தமிழ் ஒளிக்கான அங்கீகாரம் தரப்படாதது ஏன்?

பேராசிரியர் வீ.அரசு

பாரதி, பாரதிதாசன் மரபின் தொடர்ச்சியாக கவிதைகள் புனைந்தவர் தமிழ் ஒளி! சமரசமற்ற எழுத்துப் போராளி! தெறிக்கும் சொல்லாட்சியும், நெஞ்சைப் பறிக்கும் கற்பனை வளமும் நிரம்பிய கவிதைகள் படைத்தவர்! இவ்வளவு சிறப்பு வாய்ந்த கவிஞன் புறக்கணிக்கப்பட்டது ஏன்? அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவது ஏன்?

1924இல் பிறந்த விஜயரங்கம் எனும் தமிழ்ஒளி 1965இல் மறைந்தார். நாற்பத்தோரு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி; மறைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுயவிளக்க அறிக்கையை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது அவரைப் பற்றிய புரிதலை நமக்குத் தரும்.

நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய இருவேறு வர்க்கங்களின் தீயபண்புகளை எதிர்த்துத் தமிழ்மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த காலக் கட்டத்தில், அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைப்பவன் என்ற முறையிலும், புதிய சமுதாய அமைப்பைக் காணப் போராடும் சிந்தனையாளன் என்ற முறையிலும் இவ்வறிக்கையை நான் வெளியிடுகிறேன்.

பணமோ, பக்கபலமோ அற்ற நிலையில், சமூகத்தின் தாழ்ந்த படியிலே வளர்ந்து, தலைநிமிர்ந்த என்னை, நிலப்பிரபுத்துவப் பிற்போக்கும், முதலாளித்துவ முற்போக்கும் இருட்டடிப்பு செய்துள்ளன. அதன் காரணமாகவே மக்கள் மன்றத்தின் முன் மறைக்கப்பட்டிருந்த என்னை, நானே அறிமுகப்படுத்திக் கொள்ள முன்வந்தேன்

தமிழ் ஒளியின் சுமார் நாற்பது ஆண்டுகால வாழ்க்கையை புரிந்து கொள்ள பின்வருமாறு பகுத்துக் கொள்ளலாம்:

உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்து (1936 வாக்கில்) பாரதிதாசனிடம் தொடர்பு கொண்டு வாழ்ந்த காலச்சூழல்; கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் படிப்பை ஓராண்டுகள் படித்து இடை நின்று விட்டார்.

பாரதிதாசனால் உந்தப்பட்டு திராவிட இயக்க இதழ்களில் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருந்த காலம். இவரது கவித்துவத்திற்கு பாரதிதாசன் அங்கீகாரம் கிடைத்தது (1941-1946). இக்காலங்களில் இவர் எப்படி வாழ்ந்தார் என்பது தொடர்பான விவரங்களைக் கண்டறிவது அவசியம். ‘கிராம ஊழியன்’, ‘மாதமணி’, ‘புதுமை இலக்கியம்’ ஆகிய இதழ்களில் ‘விஜயன்’ எனும் பெயரில் எழுதிய தரவு கிடைக்கிறது. இது சராசரியான எழுத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்த காலம்.

இடதுசாரி இயக்கத் தொடர்பு ஏற்பட்டு தமிழ்ஒளியின் கண்ணோட்டத்தில் முழுமையான மாற்றம் ஏற்பட்ட காலம் (1947-1957). இக் காலத்திய தமிழ்ஒளிதான் வரலாற்றில் நிலைபேறு கொள்ளும் கவிஞராக வாழ்ந்திருக்கிறார். இக் காலத்தில் இவர் எழுதிய ‘நிலைபெற்ற சிலை’ (1947), வீராயி (1947), ‘கவிஞனின் காதல்’ (1943) மூன்று குறுங்காப்பியங்கள் முக்கியமானவை! கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த (1948-1951) காலங்களில் அக்கட்சியின் ‘முன்னணி’ எனும் இதழை, இவரும் கவிஞர் குயிலனும் தலைமறைவாக நடத்தினர். இவ்விதழ் தமிழ்ஒளி என்ற கவிஞரை அடையாளம் காண உதவுகிறது. ‘ஜனயுகம்’ (1949) எனும் இதழை ஆசிரியராக இருந்து நடத்திய காலம். ‘நீ எந்தக் கட்சியில்’? (1948), ‘மே தினமே வருக’ (1952) ஆகிய இடதுசாரி கருத்துருவை அடங்கிய சிறுகவிதை நூல்கள் தோழர்களால் வெளியிடப்பட்ட காலம்.அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக (1949) செயல்பட்ட காலம்.

மார்க்ஸியத்தை முழுமையாக ஏற்று, தன்னை ஒரு கம்யூனிஸ்டாகக் கருதி வாழ்ந்த, காலம் இதுவாகும். இக்காலங்களில், விந்தன்(1916-1975), ஜெயகாந்தன்(1934-2015) விஜயபாஸ்கரன்(1926-2011) ஆகியோரோடு தொடர்பு கொண்டு, ‘மனிதன்’(1954), ‘சரஸ்வதி’(1954) ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதிய காலம். நூற்றுக்கணக்கான இடதுசாரிக் கவிதைகளை எழுதிய காலம் இது.

கட்சி நடவடிக்கைகளில் முரண்பட்டு கட்சியிலிருந்து வெளியேறி, முழுநேர எழுத்தாளராக வாழ்ந்த காலம். இக்காலங்களில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி நூலாக வெளியிட்டார். குழந்தைகளுக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். திரைப்படக் கதைகள், பாடல்கள் எழுத முயன்ற காலம். பல்வேறு பதிப்பகங்கள் வழி தமது நூல்களை வெளியிட்ட காலம். ‘மாதவி காப்பியம்’ என்ற அரிய காப்பியத்தை எழுதிய காலம். கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் புறக்கணிக்கப்பட்ட காலம் இதுவாகும்(1958-1961)

அவரது இறுதிக் காலத்தில் (1962-1965) மனநோயால் பாதிக்கப்பட்டு, அனாதையாக வாழ்ந்தார். இது இவரது காதல் தோல்வியின் விளைவு! ஆனால், இவரது இடதுசாரி தொடர்பு அறுபட்டுப்போன சூழலும் இந்த மனநிலைக்கு காரணமாயிருக்கலாம். அவரது சிறுவெளியீட்டுக் குறிப்பு மூலம் இதை ஊகிக்க முடிகிறது.

தமிழ்ஒளி அடிப்படையில் சிறந்த கவிதை எழுதிய கவிஞர். அவரது கவிதைகளில் வெளிப்படும் கவிதை நயம் பல பரிமாணங்களைக் கொண்டது. அவர் சிறுகதை, சிறார்கதை, திறனாய்வுக்கட்டுரை, ஆய்வுக்கட்டுரை காவியம், மேடை நாடகங்கள் என்னும் பல வடிவங்களிலும் செயல்பட்டிருக்கிறார். அவரது கவிநயத்தால் அவரது காவியங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

தமிழ் ஒளி தமிழ் சமூகத்திற்கு தந்த கொடைகளாக கீழ்கண்ட படைப்புகளை சொல்லலாம். கவிஞனின் காதல், திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம், நிலை பெற்ற சிலை,  வீராயி, மே தின ரோசா,விதியோ வீணையோ,  கண்ணப்பன் கிளிகள்,  புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம், கோசலக் குமாரி, மாதவிக் காவியம், சிலப்பதிகாரம் காவியமா நாடகமா போன்றவை! சக்தி நாடக சபாவிற்காக இவர் எழுதிய சிற்பியின் கதை எனும் நாடகம் பின்னர் வணங்காமுடி என்ற திரை வடிவம் பெற்றதாக சொல்கிறார்கள்.

தமிழ் ஒளியின் கவிதைகளில் சில துளிகளை காண்போம்;

வந்த விடுதலை யாருக்கென்றே- அதை

வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம்.

இங்கு

நொந்து கிடப்பவர் வாழவில்லை – எனில்

நொள்ளை விடுதலை யாருக்கடா..?

என கிடைத்த சுதந்திரம் எளிய மக்கள் வாழ்விலே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலை கண்டு பொங்கி கவி படைத்துள்ளார்!

மோனக் கருக்கலிலே – விண்

முத்தொளி தோன்றுகையில்

வானக் கடல் கடந்தே- அதை

வாங்கி வரவிரைவேன்.

முத்துப் பனித்துளியில்- கதிர்

முத்தமளிக்கையிலே

பித்துக் கவி புனைந்தே- மணம்

பேசி மகிழ்ந்திடுவேன்!

சாயும் கதிர்களிலே –இருட்

சாலம் புரிகையிலே

காயும் நிலவனவே- வழி

காட்ட எழுந்திடுவேன்!

நீலக் கடல் அலையில் – கதிர்

நெய்த வலையிடையே

கோலக் குளிர்மணி போல் – கவி

கொட்டிச் சிரித்திடுவேன்.

ஊரை எழுப்பிடவே – துயர்

ஒன்றை நொறுக்கிடவே

தாரை முழக்கிடுவேன் – தமிழ்ச்

சாதி விழித்திடவே!

கத்தி முனைதனிலே – பயங்

காட்டும் உலகினிலே

சத்தியப் பேரிகையை – நான்

தட்டி முழக்கிடுவேன்!

இவ்வாறு தமிழ் ஒளியின் நிறைய கவிதைகளைச் சொல்லலாம். சுமார் இருநூறு கவிதைகளை தமிழ் ஒளி எழுதியிருக்கிறார். அவரது கவிதைகளையும், காவியங்களையும் முழுமையாக வாசிக்கும் போது, தமிழின் தவிர்க்க முடியாத சிறந்த கவிஞன் என்ற புரிதலைப் பெறமுடியும். இந்த மதிப்பீடு, தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளிப் புரிதலில் இடம் பெற்றுள்ளதா? என்ற கேள்வி முக்கியமாகிறது. அப்படியான மதிப்பீடு இல்லை என்பது வெளிப்படை. இதனை பின்வரும் பதிவை அடிப்படையாகக் கொண்டு உரையாடல் நிகழ்த்தலாம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ‘முப்பெரும் கவிஞர்கள்’ எனும் மதிப்பீட்டினை செய்து வருகிறது. அதில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றே அவர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். இந்த வரிசை அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அமைப்பினர் நடத்திய தமிழ்ஒளி பற்றிய கூட்டத்தில் நான் மறுத்தலித்துப் பேசினேன். பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்பதே சரியென எனது வாதத்தை முன் வைத்தேன். கீழ்க்கண்ட காரணங்களை முன்வைத்து எனது நிலைப்பாட்டைச் சொன்னேன்.

பாரதி தேசியக்கவி; காங்கிரஸ் இயக்கத்தால் கொண்டாடப்பட்டவன். பின்னர் இடதுசாரிகளால் பெரிதும் பேசப்பட்டவன். இடதுசாரிகள் ஒரு கட்டத்தில் பாரதியை மட்டுமே அங்கீகரித்தனர். தோழர் ஜீவா எழுத்துக்களில் இதைக் காணலாம்.

பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவிஞன்; தமிழ்ச்சூழலில் அந்த இயக்கம் வளர்ச்சியடைந்த போது பாரதிதாசன் கொண்டாடப்பட்டான். இடதுசாரி அமைப்பினரும் மிகவும் பிற்காலத்தில் தான் பாரதிதாசனை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.

மேற்குறித்த மரபில், பொருண்மையாலும் கவிதையாலும், இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழ்ஒளியைத் தான் சொல்ல வேண்டும். ஆனால், இயல்பில் நடக்கவில்லை. அந்த இடத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை வைத்து மதிப்பீடு செய்வது வரலாற்றுப் பிழையாகும்.

மேற்குறித்த வாதத்தைப் புரிந்து கொள்ள இயக்கச் செயல்பாடு, கவிதையின் பாடுபொருள், கவிதைகளின் கவித்திறன் ஆகிய பிறவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். ஆனால், அது ஏன் இடதுசாரிகளினால் மேற்கொள்ளப்பட வில்லை என்ற உரையாடலை முன்னெடுக்கும் தேவையுண்டு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்பட ஊடகத்திற்காக செயல்பட்ட சொல்வளம் மிக்க கவிஞர். அவரது கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது உடுமலை நாராயணக்கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் என்று அவர் செயல்பட்ட ஊடகத்துறை சார்ந்து மதிப்பீடு செய்வதே சரி. அதனால், அவரை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று பொருள் இல்லை.

உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டையார், கண்ணதாசன்

பட்டுக்கோட்டையார் வெகுஜன தளத்தில் நன்கு அறியப்பட்டவர், எம்.ஜி.ஆர் படப் பாடல்களை முற்போக்கு கண்ணோட்டத்தில் எழுதியவர். ஆனால், அவர் பாரதி, பாரதிதாசன் செயல்பட்ட இயக்கச் செயல்பாட்டில் இல்லை; பாரதி, பாரதிதாசன் இயக்கம் சார்ந்து செயல்பட்ட வரலாறு நாம் அறிந்த மரபு. இப்படியிருக்க அவர்களோடு ‘முப்பெரும் கவிஞர்’ என்ற பட்டியலில் பட்டுக்கோட்டையைச் சேர்ப்பது தமிழ்க் கவிதை வரலாற்று மரபில் முரணானது. தமிழ்த் திரைப்படப் பாடல் மரபில் வலிமையான சொல்லாட்சியோடு பாடல் பாடியவர் பட்டுக்கோட்டை. கவிதை எழுதியவர் இல்லை. பாடல் வேறு; கவிதை வேறு. இந்தப் புரிதல் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கே இல்லை எனில், மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது அரிது.

மேற்குறித்தப் பின்புலத்தில், தமிழ்ஒளி தமிழ் மரபு சார்ந்த வளமான கவிஞன். பாரதி, பாரதிதாசன் மரபை உள்வாங்கி, அதிலிருந்து மேலும் வளர்ந்த கவிஞன். இடதுசாரி இயக்கத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்ட கட்சி ஊழியன். அந்தக் காலங்களில்தான் தமிழ்க்கவிதை மரபில் வளமான இடதுசாரிக் கவிதைகள் உருவானது. அதில் தமிழ்ஒளி முதன்மையானவர். இந்த உரையாடலைப் புரிந்து கொள்ள, பாரதி, பாரதிதாசன் பின்புலத்தில், தமிழ்ஒளி கவிதைகளை வாசிக்கும்போது நாம் இயல்பாகவே உணர முடியும்.

இந்த உரையாடலை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகப் பொது வெளியில் நான் முன்னெடுத்ததின் விளைவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தினர் அண்மையில் ஐந்து கலைஞர்களை வரிசைப்படுத்தி, அதில் பட்டுக்கோட்டையோடு, தமிழ்ஒளியையும் சேர்த்திருக்கிறார்கள். பட்டுக்கோட்டை இடம்பெறும் இடத்தில் தமிழ் ஒளி இடம் பெற முடியவில்லை. போனால் போகிறது என்று இறுதிப் பெயராக தமிழ்ஒளி இணைக்கப் பட்டிருக்கிறார்.

இந்தப் பின்புலத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு தமிழ் ஒளி நூற்றாண்டு. அந்த ஆண்டில் தமிழ்ஒளியைப் புதிதாகக் கண்டுபிடிப்போம். பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்ற முப்பெரும் தமிழ்க்கவிஞர் மரபை வரலாற்று நியதி ஆக்குவோம். தமிழ் ஒளிக்கு ஏன் இந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உரையாடலில், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தோன்றிய போராளி; ஒரு இடதுசாரி, ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் தான் என்று பலரும் சொல்கிறார்கள்!

இந்த பழியைத் துடைத்தெறிய வேண்டும். தேசிய கவிஞன் பாரதி, சுயமரியாதை இயக்க கவிஞன் பாரதிதாசன், இடதுசாரி இயக்க கவிஞன் தமிழ் ஒளி என்னும் ‘தமிழ் முப்பெரும்கவி’ மரபைக் கொண்டாடுவோம். 2024 இல் தமிழ் ஒளியின் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில் மூலம் இதனை நடைமுறைப்படுத்துவோம். தமிழ் ஒளியைப் புதிதாகக் கண்டெடுத்துக் கொண்டாடுவது; நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் அடையாளமாகட்டும்.

கட்டுரையாளர்; பேராசிரியர் வீ.அரசு

எழுத்தாளர், ஆய்வாளர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time