சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமாகாதது ஏன்?

-ஹரிபரந்தாமன்

பிரிட்டிஷாரால் செய்ய முடிந்த சாதி வாரி கணக்கெடுப்பை,  பிறகு வந்த சுதேசிய ஆட்சியாளர்களால் செய்ய முடியாமல் போனது ஏன்? எதற்காக காலம் கடத்துகிறார்கள்? மாநில அரசுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவதன் மர்மம் என்ன? சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தடையாய் இருக்கும் சமூக, அரசியல் பின்னணி என்ன..?

இந்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து மறுதலித்து வருகிறது. இந்த நிலையில் பிகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. மே 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.வி. சந்திரன் தலைமையிலான அமர்வு கடந்த வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி பிகார் அரசு தரப்பில் நேற்று  ( மே-5) மனு தாக்கல் செய்யப்பட்டது!

அப்பப்பா! இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு தான் சுதந்திர இந்தியாவில் எத்தனை தடைகள்! முட்டுக்கட்டைகள்!

சாதி அடுக்கில் உச்சாணி கொம்பில் உள்ள பிராமணர்கள் தான் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்காமல் இருப்பதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அரசின் ஒவ்வொரு அங்கமும் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இன்றும் உள்ளது. அதாவது, நிர்வாகத் துறைகளாகட்டும், நீதி துறையின் உச்சமாகட்டும், மத்திய அமைச்சரவை அதிகாரமாகட்டும்… என எதிலும் தங்கள் ஆதிக்கத்தை இன்றுவரை நிலை நிறுத்தி வருகிறார்கள் பிராமணர்கள். எனவே , அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாறாக, மனுநீதி தான் நடைமுறையில் உள்ளது என்பதே உண்மை நிலைமை.

நிர்வாகத்துறை என்றால், கொள்கை முடிவெடுக்கக் கூடிய மிக உயர்ந்த இடத்தில் இவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசின் டெல்லியில் உள்ள செக்ரட்டேரியட்டில் கேபினட் செயலாளர்களாக இருப்பவர்களில் 90% த்தினர் உயர்சாதியினர் தான். பிராமணர்களின் ஆதிக்கத்தில் தான் பிரதம மந்திரியின் அலுவலகம் உள்ளது. குடியரசுத் தலைவரின் அலுவலகமும் இதற்கு விதிவிலக்கில்லை.


நீதித்துறையை எடுத்துக் கொண்டால், உச்ச நீதிமன்றத்தில் 40% த்தினர் பிராமணர்கள். இந்த தகவலை சமீபத்தில் பேராசிரியர் மோகன் கோபால் தெரிவித்தார். உயர் சாதியினரில் வருடம் 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு (ஏழைகளாம்! ) இட ஒதுக்கீடு அளித்தது தவறு என்று வாதிட்டவர் பேராசிரியர் மோகன் கோபால்.

ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை குடியரசு இந்தியா அமுல்படுத்துவதை ஒட்டி அரசியலில் சமத்துவத்தை அடைந்து விட்டோம் என்று அம்பேத்கர் கூறினார். அதுவும், பொய்த்து விட்டது. கேபினட் மந்திரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்சாதியினர் ஒன்றிய அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்ற தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்டு இருந்தது. அதாவது மொத்தமுள்ள 58 பேரில் 32 பேர் உயர்சாதியினர்!

இட ஒதுக்கீட்டு உரிமையுடன் நேரடியாக தொடர்பு உள்ளது சாதி வாரி கணக்கெடுப்பு. இட ஒதுக்கீட்டு உரிமையில் குறுக்கீடு செய்வதும் அதை இல்லாமல் செய்வதும் தான் இவர்களின் நோக்கம்.

இந்த நோக்கத்திற்கு ஆதரவாக முந்தைய காங்கிரஸ் அரசும் இப்போதைய பிஜேபி அரசும் செயல்படுகிறது.


பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த போது 1871 முதல் ஒவ்வொரு பத்தாண்டும் முடிந்த பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பை செய்தனர் .அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி மக்கள் விவரங்களை அவன் வெளியிட்டனர் . அதாவது 1871,1881 ,1891 ,1901, 1911,1921 ,1931 ஆகிய ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பை பிரிட்டிஷார் செய்த போது சாதிவாரி மக்கள் தொகை விவரங்களை வெளியிட்டான்.

இரண்டாம் உலக யுத்தம் 1939 முதல் 1945 வரை நடைபெற்றதை  ஒட்டி ,1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை பிரிட்டிஷார் செய்யவில்லை.

சுதந்திரம் அடைந்ததும், மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டாலும், சாதி வாரி கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்படவில்லை. காரணத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். தந்தை பெரியார் சரியாக சுட்டிக் காட்டியது போல, விடுதலை அடைந்த இந்தியாவில் சாதிய சமூகத்தில் ஆதிக்கத்தில் இருந்த சமூகமே அனைத்து அதிகாரங்களிலும் தலைமை பாத்திரம் வகிக்கும் என்றும், வெள்ளைக்காரர்களுக்கு பதிலாக பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் என்று கூறியது உண்மையாகவே ஆகியது.

2014 இல் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட காங்கிரஸ் இப்பொழுது  சாதி வாரி கணக்கெடுப்பை பற்றி கதைக்கிறது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி விவரங்களை வெளியிடுவதற்கு முன்னால் 2014 இல் அவர்களது ஆட்சி போய்விட்டதாக பொய்யான காரணத்தை கூறுகிறது காங்கிரஸ். இப்பொழுது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி மக்கள் தொகை விவரத்தை வெளியிடுவதாக வாக்குறுதி அளிக்கிறது காங்கிரஸ் .இவர்களின் வாக்குறுதியை எவ்வளவு தூரம் நம்புவது?


உச்ச நீதிமன்றம் ,  இட ஒதுக்கீடு சம்பந்தமான பலவழக்குகளில், சாதி சம்பந்தமான மக்கள் தொகை விவரம் தேவை என்று கூறுகிறது. ஆனால் , சாதிவாரி மக்கள் தொகை விபரத்தை வெளியிடுமாறு  ஒன்றிய அரசுக்கு உத்தரவிட தவறுகிறது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கிலும், உச்ச நீதிமன்றம் அந்த சாதியின் மக்கள் தொகை விவரம் இல்லை என்ற குறையை சுட்டிக் காண்பித்தது.

இதே போல உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சம்பந்தமான சட்டத்தை மகாராஷ்டிரம் இயற்றிய போது , அதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் சாதிவாரி விவரம் இல்லை என்ற காரணத்தை கூறியதும் சுட்டிக் காண்பிக்க வேண்டும்.

பிராமணர்களின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டுவதற்கு மற்றும் ஒரு உதாரணத்தையும் சொல்லலாம். 26 ஜனவரி 1950ல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தாலும் ,ஒரு வருடம் 9 மாதம் ஆகியும் அரசமைப்புச் சட்டம் பிரிவு 340-இன் கீழ் பின்தங்கிய உறுப்பினரை கண்டறிவதற்கான கமிஷன் அமைக்கப்படவில்லை என்று நேரு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி 27 செப்டம்பர் 1951 இல்  சட்ட அமைச்சர் பதவியை துறந்தார் டாக்டர் அம்பேத்கர்.

இதற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து, பிரதமர் நேரு காக்கா கலேக்கர் கமிஷனை அமைத்தாலும், அந்த கமிஷன் 1955இல் அளித்த பரிந்துரையை அமல்படுத்தி ஒன்றிய அரசின் பணிகளில் மற்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தர  நேரு அரசு முன் வரவில்லை. அவருக்கு பின்னர் வந்த அவரது புதல்வி இந்திரா காந்தியும் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு  வழங்கவில்லை;  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுக்க விடாமல் செய்த சக்தி எது என்பது சொல்லாமலே விளங்கும்.

அவசர கால நிலைக்கு பின் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் அரசு மண்டல் கமிஷனை அமைத்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அளித்த போது மொரார்ஜி தேசாய் அரசு இல்லை. இந்திரா காந்தி அப்போது பிரதமராக இருந்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த இந்திரா காந்தி தயாராக இல்லை. அவருக்குப் பின்னர் பிரதமரான ராஜீவ் காந்தியும் அமுல்படுத்தவில்லை. தனது பிரதமர் பதவி இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை என்று கருதிய வி.பி.சிங் தான் மண்டல் பரிந்துரையை அமல்படுத்தினார். அதனால், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரு கட்சிகளும் ,மண்டல் கமிஷன் பரிந்துரைகளை
வி .பி. சிங் அமல்படுத்துவதை கடுமையாக எதிர்த்தன.

இந்த நிலையில் பீகாரில் ஆட்சி புரியும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு செய்வது என்ற நடவடிக்கையை தொடங்கியது. உடனே உயர் சாதியினர் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதற்கு தடை விதிக்க  கோரினர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது. நீதிபதி கவாய் மகாராஷ்டிராவில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்.இருப்பினும், அவர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியது உச்ச நீதிமன்ற அமர்வு.

அவர்கள் பாட்னா உயர்நீதிமன்றத்தை நாடினர். விசாரணைக்கு ஏற்ற பாட்னா உயர்நீதிமன்றம் , பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தடை அளிக்கவில்லை. தடை வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தவர்கள். வழக்கமாக சென்ற முறை விசாரித்த அதே அமர்வு முன்னர் தான் இந்த வழக்கு வந்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முறை வழக்கு குஜராத் மாநிலத்தைச் சார்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை கொடுப்பது சம்பந்தமாக விசாரித்து உரிய உத்தரவு போட வேண்டும் என்று ஆணையிட்டது.

இந்த உத்தரவிற்கு பின் விசாரித்த பாட்னா உயர்நீதிமன்ற அமர்வு ,4 மே 2023 அன்று பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தடைவித்துள்ளது. ஐந்து மே 2023 அன்று அனைத்து ஊடகங்களிலும் இந்த தடை உத்தரவு பற்றிய விபரம் வெளியிடப்பட்டது.

இந்த நாட்டை ஆட்சி புரியும் ஆட்சியாளர்கள் சாதி வாரி கணக்கெடுப்பை செய்ய மாட்டார்கள். அப்படி, ஏதேனும் ஒரு அரசு செய்ய முன்வந்தாலும் நீதிமன்றம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடை கொடுத்து விடுகிறது.

பீகார் மாநில அரசுக்கு சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டும் தான் உண்டு என்றும், காரணம் கூறி தடை உத்தரவை வழங்கியுள்ளது பாட்னா உயர்நீதிமன்றம்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சனை, இட ஒதுக்கீட்டு உரிமையில் தலையிடுவது மட்டுமின்றி,  மாநிலத்தின் உரிமையிலும் தலையிடுகிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றால், அதற்கு சாதிவாரி கணக்கு தேவை. ஆனால், அதை தமிழ்நாடு அரசு செய்ய முடியாது என்பதே பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பொருள்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மூத்த அரசியல் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ், சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிஜேபி செயல்படுகிறது என்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் சகல இடங்களிலும்- குறிப்பாக கொள்கை முடிவு எடுக்கக்கூடிய உயர்மட்டத்தில்- நிர்வாகத்தில், நீதித்துறையில், அமைச்சரவையில்- பட்டியல் இனத்தவரும் பழங்குடியினரும் பிற்படுத்தப்பட்ட வரும் அவர்களின் எண்ணிக்கைக்கு  உரிய அளவில் இருந்தால் தான் சமூக நீதி வெற்றி பெறும். அப்போதுதான்  சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமாகும்!

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time