கமலஹாசன் எதற்காக அரசியல் கட்சி நடத்துகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது!
ஒரு அரசியல் இயக்கத்தைப் பற்றிய அடிப்படை புரிதலாவது அவருக்கு இருக்கிறதா தெரியவில்லை! தனிமையே இனிமை என நினைப்பவர் தலைவனாக முடியுமா? கட்சி அமைப்புகளை கூட இன்னும் சரியாக கட்டி எழுப்ப ஆர்வம் காட்டாமல், மூன்று சதவிகித வாக்குவங்கியைக் வைத்துக் கொண்டு முதலமைச்சராக ஆசைப்படுகிறார்.எதற்கும் ஆசைப்படுவது தவறல்ல, சிகரத்தில் ஏற ஆசைப்பட்டால் அதற்கான சிரத்தையாவது இருக்க வேண்டுமல்லவா? அரசியலில் துரும்மைக் கூட சாதிக்காமல், விரும்பிய பதவியை அடையத் துடிக்கும் மனநிலை அவருக்கு எங்கிருந்து வந்தது?
அரசியல் இயக்கம் என்பது ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு நெருக்கமான பிணைப்பை பலப்படுத்தி கட்டமைக்க வேண்டிய கோட்டையாகும்!
ஏதோ தான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டுமே தொண்டர்களின் வேலை என நினைத்தால்..அந்த உறவு நீண்ட நாள் தொடராது. தன்னை சந்திக்கவே முடியாத உயரத்தில் வைத்துக் கொண்டாலோ அல்லது தனக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே இரும்புக் கோட்டையை உருவாக்கிக் கொண்டாலோ…அந்தக் கட்சி நாளுக்கு நாள் சுருங்கி கொண்டு தான் போகுமே தவிர வளராது!
களப் பணி இல்லாமல் யாருமே கட்சியை வளர்த்ததாக சரித்திரமே இல்லை. எம்ஜிஆர் தனி கட்சி ஆரம்பிக்கும் முன்பு இருபது ஆண்டுகாலம் திமுகவிற்காக பட்டி தொட்டியெங்கும் சுற்றி வேலை பார்த்தார்! இன்றைய திரை நட்சத்திரங்களை போல இல்லாமல், அவர் யாராவது தன்னை பிரச்சாரத்திற்கு அழைத்தால், அவர்களிடம் பணம் கேட்டதில்லை.வ்மாறாக தன் சொந்த செலவில் சென்று பேசுவதோடு, அந்த நிர்வாகி ஏதாவது கடன் வாங்கி கஷ்டப்பட்டு பொதுக் கூட்டம் நடத்தியுள்ளாரா? என விசாரித்து பண உதவியும் செய்வார். சில நேரங்களில் கட்சிக்காக நாடகம் நடத்தி நிதிவசூல் செய்து தருவார். அந்த வகையில் அவர் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் தொண்டர்களை, முக்கிய நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருந்தார்.
ஜெயலலிதா கட்சியில் சேர்ந்த போது, எம்ஜிஆர் கொள்கைபரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கினார்.அந்த பொறுப்புக்காக அதிமுகவின் ஒவ்வொரு மாவட்ட,ஒன்றிய,கிளை செயலாளர்கள் வரை அவர் தொலைபேசியிலும் கடிதம் வாயிலாகவும் தொடர்பு கொண்டிருந்தார். தினசரி கட்சி அலுவலகம் வந்து நிர்வாகிகளை சந்திப்பது,கடிதங்களை படித்து நடவடிக்கைகள் எடுப்பது என தீவிரமாக செயலாற்றினார். நிறைய சுற்றுபயணங்கள் மேற்கொண்டு ஊர்,ஊராகப் பேசினார். அதனால்,எம்ஜி.ஆர் உடல் தளர்ந்த போது கட்சிக்காரர்கள் தங்களுக்கு அடுத்து தலைமை தாங்கப் போவது இவர் தான் என முன்பே முடிவுக்கு வந்துவிட்டனர்.
என்.டி.ஆரும் சாதாரண ஆளில்லை. சுற்றிச் சுழன்று உழைக்கக் கூடியவர்.அதிகாலை நான்கு மணிக்கு தன்னை சந்திக்க நிர்வாகிகளுக்கு அப்பாயிண்மெண்ட் தருவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
விஜயகாந்த் தன்னுடைய ரசிகர் மன்றங்களையே அரசியல் பார்வையுள்ள ரசிகர்களாக வளர்த்தார். பணத்தை தாரளமாக செலவழித்து பல நற்காரியங்களை செய்தவர். நல்ல களப்பணியாளர். அதனால் தான் அவர் கட்சி தொடங்கி கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் ஈடு கொடுத்து அரசியல் செய்து 10 சதவிகித ஓட்டுகளை அள்ளினார்.அதிமுகவுடன் அவர் கூட்டு வைக்காமல் இருந்திருந்தால், அவர் மிகப் பெரிய சக்தியாக நிலை பெற்று இருப்பார்.
கமலஹாசன் என்ன செய்தார்? கட்சி ஆரம்பித்து மக்களையும்,தொண்டர்களையும் சந்திக்காமல் இந்திய அளவில் பெரிதாக அறியப்பட்ட தலைவர்களை சந்தித்தார். ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால்,பிரகாஷ் காரத், பிரனாய் விஜயன்…என்று பல ஆளுமைகளை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து தன்னை பெரிய ஆளாக பில்டப் செய்யமுயன்றார். சந்தித்தது தவறில்லை. ஆனால், அதனால் அவரது கட்சி வளர்ச்சிக்கு எந்தப் பலனுமில்லையே! அதுவும் அவர் எங்கு சென்றாலும் ஒற்றை மனிதனாகவே தான் செல்வார்.கட்சியில் தனக்கு அடுத்த நிலையில் கூட யாரும் இருக்கக் கூடாது.அனைவரும் அடித்தளத்தில் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறார். சமீபத்தில் கூட நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார்.மேடையில் அவர் மட்டுமே உட்கார்ந்தார். தனக்கு அருகில் உட்காரக் கூட யாருக்கும் தன் கட்சியில் தகுதி இல்லை என நினைக்கிறாரோ என்னவோ…! அவரைவிட்டால்,அவர் பிம்பம் தான் மேடையின் பின்புறம் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. நானே கட்சி! நானே எல்லாம்! எனக்கு வேலை பார்க்கத் தான் அனைவரும் என அவர் இயங்கிக் கொண்டுள்ளார்! தனிமரம் தோப்பாகுமா?
இதனால் தான் ஒவ்வொருவராக அவரைவிட்டு விலகுகின்றனர். பேராசிரியர்.கு.ஞானசம்பந்தன், பாரதி கிருஷ்ணகுமார்,செளரிராஜன், வெளியிருந்து ஆதரித்து வந்த பி.ஆர்.பாண்டியன் என பலர் விலகி விட்டனர். அவரது ரசிகர்மன்றத்திற்கு ஆரம்பகாலத்தில் துணை நின்றவர்கள் எல்லாம் கூண்டோடு வெளியேறிவிட்டார்கள். காரணம் என்ன? அவரிடம் வெளிப்படைத் தன்மையும் இல்லை.ஜனநாயகப் பண்பும் இல்லை.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது என்ன செய்தார்! நேர்மையான அரசியல் என்று பேசிக் கொண்டு டி.டி.வி தினகரனுக்கு தூதுவிட்டார். அவர் விரும்பவில்லை.கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு முயன்றார்.அதுவும் நடக்கவில்லை.ரஜினி தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கெஞ்சிப் பார்த்தார்.அதுவும் கைகூடவில்லை. எஸ்.ஆர்.எம் கல்லூரி முதல்வர் பச்சமுத்து கட்சியுடன் கூட்டணி பேச்சு நடந்தது.கமலஹாசன் அவரிடம் நூறு கோடி கேட்டார்! இதற்கு நான் திமுகவிற்கே பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடுவேனே என்று கழன்றுவிட்டார்.
Also read
எல்லா பிரச்சினைகளிலும் டிவிட்டரில் கருத்து போட்டுவிடுவதன் மூலமாக மட்டுமே கட்சி வளரும் என எதிர்பார்க்கிறார். கொரானா காலத்தில் ஸ்டாலின்,எடப்பாடி..போன்றவர்கள் தொடர்ந்து மக்களை சந்தித்தும், காணொலி மூலமாகவும் எவ்வளவோ செயல்பட்டனர்.இவர் முற்றிலும் முடங்கிப் போனார். ஊரடங்கில் மக்கள் பெரும் துயர் அடைந்த பொழுது துரும்பைக் கூட கிள்ளி எறிய தயாரற்று இருந்துவிட்டு, தற்போது பிக்பாஸில் நடிக்க போய்விட்டார். ஒரு அரசியல் தலைவராக அவர் தன்னை உணர்ந்திருந்தால் பிக்பாஸில் நடிக்க போயிருக்கமாட்டார். இவருக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிந்த நிலையிலும், இவர் எதற்காக கட்சி நடத்த வேண்டும் என்பது புரியாத புதிராக உள்ளது!
வெறும் மூன்று சதவிகித வாக்குவங்கியை வைத்துக் கொண்டு தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டு,இதை ஒத்துக் கொள்ளும் கட்சிகளோடு மட்டும் தான் கூட்டணி என்ற அறிவிப்பு வேறு!
தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க திரானியற்ற நிலையிலும் முதலமைச்சர் கனவு! 234 தொகுதிகளில் நிற்பதற்கு முதலில் அந்தக் கட்சியில் ஆளே இல்லையே! சென்ற தேர்தலைப் போல பேப்பரில் விளம்பரம் செய்து மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேட்பாளர்களை தேட வேண்டிய பரிதாப நிலையில் ஒரு கட்சியை வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஆசை! இவர் தன்னைத் தானே ஏமாற்றுகிறாரா? அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்கிறாரா?
Leave a Reply