சர் ஆர்தர் காட்டன் (15-05-1803 முதல் 24-07-1899 வரை!)
‘இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ எனப்படும் சர் ஆர்தர் காட்டன் சுமார் 50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்வளத்தை உருவாக்கி சோறுவளம் பெருக பாடுபட்டவர்! “இந்தியாவின் வறுமையைப் போக்க முக்கிய தீர்வு, நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவது தான்” என நடைமுறைப்படுத்தியவர். இப்படியும் ஒரு சாதனையாளரா..?
உலகத்தின் நாகரீக தொட்டில்கள் என்று ஆற்றங்கரை சமவெளிகளை வரலாறு குறிப்பிடுகிறது. மனிதன் வேளாண் சமூகமாக வாழ ஆரம்பித்த தருணத்தில் மழை நீரை முறைப்படுத்தி சேமித்து பயன்படுத்தியதில் தான் அவர்களின் கலாச்சார வளமை வெளிப்பட்டது.
நமது தமிழகத்தின் நீர்ப்பாசன மேம்பாட்டு வரலாறு 8,000 ஆண்டுகள் பழமையானது. சங்க காலம் தொடங்கி இதற்கான ஆதாரங்கள் பல உள்ளன கல்லணையில் அணைக்கட்டிய கரிகாலச் சோழனின் காலமாகிய முற்காலச் சோழர்களின் காலம் தொடங்கி பின்னர் பல்லவர், பிற்காலச் சோழர்கள், நாயக்க மன்னர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என்று நமது மண்ணை ஆண்டவர்களின் பங்கு இதில் நீண்டு கொண்டே செல்கிறது.
இத்தகைய வரிசையில் இந்தியா அதன் இயற்கை வளங்களான ஆறுகளையும், ஏரிகளையும், முழுமையாக பயன்படுத்தினால்தான், இந்திய மக்கள் தற்சார்புடன் பொருளாதார மேம்பாடு அடைய முடியும் என்பதனை தனது வாழ்நாள் தாரக மந்திரமாக கொண்டு, தனது வாழ்நாளில் பெரும் பகுதியை (70 ஆண்டுகளுக்கு மேல்) இந்திய மண்ணின் நீர்பாசனத்திற்கும், மக்களுக்கும் செலவிட்ட மாமனிதர் தான் சர் ஆர்தர் காட்டன் ஆவார்கள்
இவர் இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிக்கனமாகவும், விரைவாகவும், சரியான வகையில் பல்வேறு அணைத்திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்தி தந்ததால் இவர் வடிநிலச்சமவெளியின் சிற்பி (DELTA ARCHITECT) என்று போற்றபட்டார்.
1820 முதல் 1875 வரையிலான 55 ஆண்டு காலங்கள் தென்னிந்தியாவின் நீர்பாசனத்தின் பொற்காலம் என்றே கூற வேண்டும். சர் ஆர்தர் காட்டன் அவர்கள் அந்திய மண்ணில் பிறந்தாலும் நமது மண்ணையும் மக்களையும் சரியான விதத்தில் புரிந்து கொண்டு செயலாற்றிய பேரன்பு கொண்ட மனிதர் இவர்.
காட்டனின் சகோதரர்கள் அனைவரும் இந்திய ராணுவ பணியில் வேலை செய்தமையால், காலம் இவரை எளிமையாக 17வது வயதிலேயே ராணுவத்தில், சர்வே உதவியாளராக பணியாற்ற வழி செய்தது.
இவர் ஈடுபாட்டுடன் தனது பணிகளை செய்தமையால் அடுத்தது பாம்பன் நீரினைப் பணிகள் மற்றும் ஏரிகள் பராமரிப்புகள் என்று இவரது வாழ்க்கை நகர்ந்தது
காட்டன் அவர்கள் ஏரிகளில் இறங்கி நிறைய ஆராய்ச்சிகளை செய்து தமிழர்களின் நீர்மேலான்மை அறிவை தன்னுள் வளர்த்துக்கொண்டார். இதன் காரணமாக தென்மண்டல ஏரிகள் பாசன பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். தென் தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகளை செப்பனிட்டுள்ளார்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நீர் பாசன அறிவை உலகிற்கு பறைசாற்றி கொண்டிருக்கும் கல்லணைக்கு, இயற்கை இவரை கொண்டு விட்டது தனது 28ம் வயதில் கிடைத்த இந்த பெரும் வாய்ப்பின் மூலமாக பல்வேறு நீர்பாசன நுட்பங்களை காட்டான் அறிந்துகொண்டார்.
மேலும் கல்லணையின் சிறப்பை உணர்ந்த காட்டன் அதை GRAND ANICUT என்று போற்றுகிறார். கல்லணை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு புதிய வாய்க்கால்களை அமைத்து காவேரி பாசன நிலங்களின் அளவை மும்மடங்காக நமக்கு வழங்குகிறார். கல்லணையை தற்போது நாம் காணும் வகையில் மேம்படுத்தி வளமூட்டியவர் காட்டன் ஆவார்.
காவிரியின் வெள்ளத்தைப் பிரித்து முறைப்படுத்தி முக்கொம்பு அணையை திருச்சிக்கு மேற்கே கட்டினார். இந்த முக்கொம்பு அணையை கட்ட அன்றைய தேதியில் ரூபாய் 2,00,000 ரூபாய் அரசிற்குக்கு செல்வாகியுள்ளது.
முக்கொம்பு அணையை கட்டி முடித்த பின் காட்டன் அவர்கள் கூறிய வார்த்தைகள்: இவ்வணை கட்ட தற்போது 2 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது, ஆனால் இவ்வணையின் பெரும்பயணை எதிர்கால தலைமுறை உணர்ந்து கொண்டாடும் என்று கூறினார்.
மேலும் கொள்ளிடத்தில் கடலுக்கு வேகமாக செல்லும் நீரை தடுத்து 2 லட்சம் ஏக்கர் பாசனம் பெரும் வகையில் கீழணை (அணைக்கரையை) கட்டி முடித்தார். மேலும் சேத்தியாதோப்பு அணைக்கட்டையும் இக்காலத்தில் வடிவமைத்தார்.
1835 காலகட்டங்களிலேயே மேட்டூர் அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணை இரண்டிற்கும் வரைவு திட்டங்கள் தீட்டி மைசூர் மற்றும் திருவிதங்கூர் அரசுகளுடன் பேச்சுவார்த்தை செய்தார். காலமும், பொருளாதரமும், ஒத்துழைக்காததால் இவரது காலத்தில் இவ்விரண்டு அணைகலும் கட்டப்படவில்லை
ஆனால் 90 ஆண்டுகள் கழித்து மைசூர் சமஸ்தானம் அனுமதி வழங்கிய பிறகு காட்டன் அவர்கள் தீர்மானித்த அதே இடத்தில் மேட்டூர் அணை பின்னர் கட்டப்பட்டது!
இதே போல 1870களின் இறுதியில் ஏற்பட்ட தாது வருட பஞ்சத்திற்கு பிறகு முல்லைப்பெரியாறு அணைத்திட்டத்தை, காட்டனின் வரைவு திட்டத்தின் அடிப்படையில் காட்டனுக்கு பிறகு, சென்னை மாகாணத்தின் பொதுப்பணித் துறையின் தலைமை பொறியாளராக இருந்த ”பென்னி குயிக்” அவர்கள் கட்டி முடித்து, தென் மாவட்ட மக்களின் நெஞ்சில், நீங்கா இடம்பெற்றார் என்பது தமிழர்கள் அறிந்த உண்மையாகும்
1837ல் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரையிலான இந்தியாவின் முதல் ரயில் இன்ஜினை வடிவமைத்து இயக்கிய பெருமையும் காட்டனையே சாரும். STEAM இன்ஜின் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், தனது கால் பகுதியில் பலத்த காயத்தை அடைந்த காட்டன், தனது வாழ்நாள் முழுவதும் இந்த வலியுடன் வேதனைப்பட்டார் என்பதயும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய வலியுடன் தான் காட்டன் நடந்தும், குதிரையிலும் பயணித்து பல்வேறு அணைத்திட்டங்களை வடிவமைத்தார். சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகங்களில், காட்டன் பங்கு பெரிதும் உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கி நாடா முதல் நமது பரங்கிப்பேட்டை வரை இருந்த நீர்வழி போக்குவரத்திற்கு பெரிதும் பயன்பட்ட பக்கிங்காம் கால்வாய் விரிவாகத்தில் காட்டன் பணியாற்றியுள்ளார்.
காட்டன் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நல குறைவாலும் மற்றும் கால் வலியாலும் அவதிப்பட்டு கொண்டுதான் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் தனது 38 வயதில் ஆஸ்திரேலியாவைசேர்ந்த, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். காட்டனின் மனைவி காட்டானுக்கு பெரும் உதவியாகவும், அவர் அணைகள் கட்டும்போது தனது குடும்பத்தின் சொத்தை விற்றுக் கொடுத்தும் பல்வேறு உதவிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தனது 40 வயது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு நீர் மேலாண்மையை ஆராய்ந்து பட்டறிவு பெற்றுக் கொண்டார்.
இவ்வாறு தான் பெற்ற அறிவை கொண்டு ஆந்திர மாநிலத்தில் 1849ல் கிருஷ்ணா நதியின் குறுக்கே விஜயவாடாவில் அணையை கட்டினார். இவ்வணையானது தற்போது பிரகாசம்பேரெஜ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.இதற்கடுத்து தனது வாழ்நாளின் உச்சபட்ச சாதனையாக கோதாவரி நதியின் குறுக்கே ராஜமுந்திரியில் தவ்லேஸ்வரம் என்ற பகுதியில் அணை கட்டி, ஆந்திர மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றார்.
ராஜமுந்திரி பகுதியில் கோதாவரி ஆறானது 4 கிலோ மீட்டர் அகலமும், 40 அடி ஆழமும் கொண்டதாகும். வெள்ள காலத்தில் நமது காவிரியை போல பத்து மடங்கு தண்ணீர் செல்லக்கூடியது ( 30 லட்சம் கன அடிகள் தண்ணீர் ஓடகூடிய ஆறு கோதாவரி ஆகும்).
இத்தகைய பெரும் வெள்ளத்தினால் பாதியிலேயே காட்டன் அவர்கள் கட்டிய அணையானது உடைந்து, பின்னர் பொருளாதாரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஆந்திர மக்கள் தங்களாலான பொருள் உதவியை செய்தும், காட்டன் தனது குடும்ப சொத்துக்களை விற்றும் கோதாவரியின் குறுக்கே அணையை கட்டி முடித்தார் என்பது வரலாறு
எனவே தான் கோதாவரி பாயும் மாவட்டங்களில் காட்டன் அவர்களுக்கு 3000-க்கும் மேற்பட்ட சிலைகளை அமைத்து ஆந்திர மக்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் ராஜமுந்திரியில் காட்டன் அவர்கள் அணைக்கட்ட பயன்படுத்திய உபகரணங்கள் அடங்கிய மியூசியம் உள்ளது மேலும் அவரது பெயரில் பூங்கா மற்றும் பள்ளிக்கூடங்கள் ராஜமுந்திரியில் உள்ளது.
கோதாவரி அணை கட்டி முடித்த பிறகு காட்டன் அவர்கள் கூறிய வார்த்தைகள்: மிகப்பெரிய போராட்டங்களுக்கும், தடைகளுக்கும், பிறகுதான் மிகப்பெரிய விஷயங்களை சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
காட்டன் அவர்களின் மகன் ராஜமுந்திரி பகுதியில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். அவரது மகனின் சமாதி ராஜமுந்திரியில் கோதாவரி ரயில் பாலத்திற்கு அருகில் தற்போதும் உள்ளது.
பின்னர் 1853ல் இவரது சாதனைகளை கண்டு கொண்ட ஆங்கிலேய அரசு, சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறையின் முதல் தலைமை பொறியாளராக பதவி உயர்வு கொடுத்து சிறப்பித்தது
இதன் பிறகு 1858ல் ஒரிசாவின் கடற்கரை பகுதியில் நீர் பாசன திட்டங்கள் மற்றும் 1863ல் மத்திய பிரதேசத்தில் சோனு நதி பாசன திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
1870 இல் தூங்கபத்ரா நதியின் பாசனதிட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார், மேலும் பல்வேறு நீர்பாசன பணிகள் என்று இவரது பணிகள் விரிவடைந்து கொண்டே சென்றது.
பணி ஓய்வுக்கு பிறகு நமது சென்னை பல்லாவரம் கான்டோன்ட் மென்ட் பகுதியில் சில காலம் தங்கி இந்தியாவின் நீர்பாசன திட்டங்களுக்கு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
இவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்திய நீர் பாசனத்தையும் இந்திய மக்களையும் நேசித்து தனது வாழ்நாளை அர்ப்பணித்தததின் காரணமாக ஆங்கிலேய அரசு இவரை நவீன இந்தியாவின் ”நீர்ப்பாசனத்தை தந்தை” என்று அழைத்து சிறப்பித்தது.
புறநானூற்று பாடல் ஒன்றில் வருவது போல யானைக் கூட்டத்தை நேரடியாக வயலில் மேய விட்டால், கொஞ்சம் உண்டு, மீதி பயிர்களை காலால் மிதித்து நாசம் செய்து விடும். ஆனால் தானியங்களை அறுவடை செய்து சேமித்து, சமைத்து, கவளங்களாக மாற்றி ஓராண்டிற்க்கு கூட யாணைகளுக்கு உணவாக வழங்க முடியும்.
அதுபோல கட்டற்று ஓடும் வெள்ளத்தை தடுக்க வேண்டிய இடத்தில், தடுக்க வேண்டிய விதத்தில், தடுத்து, வெள்ளைநீரை சேமித்து, முறைப்படுத்தி, நீர்பாசனத்துக்கு பயன்படுத்தினால் வருடம் முழுவதும் உணவுப்பஞ்சம் இல்லாமல் வாழலாம் என்ற உண்மையை, நெஞ்சில் கொண்ட காட்டன் அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் 50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் பாசன வசதிகளை உருவாக்கியவர் ஆவார்.
Also read
இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதியும், பல நூற்றாண்டு காலம் காத்திருந்து, போராடி பல்வேறு வலிகளை அனுபவித்து பெற்றவையாகும். இதனை தற்போது வாழும் இளைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும்,
இப்படிப்பட்ட மாமனிதனின் வாழ்வையும், பணிகளையும், கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அவர் ஏற்படுத்திய கட்டமைப்புகளை பாதுகாத்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது தான் நாம் காட்டான் போன்ற மாமனிதர்களுக்கு செய்யும் நன்றி கடன் ஆகும்.
கட்டுரையாளர்; க.சுரேஷ்குமார்
இயற்கை வேளாண் விவசாயி
சிதம்பரம்.
Leave a Reply