ஏதோ ஒரு சில ஊழல் கறைபடியாத நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற ஆறுதலை நமக்கு தந்து கொண்டிருந்தவர்களில் பிடிஆர் தியாகராஜனும் ஒருவர். பணம், காசை அள்ளி இறைக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றவர்! இன்று சுயமரியாதயைத் தொலைத்துக் கொண்டவர்! என்ன செய்திருக்க வேண்டும் பிடிஆர்?
பிடிஆர் பணம் செலவு செய்யாமல் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தொகுதி மக்களிடையே நம்பிக்கையை பெற்றவர் என்பதை அலட்சியப்படுத்த முடியாது! அப்படிப்பட்டவரின் இமேஜ் இன்று தரைமட்டமாக நொறுங்கிவிட்டது! ஐயோ பரிதாபம்!
லஞ்சம், ஊழல் செய்து சம்பாதிக்க நினைக்காத அவருக்குக்கா இந்த நிலைமை என்று அதிர்ச்சியாக உள்ளது..? இந்த பிரச்சினையில் என்ன நடந்துள்ளது என முழுமையாக சம்பந்தப்பட்டவர்களே சொன்னால் தான் உண்டு!
என்னைப் பொறுத்த வரை பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ போலியானதாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு நிதி அமைச்சர் பொறுப்பில் உள்ளவரைக் குறித்து இப்படி ஜோடித்து ஆடியோ வெளியிட முடியாது. அப்படி போலி ஆடியோ எனும் பட்சத்தில் அதற்குரிய சட்ட விளைவை சம்பந்தப்பட்ட நபர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது அவருக்கும் தெரியாதா என்ன?
அதே சமயம் யாரோ ஒருவரிடம் ஒருவர் நம்பிக்கையுடன் மனம்விட்டு பேசுவதை பொது வெளியில் கசியவிடுவது கயமைத் தனமாகும்! இந்த கயமைத்தனத்தை ராஜதந்திரம் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது!
குஜராத் கலவரம், வன்முறைகள், படுகொலைகள் நடத்திய யோக்கிய சிகாமணிகள் ‘தெகல்கா’ ஊடகத்திடம், ”நான் தான் தீவைத்தேன், கற்பழித்தேன், கொலை செய்தேன்” எனப் பேசியது வெளியான போது பாஜக பதறவில்லை, பஜ்ரங்தள் குற்ற உணர்வால் துடிக்கவில்லை! மோடியும், அமித்ஷாவும் வாய் திறக்கவில்லை.
சமீபத்தில் இந்தியாவையே கொள்ளையடித்து ‘ஸ்வாகா’ செய்யும் அதானியைப் பற்றியும், அதற்கு மோடி அரசாங்கம் உறுதுணையாக இருப்பது குறித்துமான அரிய உண்மைகளை ‘ஹிட்டன்பர்க்’ நிறுவனம் கிழித்து தொங்கவிட்ட போது கூட மோடியும், அமித்ஷாவும் விளக்கமளிக்கவில்லை. கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் ஆர்.எஸ்.எஸ் அம்பானிக்கு தரகு வேலை செய்வதையும், மோடி ஊழலுக்கு துணை போவதையும் போட்டு உடைத்த போது அதற்கு பதில் மோடியிடம் இருந்து வெளிப்படவே இல்லை. ஆருத்ரா நிறுவன மோசடிப் பேர்வழியான ஹரிஸுக்கு அண்ணாமலை பாஜகவில் முக்கிய பதவி தந்து பிரதமரிடம் அறிமுகப்படுத்தி வைத்து இன்று வரை காப்பாற்றி வருவது குறித்து, இது நாள் வரை எந்த சுயவிளக்கமும் அண்ணாமலை தரவில்லை. எருமைமாட்டு மேல் மழை பொழிந்தாற் போன்று எதுவும் நடக்காதது போல கடந்து சென்றனர். இவர்களைப் போல அமைதி காக்க தெரியவில்லை, ஐயோ பாவம், பிடிஆர் தியாகராஜன்!
விளக்கம் சொல்வதாக நினைத்து பிடிஆர்.தியாராஜன் பேசியவை அனைத்தும் அபத்தமானவை! தன்னைத் தானே இன்னும் சிறப்பாக பிடிஆர் தியாகராஜன் அம்பலப்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். திமுக தலைமை தன்னை தற்காத்துக் கொள்வதாக நினைத்து அவரை பேசத் தூண்டி நிர்பந்தித்து, மலத்தின் வாசனையை மறைக்க, மலர் திரவியத்தை வீச வைத்துள்ளது! மலம் இன்னும் அங்கே தான் இருக்கிறது.
”சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. ஆடியோ ஜோடிக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது” என்று வீரவசனம் பேசுவதில் ஒன்றும் பயனில்லை. நிதி அமைச்சரை பிளாக்மெயில் செய்ய துணிந்தவர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கையை கோர முடியவில்லை?
”முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன்?” என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு வெட்கம்கெட்டு போய்விட்டாரே பிடிஆர் என்று தான் கவலையாக உள்ளது.
”திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் சாதனைகள் செய்யும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்” என்று அவர் சொல்லி இருப்பதை அவர் மனசாட்சியே ஏற்காது என்பதே உண்மை!
இந்த ஆட்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே களங்கமாக கருதப்பட்டு வருபவர் சபரீசன். இவர் ஒரு மறைமுக அதிகார மையமாக இயங்குகிறார் என்பதும், அதன் மூலம் அளவற்ற பணம் ஈட்டுகிறார் என்பதும் சகலருக்கும் தெரிந்த உண்மை! அப்படிப்பட்ட சபரீசனைத் தான் பிடிஆர் தியாகராஜன், நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டி, ஆலோசகர், உறுதுணையாக இருப்பவர் சபரீசன்’’ என்று சொல்லி இருப்பதன் மூலம் தன் மரியாதையை தரைமட்டம் ஆக்கிக் கொண்டார்!
Also read
அடுத்தக்கட்டமாக சபரீசன் காலிலோ, உதயநிதி காலிலோ அவர் விழ வேண்டியது தான் பாக்கி!
ஐயோ பாவம்! இவருக்கு இந்த நிலைமையா ஏற்பட்டிருக்க வேண்டும்? இந்த அளவுக்கு இறங்கி பேசுவதற்கு பதிலாக கல்லூளி மங்கனாக அமைதியாக இருந்திருந்தால் கூட ஒன்றும் குடிமுழுகி போய்விடாது! இதோ கள்ளக் குறிச்சி விவகாரத்திலும், வேங்கை வயல் விவகாரத்திலும் குற்றவாளிகளை காப்பாற்றிக் கொண்டு ஸ்டாலின் கல்லூளி மங்கனாக இல்லையா?
பிடிஆர் பதவிக்காக தன் சுயமரியாதையை இழந்துவிட்டார். இதற்கு அவர் பதவியையே இழந்திருந்தாலும் பாதகமில்லை.
சாவித்திரி கண்ணன்
அருமை
சபரீசன் என் வழிகாட்டி என்று இறங்கி வரும்போதே தெரிகிறது. தலைமையின் அழுத்தம் என்று. நாம் தான் இந்திய அளவில் கல்லை அல்ல கடப்பாரையை விழுங்கியவரை பார்த்திருக்கிறோம். நீங்கள் சொல்வது போல வாயை திறக்காமல் இருந்திருக்கலாம்
நம்மைப் போன்றவர்களே இதுபோல பரப்பி நல்லவர்களை அரசியலை விட்டே விலக காரணமாகிறோம்
அன்பர் சாவித்திரி கண்ணன் அவர்கட்கு ,
வணக்கம் .இப்பதிவில் “அதே சமயம் யாரோ ஒருவரிடம் ஒருவர் நம்பிக்கையுடன் மனம்விட்டு பேசுவதை பொது வெளியில் கசியவிடுவது கயமைத் தனமாகும்! இந்த கயமைத்தனத்தை ராஜதந்திரம் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது!” என்று நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள் .
என் பார்வையில் ஒரு குடும்பம் சம்பந்தமான கதைகளை அல்லது தனிப்பட்டவர்களின் சொந்த விடயங்களை பொது வெளியில் கசியவிடுவது கயமைத் தனமாகும்.
ஆனால் இது பிடிஆர்.தியாராஜனினதும்,உதயநிதி ஸ்டாலினினதும்,
சபரீசனினதும் தனிப்பட்ட சங்கதி அல்ல .
இது ஒரு பொது விடயம் .
இதை தெரிந்துகொண்டு வெளியில் தெரிவிக்காது விட்டாலே அது
கயமைத் தனமாகும்.
எனவே வெயிட்டவருக்கு பாராட்டு தெரிவிப்பதுதான் சரியாகும் என்பது எனது உறுதியான கருத்தென்பதை மிகவும் தாழ்மையுடன்
கூறிக்கொள்ள விரும்புகின்றேன் .
இறுதியாக நன்றியுடன்கூடிய வாழ்த்துக்களுடன் இவ்விமர்சனத்தை
முடிக்கின்றேன் .
இனி என் துறையில் ஒப்பந்தக்காரர் மூலம் ஆட்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பகிரங்கமாக ஒரு மாநாட்டில் அறிவித்தார் சுகாரதாரத்துறை அமைச்சர். என்ன ஆனது ! பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வரும் என்றது திமுக தேர்தல் அறிக்கை. என்ன ஆனது. இனி மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர வேலை இருக்காது என்கிறது அரசாணை. இதற்கெல்லாம் நிதி அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா ! மக்களை மையப்படுத்தி அவர் நிர்வாகம் செய்யட்டும். மத்திய அரசின் ஆணைக்கு இணங்க அல்ல.
அவர் பேசுவது திராவிட அரசியல் என்றாலும் செய்வது கார்பரேட் அரசியல். இந்த நேரத்தில் அவரை பேசக் கூடாது. ஆனாலும் அவரும், அவரது கட்சிக்காரர்களும் அமைதியாக யோசிக்கட்டும்.
பி.டி.ஆர் நல்ல குடும்ப பின்னனி உள்ள நன்கு படித்த நாலந்தர அரசியலுக்கு ஒத்து வரதா நல்ல அரசியல் வாதி.
இப்படி இறங்கி போய் தன் பதவியை காக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எல்லாம் காலத்தின் கோலம்.
பதவி சுகம் யாரையும் விட்டு வைக்காது என்பதற்க்கு இந்த சம்பவம் ஒர் எடுத்துகாட்டு.
பி.டி.ஆர் அவர்கள் இன்றைய சூழலில் அனைத்து பதவிகளையும் ராஜினமா செய்து விட்டு வரும் தேர்தலில் சுயோச்சையாக நின்றால் கூட அவரிம் இமேஜ் உயர்ந்து இருக்கு. அவர் குடும்ப பாரம்பரிய பின்னனியும் காப்பற்ற பட்டு இருக்கும்