பேனா சின்னம் ஒரு அரசியல் சூழ்ச்சியே!

-சாவித்திரி கண்ணன்

திராவிடம் என்றாலே கசந்த மத்திய பாஜகவினர், தற்போது கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் எழுப்ப கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச் சூழல் துறை விதிகள்,கடலோர மேலாண்மை ஆணையம்…ஆகிய அனைத்தையுமே செல்லாக்காசாக்கி சட்ட விதிகளை அத்துமீறி ஆதரவு காட்டுகிறார்களே..? ஏன்?

கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு பிறகு தான் எந்த கட்டுமானமும் இருக்க வேண்டும் என்பது கடலோர மேலாண்மை ஆணையத்தின் அடிப்படை விதியாகும். அந்த விதியைக் காட்டித் தான் கருணாநிதியின் சமாதியை கடற்கரையில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது அதிமுக அரசு! ஆனால், கருணாநிதி இறப்பால் அப்போது மேலோங்கி இருந்த அனுதாப ஆதரவு நிலைகளை கணக்கில் கொண்டும், ஏற்கனவே அந்த விதி ஜெயலலிதாவின் சமாதிக்காக சமீபத்தில் மீறப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டும் கருணாநிதி சமாதிக்கு இறுதியில்  அனுமதிக்கப்பட்டது.

ஆக, கடற்கரையில் சமாதி கட்டவே அன்று கண்ணீர் விட்டு கதறி அழுது அனுமதி பெற வேண்டிய நிலையில் இருந்த ஸ்டாலினுக்கு, இன்று மத்திய அரசு தானே வலிந்து வந்து அனைத்து சட்டவிதிகளையும் தளர்த்தி வளைந்து கொடுக்கிறதே.. ஏன்? என்பதற்கு பின்னுள்ள சதி திட்டத்தை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

மத்திய பாஜக அரசை பொறுத்த வரை அவர்களுக்கு திராவிடம் என்றாலே எட்டிக் காயாகும். அதுவும், அந்த திராவிட சித்தாந்தத்தின் மூலவேரான தந்தை பெரியார் என்றாலே, அவர்களுக்கு ஆற்ற முடியாத சினம் பொங்கி எழும். ஏனென்றால், இந்த மண்ணில் பார்ப்பனியச் சித்தாந்தத்தை எதிர்த்து எத்தனையோ புரட்சியாளர்கள், சித்தர்கள் போராடினாலும் அவர்களை பார்ப்பனியம் வாழும் காலத்திலேயே வதைத்தது, கொன்றது! முடியாவிட்டால் இறப்பிற்கு பின் அரவணைத்து காலப் போக்கில் அவர்களை காணாமல் அழித்தது. சனாதனத்தை எதிர்த்த புத்தரையே இந்து மதம் இப்படித் தான் உள்வாங்கி செறித்தது!

ஆனால், அவர்களால் செறிக்க முடியாத வரலாற்று நாயகன் – பார்ப்பனியத்தின் பரம வைரி என்றால், அது பெரியார் ஒருவரே! அவரை எதிர்க்க, எதிர்க்க இங்கே வீறுகொண்டு வேகம் பெற்று, விரிவு பெறுகிறது பெரியாரின் ஆதரவுத் தளம். ஆகவே, அவரை மறக்கடிக்க, அவரின் முக்கியத்துவத்தை குறைக்க பார்ப்பனிய பாஜக எடுத்த முடிவு தான் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்.

பெரியார் என்ற ‘பெரிய கோடு’ ஒன்று கண்களை உறுத்துகிறது, எனவே, அதற்கு அருகில் கருணாநிதி என்ற அதைவிட ‘மிகப் பெரிய கோடு’ வரையப் பெறும் போது தான் பெரியாரின் முக்கியத்துவம் குறையும் என்பது தான் அவர்களின் ‘தியரி’. இந்த தந்திரத்தை தான் காந்தியின் முக்கியத்துவத்தை சிதைக்க மூவாயிரம் கோடியில் உலகின் மிகப் பெரிய பட்டேல் சிலையை நிறுவினார்கள்! ஏனென்றால், உலகத்தாரை பொறுத்த வரை இந்தியா என்றால், அவர்களின் நினைவுக்கு முதலில் தோன்றுபவராக காந்தி மட்டுமே இருக்கிறார். இனி அடுத்தடுத்த தலைமுறையினர் ‘காந்தியைவிட பட்டேலே மிகப் பெரியவர்’ என எண்ணத் தலைப்படுவர்! ஆனால், பட்டேல் என்பவர் காந்தியின் பல சீடர்களில் ஒருவர்! பட்டேலை விட முக்கியத்துவம் வாய்ந்த சுமார் ஒரு டஜன் தளபதிகள் காந்திக்கு உண்டு.

அதே போலத் தான் பெரியார்! அவருக்கு இணை சொல்ல இங்கே இன்னொருவர் இல்லை. பேரறிஞர் அண்ணா போன்ற முதல் நிலையில் இருக்கும் சுமார் ஒரு டஜன் தளபதிகள் பெரியாருக்கு உண்டு!

பெரியார் ஒரு வரலாற்று நாயகர். திராவிடத்தின் ஐகான்! அவர் உருவாக்கிய சமூக மாற்றத்தின் விளைவாய் ஆட்சிக்கு வந்தவர்களே அண்ணாவும், கருணாநிதியும்! இவர்கள் வெறும் ஆட்சியாளர்கள் தான்! கட்சிகளைக் கடந்து பெரியாரின் தாக்கம் அனைத்து மட்டத்திலும் உணரப்பட்டது. இவர்களுக்கும் முன்பே பெரியாரின் தாக்கத்தால் காங்கிரசில் பார்ப்பனியத்தின் தாக்கம் சிதைந்து, காமராஜர் ஆட்சிக்கு வந்தார்!

ஆக, பெரியாரின் கொள்கைகளை முதன் முதலில் நடைமுறைப்படுத்த சட்டங்கள் போட்டு தொடங்கி வைத்தவர் காமராஜர் தான்! அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்களே அண்ணாவும், கருணாநிதியும்! அதே பாதையில் பயணப்பட வேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்டது. இங்கே யார் முதல்வராக வந்தாலும் பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை புறம் தள்ளவே முடியாது.

அந்த வகையில் இல.கணேசன்களும், ஹெச்.ராஜாக்களும் கோலோச்சிய தமிழக பாஜகவில் தமிழிசையும், அண்ணாமலையும் வந்தால் தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமைகளை தோற்றுவித்து சென்றவரும் பெரியார் தான்!

ஆகவே, அந்த பெரியாரின் முக்கியத்துவத்தை குறைக்கவே திமுக குடும்பத்தின் சுய விளம்பர போதை மனநிலையை பயன்படுத்திக் கொள்கிறது பாஜக! தமிழ்நாட்டின் தலை நகராம் சென்னையில் உலகப் புகழ் பெற்ற மெரீனா கடற்கரையில் கருணாநிதியின் வானளாவிய நினைவுச் சின்னத்தை பார்க்க நேரும் வருங்கால தலைமுறைக்கும், வெளிநாட்டு மீடியாக்களுக்கும் கருணாநிதி தான் இனி திராவிடத்தின் ஐகானாகத் தெரிவார்! பெரியார் மெல்ல,மெல்ல மறக்கடிக்கப்படுவார்! இதை நாம் அனுமதிக்கக் கூடாது.

பெரியாரின் சீடரான கருணாநிதியின் வழியை மறந்து, பாஜகவின் சனாதனக் கருத்துக்களை சகல மட்டத்திலும் செயல்படுத்தி வரும் ஸ்டாலினின் அரசு, பாஜகவின் சதிக்கு தன்னையறியாமலே துணைபோவது காலத்தின் கொடுமையாகும். கருணாநிதியே உயிரோடு இருந்தால் இதை விரும்பி இருக்க மாட்டார்!

உண்மையில் சுற்றுச் சூழல் தொடர்பான 15 நிபந்தனைகள் எதையும் கடைபிடித்து அந்த நினைவுச் சின்னத்தை அங்கே எழுப்பவே முடியாது! சும்மா ஒரு கண் துடைப்பே யாவும்! இந்த பேனா நினைவுச் சின்னம் மிகப் பெரிய சுற்றுச் சூழல் சீரழிவை உருவாக்கும் என்பது திட்டவட்டமான உண்மையாகும். ஆகவே, தயவு செய்து கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் எழுப்பும் நோக்கத்தை கைவிட்டு சமாதிக்கு அருகிலேயே கம்பீரமாக கலைஞர் கருணாநிதியின் பேனாவை நிலை நிறுத்தட்டும் தமிழக அரசு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time