக்கு ஆபத்தான சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயல்நாடுகள் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லும் வகையில் பயணத்திட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் 2024 ஜனவரி 10 & 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அன்னிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தொழிற்துறை அமைச்சர், உயர் அலுவலர்களும் தொடர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்கின்றனர்.

வெளிநாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் வந்து இங்குள்ள இயற்கையை அழித்து, மக்கள் வாழ்வாதரங்களை சூறையாடிச் செல்வதற்கு தான் இந்திய சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்தனரா? எனத் தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time