காலவரையின்றி மசோதாக்களை நிறுத்தி வைப்பதா?

-ஹரிபரந்தாமன்

கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களா ஆளுநர்கள்? பாஜக அரசு அல்லாத மாநிலங்களிடம் பாரபட்சம் காட்டுவதா? எத்தனை நாட்கள் வரை மசோதாவை வைக்க முடியும்? இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு சொல்வதென்ன..?தெலுங்கானா அரசு தொடுத்த திருப்புமுனை வழக்கின் விபரங்கள்!

தெலுங்கானா அரசு, கவர்னர் தமிழிசைக்கு எதிராக தொடுத்த வழக்கில் 24-ஆம் நாள் ஏப்ரல் 2023 அன்று உச்ச நீதிமன்றம் கவர்னர்களின் தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது. தெலுங்கானா அரசு போட்ட வழக்கில் தமிழிசைக்காக வாதாடிய ஒன்றிய அரசின் வழக்குரைஞர் துஷார் மேத்தா, கவர்னர் தமிழிசை அலுவலகத்தில் தெலுங்கானா சட்டசபை இயற்றிய எந்த சட்டமும் ஒப்புதலுக்காக இன்றைய தேதியில் நிலுவையில் இல்லை, எனவே மேற்சொன்ன கவர்னர்களுக்கான  அறிவுறுத்தலை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து நீக்கிவிடுமாறு கூறினார்.

ஆனால், அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நாளன்று தான் அவசர, அவசரமாக பத்து மசோதாக்களையும் பாஸ் செய்துள்ளார் தமிழிசை! அதனால், இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் , அரசமைப்புச் சட்டம் 200-இன் படி  கவர்னர்கள் சட்டசபை இயற்றும் சட்டங்களை மாதக்கணக்கில் காலவரையின்றி வைத்திருக்கக் கூடாது என்று கூறியது. இது அனைத்து கவர்னர்களுக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியது.

பல மாதங்களாக தெலுங்கானா சட்டசபை இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமலும், அந்த சட்டங்களை தெலுங்கானா சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமலும் கவர்னர் தமிழிசை  ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிராக செயல்பட்டதால் தான் தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 24-ம் நாள் ஏப்ரல் 2023 அன்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது தற்சமயம் எந்த சட்டமும் கவர்னர் அலுவலகத்தில் நிலுவையில் இல்லை என்ற கவர்னரின் கூற்று நேர்மையற்ற ஒன்று.


மேற்சொன்னே உச்ச நீதிமன்றத்தின்  இடித்துரைப்பு, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் உள்ள அனைத்து கவர்னர்களுக்கும் ,குறிப்பாக தமிழ்நாட்டு கவர்னர் ஆர் .என். ரவிக்கும்,கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் பொருந்தும்.

மாநில சட்டசபை இயற்றும் சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் தருவது சம்பந்தமான அரசமைப்புச் சட்ட வரைவு கூறு (draft article)175.

பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவது சம்பந்தமான அரசமைப்புச் சட்ட வரைவு கூறு (draft article) 91.

அரசமைப்பு சட்ட வரைவு கூறு 91-இல் , குடியரசுத் தலைவர் ‌ பாராளுமன்றம் ஒப்புதலுக்கு அனுப்பிய தினத்திலிருந்து ஆறு வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இருந்தது. திருப்பி அனுப்பும் போது அதற்கான காரணங்களையும் அவரது பரிந்துரையையும் அனுப்ப வேண்டும். பாராளுமன்றம் அதை ஏற்க மறுத்து மீண்டும் அதே சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது தவிர வேறு வழி இல்லை.

அரசமைப்பு அவை விவாதத்திற்கு பின்னர், ஆறு வாரங்கள் கூட அதிகமானது என்று கருதியதால், அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு உடனடியாக (as soon as possible) என்ற  வார்த்தைகள் சேர்க்கப்பட்டு அரசமைப்புச் சட்ட வரைவு கூறு 91 என்பது அரசமைப்புச் சட்ட கூறு 111 ஆனது.

அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பாராளுமன்றம், மக்களின் நலன் கருதி  சட்டம் இயற்றி அனுப்பும் போது குடியரசுத் தலைவர் உடனடியாக செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட ம் கூறு 111 ல் இறுதிப் படுத்தப்பட்டது.

அரசமைப்புச் சட்ட வரைவு கூறு 91 இல் குடியரசுத் தலைவருக்கு ஆறு வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது போன்ற பிரிவு ,மாநில சட்டசபை சட்டம் இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது ஆறு வாரங்களுக்குள் கவர்னர் செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வரைவு கூறு 175 இல் இல்லை. மேலும் அரசமைப்புச் சட்ட வரைவு கூறு 175-இல் , ‘கவர்னர் விருப்பம்போல் (discretion) செயல்படலாம்’ என்ற வார்த்தையும்  இருந்தது.

அரசமைப்புச் சட்ட அவை விவாதத்திற்கு பின்னர், கவர்னர் “விருப்பம் போல் (discretion) “என்ற வார்த்தை நீக்கப்பட்டது மட்டுமன்றி, ‘பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக (as soon as possible )  ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும்’ என்ற அதே வார்த்தைகள் சேர்க்கப்பட்டு அரசமைப்புச் சட்ட வரைவு கூறு 175 என்பது அரசமைப்புச் சட்ட கூறு 200 ஆகியது.

அதாவது, அரசமைப்புச் சட்டம் கூறு 111ம் அரசமைப்புச் சட்டம் கூறு 200 ம் உடனடியாக (as soon as possible,) என்ற வார்த்தைகளையே கொண்டுள்ளது.

எனவே, அரசமைப்புச் சட்டக் கூறு 111ம், அரசமைப்பு சட்ட கூறு 200-ம் ஒரே மாதிரியாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ‘குடியரசு தலைவர் எவ்வாறு பாராளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமலோ அல்லது திருப்பி அனுப்பாமலோ வெறுமனே இருக்கக் கூடாதோ அதே போலத்தான் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு கவர்னர்கள் இருக்க வேண்டும்’ என்று அரசமைப்பு சட்டம் கூறுவதாக பொருள் கொள்ள வேண்டும். காரணம், அரசமைப்புச் சட்டம் கூறு 111-ம்  அரசமைப்புச் சட்டம் கூறு 200 -ம்  அரசமைப்பு அவை விவாதத்திற்கு பின் ஒரே மாதிரியாக இறுதி படுத்தப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டம் கூறு 200 இல் ஒரு அம்சம் கூடுதலாக உள்ளது. அது என்னவெனில், மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்புவது. அதாவது மாநில சட்டமன்றத்திற்கு, மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட பொருள்பற்றி சட்டம் இயற்றும் போது அச்சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது அல்லது அதை திருப்பி அனுப்புவது என்பதும், மாநில சட்டசபை பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் பற்றி சட்டம் இயற்றும் போது அந்த சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்புவது என்பதும் ஆகும்.

அரசமைப்புச் சட்டம் கூறு 200-இல் , “உடனடியாக (as soon as possible)”என்பதற்கு பொருள் சட்டசபை ஒரு சட்டத்தை இயற்றிய பின் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் உடனடியாக அதற்கு ஒப்புதல் தர வேண்டும் அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெளிவாக உரக்க செய்தியை24-4-2023  அன்று உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. கவர்னர்களுக்கான இந்த உச்ச நீதிமன்றத்தின் இடித்துரைத்தல் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு கவர்னர் ரவி அவர்கள் ஏப்ரல் 6 ,2023 அன்று அவர் பல மாதங்களாக சட்டசபை இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தால் , அந்த சட்டங்கள் மரணித்து விட்டதாக கருத வேண்டும் என்று ஒரு கருத்தை கூறியிருந்தார். இது மக்களாட்சி கோட்பாட்டிற்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானதாகும்.

அரசமைப்புச் சட்டம் கூறு 111-லும், அரசமைப்புச் சட்டம் கூறு 200 -லும் சட்டத்திற்கு ஒப்புதல் தருவது அல்லது சட்டத்தை  பாராளுமன்றத்திற்கு/ சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவது என்பது மட்டுமின்றி, குடியரசுத் தலைவர்/கவர்னர் சட்டங்களை அவரிடம் நிறுத்தி வைத்துக் கொள்வதற்கும் (withhold assent)முடியும் என்று கூறுகிறது.

“நிறுத்தி வைத்துக் கொள்வது (withhold assent)” என்பதற்கு பொருள், மாநில சட்டசபையின் அறிவுரையின்படி நிறுத்தி வைத்துக் கொள்வது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்றும்,  கவர்னர் அவரது விருப்பம் போல நிறுத்தி வைத்துக் கொள்ள முடியாது என்றும் 25 ஏப்ரல் 2023 அன்று இந்து ஆங்கில நாளிதழில் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் பி டி டி ஆச்சாரி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு இரு காரணங்களை கூறியுள்ளார். ஒன்று, அரசமைப்புச் சட்டம் கூறு 154 படி மாநில அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் கவர்னர் செயல்பட வேண்டும். இதுவே அரசமைப்புச் சட்டம் இடும் கட்டளை . எனவே மாநில அமைச்சரவையின்  அறிவுரையின்படி சட்டசபை இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதை கவர்னர் நிறுத்தி வைக்க வேண்டும். இரண்டாவது,நமது அரசமைப்புச் சட்டம் பிரித்தானிய அரசமைப்புச் சட்டத்தை தழுவியது என்றும்,  பிரித்தானிய நாட்டில் அந்த நாட்டு ராணிக்கு பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை  நிறுத்தி வைக்கும் இறையாண்மை அதிகாரம் இருப்பினும் இதுவரையில் எந்த ஒரு சட்டத்தையும் அவர் நிறுத்தி வைத்ததில்லை . இது கவர்னருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

அதாவது பிரிட்டிஷ் ராணியே பயன்படுத்தாத அதிகாரத்தை நமது கவர்னர்கள் பயன்படுத்தி அத்துமீறுகிறார்கள் என்பது தான் கவனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு சட்டசபை  வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு அனுப்பி உள்ளது. அந்த தீர்மானத்தில் சட்டசபை இயற்றும் சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதற்கு கால வரையறை நிர்ணயம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கவர்னர் தமிழ்நாடு சட்டசபை இயற்றிய பல சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலம் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு சட்டசபை மேற் சொன்னபடி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானம் பற்றி குறிப்பிடும் மேற் சொன்ன இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையாளர், அரசமைப்புச் சட்டம் கூறு 355 இன் படி ஒவ்வொரு மாநிலமும் அரசமைப்புச் சட்டத்தின் படி செயல்படுவதை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்.


சுதந்திரத்திற்கு பின் 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நமது அனுபவம் கவர்னர் என்ற பதவியே தேவையில்லை என்பது தான். மேலும் பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்ட போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களை , தாங்கள் நியமிக்கும் கவர்னர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். சுதந்திரம் அடைந்த பின் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் கவர்னர்களைக் கொண்டு கட்டுப்படுத்த முனைவது ஜனநாயக கோட்பாட்டிற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும்,  அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை இலட்சியங்களுக்கும் விரோதமானது. எனவே, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் கவர்னர் என்ற பதவியே தேவையற்ற ஒன்று. அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு கவர்னர் என்ற பதவியே அகற்றப்பட வேண்டும்.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time