அன்பு சூழ் உலகை காட்சிப்படுத்தும் படம்!

-பீட்டர் துரைராஜ்

அன்பு மனைவியின் மரணத்திற்கு பிறகு தற்கொலைக்கு விரும்புகிற ஓட்டோ என்ற இந்த சிடுசிடு முதியவர், இனிய சுபாவமுள்ள இளம் தாயான எதிர்வீட்டுப் பெண்னோடு பழக நேர்கிறது! எதிலும் கறாரான ஓட்டோ, வாழ்வில் புதிய பரிமாணங்களை உணர்கிறார். அவர் இறந்தாரா? இல்லை, மீண்டும் வாழ்வை நேசிக்கிறாரா? என்பதே கதை!

தனது மரணத்தை அறிந்த ஒருவன், இறுதிக்காலத்தை எதிர்கொள்ளும் கதை என்று சொல்லலாம்.  டாம் ஹாங்ஸ் ஓட்டோ என்கிற பாத்திரத்தில்  நடித்துள்ள படம் A Man Called OTTO. ஆகச் சிறந்த நடிப்பை வழங்கி ஒட்டு மொத்த படத்தையும் தூக்கி சுமக்கிறார்! நம் வீட்டில் அல்லது பக்கத்து வீடுகளில் பார்க்க முடிந்த எதிலும் குற்றம், குறைகளை சொல்லக் கூடிய முதியவரை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கிறார்! மெல்லிய சோகமும், நகைச்சுவையும் திரைப்படத்தின் இறுதி வரை வருகின்றன. இதனை  ‘இதம் தரும் படம்’ என்று கூறலாம்.

தூக்குப் போட்டுக் கொள்ள, ஒரு கடையில் ஓட்டோ கயிறு வாங்குவதில் கதை தொடங்குகிறது. கயிறை தேர்ந்தெடுக்கும்போது, துணைசெய்ய வரும் கடைப் பையனின் உதவியை  ஓட்டோ மறுக்கிறான். ஏனெனில், அவனது வேலையை அவன் தான் செய்ய வேண்டும். ஐந்து கஜம்  கயிறுக்கு ஆறு கஜத்திற்குண்டான விலை சொல்லப்படுகிறது. ஏன் அதிகமாகச்  செலுத்த வேண்டும் என்று வாதம் செய்கிறான். ஆறு கஜம் வரை ஒரே விலைதான் என்கிறாள் கடைப்பெண். எனக்கு ஐந்து கஜம் போதும், எனவே, அதற்குரிய விலையைத் தான் தருவேன் என்று அடம் பிடிக்கிறான். அப்படியானால் மீதமுள்ள ஒரு கஜத்தை உங்களிடமே தருகிறேன் என்று கடைப் பெண் கூறுகிறாள்.

 

முதல் காட்சியிலேயே ஓட்டோ  கதாப்பாத்திரம் எப்படி என்பதை அற்புதமாகக்  காட்டுகிறார் இயக்குநர். Forest Gump, The terminal, Catch me if you can போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்தவர் டாம் ஹாங்ஸ்.

“ஆறு நாட்களுக்குப் பிறகு வீட்டில் இருக்க மாட்டேன். எனவே, ஆறு நாட்களுக்குண்டான எரிவாயு விலையை முன்னதாகவே செலுத்தி விடுகிறேன்” என்று சேவை மையத்திற்கு சொல்லுகிறான். இறந்து போகிறவன் ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும் ! ஓட்டோ தூக்குமாட்டிக் கொள்ள முயற்சிப்பான்; எடை தாங்காமல் கயிறு அறுந்து விடும். ஓட்டோ பாத்திரத்தை இறுதி வரை  ஒத்திசைவோடு செதுக்கி இருக்கிறார் இயக்குநர் மார்க் பார்ஸ்டர். தனது மனைவியோடு சனிக்கிழமை தோறும் ஒரு குறிப்பிட்ட கடைக்குச் செல்வான் ; ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை என்றால், அதைத் தாண்டி ஒரு நிமிடமும் அந்தக் கடையில் இருக்க மாட்டான். செய்து கொள்ளப் போவது தற்கொலைதான் என்றாலும், அது தனது முடிவுதான் என்றாலும், தான் எடுத்த தீர்மானத்தின்படியே நடக்கிறான். சிறந்த ஆடையை அணிந்து கொள்கிறான்.

முசுடான  ஓட்டோவின் எதிர் வீட்டிற்கு மரிசோல் தம்பதியினர் இரு பெண் குழந்தைகளோடு குடியேறுகின்றனர். மரிசோல் ஓட்டோவிற்கு நேரெதிரான  குணமுள்ளவள். கலகலவென்று வலிந்து பேசுகிறாள். மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டும், அன்பைப் பொழியும் பெண்மையின் இலக்கணமாக திகழ்கிறாள்! அவள் ஓட்டோவை தன் அப்பாவைப் போல உணர்கிறாள்!

கேட்காமலேயே ஓட்டோவிற்கு உணவு தருகிறாள். அவனிடம் உதவி கேட்கிறாள். தன்னுடைய சுட்டியான குழந்தைகளை ஓட்டோவை பார்த்துக் கொள்ளச்  செய்துவிட்டு, கர்ப்பிணியான அவள் மருத்துவச் சோதனைக்குச் செல்கிறாள். வழக்கமாக ஓட்டோதான் மற்றவர்களிடம் சண்டை போடுவான். மாறாக, மரிசோல் இவனிடம் உரிமை எடுத்து சண்டை போடுகிறாள். மரிசோல்  மூலமாக ஓட்டோவின் பிரச்சினை  கொஞ்சம், கொஞ்சமாக நமக்குத் தெரிய வருகிறது. மரிசோல் பாத்திரத்தில் மரியானோ ட்ரவீனோ சிறப்பாக நடித்துள்ளார். இவளுடைய நடிப்பு,  ஓட்டோவின் பாத்திரத்தை மிளிரச் செய்கிறது.

எதிலும் சிஷ்டமேட்டிக்காக செயல்பட வேண்டும் என்ற  ஓட்டோவைப் பார்த்து அந்தத் தெருவிற்கு வரும் பேப்பர்காரன், தபால்காரன்,  அவனுடைய கம்பெனியில் பணிபுரிபவன், பக்கத்து வீட்டுக்காரன் என அனைவரும் மிரள்கின்றனர். அவனைப் பொறுத்தவரை ‘சட்டம் என்பது ஏதோ காரணத்திற்காகத் தான் போடப்பட்டுள்ளது’. எனவே, வகுத்துள்ள விதிகளை அனைவரும் கறாக கடைபிடிக்க வேண்டும்.

அருமையான சின்னச்சின்ன வசனங்கள் படம் நெடுகிலும் வருகின்றன.  ஒரு நாவலை வைத்து ஸ்பானிஷ் மொழியில் எடுக்கப்பட்ட படத்தை தற்போது ஆங்கிலத்தில் எடுத்துள்ளனர். இது தற்போது உலக அளவில் பேசப்படும் படமாக உள்ளது!

ஓட்டோவின் கதை சொல்லப்படும் அதே சமயத்தில், இராணுவத்தில் இருந்து விலக்கப்பட்ட ஒரு இளைஞன், இரயில் நிலையத்தில்  புத்தகத்தை தவற விட்ட சோனியா என்ற பெண்ணைச் சந்திப்பதும் அவளைக்  காதலிப்பதும் சொல்லப்படுகிறது. அவை பின்னோக்கு காட்சிகளாக விரிவடைகின்றன. முதல் காட்சிகளில் சொல்லப்படுபவைகளுக்கு காரணம் பிந்தைய காட்சிகளில் சொல்லப்படுகிறது. ஜூனியர் ஓட்டோ யார், அவனுடைய உணர்வுகள் எவ்வளவு மென்மையானது என்று   பேசப்படுகிறது.  படத்தின் இறுதியில் எல்லா காட்சிகளும் ஒன்றோடு ஒன்று  இணைகின்றன. ஓட்டோவை நேர்காணல் செய்ய வரும் பெண், ரியல் எஸ்டேட்காரர்களின் ஊழலை  வெளிப்படுத்துகிறாள்.    இவை ஓரிரு காட்சிகளில்  கதையோடு இயைந்த ஒன்றாக வருகின்றன.

பெரிய சஸ்பென்ஸ் இல்லை. சலனமின்றி  பெய்யும் மழை போல,  கதை நிதானமாக செல்கிறது. பல நுணுக்கமான காட்சிகள் வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான, இந்த இரண்டு மணிநேர திரைப்படம், தற்போது நெட்பிளிக்சில் ஓடிக்கொண்டிருக்கிறது. பல விருதுகள் இதற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

சட்டம் சரியில்லையென்றால் அதை மாற்ற முயல வேண்டும்; அதுவரை சட்டத்தை மதிக்க வேண்டும். இவன் ஓய்வுபெறுவதை ஒட்டி வெட்டப்படும் கேக், இவன் இல்லாமலே  வெட்டப்படுகிறது. இவனிடம் யார் அன்பு செலுத்துவார் ? கரடுமுரடான நபர்களை அப்படியே விட்டுவிடலாமா ! ஆனால் ஓட்டோ போன்ற மனிதர்கள் தான் பொது நீதிக்காக ரியல் எஸ்டேட்காரர்களை எதிர்க்கிறார்கள். வாயில்லா பூனைக்கு  என்ன வழி செய்துவிட்டுப் போவது என்று யோசிக்கிறார்கள். மருத்துவர், ஓட்டோவிற்கு பெரிய இதயம் என்பார். ஆமாம், அவருக்கு பெரிய இதயம் என்பாள் மரிசோல். அவள் சொல்லும் பொருள் வேறு; இவள் சொல்லும் பொருள் வேறு. இப்படி ஒரே நேரத்தில் சோகத்தையும், நகைச்சுவையையும் பல காட்சிகளில் காண முடியும். வித்தியாசமான திரைக்கதையும், பின்னோக்கு காட்சிகளும் இந்தப் படத்தை மீண்டும் பார்க்க வைக்கும்.

ஓட்டோ, சோனியா (ஜூனியர் ஓட்டோவின் காதலி), மரிசோல் போன்றவர்கள் எப்போதுமே இந்த உலகத்தை அன்பால் நிறைக்கிறார்கள். வணிக பெருநோக்கத்தைக் கொண்ட நவீன உலகில் அன்பு சூழ் உலகை அடையாளப்படுத்தும் படம்!

திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time