எவ்வளவு முயன்றாலும் வான் கோழி மயிலாகாது! இழுப்பை பூ சக்கரையாகாது! மோடி மக்கள் தலைவராக முடியாது. வ.உ..சி, காந்தி, காமராஜர்..என்று மக்கள் தலைவர்களை பார்த்த இந்த தேசத்தில் ஆர்.எஸ்.ஸால் ஆட்டுவிக்கப்படும் ‘ரோபோ’வான மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியைப் பார்த்து சிரிப்பதா? பரிதாபப்படுவதா..?
ஒரு போலியான பிம்பத்தை கட்டமைத்து தொடர்ந்து அதை பராமரிக்க பிரயத்தனம் செய்து கொண்டே இருப்பது தான் எல்லா சர்வாதிகாரிகளும் செய்யும் காரியம். இவர்கள் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போவதால், அதை மறைக்க செயற்கையாக ஒரு நிகழ்வை உருவாக்கி மக்களோடு நெருக்கம் பாராட்டுவது போல நாடகமாடுவார்கள்! அப்படியான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் இந்த மான் கி பாத்!
‘மனதின் குரல்’ என்ற இந்த திட்டமிட்ட நாடகத்தனமான நிகழ்வை, மாதம் ஒரு முறை என சுமார் 100 நிகழ்ச்சிகளை நடத்தி விட்டனர். இந்த நூறாவது நிகழ்ச்சியை ஒளிபரப்பி அதை ரஜினி, இளையராஜா உள்ளிட்ட 200 பிரபலங்களை அழைத்து போட்டுக் காட்ட தமிழக ஆளுநர் மாளிகை எடுத்த முயற்சிகள் ‘பிளாப்’ ஆகிவிட்டது!
பிரதமராக பதவி ஏற்று சுமார் ஒன்பது வருடங்கள் ஆகிறது. ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு கூட தைரியம் இல்லாதவராக, ஓடி ஒளிபவராகத் தான் இருக்கிறார் திருவாளர் மோடி! எப்படி சிரிக்கணும், எப்படி நடக்கணும், எப்படி கை அசைக்கணும் எல்லாவற்றுக்கும் ‘டிரையினிங்’ தரப்பட்டு இயங்குபவர் தான் மோடி!

அவர் பேசுவது எதுவும் அவர் உள்ளத்தில் இருந்து தன்னிச்சையாக வரும் வார்த்தையல்ல! அவர் பெயரில் வெளியிடப்படும் அறிக்கை எதுவும் அவர் டிக்டேட் செய்து எழுதப்பட்டதல்ல. அதனால் தான் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கூட கலந்து கொண்டு பேச முடியாதவராக இருக்கிறார் மோடி! மோடி எப்போதுமே நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில் முதல் நாள் வருவார். அத்துடன் ‘எஸ்கேப்’ ஆகிவிடுவார். பிறகு, கடைசி நாள் தான் தலை காட்டுவார். பாராளுமன்றத்தில் நடக்கும் இயல்பான உரையாடல்களில் அவரால் பங்கு பெற இயலாது. அதே சமயம் முதல் நாளும், கடைசி நாளும் அவர் சமாளிக்கதக்க விதத்தில் நிகழ்ச்சிகளை கட்டமைத்துவிடுவார்கள்! அப்போது ஜமாய்த்துவிடுவார் மோடி!
ஜவகர்லால் நேரு, வாஜ்பாய், மது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங், இந்திரஜி குப்தா, இரா.செழியன்..போன்ற பெரும் ஜாம்பாவான்கள் உலவிய நாடாளுமன்றம் தற்போது மோடி போன்ற ஆளுமை திறனற்ற அல்லது சுயமற்ற பிரதமரையும் பார்க்கிறது.
சரி, ‘மான் கி பாத்’ நிகச்சிக்கு வருவோம். நாட்டில் கொழுந்துவிட்டு எரியக் கூடிய பல பிரச்சினைகள் இருக்க அவை எதைப் பற்றியும் கவலை இல்லாமல் பிரதமர், அவருக்கான குழுவினர் உருவாக்கித் தந்த ஸ்கிரிப்டை ஏற்ற இறக்கங்களுடன் பேசி செல்கிறார். இதில் செண்டிமெண்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் எளிய மனிதர்கள் பற்றிய தகவல்களை திரட்டி, அதில் ஒரு நிகழ்ச்சிக்கு ஒருவர் என பிரதமரை பேச வைக்கின்றனர்.

நாட்டின் தலை நகர் டெல்லியில் லட்சத்திற்கு மேற்ப்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து சுமார் ஒரு வருடம் போராடினார்கள்! அவர்களை நேரில் சென்று சந்தித்து பேச தைரியமில்லாத பிரதமர் மோடி மதுரைக்கு அருகே ஓரு கிராமத்தில் வாழை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் முருகேசன் என்ற முதியவர் குறித்து அன்பொழுக பேசிக் கொண்டிருப்பார்.
இந்த வகையில் இவர்கள் சிலரை இந்த நிகழ்ச்சியில் பேசபப்டுவதற்கு என்றே உருவாக்குகின்றனர் போலும்! உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் குறித்து பிரதமர் பேசுகிறார். அந்தப் பெண்மணி தன் கைவசம் இருந்த நகைகளை அடகு வைத்து 40,000 முதலீட்டில் ஒரு வியாபாரம் ஆரம்பிக்கிறாராம். அந்த வியாபாரத்தில் அவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டாராம்! என்ன வியாபாரமென்றால், ஆன்லைனில் ஆர்டர் பெற்று அலுவலகங்களுக்கான பொருள்களை சப்ளை செய்யும் பிசினஸாம்! இந்த பெண்மணிக்க்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரூபாய் 243 பெறுமானமுள்ள பத்து ஸ்டாம்பேடுகளை ஆர்டர் தருகிறார்களாம், டெல்லி ஹெல்த் டிபார்ட்மெண்டில் இருந்து ரூ 1,600 மதிப்புள்ள இரண்டு தெர்மோ பிளாஷ்க்கை ஆர்டர் தருகிறார்களாம்!
தலைநகர் டெல்லியில் கிடைக்காததா? அப்படியே தேவை என்றாலும் இவ்வளவு சிறிய மதிப்புள்ள பொருளை பல ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஏன் ஆர்டர் தரப்படுகிறது? இந்த பொருள்களை அவர் தயாரிப்பவரும் அல்ல, மொத்த வியாபாரம் செய்வருமல்ல. இவரே மதுரை வந்து மொத்த வியாபாரம் செய்யும் கடையில் பர்சேஸ் செய்து தான் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்! இங்கிருந்து அனுப்பும் செலவை கணக்கிடும் போது குறிப்பிட்ட பொருளின் விலை சற்று கூடத் தானே செய்யும்…?
இந்த கேள்விகள் எதற்கும் அவர்களிடம் பதில் இருக்காது. அவர்களின் நோக்கம் நாட்டின் ஒரு மூலையில் உள்ள கிராமத்தின் பெண் மீது கூட கரிசனம் கொண்ட ஆட்சி நடக்கிறது என்பதை நிறுவுவதேயாகும்! ஆனால், மோடி ஆட்சியில் தான் இந்தியாவில் பல லட்சம் சிறு, குறுந் தொழில்கள் பெரும் சிதைவைக் கண்டன! சிறு, குறு உற்பத்தியாளர்களும், சின்னச்,சின்ன வியாபாரிகளும் நலிந்து, நொந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள் என்ற உண்மையை திசை திருப்பப் பார்க்கிறார்கள்!
ஒரு சமயம் மான் கி பாத் நிகச்சியில் நான் என்ன பேசுவது என்று பொது மக்களிடம் இருந்து யோசனைகள் வரவேற்கப்படுகின்றன என விளம்பரப்படுத்தினார்கள். அட, பரவாயில்லையே, திருந்திவிட்டார்கள் போலும். நல்லதாக சில விஷயங்களை கவனபடுத்தலாம் என மக்கள் நிறைய யோசனைகளை அனுப்பினர். ஆனால், அவை எவற்றையும் மோடி சீந்தவேயில்லை. இதனால் தான் ஒரு முறை அவர் பேசிய காணொளி நிகழ்வில் 36,000 பேர் லைக் போட, மூன்று லட்சத்திற்கு அதிகமானோர் டிஸ்லைக் என்ற விருப்பமின்மை குறியீட்டைப் போட்டனர். அதற்கு பிறகும் கூட கூச்சம் ஏற்பட்டடோ, குற்ற உணர்வு உண்டாகியோ மோடி திருந்தியபாடில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியிலும் கோடிக்கோடியாக செம விளம்பர வருமானம் பார்த்துட்டாங்க!
Also read
‘நாடு சுபிட்சமாக இருக்கிறது! எளிய மனிதர்கள் மீது பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டவராக உள்ளார். மனித நேயம் சகலமட்டத்திலும் தழைத்தோங்கிறது.. ‘ போன்ற தோற்றங்களைக் கட்டமைக்க செய்யும் பகிரதப் பிரயத்தனத்தில், கால்வாசியேனும் உண்மையாகவே எளிய ஜனத்திரள் நலம் பெற செய்வீர்கள் என்றால் கூட, மக்கள் உங்களை போற்றுவார்களே!
நீங்கள் உண்மையாக இருந்தால் விளம்பரங்களே தேவைப்படாது! பொய்கள் மின்னி மறைந்து விடும். உண்மைகள் தான் காலம் கடந்தும், தலைமுறைகளைக் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைக்கும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
பிரதமர் பேசுவது மன்-கீ-பாத் (மனத்தின் செய்தி. மன் என்ற இந்திச்சொல்லில் நேர்தமிழ் மனம்) மான் கீ பாத் அல்ல. சற்றே விஷயம் தெரிந்தவர்களை அருகில் வைத்திருந்தால் இம்மாதிரிப் பிழைகளைத் தவிர்க்கலாம். சரி, இந்திக்காரன்கள் நம் மொழியைக் கொல்கிறான்கள், நாம் அவர்கள் மொழியைக் கொன்றால் என்ன–என்றால்சரிதான். மற்றபடி உங்கள் கருத்துகள் சரிதான். அந்த ஆள் பின்பற்றும் ஒரு மிக மலிவான உபாயம் மன்-கீ-பாத் (அந்த ஆள் மனத்தின் செய்தி). கேவலம். மக்கள் குரலைக் கேட்பதற்கு பதிலாக, என் குரலை மட்டும் நீங்கள் கேளுங்கள் என்பதற்கு எவ்வளவு திமிர் வேண்டும்?
இவரது மான்கீ பாத் நிகழ்ச்சி பேச்சே ஒரு போலியான நாடக நிகழ்வுதான்.அதில் உண்மையான மக்கள் நலன்சார்ந்த உரையாடல் அல்ல…அல்ல…அல்ல…
மன் கீ பாத் மட்டும் அல்ல இவர் காட்டும் அனைத்து வித்தைகளும் கம்பி கட்டும் வித்தைகள் தான்.
தன் மனக் குரலை எல்லோரும் கேட்க வேண்டும் ஆனால் நான் மக்கள் குரலை கேட்க மாட்டேன் என்று மறைமுகமாக சொல்லும் மக்களாட்சிக் எதிரான செயல்பாடு
“RSS ன் ரோபோ” அருமையான சொற்றொடர். மன்கீ பாத் என்னைப்பொறுத்தவரை மங்கிபாத். இன்னும் அரசியல் அறிவு பெறாத பெரும்பான்மையோர் வாழும் நாட்டில் தானே பேசிக்கொள்ளும் இதுபோன்ற அவலங்கள் நடப்பது இயற்கையே! மொத்தத்தில் “ஏட்டுச்சுரைக்காய்”.
அருமையான கணிப்பு! மன் கீ பாத் என்பதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மங்கீபாத் என விர்சிக்கப்படுகிறது.
தந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாதவர். பாதகங்களை துளிக்கூட கூச்சமின்றி அரங்கேற்றியவர்! அரங்கேற்றி வருபவர்!
மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 2024 தேர்தலுக்கு முன்பாவது புரிந்து கொண்டால் சரி.
இல்லாவிட்டால்…ஜெர்மனியின் ஃபாஸ்டர் நியூமரின் புகழ்பெற்ற கவிதைதான் “First they came to Communists…….” நினைவுக்கு வருகிறது.