நாட்டையே பேராபத்திற்கு தள்ளுகிறது பாஜக அரசு!

- முனைவர் தயாநிதி

பாஜக அரசின் நிதி அமைச்சர்  நிர்மலா, தன் மனைவி என்றாலும், பொருளாதார நிபுணரும், சமூக அரசியல் விமர்சகருமான பரகால பிரபாகர், கட்சிகளைக் கடந்து  கலகக்காராகப் பேசுகிறார். பாஜகவை மிகக் கூர்மையாகவும், கடுமையாகவும் விமர்சிக்கிறார். ‘தி வயர் ‘ சேனலில் கரன் தப்பாருக்கான நேர்காணல் அதிரடி ரகமாகும்..!

பரகால பிரபாகர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். முதலில் காங்கிரசில் இருந்தார். பிறகு பத்தாண்டுகள் பாஜகவில் பயணித்தவர். எனினும், 17 ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஒரு சமூக பிரக்ஜையுள்ள பொது மனிதனாக இந்த நேர்காணலில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

“ஒரு தவறு நிகழ்வதைக் காணும்போது, சிவப்புக் கொடியை உயர்த்துகிறேன். அதுவே எனது எழுத்தின், பேச்சின் நோக்கம்.  ஓர் அரசு தவறு செய்யும்போது, அதன் போதாமைகளைக் காணும்போது, அதன் பொய்களைக் கேட்கும் போது, அரசின் கவனத்தை ஈர்க்கவே நான் அதைச் செய்கிறேன். எனவே எனது குரலுக்கு வெட்கமில்லை; எனது குறிப்புகளுக்காக நான் வருந்துவதில்லை”.

ஒரு துயர் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்த நோக்கத்தோடு, மதிப்பீடுகளோடு நமது நாடு கட்டமைக்கப்பட்டதோ, அந்த ஆதாரக் கொள்கைகளில் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.

என்ன நடந்துகொண்டிருக்கிறது நம் நாட்டில்?

பொது வாழ்வில் நாம் கேட்கும் அரசியல் உரையாடல்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில்…… குறிப்பாய் வடநாட்டில் நாம் பார்க்கும் அரசியல். அது அபாயகரமாக தெற்கிலும் பரவிக் கொண்டிருக்கிறது….  இவையெல்லாம் என்னை யோசிக்க வைத்தன.

என்ன நடக்கிறது இங்கே?

இவையெல்லாம் நிகழ எது அனுமதித்தது?

குறைகளைச் சொல்வது மட்டுமே என் வேலை; தீர்வைத் தருவதல்ல. மாற்றுத்தீர்வை மக்கள் தீர்மானிப்பார்கள். ‘இது தவறாக நடக்கிறது’ என்பதைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே என் வேலை.

இந்தியப் பொருளாதாரம் ஒரு மோசமான நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு,  முதல் முறையாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும்  மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.  இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. வளர்ச்சியில், தொற்றுநோய்க் காலத்திற்கு முன்பிருந்த நிலையைக் கூட நாம் இன்னும் எட்டவில்லை.

இந்த அரசும், இதன் அமைச்சர்களும், அரசை ஆதரிப்பவர்களும் சொல்லும் கூற்றுகளுக்கு முற்றிலும் எதிரானவை எனது குற்றச்சாட்டுகள்.

பரகால பிரபாகர்

தொற்றுநோய்க் காலத்திற்கு முன் நாம் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தோம். அதே நிலை இன்றும் நீடிக்கிறது. நமது பொருளாதாரக் கொள்கைகள் மிகவும் தவறானவை. பொருளாதார மந்தநிலை நமது நாட்டில் நீடிக்கிறது. இந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வழங்கல் (Supply side) பக்கத்தில் உள்ள சிக்கல்களுக்கு மட்டுமே தீர்வு காண்கிறது. தேவையின்(Demand side) பக்கத்தில் உள்ள சிக்கல்களை இந்த அரசு தீர்க்கவே இல்லை.

அரசு வழங்கிய உதவிகள் அனைத்தும் வழங்கல் பக்கத்தில் இருக்கும் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்தன. இதுவே பொருளாதாரத் தேக்கநிலைக்கு முக்கிய காரணம்.

நம் கண்முன் தெரியும் வளர்ச்சி மிகமிகச் சிறியது. இதை அரசு ஊதிப் பெருக்குகிறது. இதை மாபெரும் வளர்ச்சி என்று நம்மிடம் அரசு விற்பனை செய்கிறது. நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்வதாகப் பொய் சொல்கிறது. மோடியின் அரசு திறனற்ற தள்ளாட்டத்தில் தவிக்கிறது.

நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளோ அல்லது தத்துவங்களோ பா ஜ க விடம் இல்லை.

1980 – ஆம் ஆண்டு பா ஜ க உருவானபோது, காந்தியக் கோட்பாடுகளே அதன் கொள்கைகளாக இருந்தன. ஆனால், 1991- ஆம் ஆண்டு ஏற்பட்ட புதிய பொருளாதார மாற்றங்களை அக்கட்சி கடுமையாக எதிர்த்தது.

நடைமுறைப் பொருளாதாரம் தெரியாத நபர்கள் மோடிக்கும், அரசுக்கும் தற்போது அறிவுரை தருகிறார்கள். கருப்புப் பண ஒழிப்பு, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை போன்ற செயல்களுக்கு யார் இந்த அரசுக்கு அறிவுரை வழங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது.

பொருளாதாரத்தில் மட்டுமன்று, பல்வேறு துறைகளில் இந்த அரசு தோற்றுவிட்டது. ஆனால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களைப் பிரிப்பதில் இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியால் உள்ளுணர்வுகள் புதைக்கப்பட்டு, இந்திய சமூக உளவியலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை 18 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பணவீக்கம், கிராமங்களில் மக்கள் படும்  துயரம், அரசின் சொத்துக்களை விற்பது போன்ற செயல்கள் பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளன. எதற்கு, எத்தகைய முக்கியத்துவம் தரவேண்டும் என்பது இந்த அரசிற்குத் தெரியவில்லை.

சமூகத்தில், பெரும்பான்மையான மக்கள் மேலும் மேலும் ஏழைகளாகவும், ஒரு சிறு பகுதி மக்கள் மட்டும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவு பெரும் பணக்காரர்களாகவும் ஆகி வருகிறார்கள். தொடர்ந்து, கடந்த எட்டு ஆண்டுகளாக இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பொருளாதார செயல்பாடுகளில் திறனற்ற இவ்வரசு, மக்களைப் பிரிப்பதிலும், மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன், மதச்சார்பின்மையே அரசியல் உரையாடலாக இருந்தது.  ஆனால், மோடி பதவியேற்ற 2014 – ஆம் ஆண்டு, வளர்ச்சி, தூய்மையான நிர்வாகம், ஊழலற்ற அரசு என்பது உரையாடலாக மாறியது. தனது தேர்தல் பரப்புரைகளில், இத்தேர்தல் வேலையின்மைக்கும், ஏழ்மைக்கும் எதிரான போர் என்று மோடி முழங்கினார். இப்போரில் இந்துக்களும், முஸ்லிம்களும்  இணைந்து போராட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவரே நாடாளுமன்றத்தை குடியரசின் கோவில் என்று புகழ்ந்துரைத்தார்.

எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, இந்து அடையாளத்தைக் குறியீடாகக் காட்டி, 38 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்று, 2019 -ஆம் ஆண்டு பா ஜ க மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது.

மோடியை நேர்மையானவர் என்று கருதி மக்கள் வாக்களித்தனர். ஆனால், மோடிக்குத் தேவைப்பட்டதெல்லாம் மிகப்பெரிய அதிகாரம். அதிகார வெறியில் அவர் மயங்கினார். அதனால், குடியரசின் மாண்புகள் அவருக்குக் கசந்தன. அதன் விளைவு? நாடே அச்சத்தில் இருக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் ( The Crooked Timber ) பதிப்பிக்க நான் கடும் முயற்சி எடுக்க வேண்டியதாயிற்று. பலருடைய கதவுகளை நான் தட்டவேண்டியதாயிற்று.

கருத்து சுதந்திரம் என்பது, உங்களுடைய கருத்துகளை வெளியிட முடிகிறதா, இல்லையா…. என்பதில் இல்லை. கருத்துகளை வெளியிட்ட பிறகு, உங்களுக்கு என்ன நேர்கிறது என்பதிலேயே இருக்கிறது.

பெரும்பான்மையோர் கூறுவதாலேயே ஒரு கருத்து உண்மை என்று ஆகிவிடாது. பத்து கோடி பேர் உறுப்பினர்களாக உள்ள, உலகத்திலேயே பெரிய அரசியல் கட்சி என்று பா ஜ க தன்னை அறிவித்துக் கொள்கிறது. ஆனால், பாஜகவானது அரசமைப்பு சட்டத்தின் அனைத்து மாண்புகளையும் காலில் போட்டு மிதிக்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காக, அது தனது ஆன்மாவை விற்றுவிட்டது. மேலும் அது, அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளின் மேல் பெரிய தாக்குதல் தொடுத்திருக்கிறது.

இந்தியாவின் மதச்சார்பின்மைக் கோட்பாடுகளை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற பிழையான நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள் இருந்து விட்டன. ஆரம்ப காலகட்டத்தில், பா ஜ க மக்களின் அங்கீகாரத்தை மட்டுமே எதிர்பார்த்தது. அதற்காகவே தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சி என அறிவித்துக்கொண்டது.

மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், சந்திரசேகர ராவ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கட்சிகளின் சுயநல ஆதாயங்களுக்காக, ஆரம்பத்தில் பா ஜ கவை ஆதரித்தனர். நாம் இன்று இருக்கும் அவல நிலைக்கு இவையெல்லாம் காரணங்கள். எதிர்க்கட்சிகள் பா ஜ கவை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

நாம் எதிர்கொள்ளும் இந்த அவல நிலைக்கு, மக்களாகிய நாம்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். பிரதமரும் அவருடைய அமைச்சர்களும் பொய் சொன்ன போது அவர்களை நாம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. பொறுப்புக் கூறுமாறு அவர்களுக்கு எந்த நெருக்கடியும் தரவில்லை. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். தவறுகளை சரி செய்துகொள்ளும் ஆற்றல் மக்களிடம் இருக்கிறது.

முடிவு – 1:

நமது குடியரசு மாபெரும் அழிவில் இருக்கிறது. நமது சமூக அமைப்பு அறுபட்டிருக்கிறது. நமது பொருளாதாரம் பேராபத்தில் இருக்கிறது. நாம் அனைவரும் ஓர் இருண்டகாலத்தை நோக்கி இழுத்துச்செல்லப்படுகிறோம். இந்த ஒவ்வொரு சொல்லின் பொருளையும் நான் முழுமையாய் உணர்ந்தே சொல்கிறேன்.

முடிவு – 2:

இந்தியா திசை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த அரசியல் உரையாடலையும் தன் வயப்படுத்திய இந்துத்துவத்தை அனுமதிக்கப்போகிறோமா….. அல்லது வேற்றுமையை மதிக்கிற குடியரசின் மாண்புகளை மீட்டெடுக்கப் போகிறோமா….. இவற்றை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

பா ஜ க முன் வைக்கும் கருத்தாக்கத்தை நிராகரிக்கும் ஆற்றல் மக்களுக்கு உண்டு. அதன் வழியாக, நமது குடியரசின் தொடக்க காலக் கொள்கைகளை மீட்டெடுக்கும் வலிமை நம்மிடம் உள்ளது.

நானும் நீங்களும் ஓர் இந்துத் தாயின் வயிற்றில்தான் பிறப்போம் என்று முடிவுசெய்து பிறக்கவில்லை. எனவே, பிறப்பு ஒருவரின் நிலையை முடிவு செய்ய முடியாது. இந்த சாதியில், இந்த மதத்தில், இந்த மொழிபேசும் குடும்பத்தில், இந்த நாட்டில்தான் பிறப்பேன் என யாரும் முடிவு செய்து பிறப்பதில்லை.

வேறு சாதியில், மதத்தில், மொழிக்குடும்பத்தில் பிறந்தான் என்பதற்காகவே ஒரு மனிதனைக் கொல்வது என்பது என்ன நியாயம்? அதற்காகவே அவனை இரண்டாம்தர மனிதனாக தரம் தாழ்த்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்கள் காலங்காலமாக தொன்றுதொட்டு இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை ஏன் சாதியால், மதத்தால், மொழியால் பிரிக்க வேண்டும்?

அவ்வாறு மக்களைப் பிரிப்பதை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா? ஒவ்வொரு இந்தியனுக்கும் முன்னால் இருக்கும் இன்றியமையாத கேள்வி இது. ஒருவேளை, வரும் 2024- இல் மோடி மூன்றாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டால்……?

இந்தியா ஓர் இந்து ராஷ்ட்ரம் ஆகும். மதவாதிகளால் நடத்தப்படும் ஒரு நாடக இந்தியா உருமாறும். பெருவாரியான மக்கள் சார்ந்திருக்கும் மதமே, முதன்மை பெறும். மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவர். இது ஒரு பேரழிவிற்கு இட்டுச் செல்லும்.

இந்தியா ஒரு குடியரசாக இருக்காது. மதச்சார்பற்ற நாடாக இருக்காது. வேற்று மதத்தினர் மதிக்கப்படமாட்டார்கள்.

இந்தியா ஒரே நாடாகும். ஒரே அரசியல் கட்சிதான் ஆட்சி செய்யும். ஒரே மதம் மட்டுமே இருக்கும். அநேகமாக ஒரே மொழி மட்டுமே இன்றியமையாததாகக் கருதப்படும். ஒவ்வொரு ‘அடுத்தவரும்’ ஆபத்தில் இருப்பார். இந்தியா என்கிற கருத்தியல் சிதைந்து போகும். அதுவே இந்தியாவின் முடிவாகவும் ஆகிப் போகும்.

எந்த சுதந்திரம் இந்தியாவின் வேராக இருந்ததோ, எந்த அரசமைப்புச் சட்டம் இந்தியாவின் வேராக இருந்ததோ அவை யாவும் அழிந்துபோகும்.

நன்றி: The Wire – இணைய இதழ்

தமிழில்: முனைவர் தயாநிதி

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time