திமுக அரசு பலவீனப்படுவது, தமிழகத்திற்கே ஆபத்தாகும்!

- சாவித்திரி கண்ணன்

பார்க்கும் போது நானே சிரித்து விட்டேன்! அடக்க முடியவில்லை!

அடேயப்பா! எப்படிப்பட்ட கற்பனைகள், பூச்சுற்றல்கள்! குருவி லேகிய பத்திரிகையாளர்!

அரசியல் புள்ளிகளின் லேகிய லீலைகள்!

நான் லேகியம் சாப்பிட்டது கூட இல்லை! மற்ற யாருக்கும் அது பற்றி சிபாரிசு கூட செய்தததில்லை. ஆனால், என்னை மிகப் பெரிய லேகிய வியாபாரியாய் கற்பனை செய்து, பெரிய, பெரிய விஐபிக்களுடன் எல்லாம் தொடர்பு இருப்பதாக சொல்லி ஒரு யூ டியூப் பதிவை ஒருவர் போட்டுள்ளார்!

இதற்கு விளக்கம் சொல்லிக் கொண்டு என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை! நான் சமீப காலமாக திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிப்பதன் விளைவு என்பதை புரிந்து கொள்கிறேன்.

நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளனனில்லை! 2019 2021 தேர்தல் காலங்களில் பாஜக, அதிமுக தோற்கடிப்பட வேண்டும் என எழுதினேன். அதற்கு காரணம், பாஜக மதவாத கட்சி! அதிமுக அதற்கு அடி பணிந்து சேவகம் செய்யும் கட்சி என்பதால்! ஆகவே, இவை தோற்கடிக்கப்பட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுப் பெறுவது நாட்டுக்கு பாதுகாப்பு என நம்பினேன். அதிமுக குறித்தும், பாஜக குறித்துமான என்னுடைய மதிப்பீடு இப்போதும் மாறவில்லை.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் உள்ளபடியே மகிழ்ந்தேன்! ஆனால், போகப் போக பாஜகவிற்கு அடிபணியும் அரசியலை திமுகவும் செய்கிறது என்பதை உணர்ந்த போது, இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொண்டு திமுகவை ஆதரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். பாஜகவை எதிர்ப்பதில் திமுக உண்மையான உறுதிபாட்டை கொள்ளும் எனில், அதை மீண்டும் தலையில் தூக்கி கொண்டாடத் தயங்கமாட்டேன்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக தந்த நெருக்கடிக்கு முற்ற முழுக்க தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு, இன்று வரை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பது! இந்த சம்பவத்தில் பள்ளிக் கூடத்தை எரித்த உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவி இளைஞர்களை கைது செய்தது..!

வேங்கை வயலில் தலித் மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளி யார் எனத் தெரிய வந்தும் அதை மறைத்து தலித் இளைஞர்களையே குற்றவாளியாக்க முயன்றது!

எளிய மக்களின் பல்லை புடுங்கிய பல்வீர் சிங் என்ற வட இந்திய போலீஸ் அதிகாரியை இன்று வரை கைது செய்யாமல் இருப்பது..

போன்ற பல விவகாரங்களில் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாதவராக முதல்வர் இருக்கிறாரே,,என்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே உள்ளது. இந்தச் சூழல் தான் எனக்கு சில நேரங்களில் கோபமாக வெளிப்பட்டுவிடுகிறது..

விசிக தலைவர் திருமாவளவன் அவர்களே வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில், ”தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார். இதுவே பலர் மனதிலும் இன்று மேலோங்கி இருக்கும் கேள்வி!

”தமிழக அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்” என மூத்த அமைச்சர் கே.என். நேரு பேசியுள்ளார். அதாவது, ‘முதல்வரால் தங்களுக்கு பாதுகாப்பு தர முடியாது’ என அதிகாரிகள் நினைத்தார்கள் என்றால், தமிழ் நாட்டுக்கு என்ன பாதுகாப்பு? திமுக பலவீனப்பட்டுக் கொண்டுள்ளதே – அதாவது இன்னொரு அதிமுகவாக ஆகிறதே –  என்பதே என் ஆதங்கம்! ‘திமுக அரசின் பலவீனம் தமிழகத்திற்கே ஆபத்தாகிவிடும்’ என்று கருதியே பதறுகிறேன்.

ஒரு நேர்காணலில் பேசுகிற வேகத்தில் இந்தக் கோபம் தூக்கலாக வெளிப்பட்டுவிட்டது. நண்பர்கள் இதை சுட்டிக் காட்டிய போது தான் உணர்ந்தேன். ‘இந்த அளவுக்கு கோபம் கொண்டிருக்க வேண்டாமே’ என்று! மற்றபடி முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை! என்னுடைய திமுக எதிர்ப்பு என்பது அதிமுக ஆதரவாகவோ, பாஜக ஆதரவாகவோ ஒரு போதும் மாறாது!

விமர்சனமே இல்லாமல் யார் ஒருவரையும் தொடர்ந்து ஆதரிப்பது என்பது ஜனநாயகத்திற்கே ஊனமாகும். யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களின் நல்லது, கெட்டதுகளை உள்ளபடியே விமர்சிப்பது என்பதை முப்பத்தி எட்டு ஆண்டுகளாகச் செய்து கொண்டு இருக்கிறேன். அதிகார மையத்தை அனுசரித்து போவது என் இயல்புக்கு உகந்ததல்ல. அதே சமயம் அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்த்ததில்லை. மக்களுக்கு நன்மை என்றால், ஆதரிப்பதில் தயக்கமே இல்லை.

மதவாதம், சாதி மேட்டிமைத்தனம், எளிய மக்களை அழுத்தி கார்ப்பரேட்களை வாழவைப்பது, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பது  ஆகிய காரணங்களால் நான் பாஜகவை எதிர்க்கிறேன்! இப்படிப்பட்ட பாஜகவோடு ஒத்திசைந்து போவது யாரென்றாலும் அவர்களையும் சேர்த்து எதிர்க்க வேண்டியதாகி விடுகிறது!

ஒப்பீட்டளவில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு பெரிய பாதிப்பில்லை என்றே இன்று வரை நம்புகிறேன். அந்த ஜனநாயகம் தரும் நம்பிக்கையில் தான் சற்று கடுமையான விமர்சனங்களை வைக்கிறேன்.

நான் அரசியல், சமூக பிரச்சினைகளுக்கு இணையாக நமது விவசாயம், உணவு கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள தீய அம்சங்கள் குறித்தும், இயற்கை விவசாயத்தையும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மீட்பது குறித்தும் நிறையவே எழுதியுள்ளேன். அந்த வகையில் விவசாயம் இன்று, நேற்று, நாளை, உழவர் குரல், நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளேன்.  நான் பேசிய யூடியூப்பில் காணப்படும் விஷயங்கள் பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், இயற்கை வாழ்வியலுக்கு கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் ஆகியவை தாம்! லேகியம் குறித்து நான் பேசவில்லை. அதற்கான விசய ஞானமும் எனக்கு இல்லை. அந்த யூ டியூப் பதிவை இணையத்தில் தேடி யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்! அறம் இணைய தளத்தில் யூடியுப் லிங்கில் நான் பேசிய சில யூடியூப்களின் இணைப்பை தந்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் சென்று பாருங்கள்!

சாவித்திரி கண்ணன் யூ டியூப் உரைகள்

கையூட்டு பெறுகிற சில பத்திரிகையாளர்களை அம்பலப்படுத்துவது என்பதில் ஆரம்பித்த சம்பந்தப்பட்டவரின் ஸ்டிங் ஆபரேஷன், திமுக அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை ‘கேரக்டர் அசாசினேசன்’ செய்வதாக நகர்ந்து கொண்டுள்ளது. நியாயமான விமர்சனத்தை எதிர்கொண்டு,  தவறுகளை திருத்திக் கொள்ள முன் வந்தால், அதுவே நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது. அதுவே, என் எழுத்தின் நோக்கம்! இறுதியாக கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளைச் சொல்லி இதை முடிக்கிறேன்.

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்,

கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு!

காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால்

கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு.

என்னுடைய அரசியல் நிலைபாட்டில் குழப்பமோ, தடுமாற்றமோ இல்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time