பாஜகவின் விருப்பம் நிறைவேறியுள்ளது…!

-அஜிதகேச கம்பளன்

அடி பணியாத மனோபாவம், அறிவார்ந்த அணுகுமுறைகள், திராவிட இயக்க பற்று  ..போன்ற இயல்புகளுடைய பி.டி.ஆருக்கும் திமுக தலைமைக்கும் இடையே பதவி ஏற்றது முதல் ஒரு பனிப்போர் நிலவி வந்தது எனினும், பிடிஆரை நிதி அமைச்சிலிருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே காய் நகர்த்தியது பாஜக!

எத்தனையோ பல பின்னடைவுகளுக்கு இடையிலும், தன் சுயமரியாதைக்கு பங்கமில்லாமல் பி.டி.ஆர் கம்பீரமாக பவனி வந்த காலங்கள் வெறும் கனவாய், பழங்கதையாகிப் போனது! இந்த மனிதரை எப்படி புரிந்து கொள்வது?

இவர் சுயமரியாதைக்காரராக, அநீதியை எதிர்த்து உரக்கப் பேசுபவராக, பணம் கொடுத்து ஓட்டு பெறாமல் ஜெயித்தவராக தோற்றம் காட்டிய காலம் ஒன்று இருந்தது! ஆகவே படித்த மக்களிடம், நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் இவருக்கு ஒரு தனி மரியாதை உருவானது.

அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு ஊழலுக்கு துணை போக மறுப்பவராக, நிதியைக் கையாள்வதில் கறார் தன்மை உள்ளவராக பி.டி.ஆர் வெளிப்பட்டார். ”அடடா! என்னே கம்பீரம்! என்னே நேர்மை..” என பலர் புளகாங்கிதப்பட்டதும் உண்மையே!

”கோவில்கள் தனியார் சூறையாடல்களில் இருந்தும், சனாதன சக்திகளீடம் இருந்தும் மீட்கப்பட்டு அரசுத் துறை நிர்வாகத்திற்கு வந்ததன் பின்னணியில் ஒரு நீண்ட நெடிய போராட்ட வரலாறே இருக்கிறது! அதை மீண்டும் அந்த தீய சக்திகளிடம் தூக்கி கொடுக்கவா ஆட்சிக்கு வந்தோம்..?” என்று பிடிஆர் பேசிய பேச்சுக்கள் பாஜகவினரை கொந்தளிக்க வைத்தது!

பிறகு, ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தொடர்பில் தமிழகம் எப்படி வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையில் மாநில அரசுகளுக்கான பங்கை மத்திய அரசு அபகரிக்கிறது’ என சிறப்பாக அம்பலப்படுத்திய போது நிர்மலா சீத்தாராமன் கோபத்தின் உச்சத்திற்கு போனார்.

அனைத்திற்கும் மேலாக பாஜக அண்ணாமலை நாளும்,பொழுதும் பிடிஆரை தாக்கினார். வானதி சீனிவாசன் பிடிஅரை வறுத்தெடுத்த காலங்கள் இருந்தன! சுப்பிரமணியசாமி பிடிஆரை வம்புக்கு இழுத்தார்! இதற்கெல்லாம் பிடிஆர் தன்னந்தனியே கம்பீரமாக பதில் கொடுத்தார். அவர் சார்பாக திமுகவில் யார்ய்ம் பேசவில்லை. அண்ணாமலையின் ஆட்கள் மதுரையில் பிடிஆரை தாக்க முயன்ற போது ஸ்டாலின் இரண்டு நாள் மெளனத்திற்கு பிறகே வாய் திறந்தார்.

பி.டி.ஆர் ஒரு பெரிய மனிதர்,  மேலை நாட்டுக் கல்வி கற்றவர், அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகள் வகித்தவர். அந்த வகையில் அடிமை அரசியலை விரும்பாதவர்! வெளிப்படையாவர்..என்றெல்லாம் நம்பியவர்கள் அவர் மீது அனுப்தாபத்துடனே அனைத்தையும் பார்த்து வந்தனர். ஆனால், அனைவர் முகத்திலும் இன்று கரி பூசிவிட்டார் பிடிஆர்!

முன்பு ஒரு சமய்ம் மதுரையில் ஒரு நிகழ்வில் பேசிய பி.டி.ஆர்.தியாகராஜன்,  ”அரசியலுக்கு பலர் பல காரணத்திற்காக வருகிறார்கள். சிலர் சுயநலத்திற்கு, சிலர் பொதுநலத்திற்கு கொள்கைக்காக, சில விளைவுக்காக வருவார்கள். ஆனால், அடிப்படையில் திராவிட தத்துவத்தோடு, ஒரு சமுதாயத்தை எந்த வழியில் நடத்தினால் அவர்களுக்கு கல்வி, பொருளாதார பங்கு கிடைக்குமோ அந்த வகையில் அரசாங்கத்தை இயக்க முடியும் என அரசியலுக்கு வந்தவன் நான். தத்துவம் பேசுபவனுக்கும், சட்ட திட்டங்களை உருவாக்குபவனுக்கும் இணைப்பு இல்லாமல் போகிறது” என்று பேசியது இன்று பொய்த்துவிட்டது.

மதுரையில் பிடிஆர் ஆதரவாளர்கள் அண்ணாமலைக்கும், சுப்பிரமணியசாமிக்கும் எதிராக ஒட்டிய போஸ்டர்

அவமானங்களுக்கு மேல் அவமானம்!

பி.டி.ஆரின் கம்பீரமும், சுயமரியாதை உணர்வும் திமுக தலைமையை வெகுவாக உறுத்திக் கொண்டே இருந்தது! சுய சிந்தனையுள்ளவன் ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பது நமக்கு சரிப்பட்டு வராதே..! அதனால் தான் நிதி அமைச்சர் பொறுப்பை கொடுத்த போதும் அவருக்கு பலவிதங்களில் அசெளகரியங்களை உருவாக்கி இருக்கிறார்கள்!

தமிழக நிதித் துறைக்கு உதவிகரமாக செயல்படுவதற்கு என உள்ள பேரவை நிதிக்குழுவை சரியாக நிர்வகிக்க ‘சிறப்பு நிதிச் செயலகம்‘ என ஒன்றை ஏற்படுத்த  நாடாளுமன்ற செயலக மூத்த இயக்குனரான எம்.எல்.கே.ராஜாவை அங்கிருந்து விடுவித்து தமிழகம் அழைத்து வந்தார். ஆனால், அவரை  ஒன்பது மாதங்கள் காக்க வைத்தும்’ அவருக்கு தமிழகத்தில் பொறுப்பு தரப்படவில்லை. அவருக்கு ஒரு அலுவலகம் கூட தராமல், அந்த அதிகாரி மீண்டும் மத்திய பணிக்கே திரும்பும் நிலையை உருவாக்கி, பி.டி.ஆர் திட்டத்தை முற்றாக முடக்கிவிட்டனர்!

இதே போல மதுரையிலும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இணக்கமான உறவு இல்லை என்பது தெரிய வருகிறது!

பதவி காலத்தில் உருப்படியாக பல விஷயங்களை செய்ய நினைத்த போதும் எல்லாவற்றுக்கும் முட்டுக் கட்டைகள் போட்டனர். உதாரணத்திற்கு அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலான முக்கியமான முதலீட்டு திட்டம் பற்றி முயற்சித்தார். ஸ்டாலின் அதை பொருட்படுத்தவில்லை.

திமுகவிற்குள் ஸ்டாலின் குடும்ப ஆதிக்கமும், அவர்கள் அரசு கஜானாவை சுரண்டி கொழுப்பது குறித்தும் ஒரு நேர்மையான நிதி அமைச்சருக்கு சில நியாயமான கோபங்கள் இருக்கத் தானே செய்யும். அதைத் தான் அந்த மனிதர் தனிப்பட்ட ஒரு உரையாடலில் வெளிப்படுத்தி உள்ளார்! இது ஒன்றும் குற்றமல்ல. இது மனித இயல்பு தான்! ஆனால், குறுமதி கொண்ட அந்த தரப்பு திமுகவை எதிர்க்க, பிடிஆரின் பேச்சை ஓரு ஆயுதமாகமாக்கிவிட்டது.

இதில் இருந்து தான் பிடிஆரின் சரிவு தொடங்கியது! இதற்கு அவர் விளக்கம் சொல்லும்படியான சூழ்நிலை உருவானது. ஸ்டாலின் குடும்பத்தின் காயத்தை ஆற்றவும், அவர்களை மகிழ்விக்கவும் திமுக அரசு ஊழலின் நடுநாயகமாகத் திகழும் முதல்வரின் மருமகன் சபரீசன் தான் தனது வழிகாட்டி என எப்போது பிடிஆர் சொன்னாரோ அப்போதே அவரது மதிப்பு, மரியாதை மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் பாரம்பரிய பெருமைகளும் படுகுழிக்குள் தள்ளப்பட்டுவிட்டன!

கம்பீர மனிதன் தற்போது காமெடி பீஸானார்!

இவர் யோக்கியமனவர் என்றால், அவருக்கு ஊழலில் திளைக்கும் திமுக அமைச்சரவையில் என்ன வேலை? அந்தக் குடும்பத்தினர் ஊழலில் திளைப்பதை, அதுவும் மிகக் குறுகிய காலத்தில் 30.000 கோடிகள் கொள்ளையடித்திருப்பது என்றைக்கு அவருக்கு தெரிய வந்ததோ, அப்போதே அங்கிருந்து நடையை கட்டியிருக்க வேண்டாமா ஒரு உத்தமர்?

பிடிஆரை வெளியேற்றினால் தங்களுக்கு கெட்ட பெயர் என்பதால் தான் அவர்கள் இவரை உள்ளிருக்க வைத்தே டம்மி பீஸாக்கிவிடலாம் என முடிவெடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான் நிதி அமைச்சர் என்ற முக்கியத்துவமான பதவி பறிக்கப்பட்டு இருப்பதாகும்.

இன்னும், இன்னும் கூட அவருக்கு வருங்காலத்தில் அவமானம் காத்திருக்கிறது என்பதே என் அனுமானமாகும்! கருணாநிதி எத்தனையெத்தனை அண்ணா காலத்து முன்னணி தலைவர்களை கட்சிக்குள் வைத்து காயடித்தார்! நெடுஞ்செழியன், மதியழகன், இராம.அரங்கண்ணல்.. எல்லாம் தெறித்து வெளியேறினார்களே..! அன்றைக்கு சுயமரியாதையை உயிர் மூச்செனக் கருதினர். இன்றைக்கு சுயமரியாதையை மயிர் போச்சு..விடு என கைவிடுகின்றனர்!

கட்டுரையாளர்; அஜிதகேச கம்பளன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time