எடுத்ததற்கெல்லாம் குழு அமைப்பது, அதற்கு தகுதியற்ற தலைவர்களைப் போடுவது, கெளவத்திற்காக சிலரை உறுப்பினராகப் போடுவது, குழு செயல்படுவதற்கு தோதான சூழ் நிலைமைகளை உருவாக்கத் தவறுவது, அதில் திடீரென ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலையிட்டு அதிகாரம் செய்வது… இதற்கு தீர்வு தானென்ன?
தமிழ் நாட்டிற்கென தனித்துவமான புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிட ஒரு குழு நீதிபதி த.முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டது! கல்விசார் பாடத் திட்டங்கள் தொடர்பாக எந்த அடிப்படை அறிவுமற்ற இது போன்ற நீதிபதிகளை தலைவராக போட்டதும், அந்தக் குழுவில் உள்ள சர்வதேச கல்வி அனுபவமிக்க கல்வியாளர் ஜவகர் நேசன் ஓராண்டுகள் தீவிரமாக செயல்பட்ட நிலையில் வெளியேறியதும் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளானது.
இந்தப் பின்னணியில் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளரும், தமிழ்நாடு பொது பணித் துறை மூத்தபொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான பொறிஞர்.முனைவர். அ.வீரப்பன் தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் எழுதியுள்ள இந்தக் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது. இது போன்ற குழுக்களை எவ்விதம் அமைப்பது, செயற்படுத்துவது என்பது குறித்து நடைமுறை சார்ந்த நவீன புரிதலுடன் செயல்பட, கீழ்க் காணும் யோசனைகள் பரிசிலிக்கதக்கவை;

தொழில் நுட்பஉயர்நிலைக் குழுக்கள் அமைப்பதில் அணுகுமுறைமாற்றம் உடனடித் தேவை;
இன்றைக்கு பழைய நடைமுறை பயனில்லை, தமிழக அரசு – அவ்வப்போது – தமிழ்நாட்டில் ஏற்படும் – அரசை மக்களை – ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தைப் பாதித்திடும் சிக்கல்களில் சிறந்த தீர்வுகாண – உயர்நிலைக் குழுக்களை – (பொறியியல் தொழில்நுட்பம், உயர்கல்வி, தொழில் வளர்ச்சி, வெள்ளத் தடுப்பு, காலநிலைமாற்றம், தமிழகக் கல்விக் கொள்கை உருவாக்கம் போன்ற இன்றியமையாத பொருள்களில்) அமைக்கின்றது -நல்லநோக்கத்துடன்.
• ஆனால் இவ்வுயர்நிலைக் குழுக்கள் கீழ் குறிப்பிடும் குறைபாடுகள், போதாமைகள் உள்ளவையாக உள்ளன.
• இவை அனைத்தும் பழைய ஆங்கிலேய ஆட்சி முறையின் நீட்சியாக – விதி முறைகளைக் கொண்டவையாகக் கட்டமைக்கப்படுகின்றன.
• பெரும்பாலும் நேரடிப் பங்களிக்காத – நேரப் பற்றாக்குறையுள்ள – துறைத் தலைமைகள், நிர்வாக மேலாண்மையாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுதல், வெறும் பெயருக்கெனவும் சிலரை நியமித்தல்.
• கலந்துரையாடல் விவாதங்களில் – துறைசார் வல்லுநர்களின் கருத்துரைகளுக்கு முன்னுரிமை தரப்படாமல் – அமைச்சர்கள், அய்.ஏ.எஸ் அதிகாரிகளின் அழுத்தம் – தலையீடுகள் – இவ்வுயர்நிலைக் குழுக்களின் நோக்கத்தைத் திசை திருப்பும் நடவடிக்கைகளாகும்.
• குழுக்களின் ஆய்வு அறிக்கைகள், தலையாய பரிந்துரைகள் எவையும் கமுக்கமாகவே வைக்கப்படுதல். வெளிப்படைத் தன்மையுடன் பொதுவெளியில் – இணையதளங்களில் கூட உடனுக்குடன் வெளியிடப்படாமை வருத்ததிற்குரியதாகும்.
அரசு ஒப்புக் கொள்ளும் பரிந்துரைகள் கூட ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படாமல் – அங்கொன்றும், இங்கொன்றுமாக கால இடைவெளிகளில் முழுமையாகச் செயற்படுத்தப்படாமல் போகின்றன!
பெரும்பாலான நிகழ்வுகளில் ’அவுட் சோர்சிங்’ முறையில் பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் ஒப்படைத்து – திட்டச் செலவுகளைப் பன்மடங்குக் கூடுதலாகச் செய்துமறை முகலாபம் பார்த்தல் மிகத் தவறான அணுகுமுறையாகும்.
எனவே, இக் குறைபாடுகளையும் போதாமைகளையும் நீக்கிட -தமிழக மக்களுக்கும், தொடர்புடைய தமிழ்ச் சமுதாயத்திற்கும், தேவைப்படும் பயனான திட்டங்களைக் காலதாமமின்றி நிறைவேற்றிடத் தமிழக முதல்வர் மற்றும் தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் ஆகியோரின் மேலானகவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
அமைக்கப்படும் உயர்நிலை தொழில்நுட்பக் குழுக்களின் நோக்கம் – செயல் திட்டமுன்னீடுகள் – அவற்றைச் செயற்படுத்தும் வழிமுறைகள் பற்றிய விளக்க அறிக்கை இணைக்கப்பட வேண்டும்.
எதிர் கொள்ளும் சிக்கல் – கொள்கைத் தெளிவு – துறைசார் திறமையும் பட்டறிவும் தமிழ்ச் சமுதாயஅக்கறையும் உடைய வல்லுநர்களையே இவ்வுயர்நிலைக் குழுவின் தலைவராக நியமித்திடவேண்டும். பழைய ஆங்கிலேய ஆட்சிமுறையை அப்படியே கடைபிடித்து – உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியையோ அல்லது அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் குழுத் தலைவராக நியமித்தல் எந்த உருப்படியான நல் விளைவையும் தராது. இது இன்று பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர்க்கும் பொருந்தும்.
உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக – தலைமைச் செயலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் – துறைசார் தலைமைப் பொறுப்பாளர்கள் முதலியோரைநியமித்திடக் கூடாது. பதிலாகநேரமும் ஆர்வமும் திறமையும் கொண்ட இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பொறுப்பளார்களை நியமித்திட வேண்டும்.
அவ்வாறே வெளியிலிருந்து திறமையும், களப்பட்டறிவும், தமிழ்ச் சமுதாய அக்கறையும் பங்களிக்கும் ஆர்வமுள்ள துறைசார் வல்லுநர்களை (4 அல்லது 5 பேர்களுக்கு மிகாமல்) உயர்நிலைக் குழுவில் சேர்த்திட வேண்டும். தமிழ்ச் சமுதாயத்திற்குக் கடந்த 25ஆண்டுகளில் எந்தவிதப் பெரும் பங்களிக்காதவர்களைக் கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது, வெறும் பெயருக்காக.
இவ்வுயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் 3 மாத இடைக்கால அறிக்கை மற்றும் 6 மாத நிறைவறிக்கையினை (எழுத்து மூலம்) அளித்திட வலியுறுத்த வேண்டும். இடைக்காலத்தில் குழுத் தலைவரோடு நேரிடையாகவோ, தொலைபேசி வாயிலாகவோ கலந்துரையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும். காலக்கெடு (3 மாதம் ஃ 6 மாதம்) நிறைவடைந்ததும் – உயர்நிலைக் குழுத் தலைவர் – அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடி – தேவையானவிளக்கங்கள் ,கூடுதல் அறிக்கைகள் பெற்று – ஒரு மாதகாலத்தில் அறிக்கையை நிறைவு செய்து அரசிடம் அளித்திட வேண்டும்.
Also read
அந்த நிறைவறிக்கைஅரசு மூலமாக அதே நாளில் செய்தியறிவிப்பாகவும் இணையதள இணைப்பாகவும் – பொதுவெளியில் தரப்படவேண்டும். இதற்கெனத் தலைமைச் செயலக அளவில் உட்குழு அமைப்பது, காலந்தாழ்த்திக் கிடப்பில் போடுவது கூடாது. இது உயர்நிலைக் குழுவின் உழைப்பை வீணடிப்பது, ஐஏஎஸ் ஆதிக்க மனப்பான்மை உடையது, அனுமதிக்கக் கூடாது (சட்டமன்றத்தில் வைப்பது எல்லாம் பழைய ஆதிக்க நடைமுறையே. அப்படி விதிமுறை இருந்தால் இது உடனடியாக நீக்கப்பட வேண்டும்.)
பொது வெளியிலிருந்து கற்றறிந்த தமிழ்ச் சமுதாய அக்கறையுடையவர்கள் அனுப்பும் பயனுள்ள கருத்துரைகளையும் அறிக்கையின் பின்னிணைப்பாகச் சேர்த்தளிக்கலாம்.
நிலைக் குழுவின் பரிந்துரைகளை – அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து – ஒப்புக் கொள்ளப்பட்டவைகளை உடனடியாகச் செயற்படுத்த உரியநடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இவையே மக்களாட்சிக்கு – ஏற்ற நடைமுறை என வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார், அ.வீரப்பன்.
அஜிதகேச கம்பளன்
திரு வீரப்பன் அவர்கள்பங்கேற்ற பிரஸ் கவுன்சில் கூடத்தில் சில ஆண்டுக்குமுன் நடந்த நதி,நீர்நிலைகள் குறித்து பேசி
அரசுக்கு தெரிவித்த கருத்துக்கள் மிக
சிறப்பானது. அதில் நானும் திருவொற்றியூர் நன்பர்களும் பங்கேற்றோம்
அன்றைய அவரது கருத்தை தழுவி
இங்குநடந்த நிகழ்ச்சிகளில் தீர்மாணமாக
அரசுக்கு அனுப்பியதுஉண்டு.
ஆழ்ந்த சிந்தனையாளர்,கருத்தாளர் .இவர் கருத்தைஅரசு பரிசீலிக்க வேண்டும்.
முதலில் ஆளும் தலைமைக்கு கல்வி அறிவு இருக்க வேண்டும்.சும்மா மக்களை ஏய்த்து, ஏமாற்றி ஆட்சிக்கு வரும் ஒருவருக்கு வானளாவிய அதிகாரம் என்றால் அவர்கள் ஏன் கல்வியை பற்றி கவலைப்பட போகிறார்கள்.முதலில் ஆள வருபவருக்கு என்ன கல்வி தகுதி இருக்க வேண்டும் என்று ஒரு நிர்ணயம் செய்யுங்கள்.ஆள்பவன் படைத்தவனாக இருந்தால் அவன் ஏன் IAS அதிகார வட்டங்களுக்கு பயப்பட வேண்டும்.எனக்கு பிடிக்கவில்லை இந்த அரசியலமைப்பு.
மருத்துவ துறையில் மருத்துவம் படித்த ஒருவரை சுகாதார துறை அமைச்சராக நியமிக்க முடிய வில்லை. பின் அதற்கு ஒரு குழு……
சிறப்பான பயனுள்ள பதிவு இது.
கல்வி குழுவில் விஸ்வநாத் ஆனந்த் எதற்கு ?
சதுரங்க விளையாட்டுக்கு குழு அமைத்தால் அதில் கட்டாயம் விஸ்வநாத் இறந்து இருக்க வேண்டும்.
முதலமைச்சர் எம் ஜி.ஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் இருந்த போது ஓர் மருத்துவ குழுவை அமைத்து சிகிச்சை அளித்தார்கள்.
அக்குழுவின் வேண்டுகோளின்படி ஜப்பான் நரம்பியல் மருத்துவர் கான் சிகிச்சைக்காக சென்னை வரவழைக்கப்பட்டார்.
சென்னை வந்த அவர் சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவில் உள்ள பெயர்களை பார்த்து விட்டு ஏன் மருத்துவர் இராமமூர்த்தி இக் குழுவில் இடம்பெறவில்லை
என்று கேட்டதுடன் அவர் தான் எங்களுக்கு குருநாதர் என்று கூறிய பின்னர் தான் குழுவில் மருத்துவர் இராமமூர்த்தி பெயர் சேர்க்கப்பட்டது.
குழுவில் நரம்பியல் மருத்துவர் இராமமூர்த்தி பெயர் சேர்க்காததற்கு காரணம் அவர் கலைஞர் அனுதாபி என்பது தான் காரணம் ஆகும்.
இது தான் தமிழகத்தின் நிலை.
கட்சிக்காரர் என்னும் ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் தலைவராக திண்டுக்கல் லியோனி என்னும் குடிகார கோமாளி நியமிப்பு. தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடக்க காலம் தவிர மற்ற காலங்களில் தரமான பாட நூல்களை வெளியிட்டது கிடையாது என பலர் குற்றம் சாட்டுகிறார்கள். அரை குறையான இந்த பாட நூல்கள் மொக்கையாக மனப்பாடம் செய்யும் மாணவர்களுக்கே சாதகமாக இருந்து வந்தள்ளன. இப்போதும் ஒரு குறிப்பிட்ட துறையில் அடிப்படை அறிவை பெற வேண்டும் எனில் மத்திய அரசின் கல்வி வாரியத்துக்காக என்.சி.இ.ஆர்.டி வெளியிடும் பாட நூல்களையே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த நூல்கள் வரிக்கு வரி புரிந்து படிக்கும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளன. பாட நூல் தயாரிப்பு என்பது லேசான வேலை கிடையாது. மிகவும் பரந்து பட்ட அளவில் துறை சார் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்பு மற்றும் கடின உழைப்பு ஆகியன வேண்டும் வேலை இது. இதை இங்கிருக்கும் கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏன் உணரவில்லை என தெரியவில்லை. மாநில பாட நூல் வாரியம் ஒவ்வொரு துறை சார்ந்த பாட நூல்களை அரைவேக்காடுகளை வைத்தே குறுகிய காலத்தில் தயாரிக்கிறார்கள். இதனால் புரிந்து படிக்கும் இயல்புடைய எத்தனையோ மாணவர்களின் எதிர்காலம் பாழாய் போய் இருக்கிறது. வெறும் இருநூறு ஆண்டுகள் மட்டும் ஆயுள் கொண்ட ஹிந்தி பல துறைகளில் சிறப்பாக வளர்ந்து விட்டது . குறிப்பாக துறை சார்ந்த கல்வி நூல்களை வெளியிடுவதில். மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் மட்டும் அல்லாது உலக அளவில் நடக்கும் அனைத்து தேர்வுகளும் புரிதல் மற்றும் அலசி ஆராயும் திறன் ஆகியவற்றை தான் மதிப்பிடுகின்றன. இங்கிருப்பவர்கள் தங்கள் தரப்பில் இருக்கும் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் மத்திய அரசு உள்ளிட்ட அடுத்தவர்கள் மேல் பழி சொல்வதையே பிழைப்பாக வைத்துள்ளார்கள்.