ஆர்.என்.ரவி எதிர்கட்சித் தலைவரா? ஆளுநரா..?

எல்லை மீறிப் பேசுவது, எதிர் கருத்தியலை இழிவுபடுத்தி லாவணி பாடுவது என எதிர்கட்சி அரசியல் செய்கிறார் ஆளுநர்?  டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்  பேட்டியில் கவர்னர் ரவி, அரசமைப்புச் சட்டம் விதிக்கும் அனைத்து எல்லைகளையும் தாண்டி உள்ளார்…!

இது மாதிரியான பேட்டியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த எவரேனும் – பாஜக அண்ணாமலை, அதிமுக பழனிச்சாமி, நாம் தமிழர் சீமான் என எவரேனும்- கொடுத்திருந்தால் அதில் ஆட்சேபணை   இருக்க முடியாது. காரணம் ,அரசமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமையின் அடிப்படையில் அவர்கள், அரசாங்கத்தை எதிர்த்து எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் அப்படி ஒரு கருத்துரிமையை கவர்னருக்கு அளிக்கவில்லை நமது அரசமைப்புச் சட்டம். எந்த மாநிலத்துக்கு கவர்னராக இருக்கிறாரோ அந்த கவர்னர் ,அந்த மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மிக மிகப் பெரிய அளவில்  பொதுவெளியில் வந்து ஒரு நீண்ட நேர்காணல் தருவது ,அரசமைப்புச் சட்டம் கவர்னர் சம்பந்தமாக எடுத்துரைக்கும் கோட்பாடுகளுக்கு விரோதமானது.

குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசினை எதிர்த்து இது .போன்ற ஒரு நேர்காணலை அளித்திருப்பதற்கு அளிக்க முடியுமா? அதற்கு ஏதேனும் ஒரு முன் உதாரணம் உண்டா? நிச்சயம் இல்லை என்பதே பதில்.

காங்கிரஸ் ஒன்றிய அரசை ஆண்டபோது அதன் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பாஜக ஆட்சியிலும் தொடர்ந்து பணிபுரிந்ததுண்டு. அதே போல பாஜக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து பணிபுரிந்தது உண்டு. ஆனால், அவர்கள் எவரேனும் இதுபோன்று ஒன்றிய அரசை எதிர்த்து நேர்காணல் மூலம் எதிர்ப்பு குரலை கொடுத்தது இல்லை.

இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கானோர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மடிந்து போயினர். அந்த நேரத்தில் இருந்த கவர்னர் அப்போதைய ஆட்சியை எதிர்த்து இது போன்ற நேர்காணல் ஏதும் கொடுக்கவில்லை.

2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சி செய்த போது இரண்டாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது குஜராத்தில் இருந்த கவர்னர் இது போன்ற நேர்காணல் ஏதும் கொடுக்கவில்லை.

மேற்சொன்ன இரு சம்பவங்களிலும், தனிப்பட்ட முறையில் முதல்வருடன் அல்லது தலைமைச் செயலருடன் பேசி இருக்கலாம்.

இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கங்கோபாத்தியாயா , பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடந்தது சம்பந்தமான குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் கொடுத்தார். இதன் எதிர்வினையாக உச்ச நீதிமன்றம் நீதிபதி கங்கோபாத்தியாவின் உத்தரவிற்கு தடை அளித்தது மட்டுமின்றி, மேற்சொன்ன வழக்கை வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றம் செய்து விசாரிக்கும் ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது.

நேர்காணலில் அவர் என்ன தான் கூறியுள்ளார்? திராவிட மாடல் என்பதும் திராவிட கருத்தியல் என்பதும் காலாவதியான மரணித்து போன ஒன்று, ஒரு பாரதம் ஒரு இந்தியா என்ற கோட்பாட்டிற்கு விரோதமானது, திராவிட கருத்தியல் என்றும், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக இருந்தவர்களை புகழாரம் செய்வதும் சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவு படுத்துவதும் திராவிட கருத்தியல் என்று கூறியுள்ளார்.

மேலும் திராவிட கருத்தியல் இந்தியாவின் மற்ற மொழிகளை தமிழ்நாட்டில் உள்ள அனுமதிக்காதாம். புரிகிறதா அவர் என்ன சொல்ல வருகிறார் என்று?. இந்தி திணிப்பை எந்த திராவிட  கட்சி ஆட்சி செய்தாலும் எதிர்க்கிறது என்பதே அவரின் மனக்குறை. கலைஞர் கருணாநிதியின் பெயரில் ஒரு நூலகம் அமைப்பதற்கான திட்டமும் அங்கே 3.25 லட்சம் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மட்டும் வாங்க போவதாக உத்தேசித்துள்ளதாக உள்ளதை கடுமையாக எதிர்க்கிறார் கவர்னர். மற்ற மொழி புத்தகங்கள்- அவர் மனதில் இருப்பது அவரது தாய் மொழியான இந்தி மொழி புத்தகங்கள்-வாங்கவில்லை என்று அங்கலாய்க்கிறார் கவர்னர் நேர்காணலில்.புத்தகம் வாங்கினால், படிப்பதற்கு இங்கு ஆள் வேண்டாமா?

இப்படி அரசியல் பேசும் கருத்துரிமை கவர்னருக்கு உண்டா?. திராவிட இயக்கங்களை சுதந்திரப் போராட்டத்தில் துரோகம் செய்த இயக்கங்கள் என்று கவர்னர் கூறலாமா?. திராவிடக் கருத்தியல் மரணித்து போன காலாவதியான ஒன்று என கவர்னர் பேசுவது முறையா? ஒரு பாரதம் ஒரு இந்தியா என்பதற்கு எதிரான கருத்தியல் திராவிட கருத்தியல் என்று கூறும் கவர்னருக்கு,  1967 க்கு பின்னர் சுமார் 55 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கட்சிகள் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது என்றும், அகில இந்திய கட்சிகள் துடைத்தெறியப்பட்டுள்ளது என்றும் ,திராவிட கட்சிகளின் ஆதரவுடன் தான் அகில இந்திய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகிறது என்பதும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற அகில இந்திய கட்சிகள் துடைத்து எறியப்பட்ட நிகழ்வு நடைபெறவில்லை என்பதும் கவர்னருக்கு தெரியாதா?

மேலும் 3,000 ஏக்கர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டதற்காக தமிழ்நாடு அரசினை பாராட்ட வேண்டும் என்று உரையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,  காரணம்  50,000 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இன்னும் இருப்பதாகவும் கூறுகிறார் கவர்னர். அடுத்து தான் அவருடைய உண்மையான முகம் தெரிய வருகிறது.

தில்லை தீட்சிதர்களின் குடும்பங்களில் 8  குழந்தை திருமணங்கள் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தீட்சித பெற்றோர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று அவருடைய மனக்குமுறலை தெரியப்படுத்துகிறார். குழந்தை திருமணங்களை ஆதரிக்கிறாரா கவர்னர்?

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு சட்டசபை கூடிய போது தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையை முழுவதுமாக வாசிக்க மறுத்தது சரிதான் என்று வாதிட்டுள்ளார். இந்த நேர்காணலில். அந்த உரையில் வெறும், பொய்யும் தவறான தகவல்களும் இருந்தது என்றும், அந்த உரை அரசின் கொள்கை எதுவும் உள்ளடக்கியது இல்லை என்றும் ,அது வெறுமனே  பிரச்சார வாடை வீசுவதாக இருந்தது என்றும் கூறியுள்ளார். அந்த உரையில் , தமிழ்நாடு அமைதி பூங்கா என்று பொய்யான தகவல்  கொடுக்கப்பட்டிருந்தது என்கிறார். ஒன்றிய அரசால் PFI என்ற இஸ்லாமிய இயக்கம் தடை செய்யப்பட்ட உடன் தமிழ்நாட்டில் பல இடங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல் இருந்தது என்றும், அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சமீபத்தில் மணல் கொள்ளையர்கள் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் புகுந்து அவரை பட்ட பகலில் கொலை செய்துள்ளார்கள் என்கிறார். உலக அளவில் போதைப் பொருட்களும் ஆயுதங்களும் தமிழ்நாட்டில் விற்கப்படுகின்றன என்றும் ,குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து இவைகள் விற்கப்படுகின்றன என்றும் ,மத்திய புலனாய்வு அமைப்புகள் இந்த;தகவல்களை தந்துள்ளதாக கூறுகிறார் .எனவே எப்படி தமிழ்நாட்டை அமைதி பூங்கா என்று கூற முடியும் என்கிறார்.

இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறுவது ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறுவது போல உள்ளது அல்லவா?. கவர்னர் இப்படியெல்லாம் பத்திரிக்கைக்கு நேர்காணல் அளிக்கலாமா?. அவரின் கருத்துக்களை தனிப்பட்ட முறையில் முதல்வரிடமும் சம்பந்தப்பட்ட துறை செயலாளரிடமும் தெரிவிப்பது வேறு. இது போன்று ஒரு எதிர்க்கட்சியாக செயல்படுவது வேறு. கவர்னர் ஒரு எதிர்க்கட்சியாக செயல்பட அரசமைப்புச் சட்டம் பணிக்கவில்லை.

மணிப்பூரில் நாளும், பொழுதும் கலவரங்கள்! அங்கு கண்டதும் சுடுவதற்கான உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாட்டின் ஆட்சியில் 1,0900 என்கவுண்டர்கள் நடந்து அதில் நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதைப் பற்றிய வழக்கே உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தில் வேகமாக ஒரு காரை பிஜேபி பாராளுமன்ற உறுப்பினரின் மகன் ஓட்டி விவசாயிகளைக் கொன்றதை நாடு அறியும். ஆனால், மணிப்பூர் கவர்னரோ, உத்தரப்பிரதேச கவர்னரோ , இங்கு அரசு சரியாக செயல்பட தவறிவிட்டது என்று பொதுவெளியில் கூறியுள்ளார்களா ? அப்படி கூறுவதற்கு பிஜேபி அனுமதிக்குமா? அப்படி பேசினால் அது தவறு என்பதே இக்கட்டுரை சொல்லும் செய்தி.

தமிழ்நாட்டில் மேற் சொன்னது போன்ற வன்முறை வெறியாட்டங்களா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?.

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி இறந்தது தொடர்பான நிகழ்வில் அந்த பள்ளியில் வன்முறை நிகழ்ந்த போது அதை தடுக்க தவறிவிட்டது தமிழ்நாடு அரசு என்கிறார். கொளுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் கள்ளக்குறிச்சி பள்ளி ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்தவருக்கு சொந்தமானது .அந்த பள்ளியின் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு .அந்த மாணவி இறந்தவுடன் தமிழ்நாடு அரசு வழக்கை பதிவு செய்து பள்ளி நிர்வாகியை கைது செய்ய தவறியது .பல நாட்கள் ஆகியும் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, வாதியும் கைது செய்யப்படவில்லை. ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக கொடுத்த அழுத்தத்தினால் தான் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று சமூக செயற்பாட்டாளர்கள் தமிழ்நாடு அரசின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் கவர்னரோ மாணவியின் இறப்புக்கு நீதி கோரவில்லை. அதற்கு மாறாக இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றம் சட்டமாக நிறைவேற்றிய எந்த மசோதாக்களும்  அவரிடம் நிலுவையில் இல்லை என்று கூறும் கவர்னரே தான் 8 மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

அவரிடம் நாம் கேட்கும் கேள்வி, நிறுத்தி வைத்திருக்கும் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் இல்லையா என்பதே.

அந்த 8  மசோதாக்களும் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனம் சம்பந்தப்பட்டது என்றும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து பறித்து முதல்வரிடம் அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறுகிறார் கவர்னர். ஏற்கனவே பல குறைபாடுகளுக்கு இடையில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் அதன் கல்வித் தரத்தில் உயர வேண்டுமானால் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னரிடம் தான் இருக்க வேண்டுமாம்!. இந்த அதிகாரம் கவர்னரிடம் தான் இருக்க வேண்டும் என்று பாராளுமன்றம் இயற்றிய பல்கலைக்கழக மானிய சட்டம் கூறுகிறது என்று கதை அளக்கிறார் கவர்னர்.

உண்மையில் , மாநிலங்களுக்கான அதிகாரம் பற்றி கூறுகின்ற அரசமைப்புச் சட்டம் அட்டவணை 7 இல்  உள்ளமாநில பட்டியல் வரிசை எண் 32 இல் “பல்கலைக்கழகம்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பல்கலைக்கழகம் சம்பந்தமான சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உள்ளது என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது  . அதற்கு மாறாக கூறுகிறார் கவர்னர்.

கவர்னரின் நேர்காணலுக்கு எதிர்வினை ஆற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு , 17 மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கிறார்!

சமீபத்தில் தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த மாநில கவர்னர் எந்த மசோதாக்களையும் நிலுவையில் வைக்காமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது உரிய காரணங்கள் கூறி திருப்பி மாநில சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. மசோதாக்களை கவர்னர்கள் நிலுவையில்  வைத்துக் கொள்ளக் கூடாது என்று இடித்துரைத்தது. இதைப் பற்றிய கேள்விக்கு, அந்த தீர்ப்பு ” out of context “இல் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கடந்து செல்கிறார் கவர்னர். அதாவது அந்தத் தீர்ப்பு அவரை கட்டுப்படுத்தாது என்ற தொனி இருக்கிறது அவரது நேர்காணலில்.

கவர்னர் செலவு செய்வதற்கான தொகை அளவு மிக அதிக அளவு ஆக்கப்பட்டுள்ளது என்று கூறிய நிதி அமைச்சர் பழனிவேல் ராஜனின் கூற்றை பொய்யுரை என்று கூறுகிறார் கவர்னர். இது சம்பந்தமான பதிலில் பழனிவேல் ராஜன் பொய்களை கூறுகிறார் என்று மூன்று இடங்களில் கூறுகிறார்.

ஆனால் பழனிவேல் ராஜன் எழுப்பிய மூன்று கேள்விகளுக்கு விடை ஏதும் அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசால் கவர்னர் அலுவலகம் செலவு செய்வதற்காக அளிக்கப்படும் தொகை முழுவதும் செலவு ஆகாமல் இருந்தால் அந்த ஆண்டின் இறுதியில் மீதம் உள்ள தொகையை தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்ப வேண்டியது கவர்னர் அலுவலகத்தின் வேலை. இதை கவர்னர் அலுவலகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார் பழனிவேல் ராஜன். அதாவது, செலவு செய்யாமல் மீதமுள்ள தொகையை கவர்னர் அலுவலகம் வேறு ஒரு கணக்கிற்கு மாற்றி விடுகிறது என்று குற்றம் சாட்டினார் பழனிவேல் தியாகராஜன். கவர்னரின் நேர்காணலில் இதற்கு பதில் ஏதுமில்லை. பழனிவேல் ராஜன் வைத்த இரண்டாவது குற்றச்சாட்டு ,கவர்னர் அலுவலகம் தனியார் நிறுவனங்களுக்கு செலவு செய்கிறது என்பதாகும். மூன்றாவது குற்றச்சாட்டு இந்த தனியார் நிறுவனங்களுக்கு ஆகும் செலவு தொடர் செலவுகள் (recurring expenditure) என்பதே மூன்றாவது குற்றச்சாட்டு.

மறைமுகமாக இந்த  குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறார் கவர்னர். அதாவது “அட்சய பாத்திரம்” என்ற ஒரு தனியார் நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் கவர்னர் அலுவலகம் கொடுத்திருப்பதை ஒப்புக் கொள்கிறார் கவர்னர். அந்த தனியார் நிறுவனம் ஒரு நவீன சமையலறையை அமைப்பதற்காக அந்த பணம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார். அந்த தனியார் நிறுவனம் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளியில் படிக்கும் 10 லட்சம் ஏழை மாணவர்களுக்கு உணவு அளிக்கவே இதை பயன்படுத்துகிறது என்று கூறுகிறார்.

அவருடைய குறை என்னவென்றால் ,தமிழ்நாடு அரசின் முதல்வர் அலுவலகம் மேற்சொன்ன தனியார் நிறுவனத்திற்கு சமையல் எரிவாயு வாங்குவதற்கான உரிய அனுமதியை வழங்கவில்லை என்பதே ஆகும்.

நமது கேள்வி இந்தியாவிலேயே பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தமிழ்நாட்டில் தான். மேலும், இப்போதைய அரசு மதிய உணவு மட்டுமின்றி அரசு பள்ளிகளில் காலை உணவு அளிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த ஏற்பாட்டை செய்யச்  சொல்லும் கவர்னரின் செயல் சரிதானா?. இது ஒரு தொடர் செலவினம் இல்லையா?. பள்ளிகளில் மதிய உணவு அல்லது காலை உணவு அளிப்பதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், அதற்கான பரிந்துரையை அரசிடம் சொல்வது வேறு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசின் கஜானாவில் இருந்து கவர்னர் அவர்கள் வாரி கொடுப்பது வேறு.

இறுதியாக ஒரு செய்தியை ஆழமாக பதிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கவர்னர் என்ற பதவியே காலணி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சம். பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்ட போது ஒரு கட்டத்தில் 1919க்கு பின்னர் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த அரசுகள் பிரித்தானிய அரசு நியமிக்கும் பிரிட்டிஷாருக்கு கட்டுப்பட்டு இருப்பதற்கே இந்த கவர்னர் ஏற்பாட்டை செய்தனர்! சுதந்திர இந்தியாவில் டெல்லி என்ன பிரிட்டானிய அரசா? நாம் இன்னும் சுதந்திரம் பெறவில்லையா? சுதந்திர இந்தியாவில் ஏன் கவர்னர் பதவி?  எனவே கவர்னர் என்ற பதவியே ஒழித்து கட்டப்பட வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரம் பெற்றவர்கள் ஆவோம்.

லண்டனுக்கு பதிலாக டெல்லி என்ற போக்கில் அடிமைப்படுத்த நினைத்தால்,  ‘ஒரு பாரதம் ஒரு இந்தியா’ என்பதே சிதையாதா? எனவே ஜனநாயகத்தின் நோக்கத்தை நிறைவேற்றவும், உண்மையான கூட்டாட்சி கோட்பாட்டை நிலை நிறுத்தவும், காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சங்களை உடைத்தெறியவும் கவர்னர் பதவியை நீக்க வேண்டும். அதற்கான திருத்தம் அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time