பெண்கள், குழந்தைகள் பாதுகாக்கபடுவதில் தான் ஒரு ஆட்சி மதிப்பிடப்படுகிறது. குஜராத்தில் பல்லாயிரம் பெண்கள் காணாமல் போயிருப்பதன் பின்னால் இருக்கும் சமூக காரணங்களுக்கு பாஜக ஆட்சியின் அலங்கோலங்களே சாட்சியாகும். மோடி, அமித்ஷா சொந்த மண்ணிலே பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்க முடிவதில்லை..?
மூன்று பெண்களைப் பற்றிய கற்பனைக் கதையை கேரள ஸ்டோரி ஆக்கிய சங்கிகளால் நிஜத்திலே தங்களின் குஜராத்தில் 42,000 பெண்கள் காணாமல் போன செய்தியை மறைக்க முடியவில்லை. பெண்கள் காணாமல் போகும் விஷயத்தில் எவ்வளவு அலட்சியமாக பாஜக ஆட்சியாளர்கள் நடந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்தின் அபத்தமான ஸ்டோரி லைனும் , வக்கிரமமான காட்சிகளும் இப்படம் ஒரு மோசமான பிரச்சார படம் என்று விமர்சகர்கள் கூறிய போதும், இந்த படத்தின் டீசரில் 32,000 கேரள பெண்கள் காணமல் போனதைப் பற்றிய கதை இது என்று தம்பட்டமடித்தனர் . உண்மைக்கு புறம்பான இந்த செய்திகளை பலரும் கண்டித்த போது 32,000 பெண்கள் என்பதை எடுத்துவிட்டு “மூன்று (3) பெண்களைப் பற்றிய கதை” என்று வேறு வழியின்றி திருத்தி வெளியிட்டனர் இந்த உத்தம படைப்பாளிகள்.
மூன்று பெண்களைப்பற்றிய கதை எப்படி ஒட்டு மொத்த கேரளாவின் கதையாக ஆக முடியும்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, சங்கிகளுக்கு ஷாக்காக இன்னொரு விஷயம் ஊடகங்களிலே மூன்று நாட்களுக்கு முன்னர் கசிந்து வைரலானது.
அந்த வைரலான செய்தி, குஜராத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 42,000 பெண்கள் (இளம் வயது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள்) காணாமல் போய் உள்ளனர் . குஜராத் அரசு இவர்களை கண்டுபிடித்து மீட்டெடுக்க எந்த வொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று “இந்தியன் எகஸ்பிரஸ்” பத்திரிக்கை , தேசிய குற்ற ஆவண முகமை NCRB வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் செய்தி வெளியிட்டது
கேரள சமுதாயத்தில் வெறுப்பை விதைத்து சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கலாம். அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையலாம் என்று முனைந்த சங்கிகளுக்கோ ” குஜராத் செய்தி ” ஷாக்காக வந்து விடிந்தது.
அடி மடியில் கையை வைக்கும் இந்த செய்தியால் ஆடிப்போன மோடி கும்பல் குஜராத் போலீசை விட்டு ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளது.
2016-2020 ஆண்டுகளில் காணாமல் போன 41,621 பெண்களில் 39,947 பெண்கள் வீடு திரும்பி விட்டார்கள் என்று குஜராத் காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆக, இன்னும் 2,100 க்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மையை குஜராத் அரசும் சங்கிகள் கூட்டமும் ஒப்புக் கொண்டுள்ளது.
2020-2021, 2021-2022 ஆண்டுகளில் காணாமல் போனவர்கள் நிலை என்ன? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி எந்த விவரமும் குஜராத் அரசோ, அல்லது குஜராத் காவல் துறையோ மூச்சுவிடவில்லை.
2016ல் 7105 பேரும், 2017ல் 7712 பேரும், 2018ல் 9,246 பேரும் 2019 ல் 9,268 பேரும் காணாமல் போயுள்ளனர் . 2020 ல் 8,290 பெண்கள் காணாமற் போயுள்ளனர் குஜராத்தில் என தேசிய குற்றவியல் ஆவண முகமை (NCRB ) புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மேலும், 2021 ல் குஜராத் சட்டமன்றத்தில் குஜராத் அரசு ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி குஜராத்தில் உள்ள அகமதாபாத், வடோதரா ஆகிய இரு நகரங்களில் மட்டும் 2019-2020 ஒரு ஆண்டில் 4,722 பெண்கள் காணாமற் போய் உள்ளதாக தெரிகிறது.
இளம் பெண்கள் சிறுமிகள் காணாமல் போகும் விவகாரத்தை குஜராத் காவல்துறை கையாண்ட லட்சணம் குறித்து குஜராத் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான சுதிர் சின்ஹா கூறும் போது, “காணாமல் போன பல வழக்குகளில், பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர். குஜராத் அரசும், காவல்துறையும் காணாமல் போன புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நியாயப்படி அவற்றை கொலை வழக்கை போல் கையாண்டிருக்க வேண்டும்” என்று சொல்லி உள்ளார்.
மற்றொரு முக்கிய அதிகாரியான குஜராத் முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜன் பிரியதர்ஷி பேசுகையில், “எனது பதவி காலத்தில் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் பல பெண்கள் கடத்தி செல்லப்பட்டு வெளி மாநிலங்களில் விற்கப்பட்டனர். கேதா மாவட்டத்தில் நான் எஸ்பியாக இருந்தபோது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், ஏழை சிறுமியை தூக்கிச் சென்று தனது மாநிலத்தில் விற்று கொத்தடிமையாக்கினார்” என ஒப்புதல் வாக்குமூலமே தருகிறார்.
ஆனால், காணாமல் போன பெண்கள் குறித்து குஜராத் காவல்துறை அளித்த விளக்கத்தில், ”பெண்கள் பெரும்பாலும் குடும்ப சூழலின் காரணமாகவோ, தேர்வுகளில் தோல்வி அடைந்ததாலோ, காதலர்களுடன் ஓடிப்போவதாலோ வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்” (காணாமல் போகின்றனர்) என்று குஜராத் காவல்துறை கூறுகிறது.
ஆக, பெண்கள் கடத்தப்படும் விவகாரத்தை பொருட்படுத்தாமல் – இயல்பாக ஏற்படும் பதைபதைப்போ, அக்கறையோ இல்லாமல் – பல காரணங்களை கண்டடைகிறது காவல்துறை!

குடும்பத்திற்குள் பெண்களை சம மரியாதை தராமல் அடிமையாக நடத்துவது சங்கிகளின் இயல்பாகும்! பழமைவாதிகள் பெண்களை சக உயிராக கருதுவதே இல்லை! இந்த வகையில் பார்க்கும் போது, பல பெண்கள் ரகசியமாக கவுரவ கொலையாகி உள்ளதற்கும் வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. காவல் துறைக்குள்ளும் பழமை மனோபாவம் ஆழமாக உள்ளது. இவர்களுக்கு பெண்கள் காணாமல் போவது எல்லாம் ஒரு பெரிய விஷயமாகவேபடவில்லை என்பது தான் மிக கவலைக்குரிய அம்சமாகும்!
பழமைவாதிகள் இரு மதங்களிலும் உள்ளனர், மூர்க்கர்களும் இரு மதத்திலும் உள்ளனர். இதில் இறைத்தேடலையும், அன்புத்தேடலையும் ஒட்டுப் போட்டு அதை ‘லவ்ஜிகாத் ‘ என்று வருணிப்பதும், இஸ்லாமியர்கள் இதை (லவ் ஜிகாத்) ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர், இந்து பெண்களை ஏமாற்றி பயங்கரவாதத்திற்கு இழுத்து செல்கின்றனர் என்பதும் சங்கிகளின் “சீப்பான” பிரச்சாரம் ஆகும். சாரமற்ற இவ்வாதத்தின் மூலம் இந்திய இஸ்லாமியர்களை அச்சுறுத்தலில் வைத்திருப்பதே சங்கிகளின் நோக்கம்.
இந்து ராஷ்டிரமே எங்களுக்கு வேண்டும், இதை ஏற்பவரே இங்கிருக்க வேண்டும் என்று முழங்கும் சங்கிகளுக்கும் ( இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பஜ்ரங் தல் மற்றும் பல சேனாக்கள்) இஸ்லாமிய கேலிபேட்டை (Caliphate ) நிறுவுவதே எங்கள் குறிக்கோள் என்று கூக்குரலிடும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளுக்கும் (ஐ.எஸ்.ஐ.எஸ்., ஐ. எஸ். அல் குவைதா, முஸ்லீம் பிரதர்ஹூட், தாலிபான்) இடையில் பெரிய வேறுபாடு இருப்பதாக சாமான்ய இந்தியனுக்கு தெரியவில்லை.
மத அடிப்படையில் மக்களை திரட்டுவதில் இந்து மகா சபா (இந்துக்கள்) வும், முஸ்லீம் லீக்கும் (இஸ்லாமியர்கள்) ஒன்றிற்கொன்று சளைத்தவர்கள் இல்லை இப்படி பிளவுபடுத்தப்பட்ட சமூகத்தினாலேயே நாடும் பிரிவினைக்குட்பட்டது.
சம்ஜுதா ரயில் குண்டுவெடிப்பு, மேலேகான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிப்பதும், அவர்களை கவுரவிப்பதும், பதவிகள்கொடுத்து பாராட்டுவதும் சங்கிகளின் ஆட்சியின் போது தான் நடக்கிறது.
Also read
பிற மதத்தினர் குறிப்பாக இஸ்லாமியர் தும்மினாலே அவர்களை பயங்கரவாதிகள், ஜிகாடிஸ்டுகள் என்பதும், கருத்து மாறுபட்டு கேள்விகள் கேட்போரை அவர்கள் இந்துக்களானாலும் ‘அர்பன் நக்சல்கள்’ என்று கூறி சிறையிலடைப்பதும் சங்கிகளின் அணுகுமுறையாகும் .
குற்றமிழைத்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவரகளானாலும் குற்றவாளிகளே, அவர்களுக்கு மதச்சாயம் பூசி இந்துக்கள் என்றால் ‘தேசபக்தர்கள் ‘என்றும் இஸ்லாமியர்களாக இருந்தால், ‘ஜிகாடிஸ்ட்கள்’ என்றும் பாகுபடுத்துவதும் இனிமேல் எடுபடாது.
இரட்டை வேடமும், இரட்டை நாக்கும் சங்கிகளின் குணநலன்கள்! அது நிமிராது! பாதுகாப்பு தர முடியாமல் பெண்களை தெய்வம் என்று புகழ்வதில் பயனில்லை!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
அறம் இணைய இதழ்
I am constantly searching online for posts that can facilitate me. Thx!