இந்திய ஆட்சியை ஆட்டுவிக்கும் சக்திகள் எவை?

-சாவித்திரி கண்ணன்

செங்கோல் விவகாரத்தை ஆதி முதல் முடிவு வரை அலசி அனைத்து சம்பவங்களையும் கோர்த்துப் பார்த்தால் ஒரு பட்டவர்த்தனமான உண்மை தெரிய வருகிறது! ராஜாஜி, சங்கராச்சாரியார், ஆதினங்கள், குருமூர்த்தி, பத்மா சுப்பிரமணியம்..பாஜக ஆட்சி, செங்கோல் சடங்கு, வைபவங்கள்… இவை சொல்ல வரும் செய்தி என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அவர்களால் ஜவகர்லால் நேருவுக்கு வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட ஐந்தடி உயர செங்கோல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் திருவாவடு துறை ஆதினத்தால் அளிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கையின் பின்புறத்தில் வைக்கப்படும் என்ற செய்தி முதலில் வந்தது!

”அடடா, தமிழர் ஒருவரால் தரப்பட்ட செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்படுகிறதே..! தமிழருக்கு பெருமை! தமிழ்நாட்டிற்கு பெருமை..” என்ற புளகாங்கித பேச்சுகள் அடிபட்டன!

அதில், ‘ராஜாஜி சொல்லித் தான் திருவாவடுதுறை ஆதீனம் இதை செய்தளித்தார்! ஆகவே, இதன் பெருமையில் ராஜாஜிக்கும் பங்குண்டு’ என்றனர். ராஜாஜி ஏன் இதை சங்கர மடத்திடமோ, ஜீயர் சுவாமிகளிடமோ செய்து தரக் கேட்கவில்லை.. என்பது தெரியவில்லை!

அடுத்ததாக, ‘இதை ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகச் சொல்லி மவுண்ட்பேட்டனிடம் தந்துவிட்டு, பின்னர் கங்கை ஜலத்தில் கழுவி, நேருவிடம் ஒப்படைத்தனர்’ என்றனர். ”மவுண்ட்பேட்டன் அந்த நேரம் கராச்சியில் இருந்தார். நேருவிடம் ஒப்படைக்கப்படும் காலகட்டத்திற்கு முன்னும், பின்னுமான அவரது நிகழ்ச்சி நிரல், சந்தித்தவர்களின் விபரங்கள் குறித்த ஆவணங்கள் எதிலும் அவர் தமிழக ஆதீனங்களை சந்தித்த குறிப்பு இல்லை” என தெளிவான பிறகு ‘கப்சிப்’ ஆனார்கள்.

அப்புறம் சங்கராச்சாரியார் சொல்லாவிட்டால், இந்த வரலாறே யாருக்கும் தெரிய வந்திருக்காது. அவர் தான் 1978 ஆம் ஆண்டு ஒரு நிகழ்வில் பேசும் போது, இதைக் குறிப்பிட்டாராம். அதை தேவார முனைவர் சுப்பிரமணியம் என்பவர் ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளாராம். ( புத்தகம் பெயர் சொல்லப்படவில்லை). இதை ‘துக்ளக்’ இதழ் 2021ல் கவனபடுத்தி எழுதியதாம்! அதை பத்மா சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து டெல்லி அரசுக்கு அனுப்பினாராம்! அதைக் கண்டு தான் அலஹாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த அந்தப் பரிசுப் பொருள் கண்டெடுக்கப்பட்டு, தற்போது நாடாளுமன்றத்தில் வைக்கப்படுகிறதாம். அதை இத்தனை நாள் அலட்சியப்படுத்திவிட்டார்களாம்! அடடா! எவ்வளவு பெரிய குத்தம்! இந்த குத்தத்திற்கு யாரை கழுவிலேற்றுவது? செங்கோலையே மறப்பதா?

நாம் விசாரித்த வகையில் பிரிட்டிஷார் நமக்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்த தருணத்தில், ”சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருந்தால் வாங்க” என ராஜாஜி அவர்கள் திருவாவடுதுறை ஆதினத்திடம் பேசியுள்ளார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அன்றைய ஆதீனம், வெறுங்கையோடு வாழ்த்துவது நன்றாக இருக்காது என ஒரு நல்ல பரிசுப் பொருளை வழங்க கருதியே, செங்கோல் தயாரிக்கச் செய்து கொண்டு கொடுத்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனக் குறிப்புகளிலேயே கூட, ‘நேருவுக்கு பரிசு வழங்கப்பட்டதாகவே’ குறிப்புள்ளது என சொல்லப்படுகிறது. அதுவும் இவர்கள் சொல்வது போல, ராஜாஜி விமானப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யவில்லையாம். ரயிலில் தாம் ஆதினச் செலவில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பரிசுப் பொருளுக்கு தான் இன்றைக்கு சுதா ஷேசய்யன், பத்மா சுப்பிமணியம், தினமணி வைத்தியநாதன், குருமூர்த்தி.. போன்றவர்கள் கட்டுக்கதை கட்டி, வியாக்கியானங்கள் தருகிறார்கள்!

ஒரு ஜனநாயக நாட்டில் நீதி நெறி தவறாத ஆட்சியை வழங்குவதற்கான வழிகாட்டி நூலாக கொள்ளப்பட வேண்டியது அந்த நாட்டிற்கென உருவாக்கப்பட்ட அரசியல் சட்டங்கள் தாம்! அதுவே ஆட்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய சாசனம்!

செங்கோல் என்பது மன்னராட்சியின் அதிகாரக் குறியீடு. மன்னர் தெய்வத்திற்கு நிகரானவர். கேள்விக்கு அப்பாற்பட்டவர்! ‘கோன்’ என்பது மன்னரைக் குறிக்கும் சொல்! ‘கோல்’ என்பது அவன் அதிகாரத்தை குறிக்கும் சொல்! இது கடந்த கால கம்பீரமாக இருக்கலாம். ஆனால், அது தற்போது காலாவதியாகிவிட்ட ஒரு கலாச்சாரத்தின் அடையாளம்! காலாவதியாகிவிட்ட ஒரு மன்னராட்சி கால குறீயீட்டை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய தேவை என்ன? மன்னராட்சி போன்ற கட்டற்ற அதிகாரம் கொண்ட கேள்விக்கு அப்பாற்பட்ட தனிநபர் சார்ந்த அதிகார குவியலை மீட்டெடுக்க விருப்பமா? அதை நோக்கிய நகர்வு தான், இந்த செங்கோலுக்கு தரப்படும் முக்கியத்துவங்களா?

நமக்கு வரும் சந்தேகம் எல்லாம் 1978 ஆம் ஆண்டு இதை சங்கராச்சாரியார் நினைவுபடுத்தி பேசி இருக்கிறார் என்றால், அன்று ஜனசங்கமும் பங்கு பெற்ற ஜனதா ஆட்சி தானே நடந்தது? மொரார்ஜி அமைச்சரவையில் வாஜ்பாய்  அமைச்சராக இருந்தாரே! அதற்குப் பிறகு ராஜிவ் காந்தி, நரசிம்மராவ் உள்ளிட்ட எத்தனையோ பிரதமர்கள் வந்தனரே? எல்லா அரசாங்கத்துடனும் பத்மா சுப்பிரமணியம் போன்றோருக்கு நல்லுறவு இருந்ததே! அந்த செங்கோலை மீட்டெடுக்க ஏன் தோன்றவில்லை? ஆக, ‘இது தான் தங்களுக்கான ஆட்சி’ என இவர்கள் நம்புகிறார்கள் என்பதே பொருள்!

சரி, செங்கோலை கம்பீரமாக வாங்கி கையேலேந்தவாவது தெரிகிறதா.. நமது பிரதமர் மோடிக்கு? அதை ஒரு பூஜைப் பொருளாக்கி விட்டனர் பாஜகவினர்! அதை நிறுவி வைத்து, அதன் முன்பாக மோடியை சாஸ்டாங்கமாக விழுந்து, வணங்க வைத்துள்ளனர்! அதை வாங்கி அவர் இரு கைகளுக்கும் இடையில் வைத்த வண்ணம் சுமார் இருபது ஆதீனங்களிடம் வணங்கி ஆசீர்வாதம் வாங்குகிறார்! ஏதோ சமயச் சடங்கு போல செங்கோல் தரும் நிகழ்வை இங்கிருந்து 20 ஆதீனங்களை அழைத்து நடத்தி உள்ளார்கள்!

நேருவுக்கு தரப்பட்ட நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனம் தருகிறார். நேரு பெறுகிறார்! அத்துடன் முற்றுப் பெற்றது அந்த மூல நிகழ்வு! ஆனால், மறு நிகழ்வோ இருபது சன்னிதானாங்கள் புடை சூழ நடத்தப்பட்டுள்ளது! அதிகார மைய அழைப்பு என்றால், அத்தனை ஆதீனங்களும், ‘துண்டைக் காணோம், துணியக் காணோம்’ என விழுந்தடித்து டெல்லிக்கு விமானத்தில் பறக்கிறார்கள்!

அங்கே பிரதமர் மோடியை வைத்து சிருங்கேரி ஷாரதா மடத்தை சேர்ந்த பார்ப்பன சாஸ்த்திரிகள் அழகான வெள்ளைத் திண்டில் அமர்ந்து வேள்விகள் வளர்த்து, வேதமந்திரங்கள் ஓதி, சடங்குகள் செய்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட வெகுமதிகள், தட்சிணைகள், மரியாதைகள்..எல்லாம் வேற லெவல்! இந்த சடங்கு நிகழ்வை  சில முக்கியஸ்தர்கள் வசதியான குஷன் சோபாவில் அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றனர். அதே சமயம் நம்ம தமிழ் நாட்டு பிராமணரல்லாத ஆதீனங்கள் சற்று தொலைவில் ஒதுங்கி நின்ற வண்ணம் ‘தேமே’ என்று வேடிக்கை பார்க்கின்றனர்!

தமிழகத்தில் மிக மதிப்பு கொண்டவர்களாக – பல்லக்கில் பவனி வரக் கூடிய குறுநில அதிபதிகளாக வலம் வந்த ஆதீனங்கள் – டெல்லி வாலாக்கள் முன்பு வரிசை கட்டி நிற்க வைக்கப்பட்டதை பார்க்கும் போது சற்று சங்கடமாகவே இருந்தது! தங்களுக்கு வேலை இல்லாத இடத்தில் அவர்கள் ஏன் நிற்க வைக்கப்பட்டனர்? அதற்கு பிறகு பார்லிமெண்ட்டின் மைய அரங்கிற்குள் மோடி நுழையும் போது இவர்களும் பின்னாடியே அணிவகுத்து செல்கின்றனர்.

சங்கரமடம் விஜயேந்திரரை இவ்வாறு நடத்துவார்களா? அகோகில மடம் ஜியர் ஸ்வாமிகளை இவ்வாறு நடத்துவார்களா? அவர்களைத் தேடி அல்லவா இவர்கள் செல்கிறார்கள்? தமிழகத்திற்கு வரும் பிரதமர்கள் எல்லாம் சங்கராச்சாரியாரை அல்லவா தேடிச் சென்று பார்த்தார்கள்!

புதிய பாரளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் ஒரு ஆவணப்படம் காட்டப்படுகிறது! அந்த ஆவணப்படத்தில் ராஜாஜிக்கு, காஞ்சி  சந்திரசேகர சங்கராச்சாரியார் தந்த ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனம் செங்கோல் தந்ததாகவும், மீண்டும் அவரது நினைவூட்டல்படியே தற்போது அது அலஹாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறி பெருமைப்படுத்துகிறார்கள்! ஆக, யாருடைய – எந்த சக்திகளுடைய – விருப்பங்கள், நோக்கங்கள், கட்டளைகளுக்கு ஏற்ப இன்றைய ஆட்சியின் நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன என்பதற்கு இவையெல்லாம் தான் சான்றுகளாகும்!

”இந்த ஆட்சியில் எல்லாவற்றுக்கும் பின்னணியில் நாங்கள் தாம் இருக்கிறோம்” என சனாதன சக்திகளே தங்களை பிரகடனப்படுத்தி கொண்டுள்ளார்கள்! சபாஷ்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time