12  மணி நேரவேலை உண்மை நிலை என்ன?

-சாவித்திரி கண்ணன்

இன்று உழைப்பாளர் தினத்தை கொண்டாட மே தினப் பூங்காவிற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு இரண்டுகெட்டான் விதமாக உள்ளது! கூடுதல் வேலை நேர சட்டத்தை திரும்பப் பெற்றது மகிழ்ச்சி! ஆனால், இந்த சட்டம் தொழிலாளர் நலன் கருதி தான் கொண்டு வரப்பட்டது என மீண்டும் வலியுறுத்துகிறார்! அப்படியானால்…?

‘கூடுதல் வேலை நேர அதிகரிப்பு சட்டத்தை வாபஸ் பெறுவதாக’ முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ”திமுக எப்போதுமே தொழிலாளர்களின் தோழன்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதை திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான்! தொழிற்சங்கத்தால் சந்தேகம் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் சட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சு உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும், சில உண்மைகளை சொல்லாமல் இருக்க முடியாது.

# இவ்வளவு கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்படுத்தக் கூடிய சட்டத்தை கொண்டு வந்ததே ஒரு தவறான முன்னெடுப்பு அல்லவா? கொண்டு வந்ததை எப்படி துணிச்சல் என்பீர்கள்? அராஜகம் அல்லவா?

# உலகின் முக்கிய நாடுகள் பெரும்பாலானவற்றில் ஒரு நாள் வேலை என்பது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் என்று இருக்கையில், இப்படி ஒரு கர்ண கொடுர சட்டத்தை நீங்கள் அமல்படுத்தும் முன்பே, குறைந்தபட்சம் உங்கள் தொழிற்சங்க அமைப்பின் முக்கியஸ்தர்களை அழைத்தாவது கலந்து பேசி இருக்கலாமே!

# இந்த சட்டம் மட்டுமின்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட ‘லேண்ட் கன்சாலிடேசன் பில்’ உள்ளிட்ட மோசமான 17 மசோதாக்களை அதிரடியாக வேக, வேகமாக மோடி அரசாங்கம் வேளாண் சட்டத்தை நிறைவேற்றிய ஸ்டைலில் நிறைவேற்றியது நியாயமா? இன்னும் அவற்றையெல்லாம் வாபஸ் வாங்கவில்லையே?

 

அன்றைக்கு சட்டசபையில் பேசிய போதும் சரி, இன்றைக்கு மே தினப் பூங்காவில் பேசிய பேச்சிலும் சரி, ”தமிழ் நாட்டில் முதலீடுகளை இழுத்திட வேண்டும், பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களை பாதுகாக்கக் கூடிய பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தது. அதுவும் இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டம் அல்ல, குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதிப்பதே” என விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தப் பேச்சானது அந்த கூடுதல் வேலை நேர சட்டத்தில் முதல்வருக்கு உடன்பாடு உண்டென்பதையும், தொழிற்சங்கங்களின் நிர்பந்தத்தால் மட்டுமே பின்வாங்க நேரிட்டது என்ற செய்தியையே சொல்கிறது. அதாவது, முதலமைச்சர் ‘இந்த சட்டம் தவறானது’ என உளப் பூர்வமாக கருதவில்லை. இதை அவசரப்பட்டு கொண்டு வந்ததற்காக வருத்தப்படவும் இல்லை. ‘தொழிற்சங்கத்தினர் புரிந்து கொள்ளாதது தான் அவருக்கு கவலை’ என்பதாகத் தான் அவரது பேச்சின் தொனி உள்ளது.

உங்களுடைய வாதப்படியே இதை விவாதிக்கலாம். பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலை தரப்பட வேண்டும் என்றால், தொழிற்சாலை முதலாளிகளிடம் நீங்கள் என்ன சொல்லி இருக்க வேண்டும். ”ஒரு தொழிலாளியிடம் 12 மணி நேர வேலை வாங்குவதற்கு மாற்றாக, அந்த வேலையை இரு தொழிலாளிக்கு பகிர்ந்து அளியுங்கள். ஏனெனில், வேலை இல்லாமல் காத்திருப்போர் அதிகம் இருக்கிறார்கள்” என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

கூடுதல் வேலை நேரம் என்பதை அரசாங்கம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு சட்டம் நிறைவேற்றிவிட்ட பிறகு, அதை சகட்டுமேனிக்கு அனைத்து முதலாளிகளுமே பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது தான் நடைமுறையாகிவிடும். இதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.

தமிழ்நாட்டில் தொழிலாளர் நலத்துறை என்பது எப்படி செயல்படுகிறது என்பதற்கு சில உதாரணங்களை சொல்ல வேண்டும் என்றால், 12 மணி நேர வேலை என்பதை தற்போதே பல இடங்களில் அமல்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான புகார்களை தொழிலாளர் நலத்துறை பெரிதுபடுத்துவதில்லை என்பது தான் பல தொழிற்சங்கங்களின் அனுபவமாக உள்ளது.

கூடுதலாக வேலை நேரம் நீட்டிக்கப்பட்ட விவகாரங்களில் நிர்வாகத்தினரை தடுக்கவோ, தண்டிக்கவோ தொழிலாளர் நலத்துறை முயன்றதில்லை. நிலைமை இப்படி இருக்க நீங்களோ மீண்டும், மீண்டும் ”இந்த சட்டம் தொழிலாளர் நலன்களுக்காகத் தான் கொண்டு வரப்பட்டது” என்று வலியுறுத்துகிறீர்கள். ‘இது முதலாளிகளுக்கு நீங்கள் தரும் செய்தி’ என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது மிகுந்த வலியையும், வருத்தத்தையும் அளிக்கிறது முதல்வர் அவர்களே!

ஆட்சியாளர்கள் எப்போதுமே முதலாளிகளால் ஆட்டுவிக்கப்படுபவர்களாகத் தான் உள்ளனர். நாம் விழிப்புணர்வுடன் இல்லை என்றால், பெற்ற உரிமைகளை இழக்க வேண்டியதாகிவிடும் என்பதே யதார்த்தம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time