பாதுகாப்பற்ற நிலையில் மணிப்பூர் பழங்குடிகள்!

-ஹரிபரந்தாமன்

அமைதியாகத் திகழ்ந்த ஒரு மாநிலம் அல்லோகலப்படுகிறது..! ஒரு பாவமும் அறியாத பழங்குடிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அநீதியான ஒரு தீர்ப்பின் மூலம் அவர்களை அழித்துவிடத் துடிக்கிறது ஆதிக்க வர்க்கம்! அடங்கி போவார்களா? ஆதிக்கத்தை வெல்வார்களா..?

ஒரு மாத காலகட்டத்திற்கும் மேலாக  மணிப்பூர் மாநிலம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலவரத்தினால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் வாழும் மெய்டி இனத்தவரும், அந்த மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தவர்களும்- குறிப்பாக குக்கி இனத்தவர்களும் ஆயுதம் தாங்கிய மோதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை களத்தில் இறங்கியதில் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் எல்லை மாநிலமான மணிப்பூரில் மேய்தி, குக்கி சமூகத்தினரை தவிர, தமிழர்கள், நேபாளர்கள், ராஜஸ்தானியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் உள்ளிட்ட பலர் எல்லை நகரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு, கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இனக்கலவரத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கானோர் எல்லை நகரத்தை விட்டு வெளியேறி மியான்மர் உட்பட பல பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.


இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று பெரும் சண்டையில் ஈடுபட்டிருக்கும் இரு குழுவினரையும் சந்தித்து பேசி வருகிறார். அவர் மணிப்பூரில் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே கலவரங்கள் நின்ற பாடு இல்லை.

இந்த கலவரங்களுக்கு அடிப்படையான காரணம், பாஜகவின் அணுகுமுறையே ஆகும். சாதியையும், மதத்தையும் வைத்து அரசியல் செய்வதே பாஜகவின் அடிப்படை கொள்கை . அந்தக் கொள்கையே மணிப்பூர் பற்றி எறிவதற்கும் கலவரங்கள் நிகழ்வதற்கும் காரணம் ஆகிவிட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பால் தவிர்த்து, மற்ற பகுதிகளெல்லாம் மலைப் பிரதேசங்கள். மலைப் பிரதேசங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள் இம்பால் சமவெளியில் மெய்டி என்ற சமூகத்தினர் வாழ்கிறார்கள்.

மணிப்பூர் குக்கி பழங்குடிகள்

பிரித்தானியர்கள் ஆட்சிக்கு முன் மெய்டி சமூகத்தைச் சார்ந்தவர்களின் முடியாட்சியே அங்கு நிலவியுள்ளது. இந்நிலையில்  மெய்டி என்ற மேட்டுக்குடி சமூகத்திற்கு பழங்குடியினர் என்ற அந்தஸ்தை தருவதற்கு, பாஜக எடுத்த முயற்சியே இந்த கலவரங்களுக்கு அடிப்படை காரணமாகும். மெய்டி சமூகத்தினர் மணிப்பூரில் 53%. மற்றவர்கள் பழங்குடியினர். மெய்டி சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால், மணிப்பூரில் உள்ள அனைத்து மக்களுமே பழங்குடி மக்களாகி விடுவார்கள்! உண்மையான பழங்குடிகள் தங்கள் பூர்வீக நிலத்தையே இழந்துவிடுவர்!

மணிப்பூர் மெய்டி சமூகத்தினர்

மெய்டி சமூகத்திற்கு பழங்குடி மக்கள் அந்தஸ்தை கொடுப்பதன் மூலம் மணிப்பூரில் தொடர்ந்து தங்களின் அரசியல் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற தவறான அரசியல் கணக்கை போட்டது பாஜக. மெய்டி சமூகத்தினரின் வழக்கு ஒன்று  மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னர் வருகிறது. அதில் அந்த சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மணிப்பூர் அரசு சிபாரிசு செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் .  இப்படி ஒரு உத்தரவைத் தான் மணிப்பூர் மாநில அரசும் விரும்பியது. உயர் நீதிமன்றத்தின்  அந்த உத்தரவு தான் மே மூன்று முதல் மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட  உடனடி காரணமானது.

அந்த உத்தரவினை எதிர்த்து பழங்குடியினரின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று வெளிப்படையாகவே கூறினார். எந்த நீதிமன்றத்திற்கும் ,மாநில அரசுகளுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்கும் அதிகாரம் ஏதும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.


இருப்பினும் மோடி அரசின் சார்பில் வழக்காடிய வழக்குரைஞர் அந்த தீர்ப்புக்கு தடை அளிக்க வேண்டாம் என்றும், அந்த தீர்ப்பின் பேரில் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வின் முன் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறினார். ஆனால், இதுவரையில் மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்புக்கு தடை பெற்றதாக தெரியவில்லை.

அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்ற தீர்ப்பை பற்றி, இரு தரப்பராருடனும்  பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறினார்! முற்றிலும் நியாயமற்ற ஒரு தீர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதே, பேச்சுவார்த்தை வாயிலாக பழங்குடிகளை நிர்பந்திப்பது என்பது தானே! ஆக, இதிலிருந்து அமித் ஷாவின் அரசியல் நோக்கம் தெளிவாகிவிட்டது.

”மெய்டி சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க மாட்டோம்” என்று தெளிவாக அறிவித்து இருக்க வேண்டும் அமித்ஷா. அவர் தான் அரசியல் லாபம் பார்க்கலாம் என்று கணக்குப் போட்டுவிட்டாரே… அந்த தப்பு கணக்கு தான் கலவரங்களுக்கும், மனித உயிர் இழப்புகளுக்கும் வீடுகள் எரிந்து போனதற்கும், ஒரு கிராமமே காணாமல் போனதற்கும் காரணம் ஆகிவிட்டது. மக்கள் மணிப்பூரில் பாதுகாப்பில்லை என அண்டை மாநிலங்களுக்கும், மியான்மருக்கும் அகதிகளாக வெளியேறிக் கொண்டுள்ளனர்.


ஊடகங்களில் வரும் செய்திகளின்படி இரு தரப்பினரிடமும் பயங்கரமான ஆயுதங்கள் உள்ளன. அசாம் ரைஃபில்ஸ் என்ற படைப் பிரிவினரிமிருந்தும், காவல் நிலையங்களில் இருந்தும்  கலவரங்களில் ஈடுபடுவோரால் துப்பாக்கிகள் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. அந்த துப்பாக்கிகளை மீண்டும் மணிப்பூர் அரசிடம் அளித்து விடுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

துப்பாக்கிகளையும் பயங்கர ஆயுதங்களையும் மணிப்பூர் அரசே மெய்டி தீவிரவாத குழுக்களுக்கு  கொடுத்து உதவுவதாக  பழங்குடி மக்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது. இது உண்மை எனில், அரசு தான் பயங்கரவாதியாக பழங்குடிகளை வேட்டையாடி வருகிறது என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த கலவரங்களுக்கு அடிப்படையாகவும், பழங்குடியினர் தாக்கப்படுவதற்கு காரணமாகவும் மணிப்பூர் மாநிலத்தின்  முதல்வர் பிரேன்சிங்கும், பிஜேபியை சேர்ந்த ராஜ்யசபை உறுப்பினர் சானா சோபாவும்  இருந்துள்ளார்கள் என்று கடுமையான குற்றச்சாட்டை பழங்குடி மக்கள் கூட்டமைப்பு கூறுகிறது. இந்த குற்றச்சாட்டுகளோடு, மாநில ஆட்சியை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற  கோரிக்கையை  31 மே 2023 அன்று டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளது பழங்குடி மக்கள் கூட்டமைப்பு .மேலும் டெல்லியின்  ஜந்தர் மந்தர் பகுதியில் பழங்குடி மக்களின் போராட்டமும் அன்று நடைபெற்றது.


மேலும் மணிப்பூர் மாநிலத்தின் அதிகாரத்திற்கு உள்ளாக பழங்குடி மக்கள் வசிக்கும் மலைப் பிரதேசங்கள் இருக்க இயலாது என்று பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தங்கள் தரப்பை  கூறியது.

மெய்டி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பழங்குடி மக்களின் உடல்கள் , இம்பாலில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் மற்றும் ஜவர்கலால் நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் ஆகிய இடங்களில் உள்ளதாம்! ”இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் வரை அந்த உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்” என்று  பழங்குடி மக்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.


மே 3 2023 முதல் ஜூன் 5 வரை இன்டர்நெட் சேவை சேவை மணிப்பூர் மாநிலம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியுலகத் தொடர்ப்பில் இருந்து மட்டுமல்ல, தங்களுக்குள்ளாகவே கூட மக்கள் தனிமைபடுத்தப் பட்டுள்ளனர். இது வரை எத்தனையோ பிரச்சனைகள் இருப்பினும், ஒற்றுமையாக இருந்த மணிப்பூர் மாநிலத்தை கலவரம் உண்டாக்கி, இரு கூறுகளாக ஆக்கிவிட்டது பிஜேபி.

வரும்  2024 பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெறுமானால், இந்தியாவை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் கலவர பூமியாக மாற்றி  பல கூறுகளாக உடைத்து, பங்கு பிரித்து விடும்.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time