தமிழர் நாட்டிய மரபு கொள்ளை போன வரலாறு!

-சாவித்திரி கண்ணன்

பொய்களால் பொழுதளந்து, மாயைகளால் வரலாறு படைத்து, இல்லாத வரலாற்றுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள்! பரத நாட்டியமாம்!  அதென்ன பரத நாட்டியம்? அது யாரிடம் திருடப்பட்டது? யாரால் திருடப்பட்டது? எப்படி மடைமாற்றம் செய்யப்பட்டது? தமிழரின்  தொன்மையான நாட்டிய மரபு  தொலைந்தது எப்படி?

1935க்கு முன்னால் யாராவது ‘பரதநாட்டியம்’ என்று சொல்லியிருந்தால் “அப்படின்னா…. என்ன?” என்று தான் மக்கள் எதிர்கேள்வி வைத்திருப்பார்கள்!

அப்படியொரு பெயாரால் தமிழகத்திலோ, அல்லது வேறு எங்குமோ யாருமே அது வரை  நாட்டியமாடியதில்லை.

பரதநாட்டியம் என்ற பெயர் தமிழர் பண்பாட்டு மரபில் எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லை! எந்த கல்வெட்டிலுமோ,செப்பேட்டிலுமோ குறிப்பிடப்படவில்லை. அந்தப் பெயரால் ஒரு நாட்டியம் இருந்ததாகவும், அதை இன்னின்னார் ஆடினர் என்பதாகவும் வரலாற்றில் எந்த இடத்திலும், யாராலும் ஒரு போதும் குறிப்பிடப்படவில்லை.

நமது தமிழர் நாட்டிய மரபு என்பது 3,000 ஆண்டுகால தொன்மை கொண்டது. நாட்டிய இலக்கணம் குறித்த நூல் 2,700 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் காலத்தில் அபிநயர் எனப்படும் கூத்தரால் ‘அவிநயம்’ என்ற பெயரில் எழுதப்பட்டு உள்ளது.

ஆடல் கலைக்கு சிவனையே மூலவனாக கருதும் தொன்மை தொட்டு இருந்துள்ளது. வேறெந்த தனி நபரையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ அடையாளப்படுத்தி பார்க்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நடராஜனின் சிதம்பரம் கோயிலிலே கூட இப்படியான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால், சதிராட்டத்திற்கு ஆதாரமாக சங்ககாலம் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டு வரை ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

சாத்தனார் எழுதிய கூத்தநூல்,

அறிவாணர் எழுதிய பஞ்சமரபு,

மதிவாணர் எழுதிய நாடகத்தமிழ்

போன்றவை நாட்டிய இலக்கணத்திற்கான ஆதி நூல்களாகும்.

தமிழர்களுக்கு நாட்டிய கலைபற்றிய விரிவான பார்வையை, ஒரு மயக்கத்தை ஏற்படுத்திய நூல் என்றால், அது சிலப்பதிகாரம் தான்! அதில் மாதவியின் நடன ஆளுமைகள் மட்டுமல்ல, மேடையின் தோற்றம், உடையலங்காரம்…. என யாவும் விவரிக்கப்பட்டிருக்கும்! சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாட்டியம் குறித்து எழுதியவை அனைத்தும் நாட்டிய நன்னூளில் இருந்து உள்வாங்கி எழுதப்பட்டதே. நாட்டிய நன்னூளை இவ்விதம் தமிழர்களுக்கு நீங்காத நினைவாக பதியவைத்த பெருமை இளங்கோவடிகளுக்கே உரித்தாகும்!

இது மட்டுமின்றி, நமது சங்கநூல்கள் பலவற்றிலும் நாட்டியக்கலை விவாதிக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் நாட்டியத்தில் சிறந்து விளங்கியவர் ஆடல் ஆத்தியன் என்ற சேர இளவரசர் என்பதும் பிரசித்தமாகும்.

இவ்வளவு பாரம்பரிய சிறப்புகள் பல இருக்க, இன்றைக்கும் பத்மா சுப்பிரமணியம் போன்றோர், “பரதநாட்டியம் என்றும் பரதநாட்டியம் சாஸ்திரம் பரதமுனிவர் என்பவரால்  அருளப்பட்டது என்றும், அவரே இதன் மூலகர்த்தா, அதனால் அவருக்கு நினைவுமண்டபம் எழுப்பி வணங்குகிறோம்…” என்றால்? இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

பத்மா சுப்பிரமணியம்

பரத முனிவர் யார்? எப்போது பிறந்தார்? எந்த ஆண்டு? அவரது பெற்றோர் யார்? யாருக்கெல்லாம் பயிற்சியளித்தார்? இதற்கெல்லாம் இலக்கிய ஆதாரம் இருக்கிறதா? கல்வெட்டு இருக்கிறதா?

எதையுமே இவர்களால் காட்ட முடியாததால் மனம் போன பொக்கில் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்துவிடுகிறார்கள்!  அவர் திரேதாயுகத்தைச் சேர்ந்தவராம்! திரேதாயுகத்தில் மக்களை மகிழ்ச்சிபடுத்த இந்திரன் மனமிறங்கி பிரம்மதேவனிடம், “மக்களை சந்தோஷிக்க ஏதேனும் செய்யும் படிக்கு வேண்டுகோள் விடுத்தாராம். பிரம்மதேவன் அவ்வேண்டுகோளை ஏற்று , சிவபெருமானிடம் கூற, சிவன் தண்டுமுனிவருக்கு நாட்டியம் சொல்லித்தர, அவர் பரத முனிவருக்கு சொல்லித்தந்தாராம்.  பரதமுனிவர்  ரிக்வேதத்திலிருந்து பாடல், யஜூர் வேதத்திலிருந்து நடிப்பு, சாமவேதத்திலிருந்து ராகம், அதர்வண வேதத்திலிருந்து ரசம் போன்றவற்றை எடுத்து கலந்து நாட்டிய சாஸ்த்திரத்தை படைத்துவிட்டாராம்?

சதிர் ஆட்டத்தை பரத நாட்டியம் என பெயர் மாற்றம் செய்த ருக்குமணி அருண்டேல்

அதாவது அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாம் சேர்த்து அரைத்த தோசைமாவு உருவாக்குவது போல!

ஒரு நாட்டியத்திற்கான இலக்கணவடிவம் இவ்வாறு உருவாக முடியுமா?

எந்தவொரு கலைவெளிப்பாடுமே உணர்ச்சிகளின் உந்துதலால் உருவாவது தான்! சின்னஞ் சிறு குழந்தை தொடங்கி வாலிபன் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஏதோ ஒரு வகையில் ஆட்டம் போடுகின்றனர். கலை வடிவங்கள் அனைத்துமே மக்களின் வாழ்க்கையின் வெளிப்பாடு என்பதே உண்மையாகும். நமது நாட்டிய மரபை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் பலரும் நமது நாட்டிய மரபு சிலம்பம், தெருகூத்து, கரகம், ஓயிலாட்டம், தேவராட்டம் போன்றவற்றின் கூறுகளை உள்ளடக்கி உருவானதே என்கிறார்கள். இது குறித்து விரிவான ஆய்வுநூல்கள் பல வந்துள்ளன.

இப்படித்தான் கேரளாவின் ‘கதகளி’,

ஆந்திராவின் ‘குச்சுப்புடி’,

கர்நாடகாவின் ‘யட்சகானம்’,

வட இந்தியாவின் ‘கதக்’…

போன்றவையும் அந்தந்த மாநில மக்களின் மண்சார்ந்த மக்களின் தொன்மையான நாட்டிய கலையின் மெருகேற்றப்பட்ட வடிவமாகும்.

அப்படியானால் தமிழ் மக்களின் தொன்மையான நாட்டியக் கூறுகளின் மெருகேற்றப்பட்ட வடிவமாக பரதநாட்டியத்தை குறிப்பிடலாமா? என்றால், அதற்கு வாய்ப்பில்லை. காரணம் நமது மரபில் இருந்த பல சிறப்புகள் இதில் இல்லை.

நமது நாட்டிய மரபை முற்காலத்தில் விறலியர், பாணர், கூத்தர், வயிரியர்…. போன்றோர் வளர்த்தனர். நாட்டிய கலையை வாழ்வாகக் கொண்டவர்களை மன்னர்கள் ஆதரித்தார்கள்.

நாட்டியக் கலைக்கென்றே தங்களை அர்ப்பணித்தவர்களை கோயிலுக்கே அக்குடும்பத்தினர் தாரை வார்த்துவிடுவார்கள். அவர்கள் ‘தேவராடியார்’ என அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு கோயிலுக்கும் அதனதன் சொத்து மற்றும் வருமானத்திற்கேற்ப தேவராடியார்களின் எண்ணிக்கை அமையும்.

கடுமையான பயிற்சிகள், விரதங்கள், ஒழுக்க கட்டுபாடுகளோடு பல வருடப் பயிற்சி இவர்களுக்கு தரப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது!  நமது மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவர்களை ஆதரித்தனர். பிற்காலத்தில் படையெடுத்து வந்த மராட்டிய சரபோஜி மன்னர்களும் இவர்களை ஆதரித்துள்ளனர். பிற்காலத்தில் நுழைந்த அந்நிய படையெடுப்பாளர்களால் இவர்களை ஆதரிப்பாரின்றி சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் சில சமஸ்தான மன்னர்களும், ஜமீன்தார்களும் ஆதரித்தனர். பொதுவாக நம் சமூகம் ஆணாதிக்க சமூகம் என்பதால், இதில் தேவராடியார்கள் பல விதங்களிலும் ‘எக்ஸ்பிளாய்டேசன்’ செய்யப்பட்டார்கள் என்பது உண்மை தான். ஆயினும் கலை அதன் உன்னதத்தை இழக்கவில்லை.

தமிழ்நாட்டில் நாட்டிய மரபு மூன்று விதங்களாகப் பார்க்கப்பட்டது. தஞ்சைமரபு, பந்தனநல்லூர் மரபு, வழுவூர் மரபு என்ற இந்த பிரிவுகளில் ஒவ்வொன்றும் சற்றே வேறுபடும்.

தஞ்சை மரபை உருவாக்கியவர்கள் பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு எனும் நால்வர். 18 ஆம் நூற்றாண்டில் நாட்டிய மரபுக்கு இவர்கள் ஒரு தெளிவான இலக்கண வடிவம் தந்தனர்.

தஞ்சை நால்வர்; பொன்னையா,சின்னையா,சிவானந்தம், வடிவேலு

தமிழ்நாட்டில் நாட்டியம் கற்ற யாவருமே இந்த மூன்று மரபைத் தவிர வேறு வழிமுறைகள் எதுவும் அறியாதவர்கள் தான்!

இன்று நாட்டிய கலையை சனாதன மயமாக்கவும், சமஸ்கிருதமயமாக்கவும் துடிப்பவர்களுமே கூட இந்த மூன்று மரபை சேர்ந்த முன்னோடிகளிடம் தான் நாட்டியம் கற்றனர். கலாஷேத்திராவை உருவாக்கிய ருக்குமணி அருண்டேல் நாட்டியம் கற்றது கெளரி அம்மாள், பந்தனநல்லூர் மீனாட்சி சுந்தரம், கணபதி முதலியார் ஆகியோரிடம் தான்!

பத்மாசுப்ரமணியம் நாட்டியம் கற்றது வழுவூர் ராமையா பிள்ளை போன்றவர்களிடம் தான் !

தமிழகத்தில் தேவதாசிமுறை ஒழிக்கப்பட்டபோது அவர்களால் வளர்த்து பாதுகாக்கப்பட்ட நாட்டிய கலையை ஆதரித்து காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்கவில்லை.

வழுவூர் ராமையா பிள்ளை, கெளரி அம்மாள்

இந்தச் சூழலில் தான் முதன்முதலாக மேல்ஜாதிப்பெண்கள் இந்த நாட்டியகலை பயில ஆரம்பித்தனர். 1930 களின் மத்தியில் தான்  ருக்மணி அருண்டேல், குமாரி கலாநிதி போன்ற பெண்கள் பிராமண குலத்தின் முதல் தலைமுறையாக நாட்டியத்திற்குள் வந்தனர். வக்கீல் கிருஷ்ணய்யர் என்பவர் பிராமணப் பெண்கள் இதைக் கற்பதில் தவறில்லை என ஊக்கப்படுத்தினார். ஆனால் கல்கி போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதினர்.

பிறகு 1940,50 களில் பெரிய அலைபோல நாட்டியகலையை  மேல்ஜாதிப் பெண்கள், குறிப்பாக பிராமணகுல மகளிர் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தனர். அந்த சமயத்தில் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த சினிமா என்ற நவீன – புகழும், பணமும் தரக்கூடிய – உலகில் கிடைத்த வாய்ப்புகள் டி.பி.ராஜலெட்சுமி, வி.என்.ஜானகி, வசுந்துரா, வைஜெயந்திமாலா ….. போன்ற பிராமண குலப்பெண்கள் நாட்டியத்தை பயில காரணமாயிற்று.  சினிமாவுக்கு வெளியேயும் சிலர் நல்ல வாய்ப்புகளை கண்டறிந்தனர். அதில் ருக்குமணி அருண்டேல், பத்மா சுப்பிரமணியம் ஆகியோர்  குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இக்கலைக்கு இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒரு  சந்தையை உருவாக்கும் பொருட்டு இதை ‘பரதக்கலை’ எனப்பெயரிட்டனர்.

அக்காலத்திலேயே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது காலங்காலமாக சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டு கல்யாண வீடுகளிலெல்லாம் அரங்கேற்றம் செய்யப்பட்ட தமிழர் கலையாகும்! கோயில்களில் ஆடும்போது ‘சின்னமேளம்’ என்பர். பாமர மொழியில் ‘கூத்து’ என்று எளிதாகச் சொல்வார். இன்னும் பலர் ‘தாசியாட்டம்’ என்றும் அழைப்பதுண்டு. இசைக் கலைஞர்கள் சூழ நாட்டியமாடுவார்கள்! இவர்களைப் போல சிருங்கார ரசத்தை வெளிப்படுத்த பிறரால் இயலாது.

இது பரதநாட்டியம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதற்கும், சமஸ்கிருத அடையாளம் கற்பிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் நாட்டிய மேதையான பாலசரஸ்வதி. உலக அளவில் மதிக்கப்பட்டவரும், சத்தியஜித்ரேயால் ஆவணப்படம் எடுத்து போற்றப்பட்டவருமான பாலசரஸ்வதி தாசி மரபில் வந்தவர். பின்நாளில் 50,60,70 களில் இக்கலை கிட்டதட்ட முழுமையாக பிராமணர்களின் வசம் சென்ற பிறகு பாலசரஸ்வதி போன்ற தாசி மரபில் வந்த ஆயிரக்கணக் கானோர் முற்றாக புறக்கணிக்கப்பட்டனர். பாலசரஸ்வதி அம்மையாருக்கே வருடம் ஓன்றிரண்டு வாய்ப்பு தான் கிடைத்தது!

சதிர் நாட்டிய மேதை பால சரஸ்வதி.

ருக்மணி அருண்டேல், பத்மாசுப்பிரமணியம் போன்றவர்கள் நாட்டியக் கலையை  புனிதப்படுத்தி மரியாதை ஏற்படுத்திவிட்டதாக கொண்டாடப்பட்டார்கள். ஆனால் இவர்களில் ஒருவரேனும்   சமஸ்கிருதத்தில் உள்ள நாட்டிய சாஸ்திரத்தை படித்து உள்வாங்கி சுயமாக கற்று வந்தவர்களல்ல. எளிய மக்களை தேடித் தேடிச்சென்று அவர்களிடம் தான் கற்றனர். பிறகு அவர்களை முற்றிலும் புறக்கணித்து இக் கலையை மேல்ஜாதியின் அடையாளமாக்கி விட்டனர். இது தமிழ் மரபில் வந்த – பாரம்பாரியமாக நாட்டியகலையை வளர்த்தெடுத்த – அந்த  எளிய குடும்ப மகளிர் காலப் போக்கில் காணாமல் அடிக்கப்பட்டனர்.

கற்றுக் கொடுத்தவர்கள் காணாமல் போனார்கள்! கற்றுக்கொண்டவர்கள் கடை பரப்பி ஆதாயம் அடைகின்றனர்.

இது  தான் யதார்த்தம்.  முற்ற முழுக்க தமிழர் மரபில் தோன்றியதும், அதற்கான இலக்கண, இலக்கியங்கள் கொண்டதுமான கூத்து எனப்பட்ட 11 வகைப்பட்ட ஆடலை, பிற்காலத்தில் தாசி மரபில் வந்தவர்களால் பல நூற்றாண்டுகள் சதிராட்டமாக ஆடிப் பேணப்பட்டு வந்ததை பார்ப்பனியமும், பாரத தேசியமும் விழங்கி செறித்து பரதமாக்கிவிட்டன! இன்று, இவர்களின் பரதக்கலை என்பது சந்தையில் மதிப்பு மிகுந்த வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அதில் நமது பாரம்பரியத்தின் உயிர்ப்பான ஜீவனைத் தான் பார்க்க முடியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time