இருவரில் யார் முதல்வருக்கு தகுதியானவர்?

-சாவித்திரி கண்ணன்

கர்நாடகத்தில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் காங்கிரஸ் கிட்டத்தட்ட இரு கூறாக பிரிந்து, மயிர்பிளக்கும் விவாதங்கள் நடக்கின்றன! சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரின் செயல்பாடுகள், அணுகுமுறைகள், தகுதிகள், செல்வாக்குகள் குறித்து திறனாய்வு செய்கையில் சந்தேகமில்லாமல் ஒரு முடிவுக்கு வரலாம்!

கர்நாடாகாவில் காங்கிரஸுன் வெற்றிக்கு ஒற்றுமையான களப்பணி ஒரு காரணம் என்றாஅலும் கூட கடந்த பாஜக அரசின் மீதான அதிருப்திகள் மலை போல மேலெழுந்து வந்தது தான் காங்கிரஸீன் வெற்றிக்கு பிரதான காரணமாகும்! இந்த நிலையில் அதே போன்ற ஒரு அதிருப்தியான அரசை மீண்டும் காங்கிரஸூம் தருமானால் மக்கள் பாஜகவிடமே மீண்டும் அடைக்கலமாகக் கூடும் என்ற அச்சம் காங்கிரசுக்குள்ளும், ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே விருப்பு, வெறுப்பில்லாமல் இந்த இருவர் குறித்தும் அலசி ஆராய்ந்து இருவரில் யார் பொருத்தமானவர் என்ற முடிவுக்கு வரலாம்.

டி.கே.சிவகுமார் (61); இவர் தான் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார். கட்சி நிர்வாகத்தை துடிப்புடனும், உயிர்ப்புடனும் வைத்திருப்பதில் கைதேர்ந்தவர். சிறந்த செயல்வீரர் என்பதை இவரின் எதிரிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்! கடைக்கோடி தொண்டன் வரை பரிச்சியம் கொண்டவர். அவரவர் தகுதி, திறமை, உழைப்பு, விசுவாசம் ஆகியவற்றை எடைபோட்டு உரிய அங்கீகாரம் தரக் கூடியவர் என்று பெயர் பெற்றுள்ளார். அத்துடன் கர்நாடக காங்கிரசிலேயே மிகப் பெரிய பணக்காரராகவும் இவர் திகழ்கிறார். அந்த வகையில் கர்நாடக காங்கிரசின் வரவு செலவு எல்லாமே சிவகுமாரைச் சார்ந்து தான் உள்ளது! சிவகுமாரும் செலவுக்கு அஞ்சாதவர்! இந்த தேர்தலிலேயே கூட காங்கிரஸ் வேட்பாளர்களின் பெருமளவு செலவுகளை சிவகுமார் தான் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.

எல்லா கட்சிகளிலும், எல்லா சாதிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு! எட்டு முறை எம்.எல்.ஏவாகவும்,அதில் இருமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இன்றைய நிலவரப்படி பார்த்தால் வெற்றிபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நிச்சயம் சிவகுமார் தான் சித்தராமையாவை விட சற்று கூடுதலாக ஓட்டுகள் பெறுவார். சாதியை பொறுத்த அளவில் செல்வாக்கான ‘ஒக்கலிகா’ சமூகத்தை பிரதிபலிப்பவர். இது காங்கிரசின் தலைமைக்கும் தெரியும்.

மைனஸ் பாயிண்டுகள்;  குவாரி பிசினஸ் உள்ளிட்ட சிலவற்றில் சட்டத்தை மீறி செயல்பட்டவர் என்பதும், ஏற்கனவே ஒரு முறை அமைச்சராக இருந்த போது இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பதும் கவனிக்கத் தக்கனவாகும். பணப்பதுக்கல் விஷயத்தில் இவர் கைதாகி சிறை சென்றவர். குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேச முற்பட்ட போது அவர்களை பெங்களூர் அழைத்து வந்து ரிசார்ட்டில் தங்க வைத்து பாதுகாத்த வகையில் மோடி அரசு இவர் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் ரெய்டு நடத்தி கணக்கில் காட்டாத 300 கோடிகள் உள்ளதாக குறிப்பிட்டது. தற்போது கூட தேர்தல் வெற்றிக்கு பிறகு குடித்துவிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இவர் தள்ளாடி நடந்து வந்தது மக்களிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தராமையா(75); கர்நாடகாவின் மூத்த, பழுத்த அரசியல்வாதி. இவரது அரசியல் பயணம் காந்தியவாதியும், சோசலிஸ்டுமான ராம்மனோகர் லோகியாவின் மீதான ஈர்ப்பினால் தொடங்கியது! அந்த வகையில் எளிய மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். சமூக நீதியில் அழுத்தமான பற்றுள்ளவர். கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி. ஆனால், மத துவேசமாகவோ, கடவுளை இழிவாகவோ பேசமாட்டார். எதிலும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கொண்டவர். கொள்கை சார்ந்த அரசியல்வாதியாக கர்நாடக மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். சிறந்த பேச்சாளர். கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அக்கறையுள்ளவராக அறியப்பட்டுள்ளார்.

பாரதீய லோக்தள் கட்சி, ஜனதா கட்சி என்று நீண்டகாலம் தேசிய அரசியல் சார்ந்தே இயங்கியவர். ராமகிருஷ்ண ஹெக்டே அமைச்சரவையிலும் இருந்துள்ளார். ஜே.எச். பட்டீல் முதல்வாராக இருக்கும் போதும், தரம்சிங் முதல்வராக இருக்கும் போதும் துணை முதல்வராக இருந்துள்ளார். தேவகெளடாவுடன் இணைந்து செயல்பட்ட போது அவரது சாதிப்பற்று, குடும்ப அரசியல் காரணமாக மதச்சாரபற்ற ஜனதா தளத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

2013 தொடங்கி 2018 வரை கர்நாடகா முதல்வராகவும், பிறகு எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 13 முறை கர்நாடகாவின் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளவர். தாழ்த்தப்பட்ட சாதியான குருபா என்ற சாதியைச் சேர்ந்தவர் என்றாலும், சகல தரப்பு மக்களிடமும் மரியாதை பெற்றுள்ளவர். கர்நாடக இயற்கை வளங்களை சுரண்டி கொழுக்கும் சட்டவிரோத சுரங்க மாபியாக்களான ரெட்டி சகோதாரர்களை துணிச்சலாக எதிர்த்து ‘பெல்லாரி சலோ’ என்ற மிகப்பெரிய பாதயாத்திரை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைனஸ் பாயிண்ட்; சாதி பலமோ, பணபலமோ இல்லாதவர். வயதானவர். சிவகுமாரை ஒப்பிடும் போது கட்சிக்குள் செல்வாக்கும், ஈர்ப்பும் குறைவு தான்.

காங்கிரஸ் மேலிடத்தை பொறுத்த வரை சித்தராமையாவை முதல்வராக்கினால் நல்ல அனுபவசாலி என்பதால், ஊழல் இல்லாத அல்லது ஊழல் குறைந்த ஒரு நல்ல நிர்வாகத்தை தருவார் என்ற எண்ணம் இருந்தாலும், சிவகுமாரை அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் காங்கிரசிடம் உள்ளது. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

அதே சமயம் டெல்லி செல்லும் முன் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய டி.கே.சிவகுமார், “நான் யாரையும் முதுகில் குத்தமாட்டேன், மிரட்டவும் மாட்டேன். 135 எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் ஒரு பொறுப்பான மனிதன்” என்று தெரிவித்தது கர்நாடக மக்களிடையே அவர் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவே கர்நாடகத்தில் அமையவுள்ள காங்கிரஸ் ஆட்சியை பார்த்துக் கொண்டுள்ள நிலைமையில், எந்த சண்டை சச்சரவும், பிளவும் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியை உறுதிபடுத்த வேண்டியது முன்னணி தலைவர்களின் பொறுப்பாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time