ஜவகர் நேசனை வெளியேற்ற நடந்த சதிதிட்டங்கள்!

-சாவித்திரி கண்ணன்

இது ஏதோ கல்வியாளர் ஜவகர் நேசனுக்கும், அதிகாரி உதயசந்திரனுக்குமான தனிப்பட்ட முரண்பாடல்ல! நோக்கமாக சொல்லப்பட்டதோ தமிழ் நாட்டிற்கான தனித்துவமான கல்வி கொள்கை உருவாக்க வேண்டும்! ஆனால், நடந்தவைகளோ இதற்கு முற்றிலும் எதிரான நகர்வுகளாக அதிர்ச்சியளிக்கின்றன!

ஒரு நாட்டை சீரழிக்க வேண்டுமென்றால், அந்த நாட்டின் கல்விக் கொள்கையில் கை வைத்தாலே போதுமானது. பிஞ்சு குழந்தையாக பள்ளி செல்வது முதல் கல்லூரி படித்து வெளியே வரும் வரை ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் கற்பிக்கப்படுகிறதோ, அதுவே அவன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கிறது! அதனால் தான் பாஜக அரசு பதவி ஏற்றது தொடங்கி கல்விக் கொள்கையை கன்னாபின்னாவென்று மாற்றுவதில் கண்ணும், கருத்துமாக இயங்கி வருகிறது. ”அதன் தேசிய கல்வி கொள்கை என்பது பல நூறு வருடங்களுக்கு இந்தியாவை பின்னுக்கு தள்ளும் ஆபத்தாக உள்ளது’’ என கல்வியாளர்கள் பதைபதைக்கின்றனர்.

பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை அன்று தமிழக எதிர்கட்சியாக இருந்த திமுக முற்போக்காளர்களுடன் சேர்ந்து தீவிரமாக எதிர்த்தது. அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆகஸ்ட் – 13, 2021 ‘ தமிழ்நாட்டிற்கென தனித்துவமான புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்’ என்று அறிவித்தது.

“தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு அவசியப்படுகிறது’’ என அரசு தெரிவித்த போது திமுக அரசின் மீது பெருமதிப்பு உருவானது.

ஆயினும், என்ன காரணத்தாலோ, எட்டு மாதமாக இந்த அறிவிப்புக்கு பின் எந்த முன்னேற்றமும் இல்லாதிருந்த நிலையில் 2022, ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ் நாட்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை அமைத்தது தமிழக அரசு.

நீதிபதி த.முருகேசன்

கல்விக்கான தனித்துவமிக்க கொள்கையை உருவாக்குவதற்கு கல்வித் துறையில் விரிந்து பரந்துபட்ட அனுபவமும் தொலை நோக்கு பார்வையும் கொண்ட கல்வியாளருக்கு தான் தலைமை பொறுப்பு தந்திருக்க வேண்டும். கல்வித் துறைக்கு சம்பந்தமே இல்லாத ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் அந்தக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். விசுவாசிகளை மகிழ்விக்கும் அம்சமாக இந்த பதவியை திமுக அரசு கையாண்டது துரதிர்ஷ்டவசமானதாகும்.

அடுத்ததாக இந்தக் குழுவில் ஒரு மேலாதிக்க சாதியை பிரதிபலிக்கும் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கு பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம், அருணா ரத்தினம், ஜெய ஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா, விஸ்வநாதன் ஆனந்த்

பேராசிரியர் இராமனுஜத்தை பொறுத்த வரை அவர் தமிழகத்தில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அதில் ஆதிக்கம் செலுத்துபவராக ஏதேனும் ஒரு குழுவில் தொடர்ந்து இடம் பெறுவார். தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் தேசிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூளையாக செயல்படுபவரே இவர் தான்! இப்படிப்பட்டவர் தமிழகத்தின் தனித் தன்மை வாய்ந்த கல்வி கொள்கை திட்ட உருவாக்க குழுவிலும் ஏன் நுழைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை.

மேலும் இதில், அதிகார மையத்தின் தீவிர விசுவாசிகளாக அறியப்படும் மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன் ஆகியோரும் இடம் பெற்றனர்.மேலும் இலக்கியவாதியாக அறியப்பட்டவரும், சமீபத்தில் அயோத்தி சினிமா கதை திருட்டில் கையும், களவுமாக மாட்டிக் கொண்டவருமான எஸ். இராமகிருஷ்ணனும் இடம் பெற்று இருந்தனர். இந்தக் குழுவின் மற்றொரு கல்வியாளர் துளசிதாஸ்.

இந்தக் குழுவில் நாம் மிகவும் சந்தோஷப்படக் கூடிய வகையில் கல்வியாளர் ஆசிரியர் மாடசாமி இடம் பெற்ற போதிலும், வயது மூப்பு மற்றும் அமெரிக்காவில் தன் மகன் வீட்டில் தங்க சென்றதாலும் அவரால் சரியாக பங்களிக்க முடியவில்லை.  நாகை கிச்சான்குப்பம் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு என்ற அர்ப்பணிப்புள்ள கல்விச் செயற்பாட்டாளர் நன்றாக செயல்பட்டுள்ளார்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவே சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன் நியமிக்கப்பட்டார். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று, இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும்  மேற்படிப்பு படித்து, அமெரிக்காவிலும், மலேசியாவிலும் பல்கலைக் கழகத்தின் இயக்குனர், செனட்டர் போன்ற உயர் பதவிகளை வகித்து, தான் பெற்ற கல்வியை தாயகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என பதவியை துறந்து தமிழகம் வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதும் கூட அவருக்கு வந்த நல்ல சில வாய்ப்புகளை தவிர்த்துவிட்டுத் தான் இந்த வேலையில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

இதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு அமைத்த நீட் தேர்வு தேவையா? என்பது தொடர்பான கமிட்டியில் கடுமையாக உழைத்து மிகச் சிறப்பான, விரிவான ஆய்வறிக்கையை தயாரித்தவர் தான் ஜவகர் நேசன்!

முதலாவதாக இந்த கமிட்டி செயல்படுவதற்கு ஒரு அலுவலகமே தராமல் இழுத்தடித்தது தமிழக அரசு! கமிட்டியின் ஆயுள் காலமே ஓராண்டு! ஆனால், அலுவகம் வழங்கப்பட்டதோ கடைசி கட்டத்தில்! அதே சமயம் குழு தலைவரான நீதிபதிக்கு மட்டும் சொகுசான ஒரு அலுவலகம் தரப்பட்டது. ஆனால், அந்த அலுவலகத்தில் மொத்த கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து உட்காரக் கூட வகையில்லாமல் இருந்தது.

இதில் தலைவரான நீதிபதிக்கு மட்டும் மாதம் மூன்று லட்சம் சம்பளம் என நிர்ணயித்து இருந்தார்கள். இவை தவிர, அவருக்கு உதவியாளர்கள் மற்றும் பல வசதிகள் தரப்பட்டன. உறுப்பினர்கள் அனைவருக்குமே சம்பளமற்ற கெளரவ பதவி தான் இது. ஆகவே, ‘தங்களுக்கு ஏன் அலுவலகம் ஒதுக்கவில்லை’ என்ற கேள்விகள் இவர்களிடம் இருந்து எழவில்லை. இதில் விதிவிலக்காக இருந்தவர் ஜவகர் நேசன் தான். அவர் தமிழ்நாட்டிற்கு என்ற தனித்துவமான கல்வி கொள்கை உருவாக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினார். ஆகவே, தான் முழு நேரமும் இயங்கத் தக்க வகையில் தனக்கு ஒரு அலுவகம், கம்யூட்டர் வேண்டும் என்றார். ,தான் வெளியூர் என்பதால், சென்னையில் தங்க ஒரு இடம் வேண்டும், என்றார். அவ்வளவு தான்! சம்பளம் எதையும் எதிர்பார்க்கவில்லை.

கல்விக் கொள்கை உருவாக்கல் என்பதற்கு தன்னை ஒரு ‘தவயோகி’ போல அர்ப்பணித்துக் கொண்டார். காலை ஒன்பது மணி தொடங்கி நள்ளிரவு மூன்று மணி வரை ஒற்றை நபராக ஓயாது உழைத்தார். ‘இது எதிர்காலத் தலைமுறையின் நல்வாழ்வுக்கான செயல்பாடு’ என்பதொன்றே அவரை ஊதியமின்றி உற்சாகத்துடன் உழைக்க வைத்தது! ‘கல்வியின்‌ நலனையும்‌, தமிழ்நாட்டு இளைஞர்களின்‌ எதிர்கால நலன்களையும்‌ மனதில்கொண்டு, தமிழகத்தின்‌ சரித்திர மரபுகளையும்‌, தற்போதைய சூழலையும்‌ கருத்தில்கொண்டு, தனித்துவமான மாநிலக்‌ கல்விக்கொள்கையை வடிவமைப்பதற்காக சீரிய முறையில் இயங்கினார்.

நன்றி; வினவு

முதல்கட்டமாக, மண் சார்ந்த பாரம்பரியத்துடன் அறிவியல் ரீதியாக செயல்பட திட்டமிட்டார். அதன்படி கட்டமைப்பையும், நிர்வாகத்தையும் முறைப்படுத்தினார்.

இரண்டாவதாக, வழிமுறைகள், கட்டுக்கோப்பு, தரவுகள், பலதரப்பட்ட மக்கள் சந்திப்பு, நிபுணர்கள் சந்திப்பு நடத்தினார். மூன்றாவதாக சர்வதேச அளவில் 133 வல்லுனர்கள் கொண்ட 13 துணை குழுக்களை உருவாக்கி விவாதித்தார். இந்த உப குழு கூட்டங்களை அவர் நடத்திய விதம், அதில் பேசியவர்களின் கருத்துக்களை அவர் செவிமடுத்த விதம், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்த தன்மை… ஆகியவை உப குழுவினரை மிகவும் உற்சாகப்படுத்தியது.

இந்த 133  சர்வதேச கல்வி நிபுணர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, டெல்லி, சென்னை என அனைத்து வகையிலும் தொடர்பு எடுத்து அவரே பேசி ஒருகிணைப்பு செய்தார். உண்மையில் உறுப்பினர்கள் 12 பேர் என்றாலும், அவர் கிட்டத்தட்ட ‘ஒன்மேன் ஆர்மி’யாகயே இயங்கினார். இவருக்கு அவ்வப்போது வந்து உதவியவர் நாகை ஆசிரியர் பாலு தான். இவர்கள் தான் 50 பள்ளிகள், 15 கல்லூரிகள், 5 பல்கலைக் கழகங்களுக்கு விசிட் அடித்தனர். மற்றவர்கள், ”நேரமில்லை” என்று சொல்லிவிட்டனர்.

இத்தனையையும் செய்து இடைக்கால அறிக்கையாக 232 பக்கங்களுக்கு ஒரு ஆய்வையும் சமர்பித்தார் ஜவகர் நேசன்.

முதலில் நீதிபதி முருகேசன் அவர்கள், ”ஜவகர் நேசனிடம், எனக்கு கல்வித் துறையில் பரிச்சியமில்லை. ஆகவே, நீங்களே முழுமையாக செயல்பட்டு அறிக்கை தாருங்கள். உங்களுக்கு நான் முழு ஒத்துழைப்பும் தருகிறேன்” என்று மனம் திறந்து பேசி ஜவகர் நேசனை உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைத்துள்ளார். பெரும்பாலான கூட்டத்திற்கு தலைவரே வரமாட்டார். ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஜவகரே எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்துள்ளார். குழுவில் 12 உறுப்பினர்கள் என்றாலும், கூட்டம் என்று அறிவித்தால் அதில் நான்கு முதல் ஏழட்டு பேர் வருவதே வாடிக்கையாக இருந்துள்ளது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் ஒருமுறை கூட கலந்து கொள்ளவில்லை. ஒருமுறை கூட  குழு கூட்டத்திற்கு வர முடியாதவரை ஏன் தொடர்ந்து குழு உறுப்பினராக அங்கீகரித்து வைத்திருந்தனர் என்பது தெரியவில்லை. டி.எம்.கிருஷ்ணா மூன்று முறை விசிட் அடித்துள்ளார். எஸ்.ராமகிருஷ்ணனும் இந்த வகையே!

முதலில் வெள்ளந்தியாக வெளிப்பட்ட நீதிபதி முருகேசன் போகப் போக குயுக்தியானவராக மாறினார்! மினிட்ஸ்களில் ஜவகர் நேசன் ‘பேசாதவற்றை பேசியதாக’ பதிவிடுவது, அவர் அறிக்கை தந்ததை, ‘தரவில்லை’ என பதிவிடுவது, அறிக்கை தராதவர்கள், ‘தந்துவிட்டதாக’ அறிவிப்பது.. என பல குழப்படிகளை அரங்கேற்றத் தொடங்கினார். மேலும், ஜவகர் நேசனின் பல செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடித்துள்ளார்.

இதற்கிடையில், ”தலைமை செயலகத்திலேயே ஒரு மீட்டிங் நடத்தி தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களை இதில் இணைத்து கொள்கை உருவாக்குங்கள்” என அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி நிர்பந்தித்த போது, ”தேசிய கல்வி கொள்கையை நிராகரித்து தமிழ் நாட்டிற்கு என்று தனித்த கொள்கை உருவாக்குவதற்கு தானே இந்த குழு எனச் சொல்லப்பட்டது. தற்போது அதற்கு முற்றிலும் முரணாக நாம் பாடுப்பட்டு ஒரு கொள்கை திட்டம் உருவாக்கி இறுதிகட்டம் நெருங்குகையில்  ஏன் மடைமாற்றம்  செய்கிறீர்கள்?” என கேள்வி கேட்டுள்ளார் ஜவகர் நேசன்.

இந்தச் சூழலில் முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஜவகர் நேசனை அழைத்து, அவரை ஒருமையில் பேசி, ”இந்த கொள்கை எல்லாம் பேசாதீங்க.. நான் என்ன சொல்றேனோ அதை நீங்க செய்தா போதும். உங்க குழுவின் தலைவர் வேஸ்ட். ஒன்னும் தெரியாதவர். அந்த குழுவில் உள்ள ஐவர் குழுவைக் கேட்டு அவங்க சொல்றபடி நடந்துகோங்க. இல்லையின்னா குழுவை கலைத்து விடுவேன் ஜாக்கிரதை..” என மிரட்டும் தொனியில் சொல்கிறார். அப்போது ”யார் அந்த ஐவர் குழு?” என கேட்கையில் தான், அந்த ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதிக்குரியவர்களை அவர் சொல்கிறார்.

இதன் பிறகு தான் நீதிபதி நிலை மாறியதற்கும், உதயசந்திரன் கூப்பிட்டு மிரட்டியதற்கும் பின்னணியில் அந்த ஐவர் குழு இருந்ததை அவர் அறிந்தார்.

அப்போது தான் ஜவகர் நேசனுக்கு குழுவில் நடந்த உரையாடல்கள் சில நினைவுக்கு வருகின்றன!

குறிப்பாக அருணா ரத்தினம் தன் பேச்சை ஆரம்பிக்கும் போதே, ”இங்க பாருங்க, நான் பாப்பாத்தி! நான் சொன்னா எங்க கேட்க போறீங்க…” என்ற முன்னுரையுடன் தான் தன் பேச்சையே தொடங்குவார். இவர் தான் அதிமுக ஆட்சியிலும் பல குழுக்களில் இருந்தவர். பாஜகவின் பாலிசியை பளிச்சென தன் மொழியில் பேசி, கடந்த பத்தண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு நிர்வாகத்தை வழி நடத்துபவர்.

இவர் இந்த உயர் நிலை கமிட்டியில் பேசியதை பார்ப்போம். ”அப்புறம் இந்த பெண் கல்வின்னு எல்லாம் பேசாதீங்க…, பெண்கள் எல்லாம் நன்னா முன்னேறி வந்துட்டா! அப்புறம் இந்த தலித் முன்னேற்றம் பற்றி சொல்லவே வேண்டாம், அவால்லாம் இப்போ ரொம்ப நன்னா படிச்சு முன்னேறிட்டா! ஆக, ‘கேஸ்ட்’ என்ற வார்த்தை பிரயோகமே இங்க கூடாது…” அப்படின்னு அதட்டலாகச் சொல்லியுள்ளார். அப்போது பேராசிரியர் இராமனுஜம் தன் விரலை ‘தம்ஸ் அப்’ என்பதாக காட்டி ஆதரவளிப்பார்! டி.எம்.கிருஷ்ணா பொதுவெளியில் காட்டிய முற்போக்கு முகத்தை கழட்டி தன்னை வெளிப்படுத்தியதை எல்லாம் அவர் நினைத்துப் பார்த்தார்!

பாவம், இந்தக் கல்வியாளர்! அவர் உழைத்த உழைப்பெல்லாம் வீழலுக்கு இறைத்த நீராகப் போகப் போகிறது என அவர் நினைக்கவேயில்லை!

பரந்து, விரிந்த சமூகப் பார்வையும், தொலை நோக்கு சிந்தனையும் கொண்ட முற்போக்கு கல்வியாளர் ஜவகர் நேசன். எவ்வளவோ அசெளகரியங்களையும், புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொண்டு தமிழ் நாட்டிற்கான சுயாதீனமான கல்வி கொள்கை உருவாக்குவதில் கருமமே கண்ணாக ஈடுபட்டார்! ஜவகர் நேசன் போன்ற சுயநலமில்லாத, பொது நலன் சார்ந்த அர்ப்பணிப்புள்ள கல்வியாளர்கள் இங்கு பொருட்படுத்தப்படாமல் போவது தமிழ்நாட்டிற்கு தான் பேரிழப்பாகும்.
கல்வித் துறையில் கார்ப்பரேட்களின் வணிக சூதாட்டத்தை முடிந்த வரை தவிர்ப்பது, எளிய பிரிவினர் ஏற்றம் பெற்று வருவதற்கான சூழல்களை உருவாக்குவது, தமிழ் மண் மற்றும் மக்களின் நலன் சார்ந்த கல்வி திட்டத்தை உருவாக்குதல் என்பனவற்றை இனி நினைத்து பார்க்க முடியாதவாறு நிலைமை சென்று கொண்டுள்ளது என்பது தான் கவலையளிக்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time