வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுப்போம்!

சாவித்திரி கண்ணன்

800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதா? தொடர்வதா? என்பதை ஒரு விவாதமாக்கிவிட்டார்கள்..!

800 படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகச் சொல்வதும்,முத்தையா முரளிதரனை எதிரியாகச் சித்தரிப்பதும், இலங்கையில் வாழும் நமது இந்திய வம்சா வழித் தமிழர்களான மலையகத் தமிழர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகும். மலையகத் தமிழர்களுக்கு கேட்க யாரும் நாதியில்லை என்ற மனோபாவம் தானே!
ஈழத் தமிழர்களுக்காக உருகுபவர்கள் ஒடுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் இருந்து எழுந்து, இன்று ஒரு உலக கிரிக்கெட் சாதனையாளனாக பார்க்கப்படும் முத்தையா முரளிதரனை எதிர்ப்பது என்ன நியாயம்?
இனவெறுப்பு அரசியல் இலங்கையிலேயே விடை பெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழகத்தில் ஏன் தலை தூக்குகிறது…? விரிவாகப் பார்ப்போம்…

எதற்காக விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்கக் கூடாது என்கிறார்கள்?

அவர் ராஜபக்சேவை ஆதரித்துப் பேசியவராம்! இன்றைக்கு இலங்கைத் தமிழர் தலைவர்களில் சிலரே ராஜபக்சேவுடன் இணக்கமாக அரசியல் செய்கின்றனரே அவர்களை என்ன செய்வீர்கள்…? இன்றைக்கு ராஜபக்சேவையே இலங்கையில் பல தமிழர் கட்சிகள் ஆதரிக்கின்றனவே….! இப்படியெல்லாம் வாதம் வைப்பதால் போர் குறித்த முத்தையா முரளிதரன் கருத்தோடு எனக்கு உடன்பாடு உண்டு என்பதாக அர்த்தம் ஆகாது! அந்த வலியை உணரும் பக்குவம் அன்று முத்தையா முரளிதரனுக்கு இல்லை என்பது உண்மையிலேயே வேதனைக்குரியது! அதிர்சிக்குரியதும் கூட! ஆனால், அதை காரணம் காட்டி கலையில்,படைப்பு துறையில் வெறுப்பு மனோபாவத்தை வளர்க்கலாகாது என்பதே என் நிலைபாடு!

முத்தையா முரளிதரன் என்பவர் யார்? அவர் ஒரு இந்தியா வம்சா வழித் தமிழர்!

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் பெற்ற சாதனையாளரான கிரிக்கெட் வீரர்!

பிரிட்டிஷார் ஆட்சியில் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்க இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மரபில் வந்தவர் தான் முத்தையா முரளிதரன்.

இவர்கள் இலங்கை வாழ் உயர்குடி தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள்! யாழ்ப்பாண தமிழர்கள் இவர்களைக் கள்ளத்தோணி,சின்னச்சாதி, பனங்கொட்டை..என இழிவாகக் கேலித் தொனியில் அழைத்தார்கள். 1949 ல் இலங்கையின் 9,75,000 இந்திய வம்சா வழி மலையகத் தமிழர்கள் பிரஜா உரிமை இழந்தனர். 1958 ல் பண்டார நாயகாவின் இனவெறிப் பேச்சால் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு லட்சம் மலையகத் தமிழர்கள் அகதிகளாயினர். ஆதரிக்க யாருமற்ற அனாதைகளாக கைவிடப்பட்டனர்! இவர்களில் ஏராளமானவர்கள் சிரிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தால் தமிழகத்திற்கு  திருப்பி அனுப்பட்டனர். ஆகவே இவர்கள் தனி ஈழ கோரிக்கையை ஆதரிக்கும் நிலையில் என்றுமே இருந்ததில்லை!

இவர்களின் துயர வாழ்க்கை குறித்துப் பேசத் தமிழகத்திலும்  நாதியில்லை. இலங்கைத் தமிழர்களிடமும் ஆதரவில்லை.

தங்கள் கடும் உழைப்பாலும்,திறமையாலும்,எண்ணிக்கை பலத்தாலும் இலங்கையின் பொது மைய நீரோட்டத்தில் தற்போது ஓரளவு அங்கீகாரம் பெற்று வருகின்றனர்.அப்படிப்பட்ட மிகவும் அழுத்தப்பட்ட ஒரு இனத்திலிருந்து வந்த ஒரு தமிழன் இன்று உலக அங்கீகாரம் பெற்றுள்ளார். இவரை நாம் வெறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆல்பர்ட் துரையப்பா! இலங்கையின் மிகப் புகழ்பெற்ற தலித் தலைவர். அவரும்,அவர் துணைவியாரும் அளப்பரிய சேவை செய்து மக்கள் அங்கீகாரம் பெற்றனர்.தமிழரசுக் கட்சியை  மீறி யாழ் மக்கள் ஓட்டுப் போட்டு துரையப்பாவை யாழ்ப்பாண மேயராக தேர்ந்தெடுத்தனர்.அந்த துரையப்பாவை தவறாக பிரபாகரனுக்கு அடையாளப்படுத்தி  கொல்லத் துண்டினர் யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர். 1975 ல் பிரபாகரன் செய்த முதல் கொலையே ஆல்பர்ட் துரையப்பா தான். இந்தக் கொலைக்காக அக மகிழ்ந்து தன் வீட்டில் உள்ள தங்க நகைகளையெல்லாம் உருக்கி,  தங்கக்கட்டியாக்கி பிரபாகரனைத் தேடிச் சென்று பரிசளித்தார் அமிர்தலிங்கம். அந்த அமிர்தலிங்கம் ஊட்டிய கொலைவெறி, பிற்பாடு அவரையே பிரபாகரன் காவு வாங்கக் காரணமாயிற்று!

வெறுப்பு அரசியல் அதற்கு வித்திட்டவர்களையே காவு வாங்கும் என்பதை புரிய வைக்கவே இதை எழுத வேண்டியதாயிற்று.

’’யாழ்ப்பாண ஆதிக்க தமிழர்களின் தெருவில் நடக்கும் உரிமையையே இப்போது தான் நான் பெற்றேன். அவர்கள் என்னை தங்கள் வராண்டாவில் நிறுத்திப் பேசுமளவுக்குத் தான் மதித்தனர்.ஆனால், நான் அதிபர் சிறிமாவோ வீட்டுச் சமையலறை வரை சென்று பழகும் அளவுக்கு உரிமை பெற்றுள்ளேன்’’ என்று ஒரு பேட்டியில்  சொன்னார் துரையப்பா. இலங்கைத் தமிழர்-சிங்களர் ஒற்றுமைக்குக் கடுமையாகப் பாடுபட்டார் துரையப்பா. இதனால்,அவர் தவறாகச் சித்தரிக்கப்பட்டு கொலையுண்டார்.

இப்போது முத்தையா முரளிதரன் விஷயத்திற்கு வருவோம். ஒரு பின் தங்கிய சமூகத்தில் இருந்து வந்தவரை உலகப் புகழ் நிலைக்கு வர,அந்த நாட்டு அரசாங்கம் உதவியுள்ளது.ஆகவே அந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்ற வகையில் அவர் அந்த நாட்டு அரசு மேலும்,அதன் தலைவர் மீதும் அன்பும்,விசுவாசமும் கொள்வது இயல்பானது. அவருடைய ராஜபக்சே ஆதரவு நிலையில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால், எது ஒன்றையும் நாம் நம் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. இரு இனத்தின் மோதலில் அவர் தன் தந்தையை ஏழு வயதில் பலி கொடுத்ததாகக் கூறுகிறார். தன் பள்ளி நண்பர்களை,உறவினர்களை இழந்துள்ளார். எந்த நேரத்தில் எங்கே மனித வெடிகுண்டு வெடிக்கும், அதற்கு ராணுவமும், போலீசும் எப்படி கொடூரமாக எதிர்வினையாற்றும் என்று தெரியாத ஒரு பதட்ட நிலையிலேயே நெடுங்காலம் வாழ்ந்த அந்த பிரதேசத்தின் மைந்தன் போர் முடிவுக்கு வந்ததில் நிம்மதி அடைவதை நீங்கள் எப்படி குற்றமாகப் பார்ப்பீர்கள்?

அதை அவர் ’’தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மகிழ்ந்தார்’’ என வியாக்கியானம் செய்வது தேவையற்றது. ஏனெனில், இன்றுவரை அவர் போரால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் புணர் நிர்மாண வேலைகள் செய்வதில் அக்கறை காட்டி வருகிறார் என்பது கவனிக்கத்தக்க விஷயம்!

நான் கிரிக்கெட் ரசிகனல்ல, முரளிதரன் விளையட்டைப் பார்த்தவனுமல்ல, இந்த சர்ச்சை வெடிக்கும் வரை ஏதோ கேள்விப்பட்ட ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் அவ்வளவே! விளையாட்டோ,கலையோ அதில் அரசியலோ,வெறுப்போ கலக்க கூடாது . ஒவ்வொரு மனிதரையும் கடந்த காலம் சார்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் சமூகத்தில் யாருமே தேறமாட்டார்கள். வெறுப்பும்,துவேஷமும் தான் மிஞ்சும்! அவரே தெளிவாக தன்னிலை விளக்கம் தந்த பிறகு பாசிடிவ்வாக பார்ப்பது தான் ஆரோக்கியமாகும்!

என்றென்றும் நமக்குத் தேவை சமாதானமும், பரஸ்பர அன்பும்,சமூக வளர்ச்சியும் தான்!

இந்த தருணத்தில் இலங்கையில் தமிழர்-சிங்களர் ஒற்றுமைக்காகக் களம் கண்டு அரும்பெரும் முயற்சிகள் மேற்கொண்டு கொலையுண்ட சில அற்புத மனிதர்களை நான் நினைவு கூர்கிறேன்.

# யாழ்ப்பாண பல்கலையின் பேராசிரியரும்,மனித உரிமைப் போராளியும் ’முறிந்த பனை’ என்ற நூலின் ஆசிரியருமான ராஜனி திராணகம.(விடுதலைப் புலிகளால் கொலையுண்டார்)

# ஐக்கிய சோசலிச முன்னணி தலைவர் விஜே குமாரதுங்கா!(ஜே.வி.பியால் கொலையுண்டார்)

# மனித உரிமை ஆர்வலர் ரிச்சர்ட் டி.சொய்சா.(பிரேமதாசாவால் கொலை செய்யப்பட்டார்)

# லசந்தா விக்கரமசிங்கே பத்திரிகையாளர் ( ராஜபக்சேவால் கொல்லப்பட்டவர்)

இவர்களைப் போன்ற சமாதான விரும்பிகள்  நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்த் தியாகங்கள் வீண் போகவில்லை.

ஏனெனில், இன்று நிலைமை இலங்கையில் மாறியுள்ளது! அங்கு இரண்டு பக்கமும் இனவெறி அரசியல் கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது என்பதற்கு சமீபத்திய தேர்தல் முடிவுகளே சாட்சி!

2009 ஆம் ஆண்டின் மிகப் பெரிய போர் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு நடந்துள்ள மூன்றாவது தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாடு, ஆயுத போராட்டத்திற்கான ஆதரவு நிலை ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்தது என்பதைக் கவனிக்க வேண்டும். பிரச்சாரத்தின் போக்கில் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் மற்றும் அதிகார பகிர்வு,பொருளாதார பிரச்சினைகள் ஆகியவையே முக்கியத்துவம் பெற்றன!

அதே போல முக்கிய சிங்கள கட்சிகள் பிரச்சாரத்திலும் தமிழர்களை ஒடுக்குவது,ஒழிப்பது தொடர்பான பேச்சுகள் இல்லை. ஏனெனில் இரு பெரிய சிங்களக் கட்சிகளிலும் சிறுபான்மையின தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர் கட்சிகளும் இடம் பெற்று இருந்தன! இந்த வகையில் 25 தமிழர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளமை கவனிக்கத்தக்கது. இத்துடன் ராஜபட்சேவின் ஸ்ரீலங்கா பெரமுன கட்சியானது விகிதாச்சார அடிப்படையில் மேலும் ஒரு தமிழருக்கும் மூன்று இஸ்லாமியருக்கும் வாய்ப்பளித்துள்ளது! சிங்களர்கள் தரப்பில் இனவாத கட்சியாக வெகுகாலம் அறியப்பட்டு வந்த ஜே.வி.பி என்ற கட்சி இந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சியாக உருமாற்றம் கண்டு,பெரும் பின்னடைவைப் பெற்றுள்ளது.

# ராஜபட்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக இடது முன்னணி, முற்போக்கு தமிழ் கட்சி, இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட – பலதரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற – ஜனநாயக அமைப்புகள் இருந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

# ராஜபக்சே முன்பு இருந்த சுதந்திரா கட்சியின் சார்பில் ஒரு சிங்களர் கூட வெற்றி பெறவில்லை.ஆனால்,இன்று அந்த கட்சியின் ஒரே நாடாளுமன்ற பிரதிநிதியாக  இருப்பது அங்கஜன் ராமநாதன் என்ற தமிழர் தான்! ஆக மொத்தத்தில், நாடாளுமன்றத்திற்குத் தேர்வான தமிழர்கள் 25 பேரில் ஒன்பது பேர் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து  தேர்வாகியுள்ளனர்.  மற்ற 14 தமிழர்கள் சிங்கள கட்சிகளின் ஆதரவோடு தான் வென்றுள்ளனர். ஆக, இலங்கைத் தமிழர்கள் ராஜபக்சே கட்சியை ஆதரிக்காமல் இந்த நிலை சாத்தியமில்லை. ஆக, இந்த பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நமக்கு உணர்த்துவது என்ன? ஒரு நாட்டில் சேர்ந்து வாழ்பவர்கள் மத்தியில் வெறுப்பும், பகையும் நிரந்தரமாகத் தொடரமுடியாது. உலகில் நல்லதிலும் கெடுதல் உண்டு.கெட்டதிலும் நன்மை உண்டு. மாறிவரும் சூழல்களைப் பொறுத்து தான் நாம் முடிவுக்கு வரமுடியும்.

ராஜபக்சேவின் கடந்த கால ஆட்சி என்பது மிக மோசமான மனித உரிமை மீறல்களை நடத்திய ஆட்சி! ஜனநாயகத்தை சிதைத்த ஆட்சி, தற்போதும் குடும்ப அரசியலை வளர்தெடுக்கும் ஆட்சியைத் தான் செய்கிறார். ஆகவே நம்மை பொறுத்தவரை அவருடைய அரசியல் முற்றிலும் ஏற்புடையதன்று. ஆனால், இந்தப் படம் அவரது அரசியலோடு சம்பந்தப்பட்டதல்ல!

நடிகை ராதிகா இலங்கை பிரச்சினையில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். முப்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு முறை நான் அவரை ஒரு பேட்டிக்காகப் போட்டோ எடுத்த போது உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் மரணம் குறித்துப் பேசும் போது, உடல் சிலிர்த்து நா தழுதழுத்தார். கண்களில் கண்ணீர் கசிந்தது! அந்தளவு இனப்பற்றாளரான ராதிகாவே இன்று ஒரு கேள்வி வைக்கிறார். ’’சரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் தான் உள்ளார்.அந்த அணியின் உரிமையாளர் தமிழரான ஒரு அரசியல்வாதி’’       (கலாநிதி மாறன்) எனக் கூறி, ’’விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்பவர்கள் இதற்கு என்ன சொல்வீர்கள் நான்சென்ஸ்’’என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் சரத்குமாரும் கலைத்துறைக்குள் அரசியல் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதற்கு எந்த பதிலும் இல்லை! திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சன் இலங்கையில் 27,000 கோடி ரூபாய் முதலீட்டில் ரிபைனரி ஆலை தொழிலை நடத்துகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவரைப் போல மேலும் சில அரசியல்வாதிகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழகத் தமிழர்களும் இலங்கையில் தொழில் செய்வதாகத் தெரிய வருகிறது.இலங்கையில் இன்னும் நம்மவர்கள் லட்சக்கணக்கில் வாழும் போது இலங்கை நமக்கு எப்படிப் பகை நாடாகமுடியும்?

திரைப்படங்களில் படு பிற்போக்கான சாதிய வாதம் தூக்கலாக உள்ளது.பாலியல் வக்கிரம் அதிகரித்து வருகிறது.வன்முறைக் காட்சிகள் வரைமுறையின்றி உள்ளன. இது போன்ற படங்களை எடுப்பவர்கள்,அதில் நடிப்பவர்கள்,அதை விதந்தோதி விமர்சிப்பவர்கள் என்ற ஒரு கேடான நிலைக்கு இதுவரை எதிர்ப்பு எதுவும் காட்டாமல், எதிர்ப்புக்கு அவசியமற்ற ஒரு படத்தை எதிர்ப்பதில் நேரத்தை விரயமாக்கக் கூடாது.ஏனெனில் இந்த படத்தில் தமிழர்களின் படுகொலையை அதரித்தோ,ராஜபட்சேவை புகழ்ந்தோ சொல்ல வாய்ப்பில்லை. கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஒரு தமிழனின் உண்மைக் கதை தான் சொல்லப்படவுள்ளது.

’’இந்தப் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்போம்’’ என நீங்கள் முடிவு எடுத்தால் யார் அதை என்ன சொல்லமுடியும்? அதைவிடுத்து ஒரு நல்ல கலைஞனை மிரட்டியும்,கெஞ்சியும் இம்சை செய்யக் கூடாது.விருப்பத்திற்குரிய கலைஞனான விஜய்  சேதுபதியை வில்லனாகச்  சித்தரித்து விடாதீர்கள்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time