மதுக் கலாச்சாரத்தின் கோரப் பிடியில் தமிழகம்!

-சாவித்திரி கண்ணன்

மதுவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள் குறித்த சமீபத்திய புள்ளிவிபரங்கள் அதிர்ச்சி ரகம்! இதில் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடும் மதுக் கலாச்சாரத்தின் விபரீதம் அம்பலமாகிறது! தந்தையின் குடிப் பழக்கத்தால் தறிகெட்ட குடும்பங்கள்! தற்கொலை செய்து கொள்ளும் இளம் தளிர்கள்! கொலைக்களமாகும் குடும்பங்கள்..!

விஷ்ணுபிரியாவின் கடிதம் நெஞ்சில் வேலாகப் பாய்கிறது! குடியாத்தம் அடுத்த சின்ன ராஜாகுப்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான பிரபு குடித்துவிட்டு வந்து வீட்டில் தினமும் தன் அம்மாவை அடிப்பதைக் கண்டு, நாளும், நாளும் வேதனைக்கு ஆளான அவரது  மகள் விஷ்ணுபிரியா என்ற சிறுமி தன் ஆசை அப்பா குடிப் பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும் எனத் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்து உயிர்விட்டுள்ளது அனைவரையும் உலுக்கியுள்ளது.

இது ஏதோ ஒரு குடும்பத்தில் மட்டும் நடந்துவிட்ட பிரச்சினை என கடந்து செல்ல முடியவில்லை. தினம்தோறும் தமிழகத்தின் பல குடும்பங்களில் மதுவின் தாக்கத்தால் குடும்பத் தலைவன் செய்யும் வன்முறைகளும், அதில் பெண்களும், குழந்தைகளும் அடையும் துன்பங்களும் சொல்லித் தீராதவை!

இது போன்ற கடந்த காலச் சம்பவங்கள் சில என் நெஞ்சில் நிழலாடுகின்றன!

2016ல் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியில் தந்தையின் குடிப்பழத்தால் வீட்டில் அம்மா அடைந்த வேதனையைக் கண்டு பொறுக்க இயலாத மகள் உரமருந்தை அருந்தி மாய்ந்தாள்! அதைக் கண்ட தந்தை தானும் அதே நிமிடம் உரமருந்தை அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டான்.கிராமமே சோகத்தில் மூழ்கியது.

2018ல் 17 வயது சிறுவன் தந்தைக்கு தன் தற்கொலை கடிதத்தில் புத்திமதி சொல்லிவிட்டு, என் சாவுக்கு கூட நீ கொள்ளி போடக் கூடாது. நீ திருந்தினால் தான் என் ஆத்மா சாந்தி அடையும். என ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சங்கரன் கோயில் வட்டாரத்தையே கலங்கடித்தது.

2020ல் மதுரை அலங்கா நல்லூரில் நடந்த சம்பவம் அனைத்திற்கும் உச்சமாகும். குடிகாரத் தந்தையின் கொடுமை பொறுக்காமல் மகள் தீயிட்டு தன்னைத் தானே எரித்துக் கொண்டாள். வெந்தணலில் மகள் கதறித் துடிப்பதைக் கண்ட தாயும் மகளை அரவணைத்து சேர்ந்தெறிந்து உயிர் துறந்தாள்!

இவை எல்லாவற்றையும் அன்றாட செய்தி போலக் கடந்து செல்லும் நிலைக்கு தமிழக மக்களும், அரசும், அரசியல் கட்சிகளும் வந்துவிட்டனவோ என அதிர்ச்சியாக உள்ளது.

நாம் மேலே சொன்ன சம்பவங்கள் சில உதாரணங்கள் மட்டுமே! இது போல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்துவிட்டன!

குடித்துவிட்டு மகளையே கற்பழிக்க முயன்ற கணவனை மனைவியே கொன்ற சம்பவம்!

குடிக்க பணம் தராததால் வயதான தாயைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்.

குடிகாரக் கணவனின் சித்த்திரவதையை பொறுக்கமாட்டாமல் தூங்கும் போது அவன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி..

என விதவிதமான கொடூரங்களை மது நிகழ்த்திக் கொண்டுள்ளது. மாநில மகளீர் ஆணையத்திற்கு கண்ணீர் சொட்டக் கடிதம் எழுதி அளிக்கப்படும் புகார்களில் சுமார் 90 சதவிகிதம் கணவனின் குடிப் பழக்கத்தால் வீட்டில் நடக்கும் வன்முறைகள் தொடர்பானவையாக உள்ளன! குடித்துவிட்டு வரும் கணவன் சிகரெட்டால் மனைவிக்கு சூடுவைப்பது, கண்ணுமண்னு தெரியாமல் அடிப்பது போன்றவற்றுக்கு என்று விடிவோ தெரியவில்லை.

தமிழகத் தாய்மார்களின் நிற்கமாட்டாத கண்ணீருக்கு காரணமான இந்த மதுக் கொடுமைகள் முன்பைக் காட்டிலும் தற்போது உச்சத்திற்கு சென்றுவிட்டன! இதற்கு முக்கிய காரணம் 2003 ஆம் ஆண்டு தொடங்கி டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனையை அரசே ஏகபோகமாக ஏற்று செயல்படத் தொடங்கியதில் இருந்து தான்! ஜெயலலிதா, கருணாநிதி, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்,ஸ்டாலின்  என அனைத்து ஆட்சியாளர்களும் மது விற்பனையை அதிகரிப்பதில் தான் கண்ணும், கருத்துமாக ஈடுபட்டனர்.

நன்றி; கார்டூனிஸ்ட் பாலா

இதனால் 1990 களில் 21 வயது வரையுள்ள வளரிளம் பருவத்தினரிடம் மதுப் பயன்பாடு என்பது வெறும் 2 சதவிகிதமாக இருந்தது. ஆனால், அது 2010ல் 10 சதவிகிதமாகி படிப்படியாக வளர்ந்து, தற்போது 38 சதவிகித வளரிளம் பருவத்தினரை மதுப் பயன்பாடு தெரிந்தவர்களாக மாற்றியுள்ளது என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியரிடம் இந்த மது போதைப் பழக்கம் பரவியதற்கு தமிழக ஆட்சியாளர்களின் பணத்தின் மீதான போதையே காரணமாகும்.

பள்ளி மாணவர்களும் பலியாகிக் கொண்டிருக்கும் தீவிரத்தை உணர்த்தும் கார்டூன். நன்றி; கார்டூனிஸ்ட் பாலா

மற்றொரு புள்ளிவிபரமானது, அடித்தட்டு மக்களின் வருமானத்தில் 40 சதவிகிதம் மதுப்பழக்கத்திற்கு செலவழிக்கபடுகிறது எனத் தெரிவிக்கிறது. இதன் மூலம் அந்த ஏழை.எளிய குடும்பத்தின் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவுக்கும், அடிப்படைத் தேவைக்கும் செலவழிக்க வேண்டிய பணம் சாராய உற்பத்தியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் கஜானாவிற்கு செல்கிறது என்பது தெளிவாகிறது!

தன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை மதுபோதைக்கு அடிமையானவர்களாக நிரந்தரமாக வைத்திருக்க விரும்புவர்களாக நம் ஆட்சியாளர்கள் உள்ளனர். இது தான் ஆட்சியாளர்களின் கொள்ளைகளை, குற்றங்களை தட்டிக் கேட்க இயலாதவர்களாக மக்களை வைத்திருக்கும் சூழ்ச்சி என அன்றே சாணக்கியன் கூறியுள்ளான்.

சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி அதிகாலை டாஸ்மாக் சென்று மதுவங்கி குடித்ததில் இறந்துள்ளார். அதில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துவிட்டார் என்கிறார்கள்! டாஸ்மாக் விற்பனை நேரம் என்பது பகல் 12 மணிக்கு தானே ஆரம்பிக்கிறது! எனில், எப்படி அதிகாலை அவருக்கு மது கிடைத்தது? என்றால், அதிகாரபூர்வமற்ற முறையில் மதுவை எந்த நேரமும் கிடைக்கும் சரக்காக சட்டத்திற்கு புறம்பாக விற்க இந்த ஆட்சியாளர்கள் செய்துள்ள ஏற்பாடு இந்த சம்பவத்தில் அம்பலப்பட்டுள்ளது. சமீபத்தில் தஞ்சையிலும் டாஸ்மாக் மது குடித்ததில் இருவர் இறந்தனர் என்பது கவனத்திற்கு உரியதாகும். இந்த சட்டபூர்வமற்ற விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் ஒரு துளி கூட அரசு கஜானாவிற்கு போகாது என்பதும் நிதர்சனமாகும்.

சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தகப்பன் இல்லாத விதவைத் தாய்களின் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது! மது விலக்கை படிப்படியாக தற்போதில் இருந்தே அமல்படுத்த தொடங்காவிட்டால் இந்த தமிழ்ச் சமூகத்தை காப்பாற்றவே முடியாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time