கூர்மையான அறிவாற்றல், வியக்க வைக்கும் பேச்சாற்றல், எழுத்தாற்றல், வரலாறு குறித்த நுட்பமான பார்வை, மக்களை ஒருங்கிணைக்கும் தலைமைப் பண்பு ஆகிய அருங்குணங்களைக் கொண்ட ஷர்கில் இமாம்(35) பாஜக அரசின் பார்வையில் ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி! மூன்றாண்டுகளாக சிறையில் உழல்கிறார்! ஏன்?
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவரான ஷர்ஜீல் இமாம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தடா, பொடா போன்ற கறுப்புச் சட்டங்களின் தற்போதைய வடிவமான ஊபாவின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல்துறை தன் மீது சுமத்திய குற்றப்பத்திரிகையையே தனது ஆய்வேட்டிற்குப் பயன்படுத்தி வருகிறார் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவரான ஷர்ஜீல் இமாம்.
பாபர் மசூதி இடிப்பு, ராமர்கோவில், மாட்டுக்கறி, ஹிஜாப், குடியுரிமை இரத்து போன்ற காரணங்களைச் சொல்லி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ளவும், தங்கள் இருப்பிற்காகவும் இசுலாமியர்கள் போராடுகிறார்கள். அவர்களின் அரசியல் பார்வை கூர்மை அடைகிறது; தலைவர்கள் உருவாகிறார்கள். அப்படி உருவான ஒருவர்தான் பீகாரைச் சார்ந்த ஷர்ஜீல் இமாம்.
பம்பாய் ஐஐடியில் படித்து மென்பொருள் பொறியாளராக இருந்த அவர், வரலாறு படிக்கும் ஆர்வத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு, ஜேஎன்.யூவில் சேர்ந்து படித்தார். எம்ஃபில் பட்டம் வாங்கினார். தற்போது புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் பிஎச்டி ஆய்வு மாணவர். விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள், தேர்தல் முறை, வகுப்புக் கலவரங்கள் போன்றவை குறித்து வித்தியாசமான கோணத்தில் பேசி வருகிறார்.
நாடு விடுதலை அடைந்ததில் இருந்தே சிறுபான்மையினர் மீது ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை (systematic oppression) இருக்கிறது என்கிறார். அபுல் கலாம் ஆசாத், மகாத்மா காந்தி, காங்கிரஸ், இடதுசாரிகள்… என எவரும், எதுவும் அவரது கூர்மையான விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை.
2019 ல் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக, இசுலாமியருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. இசுலாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை இயற்றியது. இதனை எதிர்த்து புது தில்லியின் ஷாகீன் பாக் பகுதியில் அமைதியான வழியில் நூறு நாட்களாக நடந்த போராட்டத்தைக் கலைக்க முடியாமல் மோடி அரசு தத்தளித்தது. அந்தப் போராட்டத்தை ஒட்டி ஷர்ஜீல் இமாம், அலிகர் பல்கலைக்கழகத்தில் பேசிய பேச்சுக்காக தில்லி, உத்திரப் பிரதேசம், மணிப்பூர், அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஐந்து பாஜக அரசுகள் தேச துரோக வழக்குப் பதிவு செய்தன. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் தில்லி காவல்துறையிடம் சரணடைந்தார். இப்போது தேசத்துரோக வழக்கில் அவருக்கு பிணை கிடைத்துள்ளது.
ஆனால் வட கிழக்கு தில்லியில் கலவரத்தை தூண்டினார் என்று சொல்லி, தில்லி அரசு ஊபா சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கில் 1,200 நாட்கள் கடந்தாலும், அவருக்கு பிணை கிட்டவில்லை. ஏற்கனவே இருந்த தடா, பொடா போன்ற சட்டங்களில் தீவிரவாதம் பேசும் அமைப்புகளைத்தான் தடை செய்ய முடியும். ஆனால் பாஜகவால் திருத்தப்பட்ட ஊபா சட்டத்தின் கீழ் தனிநபரைக் கூட தீவிரவாதி என்று சொல்லி கைது செய்ய முடியும். “உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரான் ஹைதர், குல்ஃபிஷா பாத்திமா போன்ற முஸ்லிம் மாணவச் செயல்பாட்டாளர்களை சிறையில் அடைத்ததன் மூலம் எங்களை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று பாஜக எச்சரிக்கிறது” என்கிறார் அவரின் எழுத்துகளை மொழிபெயர்த்த அஹ்மது ரிஸ்வான்.
இவர் சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த மாதம்தான், அதாவது பிப்ரவரி 2020 ல்தான் தில்லியில் கலவரம் நடந்தது. அந்தக் கலவரத்தை முன்னெடுத்த கபில் மிஷ்ரா போன்ற இந்துத்துவாவாதிகள் இன்னமும் சுதந்திரமாகத்தான் உலவிக் கொண்டுதான் வருகிறார்கள்.
“டெல்லியின் ஒரு நெடுஞ்சாலையை நாம் மறித்து விட்டோம். டெல்லியையும் உ.பி.யையும் ஒருங்கிணைக்கும் நான்கு நெடுஞ்சாலைகளுள் ஒன்றை நாம் மறித்து விட்டால் அது பெரிய அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகும்” என்று அவர் குடியுரிமைச் சட்டப் போராட்ட சமயத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் பேசியது இவர் மீது வழக்கு வர காரணமாயிற்று. சாலை மறியல் என்பது இந்திய அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு போராட்ட வடிவம்தான். பல அரசியல் கட்சிகள் மறியல் செய்கின்றன. அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.
மறியல் செய்ய வேண்டும் என்று பேசிய பேச்சுக்கு தேச துரோக வழக்கு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. “இசுலாமிய வெறுப்பு, தேர்ந்தெடுத்த மறதி, ஒருசார்பான பார்வை” ஆகிய காரணங்களால் இவர் சிறையில் உள்ளார் என்கிறது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் அமைப்பு. “அமலாக்கத் துறைகள் அரசியல்மயமாகி விட்டன”; எனவே ஷர்ஜீல் குறிவைக்கப்படுகிறார் என்கிறது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம். தில்லி காவல்துறை ஒன்றிய அரசின் கீழ், அதாவது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் உள்ளது.
இவரைப் போலவே குடியுரிமைப் போராட்டத்தில் சிறையில் உள்ள உமர் காலித், செய்தி சேகரிக்கச் சென்றபோது கைதான கேரளப் பத்திரிகையாளரான சித்திக் காப்பன் போன்றவர்களுக்காக மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் “லிபரல்கள், செக்யூலர்கள் எனச் சொல்லிக்கொள்வோர் ஷர்ஜீல் இமாம் போன்ற முஸ்லிம்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக நிற்கவில்லை” என்று ‘ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன ?’ என்ற நூலை வெளியிட்ட சீர்மைப் பதிப்பகம் தனது பதிப்புரையில் கூறுகிறது.
இந்த நூல் சிறைபடுத்தப்பட்ட ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் பேசியது என்ன? என்பதை விவரிப்பதோடு, பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை ஷர்ஜில் இமாமின் உரைகள் விவாதிக்கின்றன. நாம் யோசித்திராத மாற்றுப் பார்வைகளை அவை தருகின்றன. அரசியலை மக்கள் மயப்படுத்துகின்றன. இன்றைய முஸ்லிம் அரசியல் தொடர்பான பல முக்கியமான விவாதங்களை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது.
ஷர்ஜீல் இமாம் – தி வயர், க்விண்ட், ஆர்டிகிள் 14, பர்ஸ்ட் போஸ்ட் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். “முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவில்லை. அவர்களை வறுமையில் உழலவிட்டார்கள். மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் பின்தங்கியதற்கு தொடர்ச்சியாக ஆண்டு வந்த இடது முன்னணிதான் காரணம்” என்கிறார் ஷர்ஜீல் இமாம். அவருடைய பல கருத்துகள் விமர்சனத்திற்கு உரியவை; ஆனால் புறந்தள்ள முடியாதவை, பரிசீலிக்கத் தகுந்தவை. ஒரு முறை ஷர்ஜில் இமாமின் பேச்சையோ, எழுத்தையோ படிக்கவோ,கேட்கவோ நேர்ந்தால் போதும் நிச்சயம் யாரும் அவரை பின் தொடர்வர்! அந்த அளவுக்கு விஷய ஞானமுள்ளதாகவும், ஈர்ப்பாகவும் அவை உள்ளன!
ஷர்ஜீல் பேசிவரும் முஸ்லிம் அடையாள அரசியல் குறித்து அஹ்மது ரிஸ்வானிடம் கேட்டபோது, “எந்த அடையாளத்தைக் கொண்டு ஒருவன் மீது ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுகிறதோ அதனடிப்படையிலேயே போராடுவது தவிர்க்க இயலாதது. ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட அரசியல் கோட்பாட்டாளர் ஹன்னா ஆரண்டின் பிரபலமான வாசகத்தை இங்கு சுட்டிக்காட்டல் தகும். அவர் சொல்வார், ‘ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஒரு ஜெர்மானியராகவோ, உலகக் குடிமகனாகவோ, மனித உரிமைப் போராளியாகவோ அல்ல’.

சமகால அரசியலில் தலித், பெண், பாலின சிறுபான்மையர் என எந்த அடையாள அரசியலையும் தவிர்க்க முடியாது. அதே சமயம், தீவிர அடையாள அரசியல் என்பது பிரச்னைக்குரியது என்பதில் சந்தேகமில்லை” என்கிறார். இவர் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) மாநிலத் தலைவரும்கூட.
Also read
ஷர்ஜீல் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோகச் சட்டத்திற்கு பிணை கிடைத்துள்ளது. ஆனால் ஊபா சட்டத்தின் கீழ் (சட்டவிரோத தடுப்புக் காவல் சட்டம்) சிறையில் இருக்கிறார். வட கிழக்கு தில்லி வன்முறைக்கு இவர் மூளையாகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “நான் சரணடைந்த பிறகு தான் தில்லியில் கலவரம் நடந்தது. அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்” என்கிறார் ஷர்ஜீல் இமாம். ” ஷர்ஜில் இமாமின் எல்லாப் பேச்சுடனும் நான் உடன்படவில்லை” என்று சொல்லும் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ “அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்று ஷர்ஜீலுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
“பல இலட்சக்கணக்கானோர் போராடும் போது, சில நூறு பேர் அதற்கான விலையைக் கொடுக்கத் தான் வேண்டியிருக்கும்” என்று தனது கைது குறித்து திகார் சிறையில் இருந்து கொடுத்த பேட்டியில் கூறுகிறார். அவர் கௌகாத்தி சிறையில் இருந்தபோது, கொரானாவால் பாதிக்கப்பட்டார். விசாரணைக் கைதியாக ஆண்டுக் கணக்கில் ஒருவரை சிறையில் வைத்திருப்பதை எந்த நாகரிகச் சமுதாயமும் அனுமதிக்காது!
வெறுப்பு அரசியலை தீவிரமாக முன்னெடுத்த பாஜக, கர்நாடகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தோற்றுள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!
கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்
I was recommended this website by my cousin. I’m not sure whether or not this post is written via him as nobody else know such unique about my problem. You are incredible! Thanks!