கர்நாடகா சாதிக்கிறது! தமிழகம் மெளனிக்கிறது!

-சாவித்திரி கண்ணன்

”இல்லை வரவே வராது”  ”ஒரு போதும் வர விடமாட்டோம்”  ”தமிழக அரசின் அனுமதி இன்றி வரவே வாய்ப்பில்லை”  ”மத்திய அரசு அனுமதிக்காது”  ”நடுவர் மன்றம் ஏற்காது, பசுமைத் தீர்பாயம் ஒப்புதல் தராது…” என்பதாக நம்பப்பட்டவை அனைத்தும் பொய்த்து வருகின்றன! மேகதாது வேலைகள் ஜரூராக நடக்கின்றன..!

இதற்கு ஏற்கனவே ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்த நிலையில், ”பணிகள் மேலும் விரைவுபடுத்தப்படும்….”  என்று தான் துணைமுதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவகுமார் மேகதாது கட்ட வலியுறுத்தி, கர்நாடகத்தில் பேரணிகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்தவர், முரசறைந்து அறிவித்தவர் என்ற நிலையில் அவர் இவ்வாறு தற்போது பேசியதில் வியப்பு ஒன்றுமில்லை!

கர்நாடகத்தில் புதிதாக பதவி ஏற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார், ”மேகதாது அணை என்பது எங்கள் உரிமை! ஆகவே, அணை திட்டம் விரைவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளதும், இதற்கு வழக்கம் போல தமிழக அமைச்சர் துரைமுருகன் ஒரு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதும் சாதாரணமாக கடந்து போகக் கூடியதல்ல.

”மேகதாது அணை கட்டியே தீருவோம்” என காங்கிரஸ் தலைவர்கள் முரசறைந்து அறிவித்தனர்.

மேகதாது அணைதிட்ட வேலைகள் கடந்த இரண்டாண்டுகளாக நடந்த வண்ணம் உள்ளன. இந்தக் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள், இயந்திரங்கள், உழைக்கும் தொழிலாளர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளது பற்றி தமிழக அரசு இது நாள் வரை பெரிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது ஏன் எனத் தெரியவில்லை. இன்னும் சிலர் அந்த அணை கட்டுமானத்திற்கு தமிழக பகுதியில் இருந்தே மணல் போன்றவை செல்வதாக சொல்கிறார்கள். ஆனால், இதை உறுதிபடுத்த முடியவில்லை.

”மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்தை பரிசீலிக்கிறோமே அன்றி அனுமதிக்கமாட்டோம்” என்ற மத்திய பாஜக அரசு,  திட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டது. ‘இந்த செயலால் இரு மாநில நல்லுறவுக்கு சீர்கேடு ஏற்படும்’ என்பது நன்கு உணர்ந்த நிலையில் ஒரு மத்திய அரசே இப்படி செய்வதை எப்படி புரிந்து கொள்வது?

”மத்திய நீர்ப்பாசனத்துறை மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டது, அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்” என்று அன்றைய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்தையும், பிறகு வந்த பசவராஜ் பொம்மை, ”இதை எதிர்ப்போம் என சொல்லலாம், தீர்மானம் இயற்றலாம். ஆனால், தமிழக அரசால் தடுக்க முடியாது” எனச் சொன்னார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 5,250  ஹெக்டேர் பரப்பளவில் 67 டிஎம்சி நீரை தேக்கும் அளவுக்கு புதிய அணை கட்டவும், அதில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும்  திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்ததும், அதை மத்திய பாஜக அரசு அனுமதித்ததுடன் மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்கள், ”மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கும் வாய்ப்புக்கே இடமில்லை” எனப் பேசியதும் மறந்துவிடக் கூடியதல்ல. இதற்கு ‘தமிழக அரசு சார்பில் கடுமையான எதிர்வினை ஆற்றவில்லை’ என்பதையும் முன்பே நாம் அறம் இணைய இதழில் கவனப்படுத்தி இருந்தோம்.

மேகேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர்  உள்ளிட்ட காவிரி வடிநில மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகும். டெல்டா பகுதியின்  25 இலட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலைவனம் ஆகிவிடும். காவிரி ஆற்று நீரில் இருந்து தான்  சென்னை உட்பட  20 க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீர் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளனர். இந்தச் சூழலிலும் கூட தமிழகத்தில் மேகதாது அணைதிட்டத்திற்கு எதிராக பெரிய அரசியல் கட்சிகளிடம் இருந்து வலுவான போராட்ட எதிர்ப்புகள் வெளிப்படவில்லை என்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது.

இரண்டாண்டுகள் அங்கே வேலை ஜரூராக நடந்து வருவதை இன்னும் எவ்வளவு நாட்கள் கண்டு கொள்ளாமல் இருப்பீர்கள்? ‘மேகதாது அணை கட்டி முடித்து திறப்பு விழா அறிவிக்கட்டும். அப்போது பெரிய போராட்டம் நடத்தினால் போச்சு’ என்று இங்குள்ள ஆட்சியாளர்களும்,அரசியல் கட்சிகளும் நினைக்கிறார்களோ என்னவோ..? முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவே மறுக்கிறார். துரைமுருகனை விட்டு, சடங்கு போல ஒரு எதிர்ப்பு அறிக்கைவிடச் செய்கிறார்.

ஆனால், அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் மேகதாது அணைதிட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்! இது அடர்ந்த வனப்பகுதியை அழித்து உருவாக்கப்படுகிறது. வன உயிர் சரணாலயம், காப்புக் காடுகள் யாவும் அழிக்கப்படுகின்றன! இங்குள்ள கிராமங்களில் வாழும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடிகளும், பட்டியலினத்தவர்களும், ஏழை விவசாயிகளும் தங்களின் வசிப்பிடத்தை இழக்கின்றனர். இந்த திட்டத்தால் உயிரி சங்கிலி அறுபடுகிறது. இதனால், ”பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக கர்நாடக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.. ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் இந்தப் பாவத்தை செய்யக் கூடாது” என கர்நாடகத்தில் உள்ள இதயத்தில் ஈரம் உள்ள நல்லோர்கள் சொல்லி வருகின்றனர்! அவர்களுக்கு நாம் தலை வணங்கி அவர்களோடு கைகோர்க்க வேண்டும்.

உண்மையில் தேவைக்கும் அதிகமான நீர்வளம் கொண்ட மாநிலம் தான் கர்நாடகம்! அங்கு கிருஷ்ணா, கோதாவரி, வடபெண்ணை,தென் பெண்ணை உள்ளிட்ட 36 ஆறுகள் பாய்கின்றன. ‘தமிழகத்தைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு நீர்வளம் நிறைந்த மாநிலமான கர்நாடகா, வறண்டு கிடக்கும் தமிழகத்தை மேலும் வஞ்சிப்பது நியாயமல்ல’ என்பதையும், ‘அதை கர்நாடக மக்களே கூட விரும்பமாட்டார்கள்’ என்பதையும் நாம் உரத்து சொல்ல வேண்டிய இந்த தருணத்தில் சொல்லியே ஆகவேண்டும்.

கர்நாடகா  ஆண்டுக்கு சுமார் 2,000 டி.எம்.சி நீரை கடலுக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ளது. ‘மேகதாதுவில் கிடைக்கவுள்ள 67 டி.எம்.சி கிடைத்து தான் வாழமுடியும்’ என்ற நிலை கர்நாடக மக்களுக்கு அறவே இல்லை. காங்கிரஸ், பாஜக, ம.ஜ.த ஆகிய மூன்று கட்சிகளும் ‘காவிரியை சிறை பிடிப்பதன் மூலம் மக்களிடம் ஒரு கதாநாயக அந்தஸ்த்தை பெறலாம்’ என்ற ஒரு கீழ்த்தரமான அரசியலை தொடர்ந்து அங்கு செய்து கொண்டுள்ளனர்.

இது போன்ற  பெரிய அணை திட்டங்கள் மக்களுக்கு உதவுவதை விட ஒப்பந்ததாரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பெரும் பலன் தருகின்றன. இதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன் தந்து ஊக்குவிக்கின்றன!  மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவின் மூர்க்கமான பேச்சுகளை வெறும் பெயரளவுக்கு எதிர்த்து விட்டு, அதன் செயல்பாடுகளை சிறிதும் பொருட்படுத்தாமல் கள்ள மெளனம் சாதிக்கின்றன  தமிழக அரசும், அரசியல் கட்சிகளும்.

தமிழக திமுக அரசு இனியாவது உறுதியான ஒரு நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். எடுக்க வைக்க எதிர்கட்சிகளும் அழுத்தம் தர வேண்டும். ‘தமிழகத்திற்கான வாழ்வாதார பிரச்சினையிலேயே இங்குள்ள அரசியல் கட்சிகளால் ஒன்றிணைந்து போராடவும், உரிமையை பாதுகாக்கவும் முடியவில்லை’ என்பது துரதிர்ஷவசமானதாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time