ஒய்வறியா உழைப்பு, நேர்மையான அரசியல்,வெளிப்படைத் தன்மை ஆகிய குணாம்சங்களைக் கொண்டவர் கே.பாலகிருஷ்ணன்! யோகேந்திர யாதவ் தலைவராக இருக்கும் ’ஸ்வராஜ் இந்தியா’ (சுயஆட்சி இந்தியா) கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழகத் தலைவராகவும் உள்ளார்.அவரது நேர்காணல்!
’ஸ்வராஜ் இந்தியா’ கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தானே?
ஆமாம், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது அதில் நான் ஆர்வமாக கலந்து கொண்டேன். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகிய மூவரும் சேர்ந்து அதன் முன்னணியில் இருந்தார்கள். அதன் பின்பு இம்மூவரும் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார்கள். முதலமைச்சர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அரவிந்த் கேஜ்ரிவால் சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்று முதலில் திரு.சாந்தி பூஷன்( இவர் பிரசாந்த் பூஷனின் தந்தை) அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த உயர்மட்டக் குழுவில் யோகேந்திர யாதவ் தாக்கப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். பிரஷாந்த் பூஷனும் வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் யோகேந்திர யாதவும், பிரஷாந்த் பூஷனும் “ஸ்வராஜ் அபியான்” என்ற அரசியல் இயக்கத்தை அகில இந்திய அளவில் நிறுவினார்கள். தமிழ்நாட்டில் அது “சுயஆட்சி இயக்கம்” என்ற பெயரில் செயல்படுகிறது. இது தேர்தலில் பங்கு பெறாது.
அரசியல் அரங்கில் களமாட ‘ஸ்வராஜ் இந்தியா ‘ (சுயஆட்சி இந்தியா) என்ற அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இது தேர்தலில் பங்கு பெறும். 2018 செப்டம்பரில் கரூரில் அதன் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் நான் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
உங்கள் அமைப்பு மற்றதைவிட எப்படி சிறப்பாகவோ,வேறுபட்டோ இருக்கிறது?
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட முதல் அரசியல் கட்சி எங்களுடையதுதான். எங்கள் கட்சியின் வரவு செலவை பொது வெளியில் வைக்கிறோம். எங்கள் கட்சி பொறுப்புகளில் 33 சதத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து விதிகளை இயற்றி இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் பெண்கள் இல்லை என்றால் அந்த இடங்களைக் காலியாக வைத்து இருக்கிறோமே தவிர அதில் ஆண்களைக் கொண்டு நிரப்புவது இல்லை. கூட்டுத் தலைமையுடன் செயல்படுகிறோம். தனி நபர் துதி இல்லை. மாற்று அரசியலுக்காக இருக்கிறோம்.
தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
2017ம் வருட ஆரம்பத்தில் இருந்தே பல மாநிலங்களில் விவசாயிகள், கட்டுப்டியான விலை கிடைக்கவில்லை என்று தீவிரமான போராட்டங்களை நடத்தினர்.
கட்டுப்படியான விலை கிடைக்காமல் மகாராஷ்டிர விவசாயிகள் பாலை தரையில் கொட்டினார்கள். உத்தரபிரதேச விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கு விலை கிடைக்கவில்லை. இதனால் மகாராஷ்டிராவிலும் மற்ற இடங்களிலும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன.
ஜூன் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் ‘மண்ட்சார்’ என்ற ஊரில் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு விவசாயிகள் போராடினார்கள். அப்போது இருந்த பாஜக அரசு ஆறு விவசாயிகளைச் சுட்டுக் கொன்றது. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த துயர சம்பவத்தை யொட்டி மேதா பட்கர், சுவாமி அக்னிவேஷ், யோகேந்திரயாதவ், ராஜு ஷெட்டி போன்ற பெரும் ஆளுமைகள் ஒன்றுகூடி சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். கைது செய்யப்பட்டனர். மண்ட்சாரில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவமே இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் திருப்பு முனையாக இருந்தது.
அடுத்த மாதமே அதாவது 2017 ஜூலை மாதம் பல விவசாய சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, All India Kisan Sangharsh Coordination Committee (AIKSCC) அதாவது அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு டில்லியிலே உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் 270 சங்கங்களும், தமிழ்நாட்டில் 60 சங்கங்களும் இதில் இணைந்து இருக்கின்றன. இதன் மாநில ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன்.
விவசாயிகளுக்கு நிலம் மீதான உரிமை, இடுபொருட்களின் விலையைக் குறைத்தல்,100 நாட்கள் வேலைதிட்டத்தின் கீழ் 100 நாட்கள் என்பது 200 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும், அவர்களுக்கான தினசரி ஊதியம் ரூ600 ஆக உயர்த்தி,ஆக்கபூர்வமான செயல்களை நிறைவேற்ற வேண்டும்.
கடனில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை என்று கூறி வருகிறீர்கள் எப்படி?
‘கடனிலிருந்து முழு விடுதலை’ ‘விளைபொருளுக்குக் குறைந்த பட்ச ஆதாரவிலை’ என்பது எங்களுடைய முக்கியமான கோரிக்கைகளாகும். இந்தியாவில் 86 சதம் விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்குப் பெரும்பாலும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன்கள் கிடைப்பதில்லை. எனவே இவர்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தனி நபர்களிடம் இருந்தும் கடனை பெறுகிறார்கள். விவசாயத்திற்காகப் பெறும் இக்கடனை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; வங்கி கடனை அரசு ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் சிறு, குறு விவசாயிகள் பலன் அடைவார்கள்.
கேரளாவில் விவசாயிகளின் கடன்கள் பற்றிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு “கேரளா விவசாயிகள் கடன் தீர்க்கும் கமிஷன் 2006” ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அது, விவசாயிகளின் கடன்களை மாற்றி அமைக்க, தனியாரிடமிருந்து பெற்ற கடனுக்கான வட்டியைக் குறைக்க, கடன்களை அரசு ஏற்றுக் கொள்வதற்காகப் பரிந்துரை செய்ய, தள்ளுபடி செய்ய அதிகாரம் பெற்றதாக இருக்கிறது; விவசாயிகளை ஜப்தி செய்வதை தடுப்பதற்கான அதிகாரம் கொண்டதாகவும் இருக்கிறது. விவசாயிகள் உண்மையிலேயே விவசாயத்திற்காக கடன் வாங்கினார்களா என்பதை, இந்தக் குழு ஆராய்கிறது; பஞ்சாயத்து, கிராம சபை மூலம் விசாரிக்கிறார்கள். இப்படிப்பட்ட நல்ல திட்டங்கள் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
Also read
அதேபோல குறைந்தபட்ச ஆதார விலை காய்கறி, பழங்கள், மலர்கள் உட்பட அனைத்து விளை பொருட்களுக்கும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தற்போது 23 விளை பொருட்களுக்கு மட்டும்தான் MSP எனப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறைந்த பட்ச ஆதார விலைக்குக் குறைவாக விளைபொருட்களை வாங்கும் வியாபாரிகளுக்குத் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் கடனிலிருந்து முழு விடுதலைஆகிய இரண்டு கோரிக்கைகள் பற்றி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தயாரித்த மசோதாக்கள், இரண்டு தனி நபர் மோசாதாக்களாகப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் இவை போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக மோடி அரசு விவசாயிகளுக்கும், மற்றும் இந்திய மக்களின் உணவுக்கும் கேடான மோசமான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
இப்போது அரிசி, கோதுமை, மக்காச்சோளம் போன்ற 7 வகையான தானியங்களுக்கும், 5 வகையான பருப்புகளுக்கும், 7 வகையான எண்ணெய் வித்துக்களுக்கும், கரும்பு போன்ற 4 வகையான பணப் பயிர்களுக்கும் என மொத்தம் 23 வகை விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. நெல், கோதுமை போன்ற ஓரிரு தானியங்களைத்தான் ஒழுங்குமுறை கூடங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது. காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் மல்லிகை, ரோஜா போன்ற மலர்களுக்கும், பால், கால்நடை இறைச்சி போன்றவற்றிற்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அரசு கொள்முதல் செய்கிற விலையைப் பொறுத்துத்தான் வியாபாரிகள் சந்தையில் வாங்குவார்கள். எனவே விளைபொருட்களின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும் அளவுகோலாக அரசினுடைய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன. இப்போதைய புதிய சட்டம் இந்த விற்பனைக் கூடங்களை செயலிழக்க செய்து விடும்.
வறட்சி நிவாரணம் வேண்டும் என்று நீங்கள் வைத்த கோரிக்கை பற்றி ?
2016 அக்டோபர் மாதம். AIKSCC ஆரம்பிக்கப்படாத நேரம். மக்கள் கவனம் ‘நகரத்திலிருந்து கிராமம் நோக்கி இருக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி சுயஆட்சி இயக்கத்தின் தலைவர் யோகேந்திரயாதவ் தலைமையில் நீர் மனிதன் என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சிங் உட்பட பல ஆளுமைகள் 2016 இல் ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினார்கள். கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வழியாக இது நடந்தது. இந்தப் பிரச்சார இயக்கத்திற்கு சமீபத்தில் காலமான சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் போன்றவர்கள் உறுதுணையாக இருந்தனர்.
இந்த பிரச்சார இயக்கத்தின்போது, கிராமங்களில் வறட்சியினால் மக்கள்படும் துயரைக் கண்டனர். வறட்சியின்போது கிராம மக்களுக்கு அளிக்கப்ட வேண்டிய எந்த ஒரு நிவாரணத்தையும் மாநில அரசுகளோ மத்திய அரசோ வழங்கவில்லை என்ற உண்மையைக் கண்டறிந்தனர். உடனடியாக சுயஆட்சி இயக்கம் உச்சநீதி மன்றத்தில் இது குறித்த வழக்கைத் தாக்கல் செய்தது. சுயஆட்சி இயக்கத்தின் மற்றொரு தலைவர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கில் ஆஜராகி நடத்தினார். அதனை விசாரித்த உச்சநீதி மன்றம் விவசாயிகளுக்கு ஆதரவான, ஒரு பிரசித்தி பெற்ற தீர்ப்பை வழங்கியது. அதன் முக்கிய அம்சங்களாக மக்களுக்கு வறட்சி காலங்களில் நிவாரணம் தர வேண்டும், கடனை வசூலிக்க கூடாது விடுமுறையாக இருந்தாலும் குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலமாக உணவு தர வேண்டும், மக்களுக்கு உணவுக்காக தானியம் தரவேண்டும் போன்ற பல முக்கிய அம்சங்களை அந்த தீர்ப்பு கொண்டு இருந்தது. வறட்சி காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளைப் பற்றி பல மாநில அரசுகளுக்கு ஏதும் தெரியாமல் இருந்தது அப்போது தெரியவந்தது.
புதிய வேளாண் சட்டங்களைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
இந்தச் சட்டங்கள் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கைகளில் கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டவை. 135 கோடி இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குரியதாக்குகிறது. இந்தச் சட்டங்கள். இவற்றை எதிர்த்து இந்தியாவிலே முதலில் தமிழகத்தில்தான் எங்களுடைய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்ட அறை கூவல் கொடுத்தது. தமிழகத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு கோடி கையெழுத்து வாங்கி பிரதமருக்கு அனுப்பினோம். ஜூலை 27ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. 1942 ஆகஸ்டு 9 ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நடந்த நாளையொட்டி ‘கார்ப்பரேட்டுகளே விவசாயத்தை விட்டு வெளியேறு’ என்ற அறைகூவலை அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு கொடுத்தது. செப்டம்பர் 25, இரயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசின் கொடும்பாவி எரிப்பு அறைகூவல் கொடுக்கப்பட்டு தமிழகத்தில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன.
மின்சார திருத்த சட்ட மசோதா 2020ஐ நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு இரத்து ஆகும். ஐந்து மாநிலங்களில் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் முற்றிலுமாக, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது. ஒரு பைசா மின்சார கட்டணத்தை உயர்த்தியதற்காக திமுக ஆட்சியில் துப்பாக்கி சூட்டுக்கு விவசாயிகள் பலியானார்கள். எம்ஜிஆர் காலத்திலும் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அவர் காலத்தில் தோழர் நாராயணசாமியின் விவசாய சங்கம் திட்டமிட்டு உடைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த போராட்டங்களின் விளைவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். இதைப் பறிகொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மத்திய அரசின் கட்டுக்குள் கொண்டு வரப்படுவது சரியானது தானா?
கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு செல்கிறது. இது விவசாயிகள் நேரடியாக கடன் பெறுவதைத் தடுக்கும். மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நன்மை செய்வதை இந்தச் சட்டம் தடுக்கும். இந்தச் சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது.
விவசாயிகளை வீழ்த்தினால், நாட்டிற்கு விடிவு இல்லை- கே.பாலகிருஷ்ணன்
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்