மதவாத அரசியல் மகுடம் சூடுமா?

-ஹரிபரந்தாமன்

கர்நாடகத்தில் பாஜகவின் ஊழல் முகம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட நிலையில், அதை மறைக்க மதவாத அரசியலை முன்னெடுத்துள்ளனர்! ”நாங்கள் வெற்றி பெறவில்லை என்றால், கலவரம் வெடிக்கும்” என்கிறார் அமித்ஷா! இஸ்லாமிய வெறுப்பு அரசியல் கர்நாடகத்தில் கை கொடுக்குமா பாஜகவிற்கு?

தற்சமயம் பிஜேபி அந்த மாநிலத்தை ஆண்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜேபி 104 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சியும் , ஜனதா தளமும் (மதச்சார்பின்மை ) இணைந்து ஆட்சி அமைத்தது. ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமைச்சர் ஆனார். அவரது நாட்வடிக்கைகள் காரணமாக காங்கிரஸுக்குள் அதிருப்தி வளர்ந்து 2019 -இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.அதில் ஆளும் கட்சியை சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் ,சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்து , அவர்கள் 2023 இல் நடைபெறும் தேர்தல் வரை சட்டமன்ற தேர்தலில் பங்கு பெறக்கூடாது என்று உத்தரவு அளித்தார்.  மேற்சொன்ன தகிடு தத்த வேலைகளை பிஜேபி செய்து , அதன் மூலம் பெரும்பான்மை பெற்று ,காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தின் ஆட்சியை வீழச் செய்தது. பிஜேபி ஆட்சியைப் பிடித்தது.

தகுதி நீக்கம்  செய்தது சரிதானா என்ற கேள்வி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. உச்ச நீதிமன்றம்,  சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் சரிதான் என்று கூறியது. ஆனால் அவர்கள் இடைக்கால தேர்தலில் பங்கு கொள்ளலாம் என்று கூறி ,அந்த அளவில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பிஜேபி கட்சியில் சேர்ந்தனர். இடைத் தேர்தலில் அவர்கள் பிஜேபி சார்பாக நிறுத்தப்பட்டனர். அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

மேற்சொன்னபடி  அறநெறி தவறி சாகசங்கள் செய்து ஆட்சியைப் பிடித்த பிஜேபி கடந்த நான்கு ஆண்டுகளாக கர்நாடகத்தை ஆட்சி செய்து வருகிறது.

இதே மாதிரி சாகசங்களை மேகாலயா மணிப்பூர் கோவா மத்திய பிரதேசம் என பல இடங்களில் செய்து ஆட்சியைப் பிடித்தது பிஜேபி.

இன்னும் சில நாட்களில் கர்நாடக மாநிலம் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ள இருக்கும் நேரத்தில் மேற் சொன்ன உண்மைகளை நினைவுபடுத்துவது அவசியம்.

கடந்த 4 ஆண்டுகளில், பாஜக கர் நாடகாவில் மதவாத அரசியலை முன்னெடுத்தது. லவ் ஜிகாத்தை எதிர்ப்பது என்ற பெயரிலும் ,பசு பாதுகாவலர்கள் என்ற பெயரிலும் இஸ்லாமியர்கள் பெருமளவில்  தாக்கப்பட்டார்கள். சிலர் கொல்லவும் பட்டார்கள்.


பொது விடுதிகளில் ஆண்களுடன் வந்ததற்காகவோ அல்லது மது அருந்தியதற்காகவோ பெண்கள் ராம சேனா ,அனுமன் சேனா ,பஜ்ரங்கள் போன்ற பிஜேபியின் பல அவதார அமைப்புகளால் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வந்தது. தாக்கியவர்கள் தாங்களை கலாச்சார காவலர்கள் என அறிவித்துக் கொண்டார்கள். அவர்களுடைய அரசே மது கடைகளை திறந்து வைத்து பார்களை நடத்தி வரும்போது அங்கே பெண்கள் வருவதை இவர்கள் எப்படி  ஆட்சேபிக்க  முடியும். இவர்களை வழிநடத்துவது அரசமைப்புச் சட்டம் அல்ல. இவர்களை வழி நடத்துவது மனுநீதி. அதனால் தான் பெண்கள் சம உரிமை பெற்றவர்கள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள், தாக்குகிறார்கள்.

இந்து முஸ்லீம் கலவரம் தான் அவர்களின் செயல் திட்டம். அனைத்தையும் மதத்தை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் பார்ப்பார்கள்.

பிரிட்டிஷ் அரசுடன் வீரம் செறிந்த போரை நடத்தி 1799 இல் வீர மரணம் அடைந்த திப்பு சுல்தானை கொண்டாடுவதற்கு தடை செய்தது பிஜேபி அரசு. திப்பு சுல்தானை கொடிய மன்னனாக இந்து மக்களை கொடுமைப்படுத்தியவனாக பொய்யான சித்தரிப்பை கொடுத்தது பிஜேபி அரசு. சரித்திரத்தில் முகலாயர்கள் ஆட்சி செய்தார்கள் என்ற பகுதியை நீக்கியவர்கள் அல்லவா இவர்கள்.

ஜான்சி ராணியை  பிரித்தாணியர்களுக்கு காட்டிக் கொடுத்து, 1857ல் அந்த ராணி கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த , ஜோதிராதித்ய  சிந்தியாவின் கொள்ளுப்பாட்டன் குவாலியரின் அரசனை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அவன் செய்த துரோகத்தை அம்பலப்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அவன் இந்து மன்னன். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து பிஜேபி ஆட்சி  அமைக்க  ஜோதிராதித்திய சிந்தியாவை பாஜகவிற்கு தாவ வைத்தனர். இதே சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர் தான், ராஜஸ்தானில் பிஜேபி அரசுக்கு முதல் மந்திரியாக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதற்கு தடை விதித்ததன் மூலம் பெண்கள் கல்விக்கு இடையூறு செய்தார்கள் கர்நாடக பிஜேபி அரசினர். ஹிஜாப் ஒரு மத அடையாளம் என்று கூறும் கர்நாடக அரசு, சீக்கியர்கள் தலையில் கொண்டை போடுவதோ அல்லது இந்து மாணவர்கள் விபூதி பூசுவதும் ,சந்தனம் வைப்பதும், கையில் வண்ண வண்ண கயிறுகளை கட்டிக் கொள்வதும் மத அடையாளங்கள் இல்லை என்று கூறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தியது பிஜேபி. இதன் மூலம் பல கலவரத்தை உண்டு பண்ணி அதில் குளிர் காய்ந்தது. மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து வைத்தது.

சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு அளித்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது கர்நாடகா அரசு. இதை நியாயப்படுத்திய அமித்ஷா, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது சட்டத்தில் இல்லை என்பதால் கர்நாடக அரசு சரியாகவே இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததாக பொய்யாக கூறினார். கர்நாடகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கப் போவதாக கூறுகிறார் அமித்ஷா.

இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு என்பது அனைத்து இஸ்லாமியர்களுக்குமான இட ஒதுக்கீடு அல்ல. தமிழ்நாட்டில் கூட 3.5% இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. இதில் அனைத்து இஸ்லாமியர்களும் வர மாட்டார்கள். போரா முஸ்லிம்கள், அகமதியா முஸ்லிம்கள் போன்ற பிரிவினர்கள் இட ஒதுக்கீட்டிற்கு தகுதி உடையவர்கள் அல்ல. இதே போலத்தான் கர்நாடகத்திலும் உள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் சமூக செயற்பாட்டாளருமான ரஜிந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழுவை  2004-இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோத அமைத்து இஸ்லாமியர்களின் சமூக மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்ய பணிக்கப்பட்டது. அக்குழு இஸ்லாமியர்களில் மிகப் பெரும்பான்மையினர் சமூக கல்வி நிலை இந்துக்களில் உள்ள பின் தங்கிய வகுப்பினரை காட்டிலும் மோசமாக இருப்பதாகவும், சில இடங்களில் பட்டியல் இனத்தவர்களை விட மோசமாக இருப்பதாகவும் அறிக்கை அளித்தது. எனவே இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பின் தங்கிய பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று கூறுவதில் நியாயமில்லை.


இட ஒதுக்கீடு பற்றி அரசமைப்புச் சட்டம் கூறும்போது பின் தங்கிய வகுப்பார் என்று தான் கூறுகிறதே ஒழிய, சாதி என்று கூறவில்லை. பின்தங்கிய வகுப்பார் எந்த மதப் பிரிவில் இருந்தாலும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசமைப்புச் சட்டம் வகை செய்கிறது. அமித் ஷாவின் கூற்று மதத்தை வைத்து அரசியல் செய்வதன்றி, உண்மையல்ல!

இத்துடன் பாஜக தன் தேர்தல் அறிக்கையில் தேசிய மக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறியுள்ளனர். ஆக, பகிரங்கமாக பிஜேபியின் வெற்றி இஸ்லாமியர்களை ஒடுக்கி வைக்க என்பது தெளிவாகிறது.

இப்போது நடைபெறும் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றால் இஸ்லாமியர்கள் வாழ்வதற்கான வழியே இல்லாமல் செய்து விடுவார்கள். மக்கள் தொகையில் கர்நாடகத்தை பொறுத்த அளவில் 12.92 சதவிகித இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆனால், பிஜேபி வேட்பாளர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை! சுமார் 20% மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தாலும் பிஜேபி சட்டமன்ற உறுப்பினராக  ஒரு இஸ்லாமியர் கூட அங்கும் இல்லை.

தற்போது பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 27 இஸ்லாமிய எம்.பிக்களில் ஒருவர் கூட பிஜேபி கிடையாது. இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பிஜேபி கருதுவதே  காரணம். தற்போதைய தேர்தலில் கர்நாடகத்தில் மதவாத அரசியலை தோற்கடிக்க தவறுவோமேயானால் , 2024 இல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் மதவாத அரசியல் வெற்றி பெறுவதற்கான முதல் படியாக அமைந்து விடும். காவி பாசிசம் கார்ப்பரேட்டுகளின் உதவியுடன் இந்தியாவை ஆளும்.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time