முன்னெப்போதையும்விட  காந்தி பெரிதும் தேவைப்படுகிறார்  – பிரசாந்த் பூஷன்.

தமிழாக்கம் - மருத்துவர் ஜீவா

இன்றைய சூழலில் காந்தி என்ன செய்திருப்பார் என பிரசாந்த் பூஷன் பேசுகிறார்.

மார்டின் லூதர் கிங் தனது நோபல் விருது ஏற்புரையில் அமெரிக்காவின் நீக்ரோ இன மக்கள் இந்திய மக்களின் முன்மாதிரியைப்பின்பற்றி, வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் நடத்தி வென்றனர். அகிம்சை என்பது வலிமையற்ற மலட்டு ஆயுதமல்ல, மாறாக ஒரு வலிமைமிக்க அற ஆயுதம்! இந்த வலிமை மகத்தான சமூக மாற்றத்தை உண்டாக்க வல்லது என்பதை  நிரூபித்துள்ளது”  என்றார்.  இந்த வலிமை மிக்க சமாதான வழியிலான எதிர்ப்பு பல ஆண்டுகள் முன் வன்முறை மோதல்களில் மூழ்கிக் கிடந்த அமெரிக்கா  கறுப்பின மக்களுக்கு விடுதலை தந்தது.  அகிம்சை வழி ஒத்துழையாமை இயக்கம் எனும் காந்தியின் போராட்ட முன்மாதிரியே பெரும் வெற்றியைத் தந்தது.

காந்தியின் லட்சியங்களும், போதனைகளும் தற்போது இந்தியாவுக்குப் பொருத்தமானதாக இருப்பது போல் வேறெப்போதும் இருந்ததாகக் கூறமுடியாது. அவரது உன்னத கொள்கைகள், அவர் வளர்த்த லட்சியங்கள் இன்று பெரும் அழிவுக்கு உள்ளாகிக் கொண்டுள்ளன சிறுபான்மையினரும், பெண்களும், தலித்துகளும் வீதிகளிலும், ஊடகங்களிலும் பெரும் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். காவல்துறையும், அரசும், நீதிமன்றமும் கூட அவர்களுக்குப் பாதுகாப்பாக இல்லை. அவர்களுக்கு எதிரான சட்டங்கள் மதவெறி கொண்ட அரசால் நிறைவேற்றப்படுகின்றன.

உண்மை, பொதுவாழ்வு, அறம், அறிவியல், பகுத்தறிவு என ஒவ்வொன்றும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன! எதிர்ப்புகள் எதையும் உணர்த்தவும், போராடவும் வழியில்லை. நீதியற்ற சட்டங்கள் NSA,UAPA. போன்றன நம்மை அச்சுறுத்துகின்றன. எதிர்க் கருத்து கொண்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர்,  வழக்கு தொடுக்கப்படுகிறது, கொடும் தாக்குதலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்படுகின்றனர். ஹர்ஷ மந்தர், அபூர்வானந்தா, யோகேந்திரயாதவ், போன்றோர் பொய்யான வழக்குகளில் சேர்க்கப்பட்டு வாயடைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. வலதுசாரி மதவாத இயக்கங்கள் கட்டுப்பாடின்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஊடகங்கள் தாக்கப்படுகின்றன, மிரட்டப்படுகின்றன. விலைப்பேசப்படுகின்றன. அரசியல் நிர்பந்தம் பொதுவான எழுத்தாளர்களை,சார்பு நிலையற்றவர்களை மிரட்டுகிறது சட்டம் சிலரின் நலனுக்காக வளைக்கப்படுகிறது.

அரசின் சுதந்திரமான அமைப்புகள் கூட உரிமைகள் பறிக்கப்பட்டு, பலமிழந்து போகின்றன தேர்தல் ஆணையம் CAG, NHRC, CBI லோக்பால், காவல்துறை ஆய்வு நிறுவனங்களான NIA, ED, NCB, ஆகியவை ஆளும் கட்சியின் கையாட்களாகி, எதிர்க் கட்சியினரை, கருத்தாளர்களை ஒடுக்கப் பயன்படுகின்றன. சட்ட விரோதிகள், கிரிமினல்களுக்குச் சுதந்திரமாக நடமாடும் உரிமை தந்து ஜனநாயகம் கேலிப்பொருளாக்கப்பட்டு வருகிறது.

காந்தி இன்று இன்றிருந்தால்,உத்வேகமும்,ஆவேசமும் கொண்டு செயலாற்றியிருப்பார். பிரிட்டிசாரிடமிருந்து நாடு விடுதலை பெற்று, 70 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது உருக்குலைந்துள்ளது.பொய்மையும்,வஞ்சகமும்,வன்முறையும் நிறைந்ததாக இந்த சமூகம் மாற்றப்பட்டிருக்கிறது கண்டு, காந்தி உண்மையிலேயே பெரும் வேதனைக்கு உள்ளாகியிருப்பார்.இந்த அவலங்களை எதிர்த்து உண்ணா நோன்பு  துவங்கியிருப்பார். நிச்சயமாக அமைதியாக இருந்திருக்கமாட்டார். அவரது நீதி உணர்வால் பாஜக மற்றும் இந்துவெறி அமைப்புகள்,அதன் ஐ.டிகுழு,இதற்கு ஒத்தூதும் ஊடகங்கள்,இவர்களின் பொய் பிரச்சாரங்கள், வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவற்றை எதிர்த்திருப்பார்.இஸ்லாமிய எதிர்ப்பு,மதப்பகை ஆகிய நியாயமற்ற,மனிதாபிமானமற்றவற்றை வளரவிட்டிருக்கமாட்டார். நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக மக்களைத் திரட்டிப் போராடியிருப்பார்.

பல்வேறு மொழிகள்,மதங்கள்,பண்பாடுகள் நமக்குத் தடையல்ல. அவையே எழிலும்,வலிமையும் சேர்க்கும் தொன்மைச் செல்வங்கள்! இந்து ராஷ்டிரம் என்பது பேரழிவின் சின்னமே! மூட நம்பிக்கை, கண்மூடித்தனமான போக்கு ஆகியவை நமது அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகிவிடும். விமர்சனம், உரையாடல், விட்டுக் கொடுக்கும் மனப்போக்கு,இருப்பதைப் பகிர்ந்து கொள்ளல் ஆகியவை சமூக வளர்ச்சியின் அடிப்படைப் பண்புகளாகும். உண்மை,பொய் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறியத் திறந்த மனப்போக்கு தேவை!

பிரிட்டிஷ் அரசின் சட்டம் அப்படியே மாற்றப்படாமல் சுதந்திர இந்தியாவில், இந்திய பீனல் கோடு124(a) என்பதாகத் தொடர்கிறது.இது விமர்சிக்கிற அரசியல் அமைப்புகளை நசுக்கவும்,மக்களின் சுதந்திரத்தை நசுக்கவுமான சட்டங்களின் ராஜாவைப் போன்றதாகும்!  இந்தியா விடுதலைப் பெற்ற பின்னும் இது தொடர்வது வியப்பூட்டுவதாகும்!  இதைத் தூக்கி எறிய வேண்டும்.சுதந்திரமாக விமர்சித்துப் பேசுவோரைச் சிறையிடுவது. அரசை விமர்சிக்கவும், எதிர்க்கவுமான ஜனநாயக உரிமைகளை மறுப்பது மக்களாட்சித் தத்துவத்திற்கே எதிரானதாகும்..

நீதித்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறு எனத் தண்டிக்கும்  காலனியாதிக்க நடைமுறை விடுதலை இந்தியாவிலும், தொடர்வது தவறானது. நீதித்துறையின் குறைபாடுகளைக் கூறுவதன் மூலமே பெரும்பாலான மக்களுக்கு நீதி கிடைக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும் வழிவகுக்கும். கல்வியறிவற்ற, ஏழை மக்களை நீதி சென்றடையவில்லை.

தேசியப்பாதுகாப்பு சட்டம் என்பது அரசியல், சமூகத் தலைவர்களான எவ்விதக் காரணமுமின்றிக் கைது செய்யவும் காலவரையின்றிச் சிறையில் வைக்கவுமான அராஜக உரிமையை அரசுக்கு வழங்குகிறது. இதை எதிர்த்து காந்தி போராடியிருப்பார்.

’மக்களின் சுதந்திரம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து’ என அரசு கருதுகிறது. தேச பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரிலான சட்டவிரோதமான தடுப்புக்காவல் சட்டத்தையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் கண்டு கொதித்திருப்பார் காந்தி. இந்த சட்டங்கள் சமூகத்திற்காகவே வாழும் அப்பழுக்கற்ற தலைவர்களை, மனித உரிமை போராளிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. கைது செய்யப்பட்ட இவர்களுக்குப் பிணை விடுப்புத் தரவும் மறுக்கிறது அரசு! இன்று நம் சிறைகளில் விசாரணையின்றி, தண்டனைக்காலம் முடிந்தும், எவ்வித இரக்கமுமின்றி  ஆயிரக்கணக்கானோர் பல்லாண்டு காலமாகச் சிறையில் வாடிக் கொண்டுள்ளனர்.

நீதியின் பெயரால் நடக்கும் சட்டவிரோத அராஜகங்களை அவர் எதிர்த்துப் போராடியிருப்பார். அரசின் நேர்மையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மக்களை வாட்டி, வசதிமிக்க சிலரை வாழ்விப்பதாக இருப்பதை அவரால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வழியின்றி, ஊரடங்கை அறிவித்த பாஜக அரசின் செயலானது, ’எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என  வெகுண்டிருப்பார்.அரசின் மனிதாபிமானமற்ற, கூச்சநாச்சமற்ற முதலாளித்துவ ஆதரவு போக்கை எதிர்த்து சத்தியாகிரக அறப்போரை அறிவித்திருப்பார்.

இதற்கெல்லாம் உச்சமாக ஒன்றன்பின் ஒன்றாக மக்கள் விரோத சட்டங்களை,எந்தவித நாடாளுமன்ற விவாதங்களுமின்றி,இந்த அரசு கொண்டு வருவதானது நெருக்கடி நிலையையும், ஹிட்லரின் பாசிச ஆட்சியையும் விஞ்சுவதாக உள்ளது எனக் கூறியிருப்பார். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை முடக்கி, அவர்களைப் பெரிய முதலாளிகளின் அடிமையாக்கும் விவசாயச் சட்டத்தை ஜனநாயகமற்ற முறையில் அரசு அமல்படுத்தியுள்ளது. இனி விவசாயிகள் கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கப்படுவர். நாட்டின் ஜனநாயகப் பண்பு, நீதி ஆகியவை ஒவ்வொன்றாகக் கைவிடப்படுவது ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்தாக முடியும்.

இந்த மோசமான அரஜாகச் சூழலை காந்தி இவ்வாறு எதிர் கொண்டிருப்பார். இந்த நேரத்தில் மக்களை ஒன்றுபடுத்தி திரட்டிப் போராட ஒரு காந்தி தேவை! வன்முறை, அடக்குமுறைச் சட்டங்களால் மக்களை நெடுங்காலம் அடக்கமுடியாது. அன்னியர் கொடுங்கோன்மையை எதிர்க்க முடிந்த மக்கள் இந்த இந்தியக் கொடுங்கோன்மையையும் எதிர்த்து எழுவர். அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருப்பது நமது அடிமை உணர்வால் தான்! மக்கள் விழிப்புணர்வு பெற்றால், அவர்களை எந்த சங்கிலியாலும் கட்டிப் போட முடியாது.

எப்படி பிரிட்டிஷ் அட்சியை எதிர்க்க முதலில் அச்சத்தை விட்டொழிக்க வேண்டும் என்றாரோ, அது போலக் கொரானா பெயரைச் சொல்லி மக்களை வீட்டில் முடக்கி,இஷ்டத்திற்கும் ஆட்டம் போட்ட ஆட்சியை எதிர்த்திருப்பார்.சி.ஏ.ஏ.விற்கு எதிராக மாபெரும் சட்ட மறுப்பு இயக்கத்தை மக்களைத் தெருவில் திரட்டி நடத்தியிருப்பார். பல கோடி அகிம்சா போராளிகளைத் திரட்டி சிறை செல்லும் போராட்டங்கள் நடத்தியிருப்பார்.

’’அச்சுறுத்தும் இருளிலும்,வலிமைமிக்க எதிர்ப்புகள் நடுவிலும் நமக்கு வழிகாட்டியதோடு, துணிவுடன் முன் நடந்து சென்றவர் காந்தி.’’ என ஒரு நூலுக்கு எழுதிய முன்னுரையில் கோபாலகிருஷ்ண காந்தி எழுதினார். காந்தியின் அஞ்சாமையை வரிந்து நமதாக்கிக் கொள்ள வேண்டிய காலமிது!

அச்சத்தால் நீதியைக் கைவிட்டவரல்ல காந்தி! தண்டனைகள் அவரை தயங்கச் செய்ததில்லை. ‘’வலிமை என்பது தசையின் வலிமையல்ல,மனதின் வலிமையே’’ என்றார். இத்தனையண்டுகளுக்கு பின்பும் வறுமையிலும்,அறியாமையிலும்,அடக்குமுறையிலும் உழலும் மக்களின் துயரம் நம்மை வெகுண்டெழுந்து போராடச் செய்யட்டும். பாசிசம் நாட்டை மூச்சுத் திணற வைத்துக் கொண்டுள்ளது.

காந்தியின் அகிம்சையும்,சத்தியாகிரகமும்.ஒத்துழையாமையும் நமது ஆயுதமாகட்டும். நீதியின் மீது அசையாத நம்பிக்கை, சத்தியாகிரகத்திற்காக எத்துயரையும் ஏற்கும் துணிவு நம்மை வழி நடத்தட்டும். முன்னெப்போதையும் விட காந்தி தற்போது நமக்குப் பெரிதும் தேவைப்படுகிறார்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time