எந்தக் கட்சி மீதும், எந்த அரசியல் தலைவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது போலும்! காங்கிரஸ் இஷ்டத்திற்கும் இலவச வாக்குறுதிகளை அள்ளிவிட்டாங்க! மோடியோட பாஜகவும் தாறுமாறா இலவசங்களை அறிவிச்சுட்டாங்க! ஓட்டு வேட்டையில் மக்களை விலை பேசுகின்றன கட்சிகள்..!
கர்நாடக அரசியல் தமிழ்நாட்டில் இருந்து சற்று வேறுபட்டது! மாநில உரிமை, மொழி வெறி, கன்னடிகா என்ற இனவெறி, சாதி அரசியல் எல்லாவற்றையும் அங்கு பார்க்க முடியும் என்றாலும், அது தேசிய அரசியலில் இரண்டற கலந்து நிற்கும் மாநிலமாகும். ரொம்ப காலம் காங்கிரசின் கோட்டையாக இருந்தது!
நிஜலிங்கப்பா, ஹனுமந்தையா போன்ற தியாகத் தலைவர்கள் இருந்த காங்கிரசில் இந்திராகாந்தி காலத்தில் தேவாராஜ் அர்ஸ், பங்காரப்பா, குண்டுராவ், வீரப்ப மொய்லி..என ஏராளமான நியமனத் தலைவர்கள் வந்து பிறகு காணாமல் போயினர். அதன் பிறகு ஜனதா, ஜனதா தளம் என்று மாறினாலும் காங்கிரஸுக்கான அடித்தளம் மாறவில்லை. இடையில் பாரதிய ஜனதா வந்தது! பலமில்லாத அந்தக் கட்சி லிங்காயத்து சாதியில் ஒரு எடியூரப்பாவை வைத்துக் கொண்டு, வொக்கலிக்கா சாதி அரசியலுக்கு தேவகவுடா-குமாரசாமியின் பேராசை அரசியலுக்கு தீனி போட்டு தன்னையும் அங்கு தகவமைத்துக் கொண்டது.

சென்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அது குமாரசாமியின் ம.ஜ.தவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து கடைசியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களையும் இழந்தது தான் கண்ட பலன்! குமாரசாமி செய்த அளப்பறைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏகளை அலேக்காக விலைக்கு வாங்கி எடியூரப்பா முதல்வர் ஆனார்.
இதன் பிறகான சுமார் நான்காண்டு அரசியல் எடியூரப்பா ஊழலுக்கு இலக்கணமான ஒரு ஆட்சியை தந்ததில் மத்திய தலைமையே ஆடிப்போனது. அவரை மாற்றி பசவராஜ் பொம்மையை முதல்வராக்கினார்கள்! அவரும் கமிஷன், கரப்ஷன் என்ற கன்றாவி அரசியலையே கைக் கொண்டதில் பாஜகவின் பெயர் கர்னாடகத்தில் ரொம்பவே கெட்டுப் போய்விட்டது!
போதாக்குறைக்கு இஸ்லாமிய வெறுப்பு அரசியல்! பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்ற சட்டங்கள்! இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்துவிட்டது.
பாஜக ஆட்சியின் படுபாதக ஊழல்கள்!

கொரானா கிட்ஸ் வாங்குவதில் கூட சுமார் 2,000 கோடி ஊழல் செய்துவிட்டது பாஜக அரசு.
ஆட்சி பொறுப்புக்கு வந்த குறுகிய காலத்தில் சுமார் 1,500 கோடி அளவுக்கு நீர்பாசன ஊழலை செய்துவிட்டார் பசவராஜ் பொம்மை.
அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் ஆட்சியாளர்கள் 40 சதவிகிதம் கமிஷன் பணம் பிடுங்கி தின்பதாகக் கூறி ஒரு காண்டிராக்டர் தற்கொலையே செய்து கொண்டார்.
கர்னாடகாவில் புகழ் பெற்ற நந்தினி பால் சொசைட்டி இருக்கும் போது குஜராத்தில் இருந்து அமுல் பாலை கொள்முதல் செய்தது பாஜக ஆட்சி! இதனால் கர்னாடக பால் விவசாயிகள் ஆட்சியாளர்கள் மீது படுகோபமாகிவிட்டனர். ”கொஞ்சம் விட்டால் கர்னாடகத்தை பாஜகவினர் குஜராத் சேட்டுகளிடம் அடமானம் வைத்து விடுவார்கள்” என காங்கிரஸ் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
கர்னாடகத்தில் உள்ள 13,000 பள்ளிக் கூடங்கள் ஒன்று சேர்ந்து பாஜக ஆட்சி மீது கடுமையான பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். கல்விச் சான்றிதழ் வழங்குவதில் கூட கையூட்டு கேட்கும் ஆட்சியில் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றனர்.
இந்த தேர்தலில் எல்லா கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணமாக பொருளாக கையூட்டு கொடுப்பதில் போட்டி போடுகின்றன! இதில் டிவி வாங்கி தருகிற வேட்பாளர்களும் உள்ளனர். மதச் சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதாக காங்கிரஸ் கூறிவருகிறது.

காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள்;
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 2,000
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 3,000
ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரசி
அனைவருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
பாஜகவின் வாக்குறுதிகள்;
வீடு இல்லாத 10 லட்சம் குடும்பத்திற்கு வீடுகள்
மாதம் 5 கிலோ அரிசி, சிறுதானியங்களின் தொகுப்பு!
தினமும் அரை லிட்டர் பால்!
வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர்!
ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் , தேசிய குடிமக்கள் பதிவேடும் அமல்படுத்தப்படும் என பாஜக கூறியுள்ளதுகவனத்திற்கு உரியது.
Also read
இப்படியாக செயல்படுத்துவதற்கு சிரமமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டுள்ளன இரு கட்சிகளும்! இதில் கவனிக்க வேண்டிய விசயம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான பாரபட்சமற்ற நிர்வாகம் தருவோம் என எந்தக் கட்சியும் சொல்லவில்லை. சொன்னால், மக்கள் நம்பமாட்டார்கள் என அவர்களுக்கும் நன்கு தெரிந்து இருக்கிறது.
மொத்தத்தில் கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க, நிதானமின்றி படு மூர்க்கத்துடன் களம் காண்கின்றன பாஜகவும், காங்கிரசும்! வரம்பு மீறிய சொல்லாடல்களுக்கு பஞ்சமில்லை. மோடியே நிதானமின்றி பேசியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸுக்கு ராகுல்காந்தியும், பாஜகவிற்கு மோடியும், அமித்ஷாவும் தீவிரமாக களம் கண்டுள்ளனர். பாஜகவில் இருந்து முன்னாள் முதல்வர், துணை முதல்வர் போன்ற முக்கிய புள்ளிகளெல்லாம் காங்கிரசில் சேர்ந்து சீட்டு பெற்று உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியும் இங்கு களம் கண்டுள்ளது. இதற்கிடையில் ஒரு சமூக பொறுப்புள்ள தனிமனிதனாக நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் செய்து வருகிறார்! பல தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் தான் முன்னிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply