காங்கிரசுக்கு எதிரி பாஜகவா? ஆம் ஆத்மியா?

-ஹரிபரந்தாமன்

2024 தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணையாமல் வெற்றி சாத்தியமில்லை. பாஜகவை விடவும், ஆம் ஆத்மி போன்ற மாநிலக் கட்சிகள் தான் பெரிய எதிரி என்ற கண்ணோட்டம் காங்கிரசுக்கு வருமானால், அது பாஜகவுக்கே பலம் சேர்க்கும்! எதிர் கட்சிகளை அரவணைப்பதில் காங்கிரசுக்குள்ள போதாமைகள் என்ன?

அவசரநிலை காலத்தில் இந்திராகாந்தியை வீழ்த்துவதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற மாபெரும் ஆளுமை இருந்தார். அவரது தலைமையில் அவசரநிலை காலத்தை எதிர்த்த மிகப் பெரிய இயக்கம் இந்திராவின் ஆட்சியை வீழ்த்தியது. அந்த இயக்கத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் பங்காற்றின.

இப்பொழுது அறிவிக்கப்படாத அவசரநிலை காலம் நிலவுகிறது .இந்திராவின் அவசரநிலை காலத்தை விட மிகக் கொடுமையான நிலைமை நிலவுகிறது. அரசின் அனைத்து நிறுவனங்களையும்-தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ,சிபிஐ , அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, உயர் நீதித்துறை- என அனைத்தையும் பாஜக தன் வசப்படுத்தி விட்டது.

உத்தரகாண்டில் பிஜேபி நகர மன்றத்தின் தலைவர் ஒருவரின் மகள் திருமணத்தை “லவ் ஜிகாத்” என்று கூறி, நிறுத்தியது பாஜக. காரணம், மணமகன் இஸ்லாத்தைச் சார்ந்த வாலிபன் என்பதே! இது போல தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் சுதந்திரம் மற்றும் உரிமையில் தலையிடுவதற்கான அதிகாரம் எந்தக் கட்சிக்கும், அமைப்பிற்கும் கிடையாது.

பாஜக ஒரு காவி பாசிச அரசை உருவாக்க முனைகிறது. இந்தியாவை   பாகிஸ்தான் போல ஒரு மதச்சார்புள்ள நாடாக மாற்ற முனைகிறது பாஜக.  மதச் சார்பற்ற மேற்கத்திய நாடுகளை பின்பற்றாமல், பாகிஸ்தான் வழி நடப்பது நம் நாட்டை சில நூற்றாண்டுகள் பின்னோக்கி தள்ளிவிடும்.


எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலத்தை அந்த கட்சிகள் ஆட்சி செய்ய விடாமல் செய்யும் அனைத்து உத்திகளையும் செய்கிறது பாஜக.

2014 இல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது. 2015 இல் கெஜ்ரிவாலின் டெல்லி அரசை முடக்குவதற்காக, அந்த அரசின் அனைத்து அலுவலர்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பு அரசமைப்புச் சட்டம் உறுப்பு 239 AA வின் கீழ் வெளியிடப்பட்டது.

அதாவது 2015 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக டெல்லி மாநில அரசின் ஊழியர்களின் நியமனம், மாற்றல், விஜிலென்ஸ் போன்ற செயல்பாடுகளை செய்வது மத்திய அரசு என்ற ஜனநாயக விரோதமான நிலை தொடர்கிறது.

இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது 2017 இல்.

இதனால் கெஜ்ரிவால் அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியதில், ஐந்து நீதிபதிகள் கொண்ட  அரசமைப்பு அமர்வு , டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. காவல்துறை ,சட்டம் ஒழுங்கு, நிலம் ஆகிய துறைகள் தவிர்த்து மற்ற துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் முழுவதும் டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள் என்றும், அவர்கள் விஷயத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றும் வரலாற்று  தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பு மாநில அரசுக்கான அதிகாரங்களை உறுதி செய்வதில், மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதில்  பெரும்பங்கு வகிக்கிறது.


உடனே அந்த தீர்ப்பை ரத்து செய்யும் விதத்தில் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அடுத்து பாராளுமன்றம் கூடும் போது அந்த சட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அவசர சட்டம் காலாவதியாகிவிடும்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் பாஜகவால் இதை சட்டமாக்க முடியாது. காரணம், ராஜ்யசபையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை.

கெஜ்ரிவால் வேண்டுகோளை ஏற்று,  சரத் பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் என எதிர்க்கட்சி தலைவர்கள், ”ராஜ்யசபையில் பாஜக அவசர சட்டத்தை சட்டமாக்கும் முயற்சியை தோல்வியடைய செய்வோம்” என்று கூறியுள்ளனர். திமுகவும் கூறும் என நம்புகிறேன்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைமை இதுவரை வாய் திறக்கவில்லை. ஏற்கனவே, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மெக்கான் தனது ட்விட்டர் பதிவில் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இதைப் பற்றிய விவரங்களை அறம்  இணையதள இதழில் விரிவாக நான் விரிவாக எழுதி இருந்தேன்.

அஜய்மெக்கான்

அதற்குப் பின் 23 மே 2023 கூடிய டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள், ஆம் ஆத்மியை எதிர்த்தும், பாஜகவின் அவசர சட்டத்தை ஆதரித்தும் தங்கள் கருத்தை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், கெஜ்ரிவாலும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியல் போட்டுக் கூறி ,பற்பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, ”இப்பொழுது டெல்லி மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்தை ஆதரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர் காங்கிரசார்.

ஆம் ஆத்மியின் மீதான காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆம் ஆத்மி அரசியலுக்கு புதிய கட்சி! இன்னும் அவர்கள் பண்பட வேண்டியுள்ளது! அவர்களை பண்படுத்தி முறைப்படுத்த வேண்டிய கடமை அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் உள்ளது தானே!


ஆனால் , ஆம் ஆத்மியின் தவறுகளை சுட்டிக் காட்டி, மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் அவசர கால சட்டத்தை ஆதரிப்பது எந்த விதத்திலும் சரியாகாது. கெஜ்ரிவால் சில நேரங்களில் பாஜகவுக்கு ஆதரவாக  செயல்பட்டுள்ளார் என்ற காரணத்தை கூறி, இப்போது காங்கிரஸும் அதே தவறைச் செய்யலாமா? ஆம் ஆத்மி தன் தவறை திருத்திக் கொள்ளத்தக்க வகையில் காங்கிரஸ் முன்னுதாரணமாகவல்லவா திகழ வேண்டும்.

ஆம் ஆத்மி டெல்லி அரசை ஆட்சி செய்ய விடாமல், பாஜக தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, உச்ச நீதிமன்றம் அதில் தலையிட்டு, மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி வழங்கியுள்ள வரலாற்று தீர்ப்பையே செல்லாக் காசாக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை ஆதரிப்பது காங்கிரஸின் அழிவிற்கே வழி வகுக்கும்.

இப்படி கடந்த கால குற்றம், குறைகளை கூறி, ஒன்றிணைய மறுத்தால், திமுகவின் ஆதரவை காங்கிரஸ் எவ்வாறு கோர முடியும்? அவசரநிலை காலத்தில் கருணாநிதி அரசை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வந்தது யார்? அது மட்டுமா? திமுகவின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரையும்  மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது யார்? திமுகவின் முன்னணி தலைவர்களோடு ஸ்டாலினும்  தாக்கப்பட்டாரே!  இந்த நேரத்தில் அந்த நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே இருந்தால், இன்று காங்கிரசுடன் திமுக உறவு சாத்தியப்பட்டு இருக்குமா?

எனவே, 2024 இல் பாஜக மீண்டும் வெற்றி பெற, காங்கிரசே வழி வகுத்து விடக் கூடாது. சொந்த விருப்பு,வெறுப்புகளை புறந்தள்ளி, எதிர் கட்சிகளிடையே ஒற்றுமையை உண்டாக்கி,  பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் முன்னிலை வகிக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால், காங்கிரஸ் தனக்கான அழிவைத் தானே தேடிக் கொண்டதாகவே வரலாறு பதிவு செய்யும்!

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time