சூது கவ்வும் – கள்ள உறவு!

-சாவித்திரி கண்ணன்

அதிரடி ரெய்டுகள், அடிபணிய வைக்கும் தந்திரங்கள்! காலம் கனிய காத்திருந்தார்கள்! இன்னும் எவ்வளவு அவமானம், பின்னடைவு ஏற்பட்டாலும் சரி, செந்தில் பாலாஜியே துணை என ஸ்டாலின் தொடர்வாரா? ஸ்டாலினிடம் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால், மோடியிடம் சரண்டராவாரா செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜியைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆட்சியாளர்களுக்கு குடைச்சலையும், குமுறலையும் ஏற்படுத்த நினைக்கும் என மத்திய பாஜகவிற்கு, திமுக தலைமையே பாதை போட்டுக் கொடுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சிகளில் ஊழலுக்கு பேர் போனவராக அறியப்பட்டவர் தான் கரூர் செந்தில் பாலாஜி. இது குறித்து ஸ்டாலினே செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ”செந்தில் பாலாஜி ஊழலுக்கு பேர் போனவர். அடிக்கின்ற கொள்ளையிலே சரியாக ஜெயலலிதாவிற்கு கப்பம் கட்டக் கூடியவர். அதனால் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர். அதைவிட சசிகலாவிற்கு நெருக்கமானவர். இன்னும் சொல்வதென்றால், அதைவிட இளவரசிக்கு மிக, மிக நெருக்கமானவர். செந்தில் பாலாஜியின் தம்பி தான் கரூரையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கட்டுபாடு என்றால் கொள்ளையடிப்பதில், ஊழல் செய்வதில், லஞ்சம் பெறுவதில்! ஆள் கடத்தல், கொலை போன்றவற்றிலும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புண்டு. இவரைப் பற்றிச் சொல்ல ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல! லஞ்ச லாவண்யத்தில் திளைக்கிறார்…” இவையெல்லாம் செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் வாயில் இருந்து உதிர்த்த வாசகங்கள்!

இப்படிப்பட்ட செந்தில் பாலாஜியைத் தான் ஸ்டாலின் தன் முதல் தளபதியாக, தன்னுடன் நெடுநாள் பயணிக்கும் சொந்தக் கட்சியினரை விட, நம்பிக்கைக்கு உரிய தளபதியாக வைத்திருக்கிறார். ‘இப்படி தன் வாயாலேயே பேசிய நபரை தற்போது இவ்வளவு நெருக்கமாக வைத்திருக்கிறோமே..’ என்ற குற்றவுணர்வு அவருக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், ‘இதை பாஜக குறித்து வைத்து, கண்காணிக்கும்’ என்பது தெரியாமலா போய்விட்டது.

”வெற்றி பெற்றுவிட்டோம். நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை” என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பகாசூரக் கொள்ளையை நிகழ்த்திவர் செந்தில் பாலாஜி. அதில் வேலை தருவதாகக் கூறி நான்கு கோடி வசூல் செய்து நிறைய அப்பாவிகளுக்கு நாமம் போட்ட வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு தற்போது செய்து கொண்டிருக்கும் தகிடு தத்தங்களைக் கண்டு உச்ச நீதிமன்றமே உஷ்ணமாக கேள்வி கேட்கும் நிலைமை தோன்றிவிட்ட சூழலில் தான், இந்த ரெய்டுகள் நடந்துள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அறப்போர் இயக்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு இரண்டு முக்கிய துறைகள்! அதில் மின் துறை மக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளது. மின் உற்பத்தியை அதானி போன்ற தனி நபர்களை சார்ந்து இயங்குகிறது தமிழக அரசு! அதிலும் ஊழல் மயம்! மின் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது!

அடுத்ததாக டாஸ்மாக் மூலம் ஒரு ஈவு இரக்கற்ற சுரண்டல் அரங்கேறிக் கொண்டுள்ளது! டாஸ்மாக் உருவாக்கப்பட்டு சுமார் 20 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது தான்  வரலாறு காணாத அநியாயங்கள் அதில் அரங்கேறி வருகின்றன! இது பற்றி தனியான கட்டுரை எழுதப்பட்டுள்ளதால் இங்கு தவிர்க்கிறேன்.

இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து மிக அதிகமாக அடிபடும் பெயர்களில் ஒன்றாக இருப்பது செந்தில் பாலாஜி தான்! ‘முதல்வர் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினால் போதும். எல்லா விமர்சனங்களையும் தலைமை பார்த்துக் கொள்ளும்’ என்பதையே சூத்திரமாகக் கொண்டு இயங்கி வருகிறார்.

மோடியின் மனம் கோணாத அனுசரணை அரசியல்.

ஸ்டாலினைப் பொருத்த வரை, ‘மத்திய பாஜக அரசின் மனம் கோணாத வகையில் அவர்களது மக்கள் விரோத சட்டங்களை, திட்டங்களை தான் தமிழகத்தில் அமல்படுத்தி வருவதால் தன்னை தண்டிக்கவோ, இடையூறு செய்யவோ நினைக்க மாட்டார்கள்’ என தப்பு கணக்கு போட்டுவிட்டார். தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், கார்ப்பரேட்களுக்கு விவசாய நிலங்களை அள்ளித் தரும் நில ஒருங்கிணைப்பு சட்டம்…என பட்டியல் போட்டால் மிக நீளும்!

அதனால், பாஜக அரசின் அனுசரணை கிடைத்துவிட்டதாக நம்பி, இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகளை நிறைய ஏற்படுத்தி மலைகளையும், ஆற்று மணல் பரப்பையும் வேகமாக விழுங்கி வருகின்றனர்! எல்லா துறைகளிலும் ஊழல் மட்டுமீறி நடக்கின்றன! உள்ளூர் பாஜகவினர் சம்பந்தப்பட்ட குற்ற வழக்கு விவகாரங்களில் மிகுந்த அனுகூலம் காட்டியும் வருகின்றது திமுக ஆட்சி!

இப்படி, ‘கொடுத்து, வாங்கும் பேர அரசியலை செய்யும் போது பாதிப்பு வராது’ என ஸ்டாலின் போட்ட கணக்கு தான் தற்போது தப்பிதமானது. தமிழக மக்களை பெரிதும் ஈர்த்துள்ள திராவிட சித்தாந்தங்களின் மீது தொடர்ந்து இடையறாத தாக்குதலை நடத்தி வரும் பாஜகவின் சனாதனவாதிகள் தங்கள் அழித்தொழிப்பு கொள்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள்!

ஆனால், ‘திராவிட சித்தாந்தத்திற்கே தாங்கள் தான் அத்தாரிட்டி’ எனக் கூறிக் கொள்ளும் திமுக, அதை வெறும் வாக்கு அரசியலுக்கு மட்டுமே பேசிக் கொண்டு, சனாதன சக்திகளிடம் சரணடைந்துவிடும் சாமார்த்திய அரசியலைத் தான் செய்து கொண்டுள்ளது. ஆகவே, அதன் அழிவுக்கு அதுவே வித்திட்டுக் கொள்கிறது!

ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத காலத்திற்காக காத்திருந்து, இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக சொல்வதில் உண்மை இருக்கிறது! அதே சமயம் ‘எவ்வளவு ரெய்டு நடத்தினாலும், பேர அரசியலைக் கொண்டு பிழைத்துக் கொண்டு வெளியே வந்து விடலாம்’ என்று கணக்கு வைத்திருக்கலாம், திமுக !

ரெய்டு நடத்த வந்த அதிகாரிகளிடம் ஆவேசம் காட்டிப் பயன் என்ன? அது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது… என மேலும் வழக்குகள் பாயவே உதவும். மத்திய அரசு அதிகாரிகளுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையா…? என்ற கேள்வியை எழுப்பும். இதற்கு இடம் கொடுத்த செந்தில்பாலாஜி விசுவாசிகளின் புத்திசாலித் தனத்தை என்னென்பது?

சாவித்திரி கண்னன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time