ரயில் விபத்துக்கான உண்மையான காரணத்தை பேச மறுக்கிறது மத்திய அரசு. ரயில்வே துறையில் நிலவும் போதாமைகளும், அலட்சியங்களும் மலைப்பைத் தருகின்றன! விபத்துக்கள், விபரீதங்களுக்கான இத்தனை இல்லாமைகளோடு இயங்கும் ரயில்வே குறித்த அதிர்ச்சித் தகவல்களை தருகிறார் தோழர். இளங்கோவன் (DREU)
மேற்கு வங்காளம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி 127 கீ.மீ.வேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் டிராக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதிய விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்துள்ளன. இந்தச் சூழலில் பெட்டிகள் கிடந்த அதே தண்டவாளத்தில் கர்நாடகாவின் யஸ்வந்த்புரில் இருந்து மேற்கு வங்காளம் ஹவுரா சென்ற அதிவேக ரெயிலானது கோரமண்டல ரெயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரெயிலும் தடம் புரண்டது. இவ்விதம் மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றொடு ஒன்று மோதி உரசி, நசுங்கியுள்ளன! ஒவ்வொரு பெட்டிலுமே அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்துள்ள நிலையில் சாவு எண்ணிக்கை அதிகாரபூர்வ அறிவிப்பைக் (300) காட்டிலும் மிக அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆரம்ப கட்ட விசாரணையில் தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என்றனர். சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரசிற்கு முதலில் பச்சை சிக்னல் கொடுத்து விட்டு பின் அது ரத்து செய்யப்பட்டு உள்ளதாம்! மெயின் லைனில் சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிக்னல் ரத்தானதால், லூப்லைனுக்கு மாறி சரக்கு ரெயில் மீது மோதி உள்ளதாம்! கோரமண்டல் ரெயில் பட்டிகள் தடம்புரண்ட நிலையில் அவ்வழியே வேகமாக வந்த யஷ்வந்த்பூர் -ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி விபத்தில் சிக்கி உள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் தொழிற்சங்க தலைவர், தோழர். த.இளங்கோவன், (DREU) அவர்கள், நமது அறம் இதழுக்கு தந்த பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை சொன்னார்;
உண்மையில் ரயில் செல்லும் வழித் தடங்களில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிக்னல்’களில் கணிசமானவை பழுதுபட்டு செயல்படாமல் உள்ளன. அவற்றில் சில தவறான சிக்னல்கள் தரக் கூடியனவாகவும் உள்ளன! இப்படி ‘ராங் சிக்னல்’, ‘ராங் ரூட்’ பிரச்சினை பல்லாண்டுகளாகவே உள்ளது. ஆண்டுக்காண்டு சுமார் 200 சிக்னல்கள் பழுதென்றால், நூறைத் தான் புதுப்பிப்பார்கள்! இது குறித்து ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு டிரைவர்கள் பல முறை கொண்டு சென்றும் பயனற்றுப் போனது என்பதே உண்மை!
நமது நாடு மிக பிரம்மாண்டமான ரயில் பாதைகளைக் கொண்டதாகும். இதில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4,500 கீ.மீ தூர தண்டவாளங்கள் பழுதுபட்டுவிடுகின்றன. ஆனால், பழுதுபட்டவைகளில் வெறும் 2,000த்து சொச்சம் கீ.மீ தண்டவாளம் மட்டுமே சீர் செய்யபடுகின்றன. இந்த வகையில் நிலுவையில் உள்ள பதினைந்தாயிரம் கீ.மீ தூர தண்டவாளங்களளோடு சமீப ஆண்டின் 4,500 கீமீ பாதையும் பழுதுபார்க்க வேண்டியுள்ளது! பழுது பார்க்காவிட்டாலும், அந்த வழித்தடத்தில் நாளும் ரயில் செல்ல வேண்டிய தேவை உள்ளது.
இதே போல ரயில்கள் செல்லும் மேம்பாலங்கள் பல பழுதடைந்துள்ளன! அவற்றை சரி செய்து புதுப்பிக்காவிட்டால் இது போன்ற மோசமான விபத்தை மீண்டும் நாம் எதிர்கொள்ள நேரிடும்.
ரயில்வே துறைக்கு வருமானமாக நூறு ரூபாய் வருகிறதென்றால், செலவோ 107 ரூபாயாக உள்ளது. எனவே, வருமானத்தில் இருந்து பழுதுபார்ப்பு பணிக்கு எடுத்து செலவழிக்கும் நிலை இல்லை. ஆகவே, தேசிய பாதுகாப்பு நிதியாக ஒரு லட்சம் கோடி சேகரித்து, அதில் இருந்து எடுத்து செலவு செய்யும் இலக்கு எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பதை மத்திய அரசு தான் விளக்க வேண்டும்.
பழுது சரி செய்தல், தேய்மானத்தை புதுபித்தல் போன்றவற்றுக்கு ஐயாயிரம் கோடி தேவைப்படுகிறது என்றால், 500 கோடி ஒதுக்கும் நிலையே உள்ளது.
2019-20 ஆம் ஆண்டுக்கான சி.ஏ.ஜி அறிக்கையில் 1,14,000 கோடிகளுக்கு பழுது பார்க்கும் பணிக்கு நிதி ஒதுக்க சொல்லப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் டிரைவர்கள், தொழில் நுட்ப செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் 3,12,000 காலி பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன! டிரைவர்கள் பற்றாகுறை காரணமாக தொடர்ந்து 14 அல்லது 16 மணி நேரங்கள் ஓய்வின்றி செயல்படும் நிலைக்கு டிரைவர்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் இயற்கை உபாதைகளுக்காக கழிவறைக்கு கூட செல்ல முடியாதவர்களாக உள்ளனர். இப்படி வேலை வாங்கினால், அவர்களின் கான்சியஸ் பவர் குறையத் தான் செய்யும். சட்டப்படியே இப்படி வேலை வாங்குவது மிகத் தவறாகும்.
டிராக்குகளை கண்காணிக்கும் ‘டிராக்மேன்’ வேலையில் மட்டுமே நான்கு லட்சம் பேரில் இரண்டு லட்சம் தான் பணியில் உள்ளனர். மற்றொரு முக்கிய விஷயம் இவர்களை ‘காண்டிராக்டர் சிஸ்டத்தில்’ பணிக்கு எடுப்பதாகும். இந்த ‘காண்டிராக்ட் சிஷ்டம்’ பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாதது.
ஒரே ஒரு நடைமுறையை ரயில்வே செய்திருக்கும் பட்சத்தில் இந்த விபத்தை முற்றிலுமே தவிர்த்திருக்கலாம். விபத்துகளைத் தவிர்ப்பதற்காக ரயில்வே வழித்தடங்களில் ‘கவச்’ எனப்படும் அதி நவீன தானியங்கி தொழில் நுட்ப அமைப்பை நிறுவி இருந்தார்கள் என்றால், எதிர், எதிரே ரயில்கள் வரும் நிலையில், அவை தானாகவே செயல்பட்டு 400 மீட்டர் இடைவெளியில் ரயிலை நிறுத்திவிட்டிருக்கும். இவ்வளவு சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதை வெறும் 2,000 கீ.மீக்கு மாத்திரமே தயார் செய்துள்ளனர். இது மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும். என்றார், தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் தொழிற்சங்க தலைவர் தோழர். த.இளங்கோவன், (DREU)
Also read
ஆக, ‘இத்தனை இல்லாமைகளுடன் ரயில்வே எப்படித் தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது’ என வியப்பாகத் தான் உள்ளது! ரயிலில் பயணம் செல்லும் மக்கள் உயிரோடு ஊர் சென்று சேர்வது என்பது ஏதோ அதிர்ஷ்டவசமானத் தான் சாத்தியமாகிக் கொண்டுள்ளது. ஆகவே, இனியாவது இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க, அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் அரசு விரைந்து நிறைவேற்றி மக்கள் உயிருக்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.
மக்கள் உயிர் என்ன இவர்களுக்கு கிள்ளுக் கீரையா? மிக அத்தியாவசிய தேவைகளைக் கூட அலட்சியப்படுத்தும் துணிவு இவர்களுக்கு எப்படி வந்தது? மிக ஆடம்பர விழாக்கள் நடத்தவும், இராணுவ ஆயுத தளவாடங்களுக்கு மிக அதிக நிதியும் ஒதுக்க முடிந்த அரசுக்கு மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏன் ஒதுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. ரயில்வே துறை அமைச்சரும், பிரதமரும் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தருவார்களா..?
அஜிதகேச கம்பளன்
அறம் இணைய இதழ்
Shocking info!
ரயில்வே துறையை விரைந்து தனியார் மயம் செய்ய வேண்டும் என்பதை இந்த விபத்தும் உயிர் இழப்புக்களும் உணர்த்துகின்றன. ரயில்வே துறையில் எத்தனை அதிக அரசு ஊழியர்களை நியமித்தாலும் மெத்தனமும் ஊழலும் தான் இருக்கும். நட்ட கணக்கு காட்டி மக்கள் வரிப்பணம் தான் மேலும் மேலும் விரயம் செய்யப்படும். தனியார் மயம் ஒன்று தான் வழி.