இன்றைக்கு காலத்தின் தேவையாகிறார் காந்தி
காந்தி அமைதி அறக்கட்டளை டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்வில் வழக்கறிஞரும்,சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் காந்தி எப்படி இன்றைய காலத்தின் தேவையாகிறார் என்பதை ஆழமாகவும்,அழகாகவும் எடுத்துரைத்தார். குறிப்பாக அரசாங்கமே மக்களைச் சுரண்டும் போது, மக்கள் பாரபட்சமாக நடத்தப்படும் போது,சட்டங்களை அரசே வளைக்க முற்படும் தருணங்களில் எப்படி மக்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என காந்தியின் கோணத்தில் பேசினார்! அதன் தமிழாக்கத்தை காந்தியவாதியும்,மருத்துவருமான ஜீவா தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஆற்றிய செயல்பாடுகளும்,உரைகளும் சமூக தளத்திலும், நீதிமன்றங்களிலும் எப்படியான நீதி கட்டமைக்கப்பட வேண்டும் என்ற புரிதலை நமக்கு நிறையவே தருகின்றன! ஏழைகள், ஆதரவற்ற அபலைகள்,பலவீனமானவர்கள் ஆகியோர் மீது நீதிமன்றங்கள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை காந்தியின் கருத்துகள் சிறப்பாகவே வெளிப்படுத்துகின்றன. எது நியாயமானது, எது சமத்துவமானது என்பதைப் பொறுத்தே அவர் நீதியை மதிப்பிட்டார்.மற்றொரு நிலையில் பொது நலனுக்கு சட்டமும், நீதியும் எவ்வகையில் துணை நிற்கிறது என்பதை பொறுத்தே அவரது பார்வை அமைந்தது.
கடைக்கோடி மனிதனுக்கும் நீதி சாத்தியப்பட வேண்டுமென காந்தி கருதினார். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள்,பலவீனமானவர்கள் ஆகியோருக்கான நீதியை நிலை நாட்டுவதில் தான் அவரது பணிகளும்,போராடங்களும் அமைந்தன.
காந்தியின் லட்சிய வாசகமே இது தான்;
’’எப்பொழுதெல்லாம் உனக்குச் சந்தேகம் எழுகிறதோ,எப்பொழுதெல்லாம் உன்னில் சுயநலம் தலை தூக்குகிறதோ, இந்த வழிகாட்டலைப் பின்பற்று. இந்த சமயங்களில் வறியவனிலும், வறியவன் முகம் உன் மனக்கண்ணில் தோன்றட்டும். நான் செய்யும் செயல்கள் அவனுக்கு ஏதாவது பயனளிக்குமா அல்லது பாதகம் செய்யுமா? என்ற கேள்வியை உனக்குள் கேட்டுக் கொள். நீ செய்யும் செயல் அவர்களை மேம்படுத்துமா? உனது செயல் பட்டினியில் இருந்து அவனை விடுவிக்குமா? பட்டினி கிடக்கும் லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்குமா? என்று உன்னையே கேட்டுக் கொள். உன் ஐயங்கள் தீரும்’’ என்கிறார்.
காந்தியைப் பொறுத்த அளவில் நீதி என்பது,’’எது கடைக்கோடி மனிதனுக்கு நியாயமானதை வழங்க நெறி காட்டுகிறதோ, பொது நலனுக்கு பெரிதும் உதவுகிறதோ…அதுவே நீதி. இந்த நம்பிக்கையிலான நீதியின் பக்கமே அவர் நின்றார்.அதனால் தான் வலிமை குன்றியுள்ள சிறுபான்மையினர் வலிமையுள்ள பெரும்பான்மை மக்களால் அடக்கப்படுவதை எதிர்த்தார். இத்தகைய அநீதி எங்கு நடந்த போதும் எதிர்த்தார்.
ஜாதி அமைப்பு பற்றிய காந்தியின் கருத்துகளும், செயல்பாடுகளும் முரண்பாடு கொண்டதாக காட்சியளித்தன. இந்த காரணத்தாலேயே அம்பேத்கார் காந்தியை உறுதியாக எதிர்த்தார். ஆனால், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தீண்டாமை ஒழிப்பிற்காகவே செயலாற்றினார் காந்தி. அனைத்து துறைகளிலும் தலித்துகள் சமத்துவம் பெற பாடுபட்டார். எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவமும்,சமநீதியும் சென்றடைய வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.
சட்டத்தின் நீதியும், மனசாட்சியின் நீதியும்
நீதிபரிபாலன அமைப்புகளுடனும் சட்டத்துடனும் பலமுறை மோதியுள்ளார் காந்தி- அவை தன் மனசாட்சிப்படி அநீதியானவை எனக் கருதும்பட்சத்தில்! பொது நலனுக்கு எதிரான, எளிய மனிதனுக்கு நீதி வழங்காத சட்டத்திற்கு பணிய மறுப்பதை அவர் உறுதியுடன் செய்தார். சத்தியாகிரகம் என்பது, மக்களின் மனங்களில் உள்ள அச்சத்தை போக்கி,அவர்களை அச்சத்திலிருந்து விடுதலையாக்கி, நீதிக்காகப் போராடுவதேயாகும். தனது மதிப்பு அல்லது கெளரவம் ஆகியவற்றைக் கருதி ஒரு அநீதியை எதிர்க்காமல் கண்ண மூடிக் கொள்ளக் கூடாது என மக்களைத் தூண்டினார்.
முறைகேடான சட்டத்தை காந்தி எதிர்த்தார்
நீதியைத் தராத,எளியவர்களின் உரிமையை அத்துமீறிப் பறிக்கும் சட்டங்களை காந்தி எதிர்த்தார் என்பதற்கு இரண்டு சம்பவங்களை சொல்லலாம். பீகாரிலுள்ள சம்ரான் என்ற இடத்தில் விவசாயிகளின் பயிரிடும் உரிமைகளைப் பறித்து,அவுரியை மட்டுமே பயிரிட வேண்டும் என பிரிட்டிஷ் அரசு வலியுறுத்தியது. வரிவிதிப்பையும் அதிகப்படுத்தியது. பயிரிட மறுப்போரின் நிலங்களை அரசு பறித்தது. 1917 ல் அந்த சட்டத்திற்கு பணிய மறுத்து விவசாயிகளை திரட்டிப் போராட காந்தி முடிவெடுத்தார். ஆனால், சம்பரானில் நுழையக் கூடாது என தடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் காந்தி. அப்போது நீதிபதியிடம் காந்தி, ’’நான் மனித நீதியை மதிப்பவன்,சுயமரியாதை உள்ளவன் என்ற வகையில், நீதிபதியாகிய உங்கள் உத்தரவை எதிர்த்து சம்பரானிலேயே தங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போராடுவது எனது கடமை’’ என்றார்.
விவசாயிகள் வன்முறையின் கீழ் வாழ்கிறார்கள். நிலப் பிரபுக்களின் காலடியில் வீழ்ந்து நசுக்கப்பட்டுள்ளனர் என வைய்ஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் காந்தி குறிப்பிட்டார். தடைகளையெல்லாம் மீறி சம்பரானில் பயணித்து சுமார் 7,000 அயிரம் விவசாயிகளின் துயரங்களை பதிவு செய்தார். சம்பரானில் விவசாயிகளின் கருத்து கேட்புக் குழுவின் ஆய்வு அவர்களின் துயரங்களை வெளிச்சமிட்டு காட்டியது. இதை அரசுக்கு நன்கு புரிய வைத்து, வெற்றி பெற்றது.
அடுத்ததாக 1930 ல் உப்பு உற்பத்தியிலும், வணிகத்திலும் அரசின் ஏகபோகத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மக்களின் உப்பு எடுக்கும் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உப்பு சத்தியாகிரகம் என்ற தண்டியாத்திரையாகும்.
’’சட்டத்திற்கு புறம்பாக அரசு மக்களின் உப்பு உரிமையை பறிக்கிறது. அது மக்களிடமிருந்து களவாடிய உப்பை மக்களையே அதிக விலை கொடுத்து வாங்கச் செய்கிறது.மக்கள் தாங்கள் இழந்தது என்ன என்பதை உணரும் போது,தமது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பர்’’ என்றார்.உப்பு சட்டத்தை எதிர்க்கும் சட்டவிரோத தண்டி யாத்திரையை காந்தி மேற்கொண்டார்.
1922ல் காந்தி பிரிட்டிஷ் அரசு இயற்றிய தேசத் துரோக தண்டணை சட்டத்தை எதிர்த்து எரவாடா சிறையில் அடைக்கபட்டார்.இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124(a)வின்படி அரசின் சட்ட உரிமைகளை எதிர்த்து சமூக அநீதி உண்டாக்கும் வகையில் பேசியதற்காகவும், எழுதியதற்காகவும் தண்டிக்கப்பட்டார். அந்த சட்டம் சற்று கடுமையானது தான். அந்த சட்டத்தின்படி, பேச்சாலோ,எழுத்தாலோ,உணர்வை தூண்டும் வகையிலான செய்கையாலோ,பிற வகைகளிலோ…அரசுக்கு எதிரான கருத்தை தூண்ட நினைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றது.
Also read
அடிப்படையில் நீதிக்குப் புறம்பான, நியாயமற்ற சட்டத்திற்கு பணிய மறுப்பதை அவர் தன் மனசாட்சியின் வழியில் சரியெனக் கருதினார். இந்த சட்டமறுப்பிற்காக, நீத்துறை வழங்கும் எந்த தண்டணையையும் வன்முறையின்றி பணிந்து ஏற்பது அவசியம் என்று கருதினார். இதனால்,அவர் பல ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்தார்.
ஒரு முறை அவர் நீதிமன்ற விசாரணையின் போது, ‘’ மேதகு நீதிபதி அவர்களே, நீங்கள் என் மீது சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்கிறேன். பம்பாய்,செளரி செளரா, சென்னை குறித்த உங்கள் குற்றச்சாட்டுகள் சரியானதே! பொறுப்புள்ள, நல்ல கல்வி பெற்ற, உலக அனுபவம் மிக்க ஒரு மனிதன் தான் செய்யும் செயல்களின் விளைவுகளை நன்கு உணர வேண்டும் என நீங்கள் கூறினீர்கள்.ஆம் நான் என் செயல்களினால் ஏற்படும் ஒவ்வொரு விளைவையும் தெரிந்தே தான் செய்கிறேன். நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்பதை நன்கறிவேன்’’ என்றார்.
இந்த 1922 ஆம் ஆண்டு தேசத் துரோக தண்டணை சட்ட விவகாரத்தில் காந்தி, ஒரு நாட்டின் சட்டத்தை மதியாமை என்பதும், ஒரு அநீதியான சட்டத்திற்கு மனசாட்சியின் குரல்படி பணிய மறுப்பது என்பதற்குமான முரண்பாட்டை தெளிவுபடுத்தினார். அரசியல் ரீதியாக தேசதுரோக குற்றத்தை செய்யத் தூண்டும் வகையிலான கட்டுரையை காந்தி எழுதினார் எனபதே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.
காந்தி இந்த வழக்கின் போது,’’பாசத்தை உற்பத்தி செய்யவோ சட்டத்தால் வளர்க்கவோ முடியாது. ஒருவருக்கு மற்றொருவரின் மீது பாசம் இல்லாத போது, ஒரு அமைப்பின் மீது பற்று இல்லாத போது,அவர் தன் விருப்பமின்மையைத் தெரிவிக்கும் உரிமையை பெற்றவராவார். அவர் வன்முறையை உணத்தவோ,வளர்க்கவோ விரும்பக் கூடாது.ஆனால், நானும் திரு பேங்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிவில் நாங்கள் இந்த அரசின் மீது அதிருப்தி என்ற குற்றத்தை தூண்டினோம் என்றே கூறுகிறது.இந்த 120(a)பிரிவின் கீழ் இந்தியாவின் பல உன்னத தேசபக்தர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.எனவே நானும் அந்தப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை பெருமையாகவே கருதுகிறேன்.’’என்றார்.
மேலும் வழக்கு விசாரணையின் போது, ’’நான் ஒரு முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று இந்த நாட்டுக்கும்,மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத தீமையைச் செய்துள்ள இந்த அரசு அமைப்புக்கு பணிந்து போவது,அல்லது என் நாவிலிருந்து வெளிப்படும் உண்மைகளைப் புரிந்து கொண்ட மக்களை வெடிக்கும் பைத்தியகாரக் கோபத்திற்கு ஆளாக்குவது என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும்.எனது மக்கள் சில சமயம் பைத்தியக்காரத் தனமான கோபத்திற்கு ஆளாவதை நான் அறிவேன். எனவே நான் இப்போது மென்மையான தண்டனையை விரும்பவில்லை. நான் மிகக் கடுமையான தண்டனையை வேண்டுகிறேன்.என் மீது எந்த விதமான கருணையும் காட்டாதீர்கள். நான் எந்தவித மன்னிப்பையும் வேண்டவில்லை. நான் உச்சபட்ச தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கத் தயாராக உள்ளேன். சட்டம் குற்றம் எனக் கருதுவதகேற்ற தண்டணையை ஏற்பது தான் நல்ல குடிமகனின் கடமை’’ என்றார்.
காந்தி உண்மை, நீதி, மனசாட்சி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். நீதிமன்றம்,சட்டம் என்பன அதற்கு அடுத்ததே! ’’நீதிமன்றத்தை விட உயர்ந்த நீதிக்கான இடம் உண்டு! அதுவே மனசாட்சி. அது,அனைத்து நீதிமன்றங்களை விடவும் உயர்ந்தது.’’ என்றார். பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி ’’காந்தி மன்னிப்பு கடிதம் தர வேண்டும்’’ என்றார். ஆனால்,அதை காந்தி ஏற்க மறுத்தார்.
‘’நான் மேதகு நீதிபதி அவர்களின் அறிவுரையை ஏற்க முடியாதவனாக உள்ளதற்கு வருந்துகிறேன்.ஏனெனில், நான் அற ரீதியிலான விதிமீறல் எதையும் செய்யவில்லை. ஒரு பத்திரிகையாளனின் கடமையை உண்மையுடன் செய்துள்ளேன்.எனவே நான் மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும் நீதிமன்றம் தரும் தண்டணையை ஏற்கத் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
இதை இன்றைய சூழலில் பொருத்தி. காந்தி இன்று இருந்திருந்தால் என்ன எதிர்வினையாற்றியிருப்பார் என பிரசாந்த் பூஷன் பேசியதை நாளை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.
Leave a Reply