எளியோரின் தேவை, ‘பாரம்பரிய’ மலிவு விலை மது!

-சாவித்திரி கண்ணன்

சாராயச் சாவுகள்..! டாஸ்மாக் விற்பனையை நியாயப்படுத்தவும், நாட்டுமதுவால் டாஸ்மாக்கிற்கு ஏற்படும் இழப்பை கருதியும், நாட்டு மதுவை அங்கீகரிக்கும் காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் அரங்கேற்றப்பட்டதா? உற்பத்தி செலவைவிட 50 மடங்கு அதிக விலையில் ‘டாஸ்மாக் மது’ ! எனில், ஏழை, எளியோருக்கு என்ன வழி..?

‘கள்ளச்’ சாராயம் என்ற வார்த்தை பிரயோகத்திலேயே, ஒரு நுட்பமான அரசியல் நுழைந்து ஆட்சி செய்கிறது! உண்மையில் அது நாட்டு மது! ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், ‘இண்டிஜினியஸ் லிக்யூர்’! அதை கள்ளச் சாராயம் என்ற பதத்தில் அழைப்பதற்கான காரணம், ‘அதன் விற்பனையில் அரசுக்கு வரி கிடைப்பதில்லை’ என்பதால் தான்!  இந்த கள்ளச் சாராயத்தால் 22 பேர் மரணம் என்பது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் போது, டாஸ்மாக் மதுவால் மாதம் தோறும் ஆயிரக்கணக்கானோர் மடிவது கொஞ்சம் கூட உறுத்தவில்லையே நமக்கெல்லாம்!

காலங்காலமாக நமது மரபில் மதுப் பழக்கம் இருந்துள்ளது. அதே சமயம் அந்த மதுவை அனைவரும் எடுத்துக் கொள்வதில்லை. மதுவை மகிழ்ச்சியின் ஊற்றுக் கண்னாகப் பார்ப்பவர்கள் அளவோடு அருந்துபவர்களாக உள்ளனர். துன்பத்தில் இருந்து விடுபட அதை அருந்துபவர்கள் தான் நிதானம் இழந்து அருந்துகிறார்கள்! ஒருவன் திருத்த முடியாத குடிகாரனாக மாறுவதற்கு சமூக சூழல் முக்கிய காரணமாகிறது! முக்கியமாக உழைப்புச் சுரண்டலும், வேலையின்மையும், பாரபட்சமான நடத்தைகளும்! ஆனால், நம் அரசுகளோ, இந்த சமூகச் சூழலை நிரந்தரப்படுத்தி, மது விற்பனைக்கு அஸ்திவாரமிடுகின்றன!

சங்க காலத்திலும் மதுப் பழக்கம் இருந்துள்ளது. மன்னராட்சி காலங்களிலும் மதுப் பழக்கம் இருந்துள்ளது. பனங்கள்ளையும், தென்னங்கள்ளையும் ஒரு உணவாகத் தான் அறிந்து வைத்திருந்தது தமிழ் சமூகம். தமிழ் சமூகம் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் அப்படித்தான் தானியங்கள் மற்றும் அரிசி வழி தயாரிக்கப்படும் நாட்டு மதுவை உணவின் அம்சமாகவே அறிந்திருந்திருந்தனர். அவரவர் வீட்டில் தயாரிக்கப்படும் உணவிற்கு எப்படி வரி விதிக்க முடியாதோ.., அதைப் போலத் தான் நமது முன்னோர் காலத்தில் மதுவுக்கும் வரியில்லை. மது தயாரிப்பு என்பது தனி நபர் சார்ந்ததாகவோ அல்லது குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கூட்டுறவு அம்சமாகவோ உணரப்பட்டது.

ஆனால், மதுவை வருமானத்திற்கான வழிமுறையாக கண்டறிந்தது காலனியாதிக்க ஆட்சியாளர்களான பிரிட்டிஷார் தான்! அவர்கள் தான் இதில் வரிவிதித்தனர். விடுதலைக்காக போராடிய நாம், ‘சுதந்திர இந்திய அரசுகளின் அடிமைகளாக’ இப்போது உழன்று கொண்டுள்ளோம் என்பதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மதுவிற்கு விதிக்கப்படும் கொடூரமான வரி விதிப்பைத் தான் சொல்ல வேண்டும்.

இதோ பொள்ளாச்சி மகாலிங்கம் சென்னை வினோபா அரங்கில் சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சு, ”சர்க்கரை ஆலையின் கரும்பு சக்கையில் கிடைக்கும் மொலாசஸ் என்ற கழிவில் இருந்து தான் மது தயாரிப்புக்கான ‘ஸ்பிரிட்’ பெறுகிறோம். ஒரு லிட்டர் சாராயத்தின் அடக்க விலை 12 தான்! ஆனால், ஒரு லிட்டர் பிராந்தி ரூ 380க்கு  விற்கிறார்கள்” என்றார். தற்போது அது ரூ800 க்கு விற்கப்படுகிறது! இப்படி உற்பத்தி விலைக்கும், விற்கும் விலைக்கும் மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசம் இருப்பது பேராசையிலும், கொடூரமான பேராசையல்லவா?

எளிய மக்கள் தங்கள் உடல் களைப்புக்கும், உள்ளத்து உலைச்சலுக்கும் மருந்தாக எண்ணி அருந்தும் மதுவை, ஆட்சியாளர்கள் ‘மோனோபலி’யாக தங்கள் பினாமிகளைக் கொண்டு உற்பத்தி செய்ய வைத்து, அரசாங்கம் வழியாக கொள்ளை லாபத்திற்கு விற்பது கொடுமையல்லவா? அதுவும் தரமற்ற கேடுகெட்ட மது தானே டாஸ்மாக்கில் கிடைக்கிறது. இது மெல்லக் கொல்லும் விஷம் தானே! ”இதைத் தான் வாங்கி உண்ண வேண்டும்” என்பது சர்வாதிகாரமல்லவா?

ஒரு சிலரின் கொள்ளை லாபத்திற்காக மக்களின் உணவு கலாச்சாரத்தில் தலையிடுவது பாசிசமல்லவா? இதை எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். அவர் தான் பனங்கள்ளுக்கும், தென்னங்கள்ளுக்கும் தடை கொண்டு வந்தார். இதனால் லட்சோப லட்சம் பனை மற்றும் தென்னை விவசாயிகளும், மரமேறிகளும் பாதிக்கப்பட்டனர். இன்று வரை அதற்கு தீர்வில்லாமல் தொடர்கிறது.

பனை வளத்தை படுகுழிக்கு தள்ளியவர் எம்.ஜி.ஆர் தான்!

கேரளாவிலே பாரம்பரிய மது அனுமதிக்கப்பட்டு உள்ளது. அரசே அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் பாதுகாப்பு அளிக்கிறது! பாரம்பரிய மதுவில் உயிரிழப்பு என்பதே இல்லை. நாட்டு மதுவால் உடல் நலனுக்கோ, உயிருக்கோ ஆபத்து ஒருபோதும் இல்லை. இதை முறைப்படுத்தி ஒழுங்கமைக்க வேண்டும். ஏழைகளுக்கும், நடுத்தர பிரிவினருக்கும் நியாயமான விலையில் நாட்டுமது கிடைக்க வேண்டும். எளிய நாட்டு மது உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு கஸ்டமரையும் நேரடியாக அறிந்து வைத்திருப்பதால் பெரும்பாலும் தவறு செய்ய மாட்டார்கள்!

‘தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையை நியாயப்படுத்துவதற்கும், நாட்டு மதுவின் மீதான போலீசாரின் மெத்தன போக்கின் மீது கடுமையைக் காட்டவும், திட்டமிட்டு இந்த சாராயச் சாவுகள் அரங்கேற்றப்பட்டு இருக்கலமோ…’ என்ற சந்தேகம் பரவலாக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எத்தனையோ பல விபத்துகள், உயிரிழப்புகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இந்த சாராய இறப்பிற்கு அரசாங்கம் கொடுப்பதற்கு பின்னணி என்ன?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ”தமிழகத்தில் பல ஆயிரம் டன் கணக்கில் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க முன் வர வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்.  கோவாவில் தற்போதும் முந்திரி பழத்தில் இருந்து தயாராகும் ‘ஃபெனி’ என்ற பானம் பரவலாகக் கிடைக்கிறது.

அற்புதமான முந்திரிப் பழத்தை அநியாயத்திற்கு வீணடிக்கிறோம்!

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லுசாமி அவர்கள் ‘பனங்கள், தென்னங்கள் இறக்கி கொள்வதற்கான 33 ஆண்டுகால தடையை விலக்கி கொள்ள வேண்டும்’ என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் அவர், ”பழவகைகளை பயன்படுத்தி பிராந்தி, விஸ்கி, ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களை தயாரிக்க வேண்டும். கரும்பின் கழிவு பொருளான மொலாசிஸ் கொண்டு மது தயாரிப்பது பலருடைய உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது” என்று பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, டாஸ்மாக் விற்பனையைக் குறித்தே சதா சர்வகாலமும் அக்கறை கொண்ட மனநிலையில் இருந்து தமிழக ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். மது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஜனநாயகத்தையும், பன்மைத்துவத்தையும் அனுமதிக்க வேண்டும். ஆரோக்கிய உணவுக்கான உரிமை என்பது நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கிய கொடை! அதற்கு எப்படி தடை போடுவீர்?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time