நீதித் துறையை ஆட்டுவிக்கத் துடிக்கும் பாஜக அரசு!

-ஹரி பரந்தாமன்

சுதந்திரமான நீதித் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக பாஜக ஆட்சியில் பல முன்னெடுப்புகள் நடக்கின்றன! நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பதுமையாக மாற்றும் முயற்சிகளை வெறித்தனமாக முன்னெடுத்தவர் தான் கிரண் ரிஜிஜு! இவர் மாற்றப்பட்டதன் பின்னணியை அலசுகிறது இந்தக் கட்டுரை!

நீதித்துறையுடன் குறிப்பாக உச்ச நீதிமன்றத்துடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவர் புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2014 இல் பாஜக ஒன்றிய அரசை கைப்பற்றிய காலத்தில் இருந்து அரசுக்கும், நீதித்துறைக்கும் மோதல் போக்கு இருந்து கொண்டு தான் இருந்தது.ஆனால் அந்த மோதல் போக்கு, கடும் மோதல் போக்காகவும், உச்ச நீதிமன்றத்துடன் ஒன்றிய அரசு யுத்தம் போர் தொடுத்துள்ளது போன்ற ஒரு நிலையையும் உருவாக்கியவர் கிரண் ரிஜிஜு.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆதரவு இன்றி அவர் உச்சநீதிமன்றத்துடன்  மோதல் போக்கில் ஈடுபட்டிருக்க இயலாது. காரணம், சட்ட அமைச்சராக இருந்த அந்த இரண்டு ஆண்டு காலத்திலும்,  கொலிஜியம் முறை மூலம் நடைபெறும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை அவர் தொடர்ந்து மிக கடுமையான சொற்களால் விமர்சித்து வந்தார்.

அரசமைப்புச் சட்டம் கூறு 141, உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் சட்டத்திற்கு இணையானது என்றும், அது அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் கூறுகிறது.

1992 முதல் கொலேஜியம் முறையில் தான் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். 1992 இல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முதல் கொலேஜியம்  முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 124  உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  நியமனம் சம்பந்தமாக கூறுகிறது. அதன் படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு முன், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் ஒன்றிய அரசு கலந்து ஆலோசிக்கும். எப்படி இருப்பினும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கட்டாயமாக ஒன்றிய அரசு கலந்து ஆலோசித்த பின்னரே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடைபெறும்.


அரசமைப்புச் சட்டம் கூறு 217,உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி கூறுகிறது. சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளையும், சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் ஆளுநரையும் கலந்து ஆலோசித்த பின்னரே, உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஒன்றிய அரசு நியமிக்கும்.

உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இது போன்ற கண்டிப்பான நிபந்தனைகளை ஒன்றிய அரசின் மேல் அரசமைப்புச் சட்டம் விதிக்கிறது.

ஆனால், மிக முக்கிய பதவிகளான ஆளுநர்கள் நியமனம், தேர்தல் ஆணையர்கள் நியமனம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் நியமனம், நிதி குழு தலைவர் நியமனம், ஒன்றிய தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம், பட்டியல் இனத்தவருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம், பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம், பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் போன்றவற்றில் ஒன்றிய அரசுக்கு எந்த நிபந்தனையும் அரசமைப்புச் சட்டம் விதிக்கவில்லை.

இதுவன்றி பாராளுமன்ற சட்டங்கள் அளிக்கும் அதிகாரத்தின் மூலம் சிபிஐ இயக்குனர், விஜிலென்ஸ் கமிஷனர், அமலாக்கத்துறை இயக்குனர் போன்ற பல முக்கிய பதவிகள்  நியமனங்களையும் ஒன்றிய அரசு அதன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம். அந்த நியமனங்கள் செய்வதற்கு பெரிதாக எந்த நிபந்தனைகளும் இல்லை.

எனவே, அனைத்து அமைப்புகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பாஜக அரசு ,உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நினைத்தது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்தில் செய்த 99 ஆவது திருத்தத்தின் மூலம்  அரசமைப்புச் சட்டத்தில்   124A, 124B ,124 C என்ற கூறுகளை புதிதாக சேர்த்தது. இதன் அடிப்படையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் என்ற ஒரு சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது.

இந்த அரசமைப்புச் சட்ட திருத்தங்களின் மூலமாகவும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தின் மூலமாகவும் நடைமுறையில் 1992 முதல் இருந்து வந்த கொலேஜியம் முறையை முடிவுக்கு கொண்டு வந்தது பாஜக அரசு.

1992 இல் கொலேஜியம் முறையை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசமைப்புச் சட்டம் 1950இல் அமலுக்கு வந்ததற்கு பின்னர் 20 ஆண்டுகாலம்  உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக  எந்த பிரச்சனையும் எழவில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையை ஏற்று நியமனங்கள் நடைபெற்றன.

1971இல் இந்திராகாந்தி மிகப் பெரும் எண்ணிக்கையில் ஒன்றிய அரசை கைப்பற்றிய நிலையில், உயர் நீதிமன்றங்களையும், உச்ச நீதிமன்றத்தையும் கட்டுப்படுத்த இந்திரா அரசு நினைத்தது. அதற்கு இசையாத நீதிபதிகள் பதவி விலக நேர்ந்தது.

1973 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான பாராளுமன்றத்தின் அதிகார வரம்பை பற்றி கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு விரோதமாக அரசமைப்புச் சட்டத்தை பாராளுமன்றம் திருத்த முடியாது என்று பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அப்படி தீர்ப்பளித்த நீதிபதிகளில்  சீலட்,  குரோவர், ஹெக்டே என்ற மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டு, அரசுக்கு ஆதரவாக  தீர்ப்பளித்த நீதிபதி ஏ .என். ரே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை  ஆட்சேபித்து  மூன்று நீதிபதிகளும் பதவியைத் துறந்தனர்.

அவசரநிலை காலத்தில், மிசா சட்டத்தின் கீழான கைதுகளை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்று நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், விசாரிப்பதற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்த  ஒரே நீதிபதி எச். ஆர் கண்ணா புறக்கணிக்கப்பட்டு, அவருக்கு ஜூனியர் ஆன எம்.எச் .பெக் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து நீதிபதி எச்.ஆர்.கண்ணா பதவியை துறந்தார். பல உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு உடன்பட மறுத்த காரணத்திற்காக அவசர நிலை காலத்தில் மாற்றம் செய்யப்பட்டார்கள்.

இந்த சூழல் மீண்டும் தொடரக் கூடாது என்ற வகையில், நீதித்துறையில்  சுதந்திரத்தை காப்பதற்காக 1992 இல் உருவாக்கப்பட்டது தான் கொலேஜியம். அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள நான்கு நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் பரிந்துரைக்கும் என்றும் அந்த பரிந்துரைகளின் பெயரில் ஒன்றிய அரசு நியமனம் செய்ய வேண்டும் என்பதாகும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இரு நீதிபதிகளும் கொலேஜியமாக செயல்படுவார்கள்.


இந்த நியமனத்தில் ஆட்சேபனை இருந்தால், ஒன்றிய அரசு தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் போது, அதனை பரிசீலித்த கொலேஜியம்,  மீண்டும் அதே பரிந்துரையை அனுப்பினால், ஒன்றிய அரசு அந்த பரிந்துரையின் பேரில் நியமனம் செய்ய வேண்டும் என்பதே கொலேஜியத்தின் நியமன முறை.

பாஜக அரசால்  2014 இல் கொண்டுவரப்பட்ட 99 ஆவது அரசமைப்புச் சட்ட திருத்தத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 16 அக்டோபர் 2015 அன்று அளித்த தீர்ப்பில் ரத்து செய்தது.

அப்போது முதல் பாஜக அரசும், அரசின் சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர். அதாவது ரவிசங்கர் பிரசாத் மற்றும் சதானந்த கவுடா ஆகிய இருவரும் கிரண் ரிஜிஜுவுக்கு முன்னர் சட்ட அமைச்சர்களாக இருந்தனர். அவர்களும் மோதல் போக்கையே கடைபிடித்தனர்.

அவர்களுக்கும் கிரண் ரிஜிஜூவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் , கிரண் ரிஜி ஜூ மிக மிக கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார் என்பதே.

கிரண் ரிஜிஜூ தொடர்ந்து  கொலேஜியம் முறையை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அந்த முறை வெளிப்படைத் தன்மை அற்றது என்றும், பொறுப்பு கூறுதல் (accountability) இல்லை என்றும் குற்றம் சுமத்தினார்.


ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்ட கிரண் ரிஜிஜூ, ”ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தேச விரோதிகள்” என்று குற்றம் சாட்டினார். பதவியில் இருக்கும் நீதிபதிகள் மேலும் மேலும் பதவி உயர்வுகள் பெறுவதற்காகவே கவலைப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். ஒய்வு பெறும் நிலையில் உள்ள நீதிபதிகளை ராஜ்யசபா எம்.பி மற்றும் கவர்னர் பதவிகள் என்ற தூண்டிலை போட்டு இழுத்த யோக்கிய சிகாமணி இப்படி பேசுவது தான் கவனத்திற்கு உரியது.

2015 இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பாஜக அரசை கட்டுப்படுத்தாது என்பதை போல் பேசி வந்தார் கிரண் ரிஜிஜூ. அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்த நிலையில் 99 ஆவது அரசமைப்புச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பதால், அதை ரத்து செய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று  கூறினார். இப்படி எல்லாம் ஒன்றிய அரசில் மந்திரியாக இருப்பவர் பேசுவது ஏற்புடையது அல்ல.

நீதிதுறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன..?

கொலேஜியம்  முறை வெளிப்படை தன்மையற்றது என்று குற்றம் சுமத்திய கிரண் ரிஜிஜூ, ஒன்றிய அரசு ஆட்சேபித்த உயர்நீதிமன்ற  நீதிபதிகள் நியமன பரிந்துரையை மீண்டும் பரிசீலித்து ஏற்கனவே கூறிய பரிந்துரையை வற்புறுத்துவதற்கான காரணத்தை கூறி, அந்த காரணங்களை இணையதளத்தில் அனைவரும் பார்க்கும்படி வெளியிட்ட செயலை கடுமையாக குற்றம் சொன்னார். அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்க ஜான் சத்யன் என்பவரை கொலேஜியம் பரிந்துரை செய்ததும் அடங்கும். அவரின் நியமனத்திற்கு ஆட்சேபனை செய்தது ஒன்றிய அரசு.  ஒன்றிய அரசு சம்பந்தமாக இணையத்தில்  அவர் இரண்டு விமர்சன கட்டுரைகளை பகிர்ந்தார் என்பதே ஆட்சேபனை ஆகும். இந்த ஆட்சேபனையை கொலேஜியம் ஏற்க மறுத்தது.

 

கிரண் ரிஜிஜூ இருந்தவரை அவர் நியமனம் செய்யப்படவில்லை. அவருடைய சீனியாரிட்டி காப்பாற்றப்பட்ட வேண்டும் என்று கொலேஜியும் கூறிய பின்பும் கொலேஜியத்தின் பரிந்துரைக்கு மாறாக நியமனங்கள் செய்யப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் அமர்வு கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தது. இருப்பினும்  கிரண் ரிஜிஜூ கொலேஜியம் பரிந்துரைகளை புறந்தள்ளியே செயல்பட்டார். கொலோஜியம் பரிந்துரைத்த பலர் இதுவரை நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் கிரண் ரிஜிஜூ மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்போது சட்ட மந்திரியாக அவரது இடத்தில் அர்ஜுன் ராம் மேக் வால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.

குடியரசு துணை தலைவர் டன்கர் மற்றும் சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியஇருவரது அடாவடி பேச்சுகள் தொடர்பாக வழக்குரைஞர் சங்கம் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்தது. அதில் இவர்கள் அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசுவதால் வகிக்கும் பதவிக்கு தகுதி இழந்து விட்டனர்.ஆகவே,  பதவி நீக்கம்  செய்ய பரிந்துரை செய்யுமாறு கேட்டனர். இதை மும்பை உயர்நீதி மன்றம் தள்ளுபடி  செய்தது.  உச்சநீதிமன்றத்தின்  மேல் மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை, இது போன்ற பேச்சுக்களால் பாதிக்காது என்று கூறியது. அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டை மிகச் சமீபத்தில் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தஉடன், சட்ட மந்திரி மாற்றப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளலாம்.

தொடர்ந்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்காக,  அங்கு நடைபெறும் நியமனங்கள் முழுவதையும் கட்டுப்படுத்த பாஜக அரசு நினைக்கிறது. அதில் எந்த மனமாற்றமும் அதற்கு வந்ததாக  தோன்றவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி,

சென்னை உயர் நீதிமன்றம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time