பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் பலிகடாவா?

மனிதாபிமானம் இல்லாமல் தொழிலாளர்களின் வேலை நேரத்தை இஷ்டப்படி முதலாளிகள் அதிகப்படுத்திக் கொள்ள பாஜக அரசு படிப்படியாக சட்டங்களை திருத்தி, காய் நகர்த்தி வந்தது. அதைத் தான் தமிழக அரசுக்கு நிர்பந்தித்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு சட்டம் தந்த பாதுகாப்புகள் என்னென்ன? அதை தகர்க்க நடக்கும் பின்னணி என்ன?

உலகில் மேற்கத்திய நாடுகள் தொழிலாளர்களின் உழைப்பு நேரத்தை குறைத்து வருகிறார்கள்! அளவாக வேலை வாங்கப்படும் தொழிலாளர்கள் உடல், மன ஆரோக்கியத்துடன் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்!

ஆனால், இங்கோ எவரும் எதிர்பார்த்திராத வகையில் 12 ஏப்ரல் 2023 அன்று தமிழ்நாடு சட்டசபையில் ,1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து பிரிவு 65A என்ற புதிய பிரிவை  சேர்ப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்தது திமுக அரசு.

ஆளும் கட்சிக்கு ஆதரவு தரும் இரு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளும், எதிர் கட்சிகளும் இச்சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தன. இருப்பினும் , இந்த மசோதா 21 ஏப்ரல் 2023 அன்று குரல் வாக்குமூலம் அதிரடியாக நிறைவேறியது.

குஜராத் அரசு 1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவு 5 வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, தொழிற்சாலைகள் சட்டம் பிரிவுகள் 51 54 55 56 59  கொரோனா காலத்திற்கு பொருந்தாது என்ற உத்தரவை பிறப்பித்தது. சில தொழிற்சங்கங்கள் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்ச நீதிமன்றம் 1-10-2020 தேதியிட்ட தீர்ப்பில்  மேற் சொன்ன குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது.

2020 ஆம் ஆண்டில் மோடி அரசு 1948 ஆம் வருடத்தியே தொழிற்சாலைகள் சட்டம் உட்பட அனைத்து தொழிலாளர் சம்பந்தமான சட்டத்தையும் நீக்கி மொத்தம் நான்கு சட்டங்களாக ஆக்கியது. இந்த சட்டங்களை எதிர்த்து பாஜகவின் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் போர்க்கோலம் பூண்டன! இந்த எதிர்ப்பின் வீரியத்தைக் பார்த்து  2020 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.

இப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் எதிர்த்த சட்டத்தைத் தான் மோடியை முந்திக் கொண்டு ஸ்டாலின் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முயற்சித்துள்ளார் .

பணி நிலைமைகள் உள்ளிட்ட தொழிலாளர் நலம் பற்றிய விஷயங்கள் ,ஒன்றிய அரசும் மாநில அரசும் சட்டம் இயற்றும் பொது பட்டியலில்(concurrent list) வருகிறது.

அரசமைப்புச் சட்டம் அட்டவணை VII-இல்  பொதுப்பட்டியலில் உள்ள விஷயம் பற்றி சட்டம் இயற்றி இருப்பதால், அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கவர்னர் மூலம் அனுப்ப வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்பது ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலே.

கடுமையான எதிர்ப்புகள் அனைத்து தொழிற்சங்கங்களிடமிருந்தும் பொது மக்களிடம் இருந்தும் வந்ததை ஒட்டி, இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் 24 அன்று முதல்வர் அறிவித்தார். இது நிறுத்தி வைத்தால் போதாது முற்றிலும் வாபஸ் வாங்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டசபை கொண்டுவர நினைத்த இந்த தொழிலாளர் விரோத சட்டத்தைப் பற்றிய புரிதலை தருவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

இந்த சட்டம் அமலுக்கு வருமானால் ,1948 ஆம் ஆண்டில் தொழிற்சாலைகள் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் இருந்த நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள்.

இந்த சட்டம் கொண்டு வருவதற்கான நோக்கமாக முதலாளிகளும், முதலாளிகளின் சங்கங்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக எந்த வெட்கமும் இன்றி சொல்கிறது தமிழ்நாடு அரசு.

முதலாளிகளின் கோரிக்கைகளை  ஏற்று சட்டமாக்க நினைக்கும் அரசு, சட்டமாக்குவதற்கு முன்னால் தொழிற்சங்கங்களை கலந்து பேச வேண்டும் என்ற ஒரு ஜனநாயக பண்பை கூட கடைபிடிக்கவில்லை.

1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவுகள் 51 ,52 ,54 ,55 ,56 அல்லது 59   தொழிற்சாலைகளுக்கு பொருந்தாது என்று அரசு அறிவிக்குமானால், எந்த கட்டுப்பாடும் இன்றி, அந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாவார்கள்! இந்த வேலை நேரம் தொழிலாளர்களை தங்கள் சொந்தக் குடும்பத்தில் இருந்தே அன்னியப்படுத்திவிடும். இது அவர்களின் ஆரோக்கியத்தை சிதைக்கும், ஆயுளைக் குறைக்கும். வெகு சீக்கிரம் அவர்களை நோயாளிகளாக்கி மரணப் படுக்கையில் தள்ளும்.

அதனால் தான் சட்டத்தில் தொழிலாளர்களுக்கு சில பாதுகாப்பை நமது அரசியல் சட்டம் உருவாக்கியது.

# பிரிவு 51, எந்த தொழிலாளியையும் வாரத்திற்கு 48 மணி நேரங்களுக்கு மேல் பணி செய்யுமாறு எந்த தொழிற்சாலையும் கோர முடியாது என்கிறது.

# பிரிவு 52, வார விடுமுறை பற்றி கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அல்லது வேறு ஒரு நாள் கட்டாயம் ஒவ்வொரு வாரத்திலும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று இந்த பிரிவுகூறுகிறது.

# பிரிவு 54, எந்த நாளிலும் ஒரு தொழிலாளி ஒன்பது மணி நேரங்களுக்கு மேல் பணி செய்யுமாறு தொழிற்சாலை நிர்வாகம் கூற முடியாது என்கிறது.

#  பிரிவு 55, தொழிலாளி பணி செய்யும் போது ஒவ்வொரு நாளும் 5 மணி நேர பணிக்குப்பின் குறைந்தபட்சம் அரை மணி நேர ஓய்வு அளிக்க வேண்டும்.என்கிறது. ஏதேனும் ஒரு தொழிற்சாலைக்கு ,அரசு பிரிவு 55 க்கு விலக்கு அளிக்கலாம். அப்படி விலக்கு அளிக்கும்போது அதற்கான உத்தரவும் காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதும் 6 மணி நேர பணிக்குப் பின் அரை மணி நேர ஓய்வளிக்க வேண்டும்.

#  பிரிவு 56, பிரிவு 55 ல் சொல்லி உள்ள ஓய்வு நேரத்துடன் மொத்தமாக  10 1/2 மணி நேரத்திற்கு மேல் பணியிடத்தில் (spread over ) தொழிலாளி இருக்கக் கூடாது என்கிறது. தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் எழுத்து பூர்வமாக உரிய காரணங்களுடன்  அளிக்கும் உத்தரவின் மூலமாக 12 மணி நேரம் வரை வேலை நேரம் இருக்கலாம். பிரிவு 59 ,ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் போது அல்லது வாரத்தில் 48 மணி நேரங்களுக்கு மேல் பணி செய்யும் போது இரட்டிப்பு ஊதியம் தர வேண்டும் என்கிறது.


மேற்சொன்ன பிரிவுகளில் பிரிவு 59 தவிர்த்து மற்ற பிரிவுகளுக்கு, சில பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை , அரசு இந்த சட்டத்தின் கீழ் செய்யும் விதிகளின் மூலம் விலக்கு அளிக்கலாம் என்று  பிரிவு 64 (2)  கூறுகிறது. பிரிவு 64 (2) என்பது 64 (2)(a) முதல் 64 (2)(k)-வரை 11 உட்பிரிவுகளை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு 64 (2)(a), மிக அவசரமான பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு மேற்சொன்ன பிரிவுகளில் இருந்து விலக்கு பற்றி கூறுகிறது.

இருப்பினும் 62 (2) (a) முதல் 62(2)(k) -வில் சொல்லப்படும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு , விலக்கு அளிக்கப்படும் போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது பிரிவு 64 (4). இந்த பிரிவு 64 (4)-இன் படி, பிரிவு 51 க்கு விலக்கு பெரும் பணிகளில், மிக நேரம் உட்பட வார பணி நேரம் 60 மணி நேரங்களுக்கு மேல் மிகக் கூடாது என்ற கட்டுப்பாட்டை  விதிக்கிறது. மேலும், மிகை நேரத்திற்கும் கட்டுப்பாட்டை  விதிக்கிறது. மூன்று மாதங்களில் 50 மணி நேரங்களுக்கு மேலாக மிக நேர பணி வழங்கக் கூடாது என்று கட்டுப்பாட்டை விதிக்கிறது. இந்தப் பிரிவு 64 (4)-ன் படி, பிரிவு 54 க்கு விலக்கு பெறும் பணிகளில் தின பணி நேரம் 10 மணி நேரங்களுக்கு மேல் போகக்கூடாது என்ற கட்டுப்பாட்டை  விதிக்கிறது.


பிரிவு 65, விதிவிலக்கான பணி சூழல் ஏற்படும் காலங்களில், பிரிவு 51 52 54 மற்றும் 56-க்கு விலக்கு அளிக்கிறது. விதிவிலக்கான பணி சூழல்  உள்ளது என்பதை அரசு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் , எழுத்து மூலமாக உத்தரவு மூலம் மேற்சொன்ன பிரிவுகளுக்கு அரசு விலக்கு அளிக்கும். அப்படி விலக்கு அளிக்கும் போதும் பிரிவு 65 (3) சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகள், வாரப் பணி நேரம் 60 மணி நேரங்களுக்கு மேல் போகக்கூடாது; அத்துடன் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் மிகைப்பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்கிறது.

இப்படி அரிதினும், அரிதான நேரத்தில் விதிவிலக்காக பயன்படுத்த ஒரு கொடுக்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பை நிரந்தரப்படுத்த இன்றைய ஆட்சியாளர்கள் சட்டம் கொண்டு வர திட்டமிட்டனர்.

மேற்சொன்ன 1948 ஆம்  வருடத்திய தொழிற்சாலைகள் சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது. பாராளுமன்றம் அதில் பல திருத்தங்களை கடந்த 75 ஆண்டுகளாக செய்துள்ளது. இந்த சட்டமும் அதில் ஏற்பட்ட திருத்தங்களும் தொழிலாளர்களின் போராட்டத்தால் பெறப்பட்ட  உரிமைகள்.


இந்நிலையில் தமிழ்நாடு அரசு அதன் பெரும்பான்மை எண்ணிக்கையை பயன்படுத்தி தமிழ்நாடு சட்டசபையில்  மேற்சொன்ன சட்டத்தில் பிரிவு 65 A என்பதை சேர்க்க முயற்சித்தது.

பிரிவு 65A-இல், பிரிவு 64 மற்றும் 65 ல் சொல்லப்பட்டுள்ள எந்த கட்டுப்பாடும் இதற்கு பொருந்தாது என்று கூறுகிறது. மேலும் பிரிவு 65A-இல் , பிரிவுகள் 51 52 54 55 56 அல்லது 59 அரசு குறிப்பிடும் தொழிற்சாலைகளுக்கு பொருந்தாது என்கிறது. அதாவது, பணி நேரம் சம்பந்தமாக உள்ள தொழிற்சாலைகள் சட்டம் கூறும் எந்த கட்டுப்பாடும் இந்த தொழிற்சாலைகளுக்கு பொருந்தாது என்கிறது பிரிவு 65 (A).

கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் ஏற்படுத்துவதற்காக இந்த சட்ட திருத்தத்தை செய்ததாக தமிழ்நாடு அரசு கூறுவது மிகவும் நியாயமற்றது. மனிதாபிமானமற்றதும் கூட! 1948க்கு முந்தைய பணி நிலைமைகளுக்கு தொழிலாளர்களை துரத்துவது அநீதியானது.

தொழிலாளர்கள் போராடி தியாகம் செய்து தான், 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் மூலம் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உரிமையைப் பெற்றார்கள். அந்த உரிமைகளை ஒரு நொடியில் தவிடு பொடியாக்குகிறது இந்த சட்டம். எனவே தான், அனைத்து தரப்பிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது .அந்த எதிர்ப்பிற்கு அடிபணி வேண்டிய நிலை அரசிற்கு ஏற்பட்டது .அரசும் இந்த சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இது தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதன் குடிமக்கள் ஆரோக்கியத்துடனும்,கெளரவத்துடனும் வாழ்வதை உத்திரவாதப் படுத்துவதில் தான் உண்மையான வளர்ச்சி உணரப்படும்!

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

 

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time