வேலையின்மைக்கு வித்திடுகிறது பாஜக அரசு!

-பீட்டர் துரைராஜ்

NCRB புள்ளி விவரப்படி கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லா விரக்தியில் 9,140 இளைஞர்கள் தற்கொலையாகி உள்ளனர். பட்டதாரி இளைஞர்கள் 40% த்தினருக்கு வேலை இல்லை. ஆனால், ரயில்வேயில் 3 லட்சம், பேங்க் செக்டாரில் 2.50 லட்சம், இன்சூரன்ஸுல் 50 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப மறுக்கிறது பாஜக அரசு! ஏன்?

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ( AIYF )சமீபத்தில் ‘எங்கே எனது வேலை ? ‘ என்ற இயக்கத்தை நடத்தியது. அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்புதல், தனியார் துறையில் இட ஒதுக்கீடு, தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டம், வேலை அல்லது நிவாரணம், ஒப்பந்த முறையைக் கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இது நடந்தது. அதன் மாநிலச் செயலாளரான க. பாரதி அளித்த நேர்காணல்  இது.

வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் இருப்பதுதானே ?

ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று சொல்லித் தான் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கூறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையில்லாததால் 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள்  கூறுகின்றன. ரயில்வேத் துறையில் 3 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கியில் இரண்டரை இலட்சம், காப்பீட்டு நிறுவனங்களில் 50,000 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பக் கூடாது என்று உலக வர்த்தக நிறுவனம் கூறுகிறது. அதற்கு ஒன்றிய அரசு செவிமடுக்கிறது. அத்துடன் நிறைய வேலை வாய்ப்புகளை தந்த பொதுத் துறை நிறுவனங்களையும் பாஜக அரசு அழித்து வருகிறது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் க.பாரதி.

அரசுப் பணிகளில் ஓய்வு பெறுபவர்களின் இடங்கள் நிரப்பப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஒப்பந்த முறையில் ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  இதே கொள்கைகளை மாநில அரசுகளும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்கிறது.  தமிழ்நாட்டிலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் இரத்து செய்யப்படுகின்றன. உள்ளாட்சி நிறுவனங்களில் இனி அடிமட்ட பணியாட்களை  நிரந்தரமாக நியமிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பு என்பது இனி கேள்விக்குறி என்ற மோசமான காலக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலகத்தில் சீனாவை விட, இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் உள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரகடனத்தில் உடல்நலம், மனநலம் பெறுவது அடிப்படை உரிமையாக்கப் பட்டுள்ளது. இதனை உறுதிசெய்ய வேண்டியது அரசுகளின் பொறுப்பு என்று 1948 ல் உருவாக்கப்பட்ட  ஐ.நா.பிரகடனம் கூறுகிறது. அரசியல் அமைப்புச்சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வேலைபெறும் உரிமைக்கு ஆவண செய்ய வேண்டும் என்கிறது. உணவு, உடை, உறைவிடம் போன்ற அவசியத் தேவைகளைப் பெற வேண்டுமானால் பொருளாதாரம் வேண்டும். அதற்கு  வேலை வேண்டும். எனவேதான் வேலைபெறுவதை அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்யும் வகையில்  சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோருகிறோம். இதற்காக வரைவு சட்டத்தை உருவாக்கி ஒன்றிய அரசிடம் கொடுத்து உள்ளோம்.

நீங்கள் உருவாக்கியுள்ள  பகத்சிங் தேசிய வேலை உறுதியளிப்பு வரைவுச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன ?

பதில் : சீனா  வேலைபெறுவதை ஒரு  உரிமையாக்கி சட்டம் இயற்றி உள்ளது. இப்படிப்பட்ட சட்டம் ஆசியாவில் சீனாவில் மட்டும்தான் உள்ளது.   எல்லாருக்கும் வாக்குரிமை என்பது எப்படி  உறுதிசெய்யப்பட்டுள்ளதோ, அதே போல வேலை என்பதை ஒரு உரிமையாக ஆக்க வேண்டும். அப்படி வேலை தர முடியவில்லை என்றால் நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் வந்தால், வேலை அல்லது நிவாரணம் தரவில்லை என்றால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இயலும். அதே போல, சம  வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு கொரோனாவிற்கு முன்பு வருடத்திற்கு 1,10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்ததது. ஆனால், தற்போது 69,000 கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால்  கிராமப்புற வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். கிராமப்புறத்திலிருந்து  நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம் பெயர்வது அதிகரிக்கும்.

வேலை வாய்ப்பு இல்லாததற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்  ?

சிறு, குறு தொழில்கள் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 1கோடியே 37 லட்சம்
உள்ளன. இவை ஆறுகோடி பேருக்கு வேலை வழங்கி வருகின்றன. மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த தொழில்களில் பெருநிறுவனங்கள் ஈடுபடக் கூடாது என்ற விதி ஏற்கனவே இருந்தது. இந்த விதிகளை மோடி அரசாங்கம் திருத்தி, சிறு, குறு தொழில்களில் பெருநிறுவனங்களை ஈடுபடுத்துவது சிறுகுறு நிறுவனங்களை அழித்து விடும்.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில்  கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இரண்டு இலட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 12 மணி நேரம் வேலை பார்த்தவர்கள், கொரோனா தொற்றினால் வீட்டிலிருந்து 10 முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்ய நேரிடுகிறது. கூடுதல் நேரம் வேலை செய்வதன் பலனை நிறுவனங்கள் அனுபவிக்கின்றன. ஆனால், உழைப்போருக்கு  அந்தப் பலன் கிடைப்பதில்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில்,  அமெரிக்க நிறுவனங்கள் 40 % இந்தியர்களை  வெளியேற்றியுள்ளனர்.

வேலையில்லா  திண்டாட்டத்தினால் குவைத், துபாய்  போன்ற வளைகுடா நாடுகளுக்குச்  செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எம்சிஏ, எம்பிஏ படித்த முதுகலைப் பட்டதாரிகள் ஓட்டுநர் வேலைக்குச் செல்கின்றனர். கத்தார் நாட்டில் கட்டுமான வேலைகளுக்கு சென்ற 4,600 பேர் பணியிட விபத்துகளில்  மரணமடைந்தனர். அவ்வாறு இறந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.  உள்நாட்டில் வேலை இருந்தால் இது போன்ற இடப்பெயர்வுகள் குறையும்.  வேலையற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்க 13,50,000 கோடி ரூபாய் போதுமானது என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெருநிறுவனங்களுக்கு இந்தக் காலக் கட்டங்களில் 10,72,000 கோடி ரூபாய்களை வாராக்கடனாக பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. எனவே, மக்களின் மீது அக்கறை இருந்தால் இது போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு  செலவழிப்பது சாத்தியமே.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்கிறார்களே ?

வெளிநாட்டு மூலதனம் இங்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.  நம் இயற்கை வளங்களை சூறையாடவும், குறைந்த கூலிக்கு உழைப்பாளர்களை சுரண்டவுமே பயன்படுகிறது. தமிழக அரசின் நிலம், வரிச்சலுகை, மானியம், உதவி  என அனைத்தையும் பெற்ற போர்டு நிறுவனத்தில் 15,000 பேர் வேலை செய்தனர். இப்போது அந்தக் கம்பெனியை மூடிவிட்டு சென்றுவிட்டார்கள். வேலை இழந்த அந்தத் தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு ? சீன நாட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் பணிப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தர வேண்டும். அந்த நிறுவனங்களில் வரும் இலாபத்தில் 50 சதத்தை அங்கேயே முதலீடு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்தியாவில்  வெளிநாட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த இதுபோன்ற விதிகள் இல்லை.

வரைபடம்; பைனான்சியல் எக்ஸ்பிரஸ்.

வேலையின்மை என்பது 8 % சதம் அதிகரித்துள்ளது. இதனால்  குற்றங்கள் அதிகரித்துள்ளன.   போதைப் பழக்கம் இளைஞர்களிடையே சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதை திசை திருப்புவதற்காக மதக்கலவரம், சாதிக்கலவரம், ஹிஜாப் பிரச்சினை, மாட்டுக் கறி பிரச்சினை போன்றவைகளை ஆளுகின்ற பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சி தூண்டி விடுகிறது.

தனியார்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி இருக்கிறீர்களே?

அரசு வேலை, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவைகளில் ஏறக்குறைய நிரந்தர வேலைவாய்ப்பு என்பது இல்லை. இதுவரை  நாம் பெற்று வந்த இட ஒதுக்கீடு என்பது இல்லாததாகி விட்டது. எனவே தான் இந்த கோரிக்கை வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறைகளில் தலித் என்பதால் வேலை மறுக்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. தொழிற்சாலைச் சட்டத்தை திருத்தி எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை வாங்குவதற்கான நிலையை தமிழக அரசு தற்போது ஏற்படுத்தி உள்ளது. விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன்; விவசாயத்திற்கு 20 இலட்சம் கோடி முதலீடு செய்வேன்  என்று தேர்தல் அறிக்கையில் மோடி கூறியிருந்தார். ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்கு 68,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளார்.

வட மாநிலத்தில் இருந்து கட்டுமானம், சாலைகள், சிறு குறு தொழில்களில் கிட்டத்தட்ட 35 இலட்ச வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது.  அதே சமயம் தமிழ்நாட்டில் இருந்து 40 இலட்சம் பேர் வெளி மாநிலங்களில் வேலை செய்கின்றனர். முதலாளிகள் தங்களுக்கு தேவையென்றால், வட மாநிலத் தொழிலாளி, தென் மாநிலத் தொழிலாளி என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவை இலாபம்தான்.

உள்ளூர் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அவர்கள்  குறைந்த பட்ச சம்பளம் வேண்டும், எட்டுமணி நேர வேலை என்று  குரல் கொடுப்பார்கள். எனவே, அதிக வேலை நேரத்தில் குறைவான சம்பளத்தில் பணிபுரிய வட மாநில ஆட்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு இந்த சுரண்டல்களை அனுமதிக்கிறது. எனவே, உள்ளூர் தொழிலாளர்களை பணியமர்த்தும் வகையில் வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். அப்படி செய்வது சாத்தியம் தான். சாதாரண மக்களுக்கு ஆதரவான சட்டங்களை உருவாக்க  மக்களைத் திரட்ட வேண்டி இருக்கிறது.

நீங்கள் நடத்திய பரப்புரை இயக்கம் வெற்றி அடைந்ததாக நீங்கள் உணர்கிறீர்களா ?

‘வேலை அல்லது சிறை’, ‘வேலை கொடு அல்லது நிவாரணம் கொடு’ என்ற போராட்டங்களை நாங்கள் ஏற்கனவே நடத்தி இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகத் தான் ‘எங்கே எனது வேலை ?’  என்ற இயக்கத்தை நடத்தி உள்ளோம்.  பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 ம் நாள் தொடங்கி மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் பாலன் பிறந்த நாளான ஏப்ரல் 2 ம் நாள் வரை 12 நாட்கள் நடந்த இந்தப் பரப்புரையில்,  சிறிதும் பெரிதுமாக 1,350 மையங்களில்  நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளோம். நான் ஓசூரில் இருந்து புறப்பட்ட குழுவிற்கு தலைமை வகித்தேன். 6,000 கி.மீ. ஒட்டுமொத்தமாக பயணித்துள்ளோம். மக்களிடம் விழிப்புணர்வை தொடர்ந்து  ஏற்படுத்தி வருவதன் மூலம் உழைப்புச் சுரண்டலுக்கான கொள்கைகளை மாற்றுவது சாத்தியமே.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time