தமிழ்த் தாய் வாழ்த்தில் நடந்தது என்ன?

-சாவித்திரி கண்ணன்

முதலில் அந்த மண்ணில் அவர்களின் கீதம் தான் முதலில் போட வேண்டும். அதன் பிறகு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது’ என்றார். பிறகு, ”பாடல், மெட்டு சரியில்லை, நான் தான் நிறுத்த சொன்னேன். பாடல் சரியில்லாததால் மீண்டும் ஒலிபரப்பவில்லை” என்றார்! தமிழ் அமைப்புகளின் அந்தக் கூட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன?

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வாழும் ஷிவமொக்கா நகரில் தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்த – பெருந்திரளாக தமிழர்கள் மட்டுமே இருந்த அந்த நிகழ்வில், முன்னாள் கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் கலந்து கொண்டனர். மேடையில் ஏறும் போதே அண்ணாமலை ஈஸ்வரப்பாவின் காலை தொட்டு வணங்கியே வருகிறார்!

இதில் தொடக்க நிகழ்வாக தமிழ்த் தாய் வாழ்த்து ஒலித்தது! கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த தருணத்தில் – இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், ”அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற.. ” என்கிற வரி வரும் இடத்தில் எல்லோரும் மதிப்பளிக்கும் நின்று பேருவகையோடு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரான ஈஸ்வரப்பா ”இதென்ன தமிழ்தாய் வாழ்த்து! நிறுத்துங்கள் இது கர்நாடாகா, இங்கு கன்னட தாய் வாழ்த்து தான் இசைக்க வேண்டும் என்றவர் கூட்டத்தினரைப் பார்த்து, இங்கு கன்னட தமிழ் தாய் வாழ்த்தை பாடும் பெண்கள் யாராவது இருந்தால் மேடை வரவும்” என்றார்! கூட்டத்தில் இருந்தவர்கள் யாவரும் தமிழ் பெண்கள் என்பதால் பெருத்த அமைதி நிலவியது, ஆகவே, ஒலிபெருக்கியில் கன்னட கீதம் ஒலிபரப்பப்பட்டது!

இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் ஏராளமான தொலைகாட்சி சேனல்கள் படம்பிடித்துள்ளனர். இதில் அண்ணாமலை ஆடாமல் அசையாமல் நெடுமரமாய் அங்கு நின்ற வண்ணம் உள்ளாரே தவிர,  நடைபெறும் நிகழ்ச்சி அவரை எந்த விதத்திலும் சலனப்படுத்தவில்லை.

இது குறித்து தமிழ் தொலைகாட்சி சேனல் நிருபர்கள் அண்ணாமலையிடம் கேட்ட போது, ”நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு கர்நாடகாவின் மாநில பாடலை இசைக்க வேண்டும் என ஈஸ்வரப்பா விரும்புகிறார். அது அவர்களின் கூட்டம், அப்போது அங்கிருந்த ஆபரேட்டர் தமிழ்த்தாய் வாழ்த்து போடுகிறார். அந்த தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக இல்லை. ஆனாலும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்தேன். ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக கர்நாடகாவின் மாநிலப்பாடலை போட வேண்டும் என்பது நியதி. அதைத்தான் ஈஸ்வரப்பா செய்தார். அவர் செய்தது எந்த தவறும் கிடையாது” என விளக்கமளித்தார்.

இதே கேள்வி தமிழ்நாட்டில் அண்ணாமலையிடம் கேட்கப்பட்ட போது, ”கர்நாடகாவில் அந்த மாநில தாய் மொழிப் பாடலைத் தான் முதலில் போடுவார்கள். அதற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து போட்டனர்” என விளக்கமளித்தார்.

இப்படியான அண்ணாமலையின் பேச்சைக் கேட்ட ஷிவமோகா நகரின் தமிழ்த் தாய் சங்க செயலாளர் தண்டபாணி, ”கர்நாடகப் பாடல் ஒலிபரப்பட்ட பிறகு, தமிழ்த் தாய் வாழ்த்தை போடவே இல்லை” என்றார்!

இது குறித்து நிருபர்கள் மீண்டும் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசிய போது, ”அந்த தமிழ்த் தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல் இருந்தது, சரியாக இல்லை, ஆகவே, சரியில்லாத பாடலை நிறுத்தும்படி நான் தான் ஈஸ்வரப்பாவிடம் கூறினேன். அதன்படி தான் அவர் நிறுத்தினார்” என விளக்கமளித்துள்ளார்!

ஆனால், இது குறித்த காணொலிகளை நாம் தேடிப் பார்த்து கேட்கும் போது, அந்தப் பாடல் நன்கு தெளிவாக, சரியாகத் தான் ஒலிக்கிறது. மேலும், அண்ணாமலை அந்தப் பாடல் ஒலிபரப்பின் போது பக்கத்தில் இருந்த ஈஸ்வரப்பாவிடம் எதையும் பேசவே இல்லை. ஈஸ்வரப்பா தன்னிச்சையாகத் தான் அதிரடியாக தமிழ்த் தாய் வாழ்த்தை நிறுத்தச் சொல்லி கட்டளை இடுகிறார் என்பது துல்லியமாக காணக் கிடைக்கிறது. ஆகவே, அண்ணாமலை ஒன்றையடுத்து ஒன்றாக பொய் சொல்கிறார் என்பது நன்கு தெரிகிறது.

மேலும் ஆபரேட்டர் கவனக்குறைவாக தமிழ்த் தாய் வாழ்த்தை போட்டதாக அண்ணாமலை சொல்கிறார். இதில் கவனிக்க வேண்டியது புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் கர்நாடகத்திலானாலும் சரி, அமெரிக்காவானாலும் சரி, தாங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்தை தான் தொடக்க நிகழ்ச்சியில் இசைப்பார்கள்! இதற்கு எங்கும், யாரும் இது வரை தடை சொன்னதில்லை. கர்நாடாகாவில் இருக்கும் ஆபரேட்டர்களிடம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இருக்காது. நம் தமிழர்கள் கொடுத்து அவரை போடச் சொன்னதால் தான் தமிழ்த் தாய் வாழ்த்தைப் போட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒலிப்பேழையில் ஏதேனும் குறைபாடு இருப்பின் தமிழ்த் தாய் வாழ்த்தை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருமாக சேர்ந்து பாடிவிடுவதே இயல்பாக நடப்பதாகும்.  அண்ணாமலை நெட்ட நெடுமரமாய் அங்கு நின்று கொண்டு, நடைபெறும் எதுவுமே தன்னை பாதிக்காதவாறு இருந்ததை காணொலி காட்சி வாயிலாக தமிழ் கூறும் உலகமே கண்டது. நடந்த இந்த நிகழ்வானது அதில் கலந்து கொண்ட தமிழர்களை மிக ஆழமாக புண்படுத்தியுள்ளது மட்டுமல்ல, அனைத்து தமிழர்களையுமே புண்படுத்தியுள்ளது என்பதே உண்மை!

துணிச்சலாக பொய்களை பேசுவதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அது அண்ணாமலையிடம் அபரிதமாக உள்ளது!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time