கோழி முட்டைகளில் கோடிக் கோடியாய் கொள்ளை!

-சாவித்திரி கண்ணன்

ஏழைக் குழந்தைகளின் பெயரால் திமுக ஆட்சியாளர்கள் சத்துணவு திட்டத்தில் தினசரி வழங்கப்படும் 80 லட்சம் முட்டைகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆதாயமடைகின்றனர்! அதிமுக, திமுக, பாஜக..என எல்லா கட்சிகளுக்கும் ஒரே கார்ப்பரேட் நிறுவனமே ரட்சகராகவுள்ளது.!

சத்துணவுத் முட்டை திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகள், தேசிய தொழிலாளர் திட்டப் பள்ளிகள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுவதால் தினசரி சுமார் 80 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவு திட்டத்தை 1982ல் மீண்டும் எம்.ஜி.ஆர் புதுப்பித்த போது, முட்டை வழங்கப்படவில்லை. அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக வந்த போது தான் இரண்டு வாரத்திற்கு ஒரு முட்டை சத்துணவில் வழங்கப்படும் என அறிவித்தார். பிறகு 2006 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, வாரம் இரு முட்டை, பிறகு வாரத்திற்கு மூன்று முட்டை என அதிகப்படுத்தப்பட்டு, 2010 தொடங்கி வாரத்தின் ஐந்து நாட்களும் 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவோடு முட்டை  என அறிவிக்கப்பட்டது! இந்த காலகட்டங்களில் சத்துணவுக்கு முட்டைகள் வாங்குவதில் கருணாநிதி ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை. அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்தனர். டெண்டரில் விலை குறைவாக குறிப்பிட்டவர்களுக்கு ஆர்டர்கள் தரப்பட்டன.

2011க்கு பிறகு அதிமுக ஆட்சியில் தான், சத்துணவு திட்ட முட்டைகள் கொள்முதலில் ஊழல் தலை தூக்கியது. ஊழல் செய்வதற்காகவே மிகப் பெரிய திமிங்கில வியாபாரிகள் மட்டுமே கலந்து கொள்ளத்தக்க அளவில் டெண்டர் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு, ஒரே நிறுவனம் மட்டுமே மொத்த முட்டைகளையும் விநியோகம் செய்ய வைத்தனர்.

அந்த வகையில் தனக்கென ஒரு கோழிப் பண்ணை கூட இல்லாத கிறிஸ்டி என்ற நிறுவனமே மொத்த முட்டை சப்ளைக்கும் பொறுப்பு ஏற்றது! அவர்கள் மொத்த கொள்முதலில் சந்தையில் முட்டை விலை ரூ 3.30க்கு கிடைத்த போது அரசுக்கு ரூ 4.61 க்கு கொடுத்தனர். இந்த வகையில் அன்றைய தினம் தினசரி 69 லட்சம் முட்டைகள் வாங்கப்பட்ட நிலையில் ஒரு முட்டையில் மட்டுமே அதிமுக ஆட்சியாளர்கள் எவ்வளவு ஆதாயம் பார்த்தனர் என அறியலாம்.

அப்போது இது வெளியே தெரிய வந்த போது ‘’முட்டையில் ஊழல் செய்ததன் மூலம் ஏழை பள்ளிக் குழந்தைகள் வயிற்றில் அடித்து ஊழல் செய்யவும் அதிமுக அரசு தயங்காது என்பது தெரிய வருகிறது” என கனிமொழி கூறினார்.

2018 நவம்பர் மாதம் கிறிஸ்டி நிறுவனம் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைகள் நடந்தன! இதையடுத்து ”கிறிஸ்டி நிறுவனத்தின் ஆட்டம் ஓய்ந்தது” என எல்லோரும் நினைத்தனர். ஆனால், கிறிஸ்டி நிறுவனம் தான் பாஜக ஆட்சி செய்த கர்நாடகத்திலும்  சில ஆர்டர் பெற்றது. அதிமுக ஆட்சி மீண்டும் கிறிஸ்டி நிறுவனத்திற்கே ஆர்டர் தந்தது. அதே முறைகேடுகள் தொடர்ந்தன.

அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிறுவனமே ஆர்டர் பெற்று இயங்கியதன் பின்னணியில், மத்திய பாஜக ஆட்சியாளர்களின் ஆசீர்வாதமும் இந்த நிறுவனத்திற்கு கிடைத்துவிட்டது என வணிகர்கள் தரப்பில் பேசப்பட்டது.

அப்போது ஸ்டாலின், ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குழந்தைகள் பெயரில் கொள்ளையடிக்கும் இந்த ஊழல்வாதிகளை கண்டிப்பாக தண்டிப்போம்” என்றார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இதே நிறுவனத்தின் பினாமி நிறுவனமான சுவர்ணபூமி எண்டர்பிரைசஸுக்கே மீண்டும் முட்டை வழங்கும் ஆர்டர்கள் தரப்பட்டன. ”அந்த நிறுவனத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நற்சான்றிதழ் தந்தார். இந்த நிறுவனத்திற்கு மீண்டும் ஆர்டர்கள் வழங்கப்பட்ட வகையில் மத்திய பாஜகவின் அனுசரணைகளும் இருந்ததாக அதிகாரமட்டத்தில் சொல்லப்பட்டது.

அந்த வகையில் தற்போது மொத்த சந்தையில் ரூ 4.40 பைசாவிற்கு முட்டைகள் கிடைக்கின்றன. வழக்கமாக நாம் கடைகளில் வாங்கும் முட்டைகள் சுமார் 55 கிராம் எடை கொண்டவை! ஆனால், சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டைகள் வெறும் 40  கிராம் தொடங்கி 45 கிராம் வரையுள்ள சிறிய முட்டைகளாகவுள்ளன! எனவே, இந்த சிறிய முட்டைகளின் ஒரிஜினல் விலை ரூ 3.90 தான்!

நன்றி; டைம்ஸ் ஆப் இந்தியா.

ஆனால், தமிழக அரசு இந்த சிறிய முட்டைகளை 2021-2022 ஆண்டில் ரூ 5.52 லிருந்து ரூ 5.82 பைசா வரை வாங்குவதாக தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் தெரிய வந்துள்ளது ! 2022 தொடங்கி தற்போது அங்கன்வாடி மையங்களுக்கு வாங்கப்படும் முட்டைகளின் கொள் முதல் விலையோ ரூ 4.79 முதல் 4.94 வரை என தெரிய வந்துள்ளது. ஆக, நாளொன்றுக்கு தற்போது 80 லட்சம் முட்டை வாங்கப்படும் நிலையில், இதில் தினசரி எவ்வளவு ஆதாயம் ஆளும் தரப்பில் அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இவை தவிர, மொத்தமாக ஒரே நிறுவனம் ஆட்கள் வைத்து சப்ளை செய்வதால், எல்லா முட்டைகளிலும் சீல் அடிப்பதில்லை. சீல் அடிக்காத சுமார் 15 லட்சம் முட்டைகள் வெளிமார்க்கெட்டில் விற்கப்பட்டுவிடுகின்றன. இதனால் ரொம்ப உள்ளடங்கிய கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கான முட்டைகள் வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. இதில் பல தரப்பினர் ஆதாயம் அடைகின்றனர்.

ஒரே கார்ப்பரேட் நிறுவனம் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து தரப்பிலும் நம்பிக்கை பெற்று ஊழலை மிக சாதுரியமாகவும்,செளகரியமாகவும் செய்கின்றது. ஆக, தற்போதெல்லாம் ஊழல் செய்வதில் எல்லோரும் ஒருவருக்கொருவர் மறைமுக கூட்டாளிகளாகத் தான் உள்ளனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time