பத்து லட்சம் நிவாரணத்தின் பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்

கள்ளச் சாராயம் எது? நல்ல சாராயம் எது? நாட்டு மதுவெல்லாம் கள்ளச் சாராயமா? டாஸ்மாக் மது நல்ல சரக்கா? அரசுக்கு வரி கொடுப்பதே நல்ல சரக்கு என்றால், கள்ள மார்க்கெட்டில் விற்கும் டாஸ்மாக் சரக்கும் கள்ளச் சாராயமாகாதா? 10 லட்சம் நிவாரணத்தின் நோக்கம் என்ன? கள்ளச் சாராய சாவு என்பது டாஸ்மாக்கிற்கு அடித்த ஜாக்பாட் பரிசா…?

கள்ளச்சாராயச் சாவுகளை தடுப்பதற்காகவே டாஸ்மாக் நடத்துகிறோம்…என்று சொல்லித் தான் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்து சாராய விற்பனையை தமிழகத்தில் சாத்தியப்படுத்தினார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளை கடந்த நிலையிலும் டாஸ்மாக்கை நியாயப்படுத்த இதே காரணம் அரசுக்கு தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது!

சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் மே13 ந்தேதி சாராயம் வாங்கி குடித்த சுமார் 60 பேர் மயக்கமடைய 8 பேர் இறந்துள்ளனர். இந்த சாவு செய்தி வெளிப்பட்ட அடுத்த நிமிடமே, ”கள்ளச் சாராயச் சாவுகளுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி அளிக்கபடும்” என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார்! ஓடோடிச் சென்று பார்க்கிறார்!

இதையடுத்து கடந்த 12-ம் தேதி இரவு கள்ளச் சந்தையில் மது வாங்கி அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை இருளர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி, வசந்தா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியப்பன் (65),அவரது மனைவி சந்திரா (55) ஆகிய இருவரும் கள்ளச் சந்தையில் 13 ந்தேதி இரவு மது வாங்கி அருந்தியுள்ளனர். இருவரும் வீட்டின் அருகே காலை இறந்து கிடந்துள்ளனர்.

கள்ளச் சாராயச் சாவுக்கு முதல்வர் 10 லட்சம் அறிவித்த பிறகு தான் இந்த தொடர் சாவு அறிவிப்புகள் வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கள்ளச் சாராய இறப்புக்கு 10 லட்சம் கிடைக்கும் என்றால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் கொலைகள் குடிகாரர்களின் உறவுகளாலேயே கூட நிகழ்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன! வறுமையில் உழலும் குடும்பத்தில் இதற்காகவே ஒருவர் உயிரிழந்து தன் குடும்பத்திற்கு பத்து லட்சம் நிவாரண உதவி கிடைக்கத் திட்டமிடலாம்!

கள்ளச் சாராயச் சாவுகளுக்கு 10 லட்சத்தை தூக்கி கொடுக்கும் ஸ்டாலின் அதற்கான நியாயத்தை விளக்குவாரா? மனித நேய அறிவிப்பா? அப்படி என்றால், யார் இறந்தாலும் இந்த அளவுக்கான நிதி தந்திருக்க வேண்டுமே! ஏன் தரவில்லை? அதில் என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது என்பதற்காக விட்டுவிட்டீர்களா…?

ஆம்! ஆதாயம் இல்லாமல் இப்படி ஒரு அறிவிப்பை தருவீர்களா என்ன? கள்ளச் சாராயச் சாவுகளை வலுவாக கவனப்படுத்தி, டாஸ்மாக் சாராய விற்பனையை நியாயப்படுத்துவது முத நோக்கம்! இது மட்டுமின்றி, நாட்டு மது காய்ச்சி விற்பவர்களை காவல்துறையினர் அனுமதித்து காசு பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடும் தண்டனையை உறுதிபடுத்துவதன் மூலம் நாட்டுமது விற்பனையை கட்டுப்படுத்தி, டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்தும் லாபநோக்கமும் இதில் அடங்கியுள்ளது!

ஏனென்றால், டாஸ்மாக் மது மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது! அதாவது, உற்பத்தி மதிப்பை காட்டிலும் பத்து மடங்கு லாபம் வைத்து விற்கப்படுகிறது. இது கொள்ளையோ கொள்ளை! யாராலும் தட்டிக் கேட்க முடியாத கொள்ளை! இதை வாங்கிச் சாப்பிட வக்கில்லாத ஏழைகளுக்கு நாட்டு மதுவே ஒரே ஆறுதலாக இருக்கிறது! அதில் மண்ணள்ளிப் போடும் சூழ்ச்சி தான் நாட்டு மதுவிற்கு ‘கள்ளச் சாராயம்’ என்ற அடை மொழியாகும்!

டாஸ்மாக்கில் விற்பது ‘நல்ல’ சாராயமா? இல்லையே, அதுவும் தரமற்ற சரக்கு தானே! அது ‘மெல்லக் கொள்ளும் விஷம்’ தானே! அதனால் தானே டாஸ்மாக் சரக்கை தினமும் சாப்பிடும் எவனுமே நான்கைந்து வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வைத்திருப்பதன் சிறப்பு உங்கள் டாஸ்மாக் சரக்கையல்லவா சாரும்!

எத்தனை தாலிகள் அறுந்தால் என்ன?

எத்தனை குடும்ப வன்முறைகள் அரங்கேறினால் என்ன?

எத்தனை குழந்தைகள் பசியில் வாடினால் என்ன?

எத்தனை குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்தால் என்ன?

உடம்பில் துணியில்லாமல் ஆணும், பெண்ணும் சாலையில் சரிந்து கிடந்தால் தான் என்ன?

உங்கள் கஜானா நிறைந்து கொண்டே…………… இருக்க வேண்டும்!

நீங்கள்ளாம் என்ன மாதிரி டிசைன்னே தெரியல!

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து டாஸ்மாக் மது விற்பனையை 24 மணி நேர அத்தியாவசிய சேவையாக மாற்றி உள்ளது!

டாஸ்மாக் கணக்கிற்கே வராமல், எந்த வரியும் கட்டத் தேவைப்படாமல்  பல்லாயிரம் கோடிகள் பிளாக்கில் மது விற்பனை செய்வதற்கு துணை போகும் ஆட்சியாளர்களே… இதுவும் ‘கள்ள மது’ தானே! ஆக, நல்ல மதுவோ, கெட்ட மதுவோ.. தமிழகத்தில் எந்த நேரமும் கிடைக்கும் ஒரே அயிட்டமாக மதுவின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைக்கு உணர்த்திய ஆட்சியாளர்கள் அல்லவா நீங்கள்!

பள்ளிக் குழந்தைகள் முதல் பருவப் பெண்கள் வரை மதுவின் போதையின் பாதைக்கு வந்து சேர்ந்த காலகட்டம் திராவிட ஆட்சி சிறப்புகளில் ஒன்றல்லவா? திருமண நிகழ்ச்சிக்கும், விளையாட்டு வைபவங்களுக்கும் அரசே சப்ளை செய்யும் என அறிவித்த, ‘வியாபாரமே இலக்கு, பணமே குறிக்கோள்’ என்ற அரசல்லவோ இது!

தமிழகத்தில் எந்த சட்டதிட்டத்திற்கும், விதி முறைகளுக்கும் உட்படாமல் டாஸ்மாக் மதுவை விற்கும் வியாபாரிகளின் பிரதிநிதியா முதல் அமைச்சர்? ஆன்லைன் லாட்டரிக்கு தடை சட்டம் போட்டு உத்தம திலகங்களாக உங்களை வெளிப்படுத்திக் கொண்டு, மதுவை ‘ஆல்டைம் சேல்ஸ்’ ஆக்கிவிட்ட உங்க சாமார்த்தியத்தை என்னென்பது?

கள்ளச் சாராய (நாட்டு மது) விற்பனை தொடர்பாக இது வரை 1.49 லட்சம் வழக்குகள் போட்டுள்ளார்களாம்!  1,39,697 பேரை கைது செய்துள்ளார்களாம்! இந்த நிகழ்வுக்கு பிறகு இந்த எண்ணிக்கையில் மேலும் 400 க்கு மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்…என புள்ளிவிபரம் தருகிறார்கள்! ஆக, காவல்துறையின் பயன்மிக்க நேரம் எல்லாம் இதற்காக விரயமாகியுள்ளது! இந்தக் கைதுகளும், வழக்குகளும், பிரயத்தனங்களும் டாஸ்மாக் விற்பனையை உறுதிபடுத்தத் தானே!

உங்களுக்கு ஒரு செய்தியை மட்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன். உங்களால் கள்ளச் சாராயம் என முத்திரை குத்திய சாராயத்தில் இறந்தவர்களை விடவும், டாஸ்மாக் மதுவால் செத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் மடங்கு அதிகம்! அட, நடப்பதே ‘கள்ள ஆட்சி’யாக அல்லவா உள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time