அரசியல் ஆசைகள்! அடி மனதில் ஆட்டங்கள்!

சாவித்திரி கண்ணன்

தலைவா வா! தலைமை ஏற்க வா? என ரசிகர்களின் போஸ்டர்கள்! ரகசிய ஆலோசனைக் கூட்டங்கள்! முதல்வர் நாற்காலியை நோக்கிய முன்னெடுப்புகள் நடக்கின்றனவா..? அரசியல் அதிகாரத்தை விரும்பும் ஆசைகள் இருக்கின்றன! ஆனால், அதற்கான அருகதைகள் உள்ளனவா..? விட்டில் பூச்சியா? வீரத் தளபதியா?

மக்கள் தலைவனாகும் மனக் கனவுகள்! ரசிகர்களின் தூண்டுதல்கள்!..என சினிமாவில் சுமார் கால் நூற்றாண்டைக் கடந்தாகிவிட்டது! வயதோ 49.  ஆயினும், அரசியலில் கால் பதிப்பதில் அரைகுறை மனசு அலை பாய்கிறது!

தமிழகத்தில் மிக அதிகமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அவருடைய பெரும்பாலான படங்கள் வெற்றிப் படமாக உள்ளன. 1994 ல் திரைத் துறையில் கால் பதித்த அவர் சுமார் 31 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இந்திய திரை உலகில் அதிக சம்பளம் பெறக் கூடிய ஸ்டாராக வலம் வருகிறார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பத்தில் சிகப்பு சிந்தனையாளராகவும், திமுக பற்றாளராகவும் தன்னை திரையில் வெளிப்படுத்தியவர். நடைமுறையில் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பவர். தன் மகனை முதலமைச்சராக பார்க்கும் கனவு அவருக்கு நிறையவே உண்டு. விஜய்யின் ரசிகர்களை அந்தப்படி முன்னோக்கி நகர்த்தியவராகவும் அவர் இருந்தார். எனவே, அதற்கேற்றவாரான கதையம்சம் கொண்ட படங்களை அவர் செலக்ட் செய்தார்! 1996 லேயே மாண்புமிகு மாணவன் என்ற படத்தை விஜய்காக உருவாக்கினார். அதற்குப் பிறகு தலைவா படத்தில் அரசியல் நோக்கம் வெளிப்பட்டு ஜெயலலிதாவின் கோபத்திற்கு இலக்காகி சில விளம்பர வாசகங்கள், வசனங்களை எடுத்துவிட்டனர்.

விஜய் ரசிகர்களின் அன்னதானம்.

தற்போது உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று (மே-28) தமிழகத்தில் 234 தொகுதிகளில் அன்னதானம் என்ற அறிவிப்பு நடைமுறையாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுக்க எங்கெங்கெல்லாம் வாய்ப்புண்டோ அங்கெல்லாம் அன்னதானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தால் அது இயல்பாக பார்க்கப்பட்டு இருக்கும். ஆனால், 234 சட்டமன்ற தொகுதிகளில் வழங்கப்படும் என சொன்னது தான் கவனத்திற்கு உரியதாகும். அதே போல அவரது தளபதி 68 என்ற படம் அவரது அரசியலுக்கான படமாக இருக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது. அம்பேதகர் சிலைக்கு மரியாதை! தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை எல்லாம் நடக்கின்றன! இவை எல்லாம் அரசியல் நகர்வை உணர்த்துகின்றன!

ஏற்கனவே விஜய் ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் நின்று சில இடங்களில் வெற்றி பெற்ற செய்திகள் வந்தன. சமீபத்தில் பனையூரில் ரசிகர்களை அழைத்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இவையெல்லாம் விஜய்க்கு நீருபூத்த நெருப்பாக அரசியல் ஆசை இருப்பதை தெளிவாக உணர்த்துகிறது.

 

சரி, மக்கள் செல்வாக்கு மிகப் பெரிய அளவில் உள்ளது. அதனால், அரசியல் ஆசையும் வருகிறது. தப்பில்லை. ஆனால், எந்த ஆசைக்கும் ஒரு விலையையும், உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தர வேண்டும் அல்லவா? அதுவும் அரசியல் எனும் போது அதற்கு மிக அதிகம் தர வேண்டுமல்லவா?

மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவது, நாட்டில் ஒரு அநீதி நடக்கும் போது அதற்கு எதிராக பொங்கி எழுந்து பேசுவது, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவிப்பது என தொடர்ச்சியான செயல்பாடுகள் அரசியலுக்கு தேவை! கடந்த 30 ஆண்டுகளில் விஜய் எத்தனை மக்கள் பிரச்சினைகளில் தன்னுடைய அறச் சீற்றத்தை வெளிப்படுத்தி இருப்பார்.எவ்வளவு களங்களைக் கண்டிருப்பார்? அரசியல் அதிகாரத்தை விரும்பும் போஸ்டர்கள் தான் வெளிப்பட்டுள்ளன!

இதோ பக்கத்து மாநிலத்தில் உள்ள கர்நாடாகாவில் பிரகாஷ்ராஜ் மதவாத அரசியலுக்கு எதிராக வலுவாகக் குரல் கொடுக்கிறார். எளிய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். பாஜக ஆட்சியில் அளவுக்கு அதிகமான ஊழல்கள் மலிந்துவிட்டன என பகிரங்கமாக பேசி கர்நாடக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இங்கே தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில், ஜெயலலிதா ஆட்சியில், ஒ.பி.எஸ், இ.பி.எஸ் ஆட்சியில் எத்தனையத்தனை ஊழல்கள் அரங்கேறின. டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான மக்கள் போரட்டங்கள் காவல்துறையால் அடக்கப்பட்டன. சுற்றுச் சூழல் பாதிப்புகளுக்கு எதிரான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு, பழவேற்காடு அதானி துறைமுக எதிர்ப்பு..என எத்தனை மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இதில் மக்களுக்கு ஆதரவாக, அதிகார மையங்களுக்கு எதிரான குரல் எடுத்துப் பேசும் துணிச்சல் இருந்ததா விஜய்க்கு?

அவ்வளவு ஏன்? தற்போதைய திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தை பாஜகவுக்கு பயந்து கொண்டு திமுக அரசு சகல விதங்களிலும் மூடி மறைப்பதைக் கண்டு மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அதே போல வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த அயோக்கியனை கைது செய்யும் துணிச்சலின்றி, திமுக அரசு பிரச்சினையை திசை திருப்பிக் கொண்டுள்ளது. இதைக் குறித்த அடிப்படை புரிதல்களாவது விஜய்க்கு உண்டா எனத் தெரியவில்லை.

அரசியல் என்பது போராட்டக்களம். அந்த போராட்டக்களத்தில் எதிர் நீச்சல் போட முடிந்தவர்களே வெற்றிபெற முடியும். இன்றைக்கு ஆதாய அரசியல் மட்டுமே இங்கே நடந்து கொண்டுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்து ஆதாய அரசியலை மறைமுகமாக நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை அம்பலப்படுத்தும் துணிச்சல் அதிமுகவிற்கே இல்லை. ஏனென்றால், அவர்களும் அதே அடிமை அரசியலைத் தான் செய்தனர். செய்து கொண்டும் உள்ளனர்.

தமிழகத்தில் போதை பழக்கத்திற்கு இளைய தலைமுறை பலியாகிக் கொண்டுள்ளது. ஆட்சித் தலைமை போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் திரானியற்று உள்ளது. கோடிக்கணகான இளைஞர்களை ரசிகர்களாக பெற்றுள்ள விஜய் இதற்கு அக்கறை காட்டி இருக்க வேண்டாமா?

இதோ முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் எதிர்பார்ப்பை ரசிகர்களிடமும், மக்களிடமும் உருவாக்கிய ரஜினி கடைசி நேரத்தில் ஞானம் வரப் பெற்றவராக அரசியலுக்கு தான் லாயக்கில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். 60 வயதிற்கு பிறகு அரசியலில் கால் பதித்த கமலஹாசனோ படுதோல்வியைக் கண்டு, உள்ள ஆதரவையும் இழந்து, அமைதியாக ஆட்சியாளர்களை ஆதரித்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார். சரத்குமார் சறுக்கி விழுந்தவர் தான் எழுந்து கொள்ளவே முடியவில்லை. இவர்களில் இருந்து சற்று மாறுபட்டு, களம் கண்ட விஜயகாந்தோ ஓரளவு வெற்றி பெற்ற போதிலும், அரசியல் சதுரங்கத்தை ஆடத் தெரியாமல், சூழ்ச்சி அரசியலில் தன்னை தொலைத்து விட்டார்.

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் உச்சபட்ச நிலையில் உள்ளார். இன்னும் சுமார் ஏழெட்டு ஆண்டுகளாவது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்க வாய்ப்புள்ளது. கண்டிப்பாக அதை தியாகம் செய்து அரசியலுக்கு வந்து சேவையாற்றுவார் என நம்ப இடமில்லை.

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பிரச்சினை குறித்து வசனம் பேசியதற்கே ரெய்டுகள் நடத்தி பாஜக அரசு அவரை பயமுறுத்தியது. அதோடு அடங்கிப் போனார். இன்றைக்கு பாஜகவின் பாசிச அரசியலை எதிர்க்க முடியாத யாராலும் மக்களுக்கான நலவாழ்வை உறுதிபடுத்த முடியாது. 150 கோடிகள் சம்பளம் பெறும் நடிகரான விஜய் மக்களுக்கான அரசியல் பேசுவதை பாஜகவும் அனுமதிக்காது.

முதலில் விஜய் தன் சுயத்தை தானே முழுமையாக அறிந்து கொண்டு, அதை மக்களிடமும் வெளிப்படுத்த வேண்டும். சார்லி சாப்ளின் தன் அரசியல் சமூகப் பார்வையை சமரசமின்றி திரையில் வெளிப்படுத்தினார். தமிழகத்தில் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்ஜி.ஆர் ஆகியோர் தங்களுக்கான அரசியலை திரையில் பேசித் தான் மக்கள் நம்பிக்கை பெற்றனர். ஆனால், இன்றைக்கோ திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மக்களுக்கான அரசியலை பேசுவது ஒரு சவால் ஆகியுள்ளது.

தனக்கான பாதையில் பயணிக்க விஜய்க்கு முழு சுதந்திரம் உள்ளது. சும்மா மாயைகளில் கட்டுண்டு தன்னையும் அழித்துக் கொண்டு ரசிகர்களையும் அழித்துவிடக் கூடாது. அரசியல் என்பது பெரு நெருப்பு. அது விட்டில் பூச்சிகளை விழுங்கிவிடும், ஜாக்கிரதை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time